articles

img

காலநிலை மாற்ற அச்சுறுத்தலும், டிரம்ப்பின் அடாவடியும்

காலநிலை மாற்றம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் கருத்துக்கள் உலகம் அறிந்ததே. காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் அனைத் தும் கட்டுக்கதைகள் என்று கடந்த காலத்தில் அவர்  பலமுறை பேசியுள்ளார். கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது பாரிஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விடுவித்துக் கொண்டார். அத்துடன் சுற்றுச் சூழலை கட்டுப்படுத்துகிற பல விதிமுறைகளை தளர்த்தினார்; பலவற்றை முழு வதுமாக நீக்கினார்.  தற்போது இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்த போதும் பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேபோன்று தேசிய எரி சக்தி அவசர நிலை பிரகடனம் அறிவித்து எண்ணெய்  மற்றும் எரிவாயு உற்பத்தியை தீவிரப்படுத்தி உள்ளார். இவ்வாறான புதைபடிவ எரிசக்தி ஆதாரங்களான எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் நிலக்கரி ஆகிய எரிபொருட்கள் ‌பயன்பாட்டை, எவ்வித கட்டுப் பாடுமின்றி கண்மூடித்தனமாக அதிகரிப்பது கடும் விளைவுகளை ஏற்படுத்தும். இது மனித சமூகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.இயற்கை பேரிடர்கள் அதிகரிப்பதோடு பொது சுகாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படும்.

 பூமியின் வெப்பம் அதிகரிப்பு

2024 ஆம் ஆண்டிற்கான உலக வெப்பநிலை தரவுகளை கோப்பர்னிகஸ் காலநிலை மாற்ற சேவை என்ற அமைப்பு(C3S), நாசா மற்றும் பல அமைப்பு கள் வெளியிட்டுள்ளன. முதன்முறையாக பூமியின் சராசரி வெப்பம் அதிக ரித்துள்ளது என்கிற அதிர்ச்சிமிக்க செய்தியை அந்த  அமைப்புகள் வெளியிட்டுள்ளன. அதாவது காடுகள் அழிப்பு ,புதை படிவ எரிபொ ருள்கள் பயன்பாடு போன்றவை அதிகரிக்காமல் இருந்த காலம் 18-ஆம் நூற்றாண்டு. இந்த தொழில் வளர்ச்சிக் காலத்தில், முந்தைய காலத்தில் இருந்த நிலையை விட 1.5°C தாண்டிய வெப்பநிலை அதி கரிப்பு நிகழ்ந்துள்ளது. இது சாதாரணமாக கடந்துபோகும் உண்மை அல்ல.  மேற்கண்ட வெப்பநிலை அளவை உலகம் தாண்டி விடக் கூடாது என்பதற்காகவே கடந்த பல பத்து ஆண்டு களாக ஏராளமான பேச்சுவார்த்தைகள், தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. அதையும் மீறி 2024 ஆம் ஆண்டு வெப்பநிலை அதி கரித்துள்ளது என்பது அதிர்ச்சி அளிக்கிற ஒரு உண்மை. இது தொடர்ந்து பேராபத்துக்களை அதி கரிக்கும் சூழலை ஏற்படுத்தும். இதோடு இணைந்த தாக டிரம்ப்பின் நடவடிக்கைகளை சேர்த்துப் பார்க்க வேண்டும்.  

மானுடத்தின் நெருக்கடி

2015 ஆம் ஆண்டு பாரிஸ் உச்சி மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பாரிஸ் உடன்படிக்கை, 1.5°C (2.7 ஃபாரன்ஹீட்)க்குக் குறைவாக உலக வெப்பமய மாதலைக் கட்டுப்படுத்த உறுதியளித்தது. உலக வெப்பமயமாதலின் அதிகரிக்கும் போக்கை கட்டுப் படுத்தவும், கடுமையான சுற்றுச்சூழல் தாக்கங்க ளைத் தணிக்கவும் இந்த இலக்கு நிறுவப்பட்டது. 1.5°C அளவை மீறுவது பல அபாயங்களை ஏற்படுத்து கிறது,  கார்பன் டைஆக்சைடு (CO2), மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு போன்ற பசுமை இல்ல வாயுக்களின் அளவு வான்வெளியில் அதிகரிப்பதால்,(GHGs) உலக புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் ஏற்படு கிறது. 1.5°C என்ற முக்கியமான அளவு மீறுவதைத் தடுத்து பூமியை பாதுகாக்க வேண்டும்.பசுமை இல்ல வாயுக்களை வெளியிடும் அளவு குறைக்க நிலையான முயற்சிகள் முக்கியமானவை. இந்த நெருக்கடி மனித சமூகத்தின் பொதுவான பிரச்சனை. இதனை ஒற்றுமையுடன் எதிர்கொள்ள வேண்டும்.

கார்பன் வெளியேற்றமும் சமத்துவமின்மையும்

இன்றைய நிலையில் நாடுகளுக்கு இடையிலான சமத்துவமின்மை நீடிக்கிறது. ஏழை நாடுகளுக்கும் பணக்கார நாடுகளுக்கும் இடைவெளி அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஏழை நாடுகள் தங்களு டைய வளர்ச்சியை குறைத்துக் கொண்டு கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோருவது சமூக அநீதி.  கார்பன் வெளியேற்றத்தை குறைக்கும் பொறுப்பு முன்னேறிய நாடுகளுக்குத் தான் அதிகமாக உள்ளது. அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடு களைக் கொண்ட ஜி -7 குழு வரலாற்றில் மிக அதிக அளவில் கார்பன் டை ஆக்சைடு வெளியிட்ட நாடுகள். இவை தொழில்துறைமயமாக்கலை ஆரம்ப காலத்தி லேயே எட்டிய நாடுகள்.இன்னமும் அதிக பொருளா தாரச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன. இவை கார்பன் வெளியீட்டைக் குறைத்து, தூய்மையான மாற்று ஆற்றல் வழிமுறைகளுக்கு மாறுவதற்கு தேவை யான வளங்களையும் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளன. இந்த வாய்ப்பு வசதிகள் ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்க கண்டங்களில் உள்ள ஏழை மற்றும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு இல்லை. இந்த நாடுகள் தங்களது தொழில் வளர்ச்சியையும் ,நகர்மயமாத லையும் தாமதமாக மேற்கொண்டு வருகின்றனர்.இதனால் அவர்கள் தரப்பிலிருந்தும் கார்பன் வெளி யேற்றம் நிகழ்ந்து வருகிறது. இது தவிர்க்க முடியா தது. அவர்களது மக்களின் வாழ்க்கை முன்னேற்றத் திற்கு ஏற்ற தொழில்துறை உள்ளிட்ட பல்துறை வளர்ச்சிக்கு அது தேவை.

 முன்னேறிய நாடுகளின் பொறுப்பு

வரலாற்றில்,உலக கார்பன் வெளியேற்றத்தில் நான்கில் மூன்று பங்கு வெளியேற்றம் முன்னேறிய நாடு களால் ஏற்பட்டவை. இதிலும் 40 சதவீதம் அமெரிக்கா வால் ஏற்பட்டது. அவர்களது வேகமான தொழில் வளர்ச்சியும், இயற்கை வளங்களை வேகமாக அவர்கள் பயன்படுத்தியதும் இதற்குக் காரணம்.  இப்போதும் கூட வருகிற 2030 ஆம் ஆண்டுக்குள் 370 கோடி மெட்ரிக் டன் அளவிற்கு தாங்கள் நிர்ணயித்த  இலக்கை விட கூடுதலான கார்பன் வெளியேற்றத்தை பணக்கார நாடுகள் ஏற்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.எனவே ஏகாதிபத்திய நாடுகள் பூமி வெப்பமயமாதலை தடுப்பதில் தங்களது பொறுப்பை தட்டிக் கழித்து விட முடியாது. உண்மையில்,பணக்கார நாடுகளின் அதீதமான கார்பன் வெளியேற்றத்தினால் அதிகம் பாதிக்கப் படுவது வளரும் நாடுகள்தான்.ஆசியாவில் உள்ள பல நாடுகள் பேரழிவை ஏற்படுத்தும் பேரிடர்கள் ,கடுமை யான வெப்ப அலைகள் ,கடல் மட்டம் உயர்வு, வெள்ள பாதிப்புகள் என சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாகி வருகின்றன. கிழக்கு ஆசியாவிலும் தெற்கா சியாவிலும் சுமார் 6 கோடி 30 லட்சம் மக்கள் ஏற் கனவே கடும் இழப்புகளை சந்தித்துள்ளனர். கடலோ ரம் வாழ்கிற குடியிருப்புகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. பூமி வெப்பமயமாதலை தடுக்க வளரும் நாடுகளு க்கு முன்னுரிமை நாடுகள் பொருளாதார ரீதியில் உதவிட வேண்டும்.அந்த நாடுகளுக்கு உரிய நிதி ஆதாரங்களை ஏற்படுத்த வேண்டும். இந்த விஷயத்தில் முன்னேறிய நாடுகளுக்கு பொறுப்பு உள்ளது.சமீபத்தில் ஐ.நாவின் காலநிலை மாற்ற மாநாட்டில் (COP29) வளரும் நாடுகளுக்கு 2035 வரை ஒவ்வொரு ஆண்டும் 300 கோடி டாலர் நிதி அளித்திட முடிவு செய்யப்பட்டது. இதில் வளர்ந்த நாடுகள் தங்களது நிதி பொறுப்பினை சரியாக நிறைவேற்றினால்தான் இந்த பூமிப் பந்தை பாதுகாத்திட முடியும்.

ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்

கால நிலை மாற்றம் குறித்த டொனால்டு டிரம்ப்பின் கருத்துக்களுக்கு எதிராகவும்,அவரது நடவடிக்கை களுக்கு எதிராகவும் மானுட சமூகம் அணி திரள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. புவி வெப்பமயமாதல் கால நிலை மாற்றம் பற்றிய அறிவியல் ரீதியான ஆய்வுகள் அனைத்தையும் மறுக் கிறது டிரம்ப்பின் கூட்டம். அறிவியல் சமூகம் அணி திரண்டு அறிவியல் விழிப்புணர்வை உலக மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். இந்த பூமிப்பந்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை, முற்றாக மறைக்கும் முயற்சிகளுக்கு அடிப்படையாக கார்ப்பரேட் மூலதன நலன்கள் உள்ளன. கண்மூடித் தனமான மூலதன வேட்டைக்காக புவி வெப்பமய மாதல் குறித்த உண்மைகளை டிரம்ப் கூட்டம் மறைக்க  முயல்கிறது. இதற்கு எதிராக ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் வலுவாக அணி திரள வேண்டும். 2024ஆம் ஆண்டிலும் புவியின் சராசரி வெப்பம் அதிகரித்துள்ளது ஒரு எச்சரிக்கை. கட்டுப்படுத்த முடியாத, மீண்டும் பழைய நிலைக்கு வருவதற்கு வாய்ப்பில்லை என்கிற சூழல் ஏற்படுவதற்கு முன்னால் மானுட சமூகம் விழித்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.