ஈஷா யோகா மையத்தில் தமிழ்நாடு காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை வடவள்ளியைச் சேர்ந்த முனைவர் எஸ்.காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து உள்ள ஆட்கொணர்வு வழக்கில், “தனது 2 மகள்கள் கீதா மற்றும் லதா ஆகியோர் ஈஷா யோகா மையத்தில் யோகா கற்றுக் கொள்ள சென்றவர்கள் அங்கேயே தங்கி விட்டனர். இதுதொடர்பாக, ஏற்கனவே ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்த போது, சென்னை உயர் நீதிமன்றம் கோவை மாவட்ட நீதிபதி ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டதன் அடிப்படையில், இருவரும் சில நாட்கள் வெளி இடத்தில் தங்கி இருக்க வேண்டும்.
அதன்பின் மன நிலையை ஆய்வு செய்ய வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், தங்களை தொந்தரவு செய்யக் கூடாது என்று எனது மகள்கள் சிவில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். எனது மகள்கள் தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாக தெரிய வருகிறது. ஈஷா யோக மையம் நடத்தும் ஜக்கி வாசுதேவிற்கும் ஒரு மகள் இருக்கிறார். அவர் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் குடும்பத்துடன் வசிக்க அவர் அனுமதி தந்து உள்ளார். ஆனால் எனது மகள்களை, யோகா என்ற பெயரில் மயக்கி, அவர்களை வெளியே அனுப்பாமல் துன்புறுத்தி வருவதாக சந்தேகிக்கிறோம். மேலும் எனது மகள்கள் ஈஷா யோகா மையத்தில் இருந்து வெளிவந்தால் அவர்களை தொந்தரவு செய்ய மாட்டோம். அவர்களுக்கென தனி இடத்தை கொடுத்து அவர்களுடைய தனிமை பாதுகாக்கப்படும். எனவே, இரு மகள்களை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்” என்று கோரி இருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மகள்கள் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தினர்.
பெற்றோர்கள் தங்களை கேவலப்படுத்துவதாக மகள்கள் தெரிவித்த போது, அதற்கு நீதிபதிகள் குறுக்கிட்டு, “நீங்கள் துறவிகளாக மாறிய பிறகு அதை ஏன் பொருட்படுத்தப்போகிறார்கள். ஈஷா யோகா நிறுவனர் தனது மகளுக்கு திருமணம் செய்து விட்டு இவர்களை சன்னியாசிகளாக மாற்றுவது ஏன்?. நீதிமன்றம் யாருக்கும் எதிராகவும் இல்லை, ஆதரவாகவும் இல்லை. ஆனால், இதுகுறித்து பல சந்தேகங்கள் உள்ளதாக” குறிப்பிட்டனர்.
எனவே, ஈஷா யோகா மையத்தின் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளது என்ற விவரத்தை வரும் 4-ஆம் தேதி காவல்துறை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து இன்று கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சமூக நலத்துறை குழந்தைகள் நலத்துறை மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் நூற்றுக் கணக்கான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இதனை எதிர்த்து ஈஷா யோகா மையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஈஷா யோகா மையத்தில் தமிழ்நாடு காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஈஷா மையத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றம் செய்தும், காவல்துறை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கு அக்டோபர் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.