இது சினிமாவில் வரும் கோர்ட் சீன் அல்ல... செப் 7, 2022 அன்று உச்ச நீதி மன்றத்தில் "ஹிஜாப்" தடைக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கில் (ஐஸட் ஷிபா -எ- கர்நாடக அரசு) நடைபெற்ற வாதங்கள்.
ஹிஜாப் தடைக்கு எதிராக மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் தேவதத் காமத் வாதங்கள் மீது நீதிபதி ஹேமந்த் குப்தா தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பே இது.
வக்கீல் காமத்: அரசியல் சட்டப் பிரிவு 19 தந்துள்ள கருத்து சுதந்திரம் என்பது உடை தெரிவு சுதந்திரத்தையும் உள்ளடக்கியதுதான். இருந்தாலும் நியாயமான கட்டுப்பாடுகள் இருக்கலாம். மனுதாரர் சீருடையை எதிர்க்கவில்லை. தலையில் "ஸ்கார்ஃப்" கட்ட அனுமதிக்குமாறுதான் கேட்கிறார்.
நீதிபதி குப்தா: நீங்கள் தர்க்கமற்ற எல்லைக்கு போகக் கூடாது. உடை தெரிவு சுதந்திரம் என்பது உடையின்றி வருகிற சுதந்திரத்தையும் உள்ளடக்கியதா?
வக்கீல் காமத்: யாரும் உடையின்றி பள்ளிக் கூடங்களுக்கு வருவதில்லை. கேள்வி என்னவெனில், கூடுதல் ஆடை அணியக் கேட்பது அரசியல் பிரிவு 19 க்குள் வருமா வராதா என்பதே. அதைக் கட்டுப்படுத்த முடியுமா?
நீதிபதி குப்தா: மிடி, மினி, ஸ்கர்ட் ஆகிய உடைகளில் அவரவர் விருப்பத்திற்கு வரலாமா?
வக்கீல் காமத்: குவாசுலு, நேட்டால் & இதரர் (எ) பிள்ளை வழக்கில் தென் ஆப்ரிக்க நீதிமன்றத்தின் தீர்ப்பு, தமிழ் இந்து மாணவியை மூக்குத்தி அணிய அனுமதித்தது.
நீதிபதி குப்தா: மூக்குத்தி மத அணிகலன் அல்ல. உலகம் முழுக்க பெண்கள் இப்படி அணிகலன்களை அணிகிறார்கள். மதத்திற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை.
வக்கீல் காமத்: நேர்மறை மதச் சார்பின்மை (positive secularism), எதிர் மறை மதச் சார்பின்மை (negative secularism) என இரண்டு அணுகுமுறைகள் உள்ளன. கல்வி நிலையங்களில் ஹிஜாப் ஐ தடை செய்த அரசாணை நேர் மறை மதச் சார்பின்மைக்கு எதிரானது. அது ஒரு மதக் குழுவை குறி வைப்பது.
நீதிபதி குப்தா: அரசாணை குறித்த உங்கள் பார்வை தவறானது. ஒரே ஒரு சமூகம் மட்டுமே இங்கே மத சார்பு உடையை கேட்கிறது.
வக்கீல் காமத்: ஒரு சமூகம் மட்டுமல்ல. நாமம், ருத்ராட்சம், சிலுவை என எல்லோரும் இத்தகைய அடையாளத்தை நாடுகிறார்கள்.
நீதிபதி குப்தா: ருத்ராட்சம், சிலுவை எல்லாம் ஹிஜாப் போன்று வெளியே தெரிவதில்லை. அவை எல்லாம் ஒழுங்கை மீறுவதில்லை
வக்கீல் காமத்: ஒரு பொருள் வெளியே தெரிகிறதா இல்லையா என்பதல்ல பிரச்சினை. நியாயமான ஏற்புதான் (reasonable accomodation) தேவை.
(தகவல் ஆதாரம் : லைவ் லா 07.09.2022)