districts

img

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

சென்னை, ஏப்.29-தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மாணவர்கள், தனித்தேர்வர் களுக்கான தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (ஏப்.29) காலை வெளியானது. இந்தாண்டும் மாணவிகளே முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். மக்களவைத் தேர்தல் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 14 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை வேகமாக நடத்தி முடிக்கப்பட்டது. இதனை12 ஆயிரத்து 546 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 59,618 மாணவ,மாணவிகளும், 38 ஆயிரத்து 176 தனித் தேர்வர்களும் எழுதினர்.இதைத் தொடர்ந்து விடைத்தாள் கள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த இடங்களில் நடைபெற்றது. இந்த நிலையில் பத்தாம் வகுப்புபொதுத்தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (ஏப். 29) காலை 9.30மணியளவில் வெளியிடப்பட்டது. தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 95.2 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில்,மாணவர்கள் 93.3 விழுக்காட்டினரும், மாணவிகள் 97 விழுக்காட்டினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டும் மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். 

தொடரும் மாணவிகள் சாதனை

கடந்த பல வருடங்களாக பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூஅரசு தேர்வுகளில் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற பத் தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 92.5 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சிபெற்றனர். இந்த ஆண்டுஅது 93.3 விழுக்காடாக அதிகரித்துள்ளது. அதேபோல் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் 96.4 விழுக்காட்டினர் மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு அது 97 விழுக்காடாக அதிகரித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளில் 92.48 விழுக்காட்டினரும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளில் 99.05 விழுக்காட்டினரும் தேர்ச்சிபெற்றுள்ளனர்.பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்பு துணைப்பொதுத்தேர்வு ஜூன் 14 முதல் 22 வரை நடைபெறுகிறது. மே 2 முதல் தங்கள் பள்ளியில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். தமிழகம் முழுவதும் 6,100 பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முதல் 3 இடங்களை பிடித்த மாவட்டங்கள்... 

திருப்பூர் - 98.53 விழுக்காடு

ராமநாதபுரம் - 98.48 விழுக்காடு

நாமக்கல் - 98.45 விழுக்காடு

பாட வாரியான  தேர்ச்சி விகிதம்: 

தமிழ் - 96.12 விழுக்காடு 

ஆங்கிலம் - 97.35 விழுக்காடு

கணிதம் - 96.46 விழுக்காடு

அறிவியல் - 98.56விழுக்காடு

சமூக அறிவியல் - 97.07 விழுக்காடு

பள்ளிகள் தேர்ச்சி விகிதம்: 

அரசு பள்ளிகள் - 92.48விழுக்காடு

அரசு உதவிபெறும் பள்ளிகள் - 94.53 விழுக்காடு

மெட்ரிக் பள்ளிகள் - 99.05 விழுக்காடு

குறைந்த அளவில்  தேர்ச்சி பெற்ற கடைசி  5 மாவட்டங்கள்: 

கடலூர் - 92.86 விழுக்காடு

காஞ்சிபுரம் - 92.45 விழுக்காடு

திண்டுக்கல் - 92.40 விழுக்காடு

நாகை - 90.41 விழுக்காடு

வேலூர் - 89.98 விழுக்காடு