articles

img

விவசாயிகளின் எழுச்சி தேசத்தைக் காப்பாற்றும்.... மாவீரன் பகத்சிங் சகோதரி மகள் குர்ஜித் கவுர் தத்....

தூக்குக் கயிற்றை முத்தமிட்டு தூக்குமேடை ஏறி உயிர்நீத்த மாவீரன் பகத்சிங் அவர்களின் தங்கை மகள் குர்ஜித் கவுர் தத் விவசாயிகள் போராட்டத்தில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். சிங்கூஎல்லையில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி தமிழ்நாடுவிவசாயிகள் சங்கம் நடத்திய பேரணியில் பங்கேற்ற போது அவரிடத்திலே பேசினோம். அவரது ஆவேசமும் உணர்ச்சிப்பூர்வமான போராட்ட உணர்வும் நமக்கு பகத்சிங்கை நினைவூட்டின. 

அவரது நேர்காணலில் இருந்து: 

ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு மிகவும் பாதகமானவை. இந்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி விவசாயிகளின் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி நான் சிங்கூ எல்லையில் போராட்டக் களத்திற்கு வந்தேன். அன்றிலிருந்து அவ்வப்போது வந்து இந்த போராட்டத்தில் பங்கேற்று வருகிறேன். கடந்த ஒன்பது மாதங்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் நான் 87 நாட்கள் பங்கேற்றிருக்கிறேன். கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு ரத்து செய்கிற வரை போராடுவோம் என்கிற விவசாயிகளின் உறுதி இதற்கு முன் இதுவரை கண்டிராதது.

மோடியினுடைய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் கார்ப்ப ரேட்டுகளுக்கும் பெரும் முதலாளிகளுக்கும் ஆதரவானது. உதாரணமாக ஒப்பந்த முறைசாகுபடியை வேளாண் சட்டம் வலியுறுத்து கிறது. ஒப்பந்த சட்டத்தின் படி விவசாயிகள் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். ஒப்பந்தம் செய்த பிறகுஅவர்கள் சொல்வதைக் கேட்டு சாகுபடி செய்ய வேண்டும். விதை, உரம், பூச்சி மருந்துஉள்ளிட்ட இடுபொருட்களை நிறுவனம் விவசாயிகளுக்கு கொடுத்துவிடும். 

நிறுவன அதிகாரிகள் நிராகரித்தால்...

சாகுபடி நடைபெறும் தருணத்தில் நிறுவனத்தின் அதிகாரிகள் மூன்று முறை தோட்டத்தை பார்வையிடுவார்கள். மூன்றாவது முறை பார்வையிடும் போது அவர்கள்எதிர்பார்க்கும் அளவில் சாகுபடி வரவில்லை என்றால் அதனை நிராகரிக்கும் உரிமை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. விளைச்சலை அறுவடை செய்தபிறகு முதல்தரம், இரண்டாம் தரம் விளை பொருட்கள் மட்டுமே அவர்கள் எடுத்துக் கொள்வார்கள். அவர்கள் கழித்து விடுவதை நாம் எங்கும் விற்க முடியாது. குப்பையில் தான் கொட்ட வேண்டும். சாகுபடி சரியில்லை என்று சொல்லி மொத்தத்தையும் நிராகரிக்கிற உரிமையும் நிறுவனங்களுக்கு உண்டு. இவை விவசாயிகளுக்கு மிகவும் பாதகத்தை ஏற்படுத்தக் கூடியவை.

குறைந்த விலைக்கு விளைபொருட் களை விவசாயிகளிடம் வாங்கி நிறுவனங்கள் குடோன்களில் இருப்புவைப்பார் கள். அரசு கொள்முதல் இருக்காது. பொதுசந்தையில் விலையை ஏற்றி விற்பனை செய்வார்கள். நுகர்வோரும் பாதிக்கப்படுவார்கள். ஆகவே இந்த வேளாண் சட்டம் அனைவருக்கும் எதிரானது. தற்போது இருக்கிற நடைமுறை படிப்படியாக கைவிடப்படும். எதிர்காலத்தில் கணிசமானவர்கள் விவசாயத்தை விட்டு வெளியேறும் சூழல் உருவாகும். இதை உணர்ந்த காரணத்தினாலே தான் 9 மாதங்களாக விவசாயிகள் உறுதியோடு போராடி வருகிறார்கள். 

இந்த போராட்டக் களத்தில் நீங்கள்நேரடியாக பார்க்கிறீர்கள். பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் சாலைகளிலேயே குடில் அமைத்து தங்கியிருக்கிறார் கள். அன்றாடம் ஆயிரக்கணக்கான விவசாயிகள் வந்து போராட்டங்களில் பங்கேற்றுச்
செல்கிறார்கள். நூற்றுக்கணக்கான சமையல் கூடங்களில் மூன்றுவேளையும் சமையல் நடைபெறுகிறது. வருகிற அனைவருக்கும் சாப்பாடு போடுகிறார்கள். தேவையான உணவுப் பொருட்களை விவசாயிகள் கிராமங்களில் இருந்து அனுப்பிவைக்கிறார்கள். கிராமங்களில் பெண்கள் கோதுமைமாவு அரைத்து மூட்டை மூட்டையாக அனுப்பி வைக்கிறார்கள். பால், காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருட்களையும் விவசாயிகள் அனுப்பி வைக்கிறார்கள். அனைத்து பகுதி மக்களின் ஆதரவோடு வரலாற்றில் இத்தகு போராட்டம் நடைபெறுகிறது. 

நிலம் போய்விடும்... கொள்முதல் இருக்காது... விலை கிடைக்காது
மோடி அரசின் வேளாண் சட்டங்களை அனுமதித்தால் விவசாயிகள் கையிலிருந்து நிலம் போய்விடும்; அரசு கொள்முதல் இருக்காது; ஏழை மக்களுக்கு மானிய விலையில் உணவு தானியம் கிடைக்காது; குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது. வெளிநாடுகளுக்கு விளைபொருட்களை ஏற்றுமதி செய்திட மோடி அரசு அனுமதி அளித்துள்ளதால், நாட்டில் உணவு தானிய நெருக்கடி ஏற்படும். எனவே, வேளாண் விரோத சட்டங்களை ஒன்றிய அரசு ரத்து செய்கின்ற வரை விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.2500 கி.மீ தொலைவில் தமிழ்நாட்டிலி ருந்து சிங்கூ போராட்டக் களத்திற்கு வருகை தந்துள்ள தமிழக விவசாயிகளையும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களையும் பாராட்டுகிறேன். விவசாயிகளிடம் பிரச்சாரம்செய்து மேலும் மேலும் அதிகமானவர் களை போராட்டத்தில் பங்கேற்க செய்ய வேண்டும். மக்கள் பங்கேற்காத எந்த இயக்கமும் வெற்றி பெறாது என்று எனது மாமா பகத்சிங் கூறியதை நினைவுபடுத்துகிறேன். என் மாமாவுடன் பிறந்தவர்கள் ஐந்து சகோதரர்கள், மூன்று சகோதரிகள். எனது தாயார் பிபி பர்பாஸ் கவுர்.ஹோசியாப்பூர் மாவட்டம் அம்பாலா ஐட்டன் கிராமத்தில் நான் விவசாயக் குடும்பத்தை சார்ந்தவள். எங்களது பாட்டனார் உட்பட அனைவரும் விவசாயக் குடும்பமே. ‘‘தேசத்தை காப்போம்; விவசாயத்தை காப்போம்’’ என்கிற முழக்கத்தோடு நடைபெறு கிற விவசாயிகள் போராட்டத்தில் நானும் என் குடும்பத்தாரும் இணைந்து நிற்கிறோம்.

;