கிளப் உலகக்கோப்பை கால்பந்து இன்டர் மிலன், ப்ளுமினென்ஸ் அணிகள் அபாரம்
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தால் நடத்தப்படும் கிளப் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 21ஆவது சீசன் அமெரிக்காவில் ஜூன் 14ஆம் தேதி தொடங்கியது. ஜூலை 13ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் உலகம் முழுவதிலும் இருந்து 32 கிளப் அணிகள் பங்கேற்றுள்ளன. தற்போது இந்த தொடரில் லீக் ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்திய நேரப்படி ஞாயிறன்று அதிகாலை நடைபெற்ற “குரூப் எப்” பிரிவின் லீக் ஆட்டத்தில் ப்ளுமினென்ஸ் (பிரேசில்) - உல்சான் (தென் கொரியா) அணிகள் மோதின. தொடக்கம் ஆதிக்கம் செலுத்திய ப்ளுமினென்ஸ் 4-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதே போன்று “குரூப் இ” பிரிவு லீக் ஆட்டத்தில் இன்டர் மிலன் (இத்தாலி) - உரவா ரெட்ஸ் (ஜப்பான்) அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கடும் போராட்டத்துடன் 2-1 என்ற கோல் கணக்கில் இன்டர் மிலன் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டது.
48 பந்துகளில் 133 ரன்கள் ருத்ரதாண்டவம் ஆடிய அபிஷேக் பதக்
மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக் பதக் என்ற வீரர், தற்போது நடைபெற்று வரும் மத்திய பிரதேசம் பிரீமியர் லீக் (MPL) தொடரில் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பந்தல்கண்ட் புல்ஸ் அணிக்காக விளையாடி வரும் அபிஷேக் பதக், ஜபல்பூர் ராயல் லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 33 பந்துகளில் சதத்தை (100 ரன்கள்) எட்டினார். அதன் பிறகும் அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் 133 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்தார். இதில் 7 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்ஸர்கள் அடங்கும். இதற்கு முந்தைய போட்டியில் அவர் 22 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்து இருந்தார். இதுவரை மத்தியப் பிரதேசம் பிரீமியர் லீக் தொடரில் அபிஷேக் பதக் தனது 5 இன்னிங்ஸ்களில் 229 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.
டிரெண்டிங் வாய்ஸ் “600 ரன்கள் எடுத்திருக்க வேண்டும்”
ஹெட்டிங்லி மைதானத்தில் இந்திய அணி 600 ரன்கள் எடுத்து இருக்க வேண்டும். மைதானம் இப்படி காய்ந்து போய் இருக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் 600 ரன்களை இந்திய அணி எடுத்திருந்தால், அதன் பிறகு மைதானத்தின் தன்மை மாறியிருக்கும். இந்தப் போட்டியை இந்திய அணி வென்றே ஆக வேண்டும். இது போன்ற ஒரு வாய்ப்பு மீண்டும் கிடைக்காது. -சவுரவ் கங்குலி (இந்திய அணியின் முன்னாள் வீரர்)
டிஎன்பிஎல் இன்றைய ஆட்டம்
சென்னை - திருச்சி
நேரம் : இரவு 7:15 மணி இடம் : இந்தியா சிமெண்ட்ஸ் மைதானம், திருநெல்வேலி சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)