districts

சென்னை விரைவு செய்திகள்

மீன் வளர்க்க மானியம்:  விழுப்புரம் ஆட்சியர் தகவல்  

விழுப்புரம், மே 21- விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மீன் வளர்ப்பில் ஈடுபட மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் உவர் நீர் இறால் வளர்ப்பு மற்றும் மீன் உற்பத்தியை அதிகரிக்கவும், மீன் வளர்ப்போரை ஊக்கப்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்ளை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் குளங்களில் இறால் வளர்க்க செலவாகும் மொத்தத் தொகையான ரூ.18 லட்சத்தில் பொதுப் பிரிவினருக்கு 40 விழுக்காடு மானியம் வழங்கப்படும்.  உவர் நீர் இறால் வளர்ப்புக்காக புதிதாக குளங்கள் அமைக்கவும் உள்ளீடுகள் செய்யவும் ஒரு ஹெக்டேருக்கு செலவிடப்படும் ரூ.8 லட்சத்தில் பொதுப் பிரிவினருக்கு 40 விழுக்காடு மானியம் வழங்கப்படும். எனவே, இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் விழுப்புரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை உதவி இயக்குநர் அலுவலகம், எண் 10, நித்தியானந்தா நகர் வழுதரெட்டி விழுப்புரம் - 605 401 என்ற முகவரியில் (தொலைபேசி எண்- 04146-259329) தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


அடிப்படை வசதி  இல்லாத அரசுப் பள்ளி

கிருஷ்ணகிரி மே 21- கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டம் குட்டூர் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 135 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு போதிய இடவசதியும் குடிப்பதற்கு குடிநீர் வசதியும் செய்துதரப்படவில்லை. உடல் உபாதைகளுக்கு ஒதுங்கவும் கழிப்பறை வசதி கிடையாது. சத்துணவு மாணவர்களுக்கு சமையலறையும் இல்லை. இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டாட்சியர் ஆகியோரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட கல்வி அதிகாரிகளும் நேரில் ஆய்வு செய்து அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இல்லையெனில், தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என்று அறிவித்துள்ளனர்.


நவீன தொழில்நுட்பத்தில்  கழிவுநீர் சுத்திகரிப்பு சோதனை

புதுச்சேரி, மே 21- வில்லியனூர் பகுதியில் கழிவுநீர் தொடர்ந்து சங்கராபரணி ஆற்றில் கலக்கிறது. இதனை சுத்திகரிப்பு செய்து நல்ல நீராக மாற்றி மீண்டும் ஆற்றில் விட புதிய தொழில்நுட்பத்துடன் செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி கோட்டைமேடு பகுதியில் உள்ள சுடுகாட்டு பகுதியில் வில்லியனூர் கழிவுநீர் வாய்க்கால் இணைப்பு இடத்தில் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து மீண்டும் ஆற்றில் விட புதிய தொழில் நுட்பத்துடன் செயல்படுத்த சோதனை ஓட்டம் நடைபெற்றது. வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் சோதனைகளை ஆய்வு செய்தார். முன்னாள் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரும் ஆதித்யா கல்வி குழும தலைவருமான ஆனந்தன் உடனிருந்தார். ஜப்பான் தொழில்நுட்பத்துடன் இணைந்து 6 இடங்களில் இந்த திட்டத்தை சி.எஸ்.ஆர். நிதியில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


2 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: அமைச்சர் தகவல்

சென்னை, மே 21- தமிழகத்தில் 2 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கப்பட்டுள்ளது என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, உழவர் நலம் மற்றும் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலா ளர் நலத் துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் தலைமையில் சனிக்கிழமை (மே 21) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, “தமிழகத்தில் இதுவரை 2 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கப்பட்டுள்ளது”என்றார். புதிதாக 11 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் மரணமடைந்த 12 லட்சம் பேரை நீக்கம் செய்துள்ளோம் என்றும் அமைச்சர் கூறினார். கடந்த ஒரு ஆண்டில் தமிழகம் முழுவதும் கொள்முதல் செய்யப்பட்ட 35 லட்சத்து 35 ஆயிரம் மெட்ரிக் டன் நெல்லுக்கு  7,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்றும் நேரடி கொள் முதல் நிலையத்தில் பல்வேறு விதமான புகார்கள் வந்து கொண்டிருக்கிறது எனவும் சக்கரபாணி தெரிவித்தார்.


திண்டிவனத்தில் நவீன பேருந்து நிலையம்

திண்டிவனம், மே 21- திண்டிவனத்தில் 6 ஏக்கர் அரசுக்கு சொந்தமான இடத்தில் அதிநவீன பேருந்து நிலையம் அமைய உள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார். திண்டிவனத்தில் ஆர்யாஸ் ஓட்டல் அருகே புதிதாக அதி நவீன பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில் திண்டிவனத்தில் 6 ஏக்கர் அரசுக்கு சொந்தமான இடத்தில் அதிநவீன பேருந்து நிலையம் அமைய உள்ளது. இதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை என்றார்.


 

;