நமது அரசியலமைப்பு சட்டம் தனது 75வது வயதில் பேசு பொருளாக உள்ளது. நாடாளு மன்ற விவாதங்களில், தேர்தல் பிரச்ச னைகளில், பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்களின் உரையாடல்களில் விவா தங்களின் மையப்பொருளாக அரசிய லமைப்பு சட்டம் பரிணமித்துள்ளது. அரசிய லமைப்பு சட்டம் இவ்வளவு காலத்திற்கு பின்னரும் உறுதியாக தலை நிமிர்ந்து நிற்பது மட்டுமல்ல அதன் அடிப்படை அம்சங்களை பாதுகாப்பது தேச பக்தி செய லாகவும் நிலைபெற்றுள்ளது. இந்த புக ழும் பெருமையும் நமது அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் மற்றும் ஏனைய மகத்தான சிற்பிகளையே சாரும்.
அரசியலமைப்புச் சட்டமும் சமூக சமத்துவமும்
இதன் பொருள் இந்திய மக்கள் அனை வரும் சமமாக அரசியலமைப்பு சட்டம் மூலம் பலன் பெற்றுள்ளனர் என்பதல்ல. அதில் பொறிக்கப்பட்டுள்ள உரிமைகள் குறித்த அமலாக்கம் குறைகள் உள்ள தாகவும் சீரற்றமுறையிலும் உள்ளது. இதற் கான காரணம் என்ன? அரசியலமைப்பு சட்டத்தில் சில பிரிவுகள் அமலாக்கப்பட வேண்டியவை எனவும் அதன் காரணமாக நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு உட்பட்ட வை எனவும் வகைப்படுத்தப்பட்டன. சில பிரி வுகள் குறிப்பாக சமூக மற்றும் பொருளா தார சமநீதி குறித்தான பிரிவுகள் அவ்வாறு இல்லாமல் “வழிகாட்டும் நெறி முறைகளாக” மட்டுமே உள்ள வகையில் பின்னுக்கு தள்ளப்பட்டு வகைப்படுத்தப் பட்டிருப்பதும் மக்கள் சம அளவில் பலன் பெற இயலாமைக்கு ஒரு பகுதி காரணம் ஆகும்.
எனவே அனைத்து குடி மக்களுக்கும் சம உரிமையை உத்தரவாதப்படுத்துவதில் முன்மாதிரியாக உள்ளதாக மதிப்பிடப் படும் ஒரு அரசியலமைப்பு சட்டத்தை கொண்டுள்ள இந்திய தேசம் அந்த அரசியலமைப்பு சட்டத்தின் வரையறை களுக்குள்ளேயே மிகவும் சமமற்ற சமூ கங்களில் ஒன்றாகவும் உருவெடுத்துள் ளது. அரசியல் நிர்ணய சபை விவாதங் களின் பொழுது பல உறுப்பினர்கள் இது பற்றி கவலையை எழுப்பினர். இந்த கவலை யை தன்னை சோசலிஸ்ட் என அழைத்து கொண்ட கே.டி.ஷா கீழ்கண்ட வார்த்தைகள் மூலம் பிரதிபலித்தார்:
“அத்தகைய (சமூக/பொருளாதார) பிரி வினை என்பது ஒருவருக்கு கொடுக்கப் பட்ட காசோலைக்கு வங்கி பணத்தை உடனடியாக தராமல் தனக்கு சரி என தோன்றும் நேரத்தில் பணத்தை கொடுப்பது போல உள்ளது”
அவரது ஐயம் உண்மை என தற்பொழுது நிரூபிக்கப்பட்டுள்ளது. அரசி யலமைப்பு சட்டத்தை பாதுகாப்பது என்பது பொருளாதார சமத்துவம் மற்றும் சமூக நீதி குறித்த அதன் வழிகாட்டும் நெறிமுறை களின் உண்மையான நோக்கத்தையும் அமல்படுத்துவதாக இருக்க வேண்டும்.
மனுஸ்மிருதியை வலியுறுத்திய ஆர்எஸ்எஸ்
1949ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி அரசியல் நிர்ணய சபையின் தலைவர் ராஜேந்திர பிரசாத் அரசியல் நிர்ணய சபை வடிவமைத்த அரசியலமைப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும் என கூறிய பொழுது அரசியலமைப்பு சட்டம் ஏகமனதாக நிறை வேற்றப்பட்டதாகவும் அவையெங்கும் நீண்ட நேரம் கை தட்டலும் மகிழ்ச்சியும் வெளிப்பட்டதாகவும் அந்த நாளின் ஆவ ணங்கள் குறிப்பிடுகின்றன. அவையின் வெளியே ஆர்.எஸ்.எஸ். இந்த அரசிய லமைப்பு சட்டத்தை எதிர்த்துக் கொண்டி ருந்தது. மனுஸ்மிருதி போன்ற மத அடிப்படையிலான “பாரதிய பாரம்பர்யம்” எதுவும் இந்த அரசியல் சட்டத்தில் இல்லை என புலம்பிக் கொண்டிருந்தது. தேசியமும் குடியுரிமைகளும் பெரும்பான்மை மதத்துடன் இணைக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். கூறியது. இந்துமத நம்பிக்கைகளை ஏற்றுக்கொள் பவர்கள் மட்டுமே குடிமக்களாக இருக்க முடியும் எனவும் அதனை ஏற்றுக்கொள் ளாத மற்றவர்கள் இந்துக்களுக்கு அடிமை யாகவும் இரண்டாம்தர குடிமக்களாகவும் தான் இருக்க இயலும் எனவும் அது கூறியது. இந்தியா இந்த அரசியலமைப்பு சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் ஆர்.எஸ்.எஸ்.ன் பிரிவினைவாத சித்தாந்தங் களை நிராகரித்தது. ஆர்.எஸ்.எஸ்.ன் சித்தாந்தமான மதத்தின் அடிப்படையில் குடியுரிமை என்பதை ஏற்றுக்கொண்ட நாடு பாகிஸ்தான்தான். அதன் அடிப்படையில் தனது அரசியலமைப்பு சட்டத்தையும் நிர்வாகத்தையும் அந்த நாடு உருவாக்கிக் கொண்டது.
ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலை அமல்படுத்தும் பாஜக
இப்பொழுது பிரச்சனை என்னவெனில் 75 ஆண்டுகளுக்கு பின்னர் ஆர்எஸ்எஸ் அதே பழைய பிரிவினைவாத நம்பிக்கை களையும் இந்துத்துவா ராஜ்யம் அமைக்கும் நிகழ்ச்சி நிரலையும் தொடர்ந்து அமலாக்க முயல்கிறது. அதைவிட பெரிய பிரச்சனை என்னவெனில் இன்று ஆட்சியில் இருப்ப வர்கள் தமது தேர்தல் வெற்றிக்கு கூட ஆர்எஸ்எஸ்-ன் பரவலான வலைபின்னல் போல உள்ள அமைப்புகளை சார்ந்திருப் பதுதான். ஆர்எஸ்எஸ் வேறு; பாஜக வேறு என வேறுபடுத்திய முகமூடி கழன்று பழங்கதையாகி பல நாட்களாகிவிட்டது. கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசாங்கம் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலில் உள்ள தனது ஈடுபாடை ஆழமாக பிரதிபலித்து வருகிறது.
பாஜக அமலாக்க முனையும் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரல் கீழ்கண்டவாறு பிரதிபலிக்கிறது:
- அப்பட்டமான சிறுபான்மையினருக்கு எதிரான கொள்கைகள்.
- இஸ்லாமிய வெறுப்பை அடிப்படையாக கொண்ட கொள்கைகளை உருவாக்கு வது.
- எதிர்கட்சிகளுக்கு எதிராகவும் அனைத்து வித மாற்று கருத்துகளுக்கு எதிராகவும் மிக எதேச்சதிகரமான கொடூரமான
சட்டங்கள் மூலம் தாக்குதல்நடத்துவது.
- அரசியலமைப்பு சட்டம் மாநிலங்களுக்கு அளித்துள்ள உரிமைகளுக்கு மாறாக ஆழமான மையப்படுத்தப்பட்ட நிர்வாக
வடிவங்களை திணிப்பது.
- வரலாறு மற்றும் பண்பாடுகள் குறித்து பொய்யான திரித்த கருத்தாக்கத்தை முன்வைப்பது.
- இந்துத்துவா மனுவாதத்தை உயர்த்திப் பிடிப்பது.
- சாதிய முறையும் பிரிவினைகளும் இல்லை என பொய் சொல்வது.
- சுயேச்சையான தன்னாட்சி கொண்ட நிர்வாக அமைப்புகளில் இந்துத்துவா சித்தாந்த ஆதரவாளர்களை நியமித்து
அந்த அமைப்புகளின் சுயாட்சி தன்மையை சீரழிப்பது - என பல
நடவடிக்கைகள் மூலம் பாஜக அரசாங்கம் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலை அமலாக்க முனைகிறது.
தனிமனிதர் பிரச்சனையா? சித்தாந்தப் பிரச்சனையா?
இந்தியா வரலாறு காணாத கவலை தரும் ஒரு சூழலை எதிர்கொண்டுள்ளது. அதிகாரத்துக்கு தேர்வு செய்யப் பட்டவர்கள் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் உறுதிமொழி எடுத்துக் கொண்டு அதே அரசியலமைப்பு சட்டத்தை சிதைத்து கொண்டிருப்பதை பார்க்கிறோம். அந்த அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை தூண்களான மதச்சார்பின்மை/ஜனநா யகம் /சமூக நீதி/கூட்டாட்சி ஆகியவை தாக்குதலுக்கு உள்ளாகின்றன.
இவையெல்லாம் தற்புகழ்ச்சி உச்சத்தில் கொண்டுள்ள ஒரு தனி மனிதன் அல்லது தலைவனின் செயல்களால் ஏற்படும் விளைவுகள் என கருதுவது முற்றிலும் தவறான கருத்தாக அமையும். ஒரு தனிநபர் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான அரசியலை பிரதிபலிக்கும் சிறந்த பிரதிநிதியாக இருக்கலாம். ஆனால் அந்த அரசியல் என்பது அந்த தனிநபருக்கும் அப்பால் உள்ள ஆழமான சித்தாந்தம் ஆகும். அதன் வேர் சமூக மற்றும் வர்க்க மேல் மட்டத்தில் கோலோச்சும் அம்சங்களில் உள்ளது.
இங்குதான் நமது அரசியலமைப்பு சட்டத்தின் மீது தொடுக்கப்பட்ட முந்தைய தாக்குதல் வடிவமான “அவசரகால நிலை” குறித்த அனுபவம் நமக்கு பயனுள்ளதாக அமையும். அந்த நேரத்தில் சிவில் உரிமைகள்/அடிப்படை ஜனநாயக உரிமைகள் அனைத்தையும் அகற்றியது என்பதை மிகவும் வலிமையான முதலா ளித்துவ சக்திகள் ஆதரித்தன. மகத்தான 1974 ரயில்வே வேலை நிறுத்தத்தை தொடர்ந்து தமது கோரிக்கைகளுக்காக நாடு முழுதும் அணி திரண்டு கொண்டி ருந்த தொழிலாளி வர்க்கத்தை அடக்கி வைப்பது மிக அவசியம் என முதலாளிகள் கருதினர். இதனை மிகவும் வெளிப்படை யாக அன்றைய முதலாளிகளின் பிரதிநிதி ஜே.ஆர்.டி. டாட்டா நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு கீழ்கண்டவாறு பேட்டி அளித்தார்:
“தொழிலாளர்களின் நடவடிக்கைகள் வெகுதூரம் சென்றுவிட்டன. நாங்கள் எத்தகைய சூழலை எதிர் கொண்டுள் ளோம் என்பது நீங்கள் கற்பனை செய்ய முடியாது. வேலை நிறுத்தங்கள்/ஆர்ப் பாட்டங்கள்/புறக்கணிப்புகள்/தர்ணாக்கள் என அலங்கோலமாக உள்ளது. நமது தேவைக்கு நாடாளுமன்ற முறை பொருத்தமாக இல்லை”
அரசியலமைப்பு சட்டத்தின் மீது இந்திரா காந்தியின் தாக்குதல் என்பது தனது நலன் அல்லது தனது கட்சியின் நலனை பூர்த்தி செய்வது மட்டுமல்ல; அதற்கும் அப்பால் முதலாளித்துவ வர்க்கங்களின் கோரிக்கை களை பூர்த்தி செய்ய வேண்டும் எனும் தேவையும் பரவலான இலக்கும் அதில் இருந்தது.
முதலாளித்துவமும்
நாக்பூர் தலைமையகமும்
தற்சமயத்தில் மிகவும் அப்பட்டமாக தெரிவது என்னவெனில் ஆளும் வர்க்கங் கள் இன்றைய ஆட்சியின் மீது வெளிப் படுத்தும் அறிவிக்கப்பட்ட விசுவாசம் ஆகும். அரசாங்கங்கள் மாறும் பொழுது தமது ஆதாயத்துக்காக பணக்காரர்களும் முதலாளிகளும் தமது விசுவாசத்தை மடை மாற்றுவது என்பது வழக்கத்துக்கு மாறா னது அல்ல. ஆனால் நாக்பூர் தலைமை யகத்துக்கு தமது தாழ்பணிதலை வெளிப் படுத்தும் நீசச்செயல் புதிய அம்சம். இது நாஜி அரசாங்கம் முன்பு பெரிய முதலாளி குழுமங்கள் வில்போல பணிந்து தமது விசுவாசத்தை வெளிப்படுத்தியது நினைவுபடுத்துகிறது.
இரட்டைப் பீரங்கிகள்: இந்துத்துவாவும் கார்ப்பரேட் நலன்களும்
இந்திய கார்ப்பரேட்டுகளும் இன்றைய ஆட்சியும் கை கோர்த்து கொண்டு செயல்படுகின்றன. மிகவும் நெருக்கமான சில தனிப்பட்ட முதலாளிகளுக்கு அதீத சலுகைகள் காட்டப்படுகின்றன என்பது உண்மைதான். எனினும் ஒட்டு மொத்த கார்ப்பரேட்டுகளின் வர்க்க நலனை மோடி அரசாங்கம் காப்பாற்றுகிறது. அந்த வர்க்கங்களுக்காக செயலாற்றுகிறது. நான்கு தொழிலாளர் சட்டங்கள் மூலம் தொழிலாளர்கள் உரிமைகள் மீது தாக்கு தல்/விவசாயிகள் மீது அடக்குமுறைகள்/பெரிய சுரங்க நிறுவனங்களுக்காக வலுக் கட்டாயமாக நிலங்களை பறிப்பதன் மூலம் ஆதிவாசி மக்கள் மீது அறிவிக்கப்படாத யுத்தம் மற்றும் ஏனைய தனியார்மய நட வடிக்கைகள் என்பது இந்த ஆட்சி கார்ப்ப ரேட்டுகளின் நலனுக்காக செயல்படும் திட்டங்கள்தான்.
நமது அரசியலமைப்பு சட்டத்தின் அழிவை இலக்காக கொண்டுள்ள பாஜக வின் இரட்டை பீரங்கிகள் இந்துத்துவா பெரும்பான்மைவாதமும் கார்ப்பரேட் நலன்களும் ஆகும். இரண்டும் ஒன்றுக் கொன்று இணைந்தவை. அரசியலமைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டதன் 75வது ஆண்டில் அதனை பாதுகாக்கவும் பாஜகவை தடுக்க முயல்வோரும் இந்த இரு அம்சங்களையும் கவனத்தில் கொள்வது மிக மிக அவசியம். ஒன்றை தவிர்த்து மற்றொன்றை மட்டும் எதிர்ப்பது முழு பலனை தராது.
-பிருந்தா காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)
தமிழில் : அ. அன்வர் உசேன்
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்/26.11.2024