districts

கட்டாய பணியிட மாறுதல் கலந்தாய்வு முறையை ரத்து செய்ய வேண்டும் சிஐடியு கோரிக்கை

கரூர், ஆக.16 - கட்டாய பணியிட மாறுதல் கலந்தாய்வு முறையை ரத்து செய்யக் கோரி தமிழக அரசுக்கு சிஐடியு கரூர் மாவட்டக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.   இதுகுறித்து சிஐடியு கரூர் மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம், மாவட்டச் செயலாளர் சி.முருகேசன் ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளதாவது:  தமிழக அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் ஐந்து வருடங்களுக்கும் மேலாக பணியாற்றும் மருந்தாளுநர்களை கட்டாய பணியிட மாறுதல் செய்வதற்காக, சென்னையில்  ஆக.16, 17, 18 தேதிகளில் கலந்தாய்வு நடத்த உத்தேசித்துள்ளது. இது ஏற்கனவே அரசு வெளியிட்டுள்ள அரசாணை எண்.178க்கு எதிராக உள்ளது.  மேலும் ஊழியர்களை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாய பணியிட மாற்றம் செய்வது அவர்களது குடும்பத்திற்கு சொல்லொண்ணா துயரத்தை விளைவிக்கிறது. அரசிற்கும் தேவையற்ற பொருள் செலவினை இது உண்டாக்கும். எனவே தமிழக அரசு உத்தேசித்துள்ள இந்த கட்டாய கலந்தாய்வினை ரத்து செய்து, கட்டாய பணியிட மாறுதலை விலக்கிக் கொள்ள வேண்டுமென சிஐடியு கரூர் மாவட்டக் குழு சார்பில் தமிழக அரசையும், மருத்துவத் துறையினையும் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

;