court

img

ஆடையை தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டாலும் போக்சோ சட்டம் பாயும் - உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்தால் அது போக்சோ சட்டத்தின் கீழ் வராது என்ற மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த 12 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சதீஷ் என்பவருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கீழமை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இதை எதிர்த்து குற்றவாளி தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பா கலேனிவாலா, குற்றம்சாட்டப்பட்ட நபர் சிறுமியின் ஆடையை கழற்றவில்லை, ஆடைக்கு மேல் தொட்டு உடலை சீண்டினால், அது போக்சோ சட்டத்தின்கீழ் குற்றமாகாது என தெரிவித்த நீதிபதி, போக்சோவில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து, குற்றவாளிக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனையும், 500 ரூபாய் அபராதமும் வழங்கி தீர்ப்பளித்தார்.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த தீர்ப்பை எதிர்த்து தேசிய மகளிர் ஆணையம், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, ஆடைமேல் தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டாலும் போக்சோ சட்டத்தின் கீழ் வரும் என்று கூறி மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

மேலும், சட்டத்தின் நோக்கம், குற்றவாளியை சட்டத்தின் கண்ணிகளில் இருந்து தப்ப அனுமதிப்பதாக இருக்க முடியாது என்றும் தெரிவித்தனர்.

;