election2021

img

வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படவில்லை.... திமுக வேட்பாளர்கள் புகார்....

தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயல்படவில்லை என மூன்று சட்டமன்றத் தொகுதிகளின் திமுக வேட்பாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஏப்.6அன்று  நடந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மே 2-ஆம் தேதி வெளியாகும் நிலையில், பதிவான வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் நடமாட்டம், சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு போன்ற பல்வேறு குளறுபடிகள் ஏற்படுவதாகக் கூறி திமுகவினர் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களை பார்வையிட்டு வருகின்றனர்.அதன்படி தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு தொகுதியில் 5,91,346 வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள், மூன்று அடுக்கு பாதுகாப்பில், தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசுமகளிர் கலைக் கல்லூரியில் வைக்கப்பட்டுள் ளன. இந்நிலையில், இங்கு நுழைவு வாயிலில் உள்ள சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை, அனுமதிக்கப்படாத நபர்கள் வருவதாக கூறி, திங்கள்கிழமை மதியம் 12.30 மணிக்கு தஞ்சாவூர் தொகுதி எம்எல்ஏவும், திமுக வேட்பாளருமான டி.கே.ஜி. நீலமேகம், திருவையாறு தொகுதி எம்எல்ஏவும் திமுக வேட்பாளருமான துரை.சந்திரசேகரன், ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏவும் திமுக வேட்பாளருமான எம்.ராமச்சந்திரன் ஆகிய மூவரும் சிசிடிவி கேமராக்கள் முறையாக செயல்படுகிறதா என பார்வையிட்டனர்.

அப்போது, வட்டாட்சியர்கள் (தஞ்சாவூர்) பாலசுப்பிரமணியன், (திருவையாறு) நெடுஞ்செழியன், (ஒரத்தநாடு) அருணகிரி ஆகியோரிடம், நுழைவு வாயிலில் புதிதாக 360 டிகிரி கோணத்தில் சுழலும் சிசிடிவி கேமராக்கள் வைக்க வேண்டும் என கூறினர். மேலும், மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தரா விடமும் செல்போன் மூலம் பேசி தங்களின் கோரிக்கைகளை தெரிவித்தனர்.இதுகுறித்து துரை. சந்திரசேகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கல்லூரி நுழைவு வாயிலில் உள்ள சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை. அதை உடனே செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரி தற்போது தேர்தல் கமிஷன் கட்டுப்பாட்டில் முழுமையாக உள்ள நிலையில், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும்வெளிநபர்கள் அடிக்கடி வந்து செல்கின்றனர். அவர்கள் வர தடை விதிக்க வேண்டும்.இது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி யுள்ளது. மேலும் கல்லூரி வளாகத்தில் 5 டிஷ் ஆண்டெனா வைக்கப்பட்டுள்ளது. அதனை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்” என்றார்.

;