election-2019

img

மேற்கு வங்கம் டைமண்ட் ஹார்பர் தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடத்திட வேண்டும் - தலைமைத் தேர்தல் ஆணையருக்கு சீத்தாராம் யெச்சூரி கடிதம்

மேற்கு வங்கம், டைமண்ட் ஹார்பர் மக்களவைத் தொகுதியில் மறுவாக்குப் பதிவு நடத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியிருப்பதாவது:

மேற்கு வங்கத்தில் டைமண்ட் ஹார்பர் மக்களவைத் தொகுதியில் மே 19ஆம் தேதி நடைபெற்ற தேர்தலின்போது, மிகப்பெரிய அளவில் தேர்தல் மோசடிகள் நடந்துள்ளன. இதுதொடர்பாக அத்தொகுதியில் போட்டியிட்ட எங்கள் கட்சியின் வேட்பாளர் டாக்டர் ஃபாட் ஹலீம் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் நகலை இத்துடன் இணைத்திருக்கிறேன்.

அங்கு நடைபெற்றுள்ள முறைகேடுகளை ஆய்வு செய்யும்போது அத்தொகுதியில் அரசமைப்புச் சட்டத்தின் 324ஆவது பிரிவின்கீழ் தொகுதி முழுமைக்கும் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிட வேண்டும் என்பது நன்கு புலப்படுகிறது.

இது தொடர்பாக மேலும் ஒரு மிக மோசமான ஒழுங்கீனம் மே 20 அன்று நடைபெற்றிருக்கிறது. அதாவது, இத்தொகுதிக்கான தேர்தல் அதிகாரி வாக்குச்சாவடிகள் சிலவற்றை ஆய்வு செய்வதற்காக ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். எங்கட் கட்சி வேட்பாளர் டாக்டர் ஃபாட் ஹலீம் அதில் பங்கேற்கச் சென்றிருக்கிறார். ஆனால், இக்கூட்டத்தைச் சில பங்கேற்பாளர்கள் ஆட்சேபித்ததால் இக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். உடனே டாக்டர் ஃபாட் ஹலீம், இக்கூட்டம் எழுத்துபூர்வமான ஒரு குறிப்பாணையின் கீழ் கூட்டப்பட்டிருப்பதால், இவ்வாறு ரத்து செய்வதற்கும் எழுத்துபூர்வமான குறிப்பாணை கேட்டிருக்கிறார். தேர்தல் அதிகாரி தான் முன்பு எழுத்துபூர்வமாக அளித்த குறிப்பாணையை இந்தக் குறிப்பாணை மூலம் ரத்து செய்வதாகவும் தெரிவித்திருக்கிறார். (இரு குறிப்பாணைகளையும் இத்துடன் தங்களுக்கு இணைத்திருக்கிறேன்.)

இவ்வாறு கூட்டம் நடத்தக்கூடாது என்கிற ஆட்சேபணை திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவினரிடமிருந்து வந்திருக்கின்றன என்று தெரிகிறது. இதில் விசித்திரமான விஷயம் என்னவெனில், பாஜக-வின் மத்தியத் தலைமையும் டைமண்ட் ஹார்பர் தொகுதிக்கு மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தங்களைக் கோரியிருக்கிறது.

மேற்கு வங்கத்தில் பாஜக மாநிலத் தலைமைக்கும், திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையே தொகுதிகள் சிலவற்றில் போட்டிபோடுவதை விட்டுக்கொடுத்திடுவது தொடர்பாக ஒரு புரிதல் (understanding) ஏற்பட்டிருப்பது தெளிவாகியிருக்கிறது. அதாவது, மதுராபூர், ஜாதவ்பூர் போன்ற தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவளிக்க வேண்டும் என்றும் அதற்குப் பதிலாக டைமண்ட் ஹார்பர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரை பாஜக ஆதரிக்க வேண்டும் என்றும் புரிந்துணர்வு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் டைமண்ட் ஹார்பர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுபவர் முதல்வர் மம்தா பானர்ஜியின் அண்ணன் மகன் என்பதுதான். 

இத்தகைய அரசியல் அம்சங்கள் உங்களுக்குத் தேவையில்லாத விஷயமாகும். இத்தொகுதியில் நடைபெற்றுள்ள மிக மோசமான ஒழுங்கீனங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, (அவற்றை எங்கள் கட்சி வேட்பாளர் மிகவும் தெளிவாகத் தங்களுக்குப் பட்டியலிட்டுத் தந்திருக்கிறார்) மே 19 அங்கு நடைபெற்ற தேர்தலை ரத்து செய்திட வேண்டும் என்றும், அத்தொகுதிக்கு முழுமையாக மறுவாக்குப் பதிவு நடத்திட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி தன் கடிதத்தில் கோரியுள்ளார்.

(ந.நி.)

  


;