court

img

வக்பு திருத்தச் சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

வக்பு திருத்தச் சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
வக்பு சொத்துக்களை அபகரிக்கும் வகையிலும், முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கும் வகையிலும் ஒன்றிய பாஜக அரசு, கடந்த ஏப்ரல் 2 அன்று வக்பு திருத்தச் சட்ட மசோதாவை மக்களவையில் நிறைவேற்றியது. ஏப்ரல் 3 அன்று மாநிலங்களவையிலும் இந்த மசோதாவை நிறைவேற்றியது. ஏப்ரல் 5 அன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும், இந்த மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல்  வழங்கினார். இதனால் ஏப்ரல் 8  முதல் வக்பு திருத்தச் சட்டம் அமலுக்கும் வந்தது.
இந்நிலையில், வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக 100க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள், தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்பு நேற்று (ஏப்.16) விசாரணைக்கு வந்தது.  அப்போது, ஆங்கிலேயர்கள் வரும் வரை சொத்துக்களை பதிவு செய்யும் நடைமுறை இல்லை. எனவே, 14, 17-ஆம் நுற்றாண்டுகளில் கூட  சொத்துகள் வக்புக்கு தானமாக அளிக்கப்பட்டிருக்கும். அப்படியிருக்க, வக்பு சொத்து எது, என்பதை, ஆவணங்களின் அடிப்படையில் ஆட்சியாளர்கள் முடிவு செய்வது நியாயமா? இந்து அறநிலையத் துறை சட்டப்படி இந்துகள் மட்டுமே அதன் நிர்வாகிகளாக நியமிக்கப்படுகிறார்கள். இந்நிலையில், வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடை முறை பின்பற்றப்படுகிறது? திருப்பதி தேவஸ்தானம், தேவசம்போர்டு உள்ளிட்ட அமைப்பில் இந்துக்கள் அல்லாதோர் உள்ளனரா? அல்லது இனிமேல் இந்து அறக்கட்டளை வாரியங்களில் இஸ்லாமியர்களை உறுப்பினர்களாக அனுமதிப்பீர்களா?” என்று ஒன்றிய அரசுக்கு கேள்வி உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக எழுப்பினர். 
இதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற விசாரணையில், வக்பு திருத்தச் சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. வக்பு திருத்தச் சட்டத்தின் கீழ், வக்பு வாரியத்தில் புதிய நியமனங்களை மேற்கொள்ளவும், ஆவணங்கள் இல்லாத வக்பு சொத்துகள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஒரு வார காலத்திற்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த 7 நாட்களுக்குள் ஒன்றிய அரசு விரிவான பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளன. மேலும் வழக்கின் விசாரணையை மே 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.