districts

ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான உரிமைகளை வழங்க கோரிக்கை

தஞ்சாவூர், செப்.28 - தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, கிராம ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்புக் கூட்டம் தலைவர் எஸ்.ராம் பிரசாத் தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்தில், “நடப்பு நிதி ஆண்டிற்கு, 37 ஊராட்சிகளுக்கும் திட்டப் பணிகள் கிடைக்கும் வகையில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். திட்டத்தில் பணி செய்யும் வேலை உத்தரவை ஊராட்சி மன்ற தலைவர் பெயருக்கே வழங்க வேண்டும். ஒப்பந்தகாரர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஊராட்சி மன்றங்களுக்கே வழங்க வேண்டும்.  அதேபோல் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளுக்கான அதிகாரத்தை ஊராட்சி மன்ற தலைவருக்கே வழங்க வேண்டும். ஊராட்சிகளில் மின்வாரிய கணக்கில் இருக்கும் உபரி நிதியை, ஊராட்சி நிதி கணக்குக்கு பரிமாற்றம் செய்து, வளர்ச்சி பணிகள் செய்து தர உத்தரவிட வேண்டும்.  ஊராட்சியில் காலிப் பணியிடமாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கு, ஊராட்சி மன்றமே முன்பு போல் ஊராட்சி செயலாளர்களை நியமனம் செய்திடவும், இவர்களுக்கு எப்பொழுதும் போல் ஊராட்சி நிதி கணக்கில் இருந்து ஊதியம் வழங்கிடவும் உத்தரவிட வேண்டும்.  ஊராட்சிகளில் காலியாக உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களை ஊராட்சி மன்றமே பணி நியமனம் செய்திடவும், தற்காலிக ஊதியத்தை ரூ.250 இல் இருந்து ரூ.4 ஆயிரமாக உயர்த்திடவும், ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் மாநில நிதிக் குழு மானியம், பழைய மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலேயே வழங்கப்பட்டு வருகிறது.

 தற்சமயம் மக்கள் தொகை இரு மடங்காக பெருகி உள்ளது. எனவே, இதனைக் கருத்தில் கொண்டு மாநில நிதிக் குழு மானியத்தை ஊராட்சிகளுக்கு வழங்கிட வேண்டும். மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள ஊராட்சி மன்றத் தலைவர், செயலாளர்களை திட்டமிட்டு வளர்ச்சிப் பணிகள் செய்யவிடாமல் ஊராட்சியை முடக்கும் துணைத்தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்களிடமிருந்து ஊராட்சி மன்ற விதிகளின்படி (1994-204/3), ஊராட்சி மன்ற தலைவருக்கு ஊராட்சி மன்ற நிர்வாகத்தை செம்மையாக தொடர்ந்து நடத்திடவும், ஊராட்சி மன்றத் தலைவரோடு, இணை கையொப்பமிடும் அதிகாரத்தை, வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வழங்கி உத்தரவிடுமாறு மாவட்ட, மாநில நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளனர். இதில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் ரமாகுமார் (கழனிவாசல்), வைத்திலிங்கம் (சோலைக்காடு), வசந்தா நடராஜன் (ருத்திரசிந்தாமணி), சக்கரவர்த்தி (முடச்சிக்காடு), நாகூர் மீரான் (அழகியநாயகிபுரம்), பிரேம்செல்வன் (நாடியம்), வரதராஜன் (ஆண்டிக்காடு) ஜெகஜோதி செந்திலதிபன் (சேதுபாவாசத்திரம்) உள்ளிட்ட 28 ஊராட்சி மன்றத் தலைவர்கள் பங்கேற்றனர்.

;