குஜராத் மாநிலத்தில் 2002இல் முஸ்லீம் சிறுபான்மையினர் படுகொலைக் கொடுமைகள் நடந்துகொண்டிருந்த சமயத்தில், அப்போது குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர். நாராயணன் ஒருதூதுக்குழுவை அமைத்து, “குஜராத்தில் அரசமைப்பு சட்டம் செயல்பட்டுக்கொண்டிருக்கவில்லை,” என்று கூறி அதில் தலையிட வேண்டும் என்று கோரி இருந்தார். அந்த சமயத்தில் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தார்.
இப்போது, சுமார் இருபதாண்டுகளுக்குப்பின்னர், சுமார் ஏழாண்டுகாலம், மோடி பிரதமராக ஆட்சி செய்யும்இந்த சமயத்தில் நாட்டின் பல பகுதிகளிலும், அரசியலின் பல்வேறு பிரிவுகளிலும் அரசமைப்புச்சட்டம் செயல்பட்டுக்கொண்டிருக்கவில்லை என்று உறுதியாகக் கூறமுடியும். நாம், குடியரசு தினத்தின் 71ஆவது ஆண்டை அனுசரிக்க இருப்பதால், இந்த சமயத்தில் நம் அரசமைப்புச்சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள, தனிநபர் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், கூட்டம்கூடும் சுதந்திரம் முதலான குடிமக்களின் அடிப்படை உரிமைகளுக்கு என்ன நடந்திருக்கிறது என்று பார்ப்பது அறிவார்ந்த நடவடிக்கை யாக அமைந்திடும்.
தற்சமயம் நூற்றுக்கணக்கான மக்கள் பிணையில் வெளியே வரும் வாய்ப்புகள் இல்லாமல், நாட்டின் பல பகுதிகளிலும் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் மிகவும் கொடூரமான சட்ட விரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் உள்ள தேசத்துரோகக் குற்றப்பிரிவின் கீழ் குற்றங்கள் சுமத்தப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு அடைக்கப்பட்டி ருப்பவர்களில் எவரும் கிரிமினல்களோ அல்லது பயங்கரவாதிகளோ அல்ல. இவர்கள் அரசியல், சமூக ஆர்வலர்கள், இதழாளர்கள் மற்றும் கொடுமைகளை நகைச்சுவையாக மக்களிடம் எடுத்துச்செல்லும் நகைச்சுவை நடிகர்களாவார்கள். இவர்களில் பீமா கொரேகான் வழக்கில் சட்ட விரோத நடவடிக்கைகள் தடைச்சட்டத்தின் கீழ் 16 அறிவுஜீவிகள், வழக்கறிஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
வடகிழக்கு தில்லியில் முஸ்லீம்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களில் பங்கேற்றவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு, 19 மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ் பொய்யாகப் பிணைக்கப்பட்டி ருக்கிறார்கள். உத்தரப் பிரதேச மாநிலத்தில் ‘புலவ் ஜிகாத்’ (‘Love Jihad’) என்னும் அவசரச்சட்டத்தின் கீழ் 49 பேர் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். மதுரா சிறையில் கப்பன் என்ற இதழாளர் கைது செய்யப்பட்டு, சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார். மணிப்பூரில் மூன்று மூத்த இதழாளர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். நகைச்சுவை நடிகர் முனவார் பருக்கீ என்பவர் கைது செய்யப்பட்டு இந்தூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
அரசமைப்புச்சட்டத்தின் தனிநபர் சுதந்திரத்திற்கான உரிமை காலில் போட்டு நசுக்கப்பட்டிருக்கிறது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம், ஓர் அரக்கத்தனமான சட்டமாகும். இச்சட்டத்தின்கீழ் சிறைப்படுத்தப்பட்டி ருப்பவர்கள், பிணையில் வருவதென்பது மிகவும் சிரமம். இதுதொடர்பாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் இச்சட்டத்தில் ஏற்படுத்திய திருத்தத்தை நாம் நினைவுகூர்ந்திட வேண்டியது அவசியம். 2008 நவம்பரில் மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடைபெற்ற சமயத்தில் இச்சட்டத்தின்கீழ் பிணைக்கப்பட்டவர்கள் பிணையில் வரமுடியாத அளவிற்கு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம்தான், அரக்கத்தனமான ஷரத்துக்களை இச்சட்டத்தின் பிரிவுகளில் சேர்த்து திருத்தம் கொண்டுவந்தது. மேலும் சட்டம் - ஒழுங்கு தொடர்பாக மாநிலங்களுக்கு இருந்து வந்த உரிமைகளில் மூக்கை நுழைத்து, மத்திய அரசு தமதாக்கிக்கொண்ட தேசியப் புலனாய்வு முகமை உருவாக்கப்பட்டதும் இந்தக் காலகட்டத்தில்தான். இவ்வாறு உருவாக்கப்பட்டிருந்த சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் மற்றும் தேசியப் புலனாய்வு முகமை ஆகிய இரண்டையும் இப்போதையமோடி அரசாங்கம் குடிமக்களின் அடிப்படை உரிமை களைப் பறிக்கும் விதங்களில், மேலும் கடுமையாக்கி இருக்கிறது.
அரசமைப்புச் சட்டத்தில், நீதித்துறை சுதந்திரமாக செயல்படக்கூடிய விதத்தில் அளிக்கப்பட்ட அதிகாரங்கள்தற்போது மிகவும் ஆழமான முறையில் அரிக்கப்பட்டி ருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தை உயர்த்திப்பிடிக்க வேண்டிய உச்சநீதிமன்றமானது, குடிமக்களின் அடிப்படை உரிமைகளும், தனிநபர் உரிமைகளும் அரசாங்கத்தால் பறிக்கப்படும் சமயத்தில் அதற்குத் துணை போகும் விதத்தில் மாறிக்கொண்டிருப்பது மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றம் தற்போது அதிகமான அளவில் அரசாங்க நிர்வாக நீதிமன்றமாகவே மாறியிருக்கிறது. 2019 ஏப்ரலில் உச்சநீதிமன்றமானது, வாட்டாலி தீர்ப்புரையில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு எதிரான பிணை மனுக்களைப் பரிசீலனை செய்து பிறப்பித்துள்ள உத்தரவில், இச்சட்டத்தின் கீழான முதல் தகவல் அறிக்கையில் சுமத்தப்பட்டிருக்கிற குற்றச்சாட்டுகளை சரியானவை என்றே நீதிமன்றங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், தன்மீது சுமத்தப்பட்டி ருக்கும் குற்றச்சாட்டின்படி தான் குற்றவாளியல்ல என்று மெய்ப்பிக்கும் பொறுப்பு, குற்றஞ்சாட்டப்பட்டவருக்கே மாற்றப்பட்டிருக்கிறது என்றும், குறிப்பிட்டிருக்கிறது. அதாவது, தான் குற்றவாளி இல்லை என்று நிரூபிக்கும் கடப்பாடு,
குற்றஞ்சாட்டப்பட்டவரையே சாரும் என்று கூறியிருக்கிறது. (The burden of proof rests on the accused to disprove the allegations.) எனவேதான் இந்தச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள், பிணையில் விடுவிக்கப்படுவது மிகவும் கடினமாக, அநேகமாக சாத்தியமற்றதாக இருந்து வருகிறது. பீமா கோரேகான் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கு எதிராக, மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுக்களின்மீது உத்தரவு பிறப்பிக்கும்போது, மும்பை உயர்நீதி மன்றம், இந்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள்காட்டி, பிணை மனுக்களை சமீபத்தில் நிராகரித்திருக்கிறது.
அரசமைப்புச்சட்டத்தின் கோட்பாடுகளை, உத்தரப்பிர தேசம் மற்றும் மத்தியப் பிரதேகம் போன்ற பாஜக ஆளும் மாநில அரசுகள் கண்டுகொள்வதேயில்லை. அதிலும் நீங்கள் ஒரு முஸ்லீமாக இருந்து விட்டால், நிச்சயமாக அவற்றைப் பிரயோகிப்பதில்லை. ஒரு முஸ்லீம் பையன், ஓர் இந்துப் பெண்ணுடன் சாலையில் நடந்து செல்வாரானால், அவர்குறித்து இந்துத்துவா குழுக்களில் ஏதேனும் ஒன்று புகார் அளிக்குமானால், அந்த முஸ்லீம் பையன் போலீசாரால் இழுத்துச் செல்லப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவான். இந்தூரில் மூன்று வாரங்களுக்கு முன், முனவார் ஃபரூக்கி என்பவரின் வழக்கில் என்ன நடந்தது? அவர், இந்து தெய்வங்களைஇழிவுபடுத்தினார் என்றோ அல்லது “மத உணர்வுகளைப் புண்படுத்தினார்” என்றோ எவ்விதமான சாட்சியமும் இல்லாத நிலையிலும்கூட அவர் மூன்று வாரங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்திருக்கிறார். ஆனால், அதன்பிறகு, உள்ளூர் பாஜக எம்எல்ஏ-யின் மகனிடமிருந்து புகார் பெறப்பட்டது. இவ்வாறு இந்துத்துவா கும்பல், போலீஸ் மற்றும் நீதிமன்றம் ஆகிய அனைத்தும் அம்மாநிலங்களில் ஒருங்கிணைந்து செயல்பட்டு கொண்டிருக்கின்றன.
இவ்வாறாக நாட்டில் குடிமக்கள் உரிமைகள் மீதான தாக்குதல்கள் என்பது மனித உயிர்கள் மற்றும் சுதந்திரத்தையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் மக்களின் உணவுக்கான உரிமை, வேலை செய்வதற்கான உரிமை, சுகாதாரம் பெறுவதற்கான உரிமை, கல்வி பெறுவதற்கான உரிமை எனஅனைத்தும் கடும் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டி ருக்கின்றன. கொரோனா வைரஸ் தொற்றும், மோடி அரசாங்கம் அதனைக் கையாண்ட விதமும் மக்களிடையே சமத்துவமின்மை, பசி-பட்டினி மற்றும் வேலை யின்மையை மேலும் கடுமையாக்குவதற்கே இட்டுச்சென்றுள்ளன. 2020ஆம் ஆண்டின் உலக பசி-பட்டினி அட்டவணையில் உலகில் உள்ள 107 நாடுகளின்மத்தியில் இந்தியா, 94ஆவது நிலைக்குச் சரிந்திருக்கிறது. இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையம் (CMIE), 2019 டிசம்பரில் அளித்திருந்த அறிக்கையுடன் ஒப்பிடுகையில், 2020 டிசம்பரில் நாட்டில் 1 கோடியே 70 லட்சம் பேர் வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இதன்மூலம் வேலையின்மை விகிதம் 9.1 சதவீதம் உயர்ந்திருக்கிறது. நாட்டில் மக்களின் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, துன்பதுயரங்கள் அதிகரித்துள்ள அதே சமயத்தில், மோடி அரசாங்கம், அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாது, எவ்விதமான கூச்சநாச்சமுமின்றி விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில பெரும் வர்த்தக நிறுவனங்களின் நலன்களை மேம்படுத்தியிருக்கிறது.
2020ஆம் ஆண்டில் நம் நாட்டிலிருந்த (பல கோடி ரூபாய்களுக்கு அதிபதிகளான) பில்லியனர்களின் எண்ணிக்கையானது, 90 ஆகி புதியதொரு உச்சத்திற்குச் சென்றிருக்கிறது. 2020 செப்டம்பரில் முடிவடையும் காலாண்டில் கார்ப்பரேட்டுகள் துறை செல்வச்செழிப்பினைத் தங்களுக்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. 4,234 கம்பெனிகளின் நிதிநிலை அறிக்கைகள், சமுக முடக்கக் காலத்தில், தங்களுக்கு ஏற்பட்டுள்ள லாபங்களைஅதீதமாக அதிகரித்திருப்பதைக் காட்டுகின்றன. இவற்றின் நிகர லாபங்கள் 569 சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஆனால் அதே சமயத்தில், இக்கம்பெனிகள் செப்டம்பர் காலாண்டில், தங்கள் தொழிலாளர்களுக்கு அளித்து வந்த ஊதியத்தை, ஓராண்டுக்கு முன்பிருந்த நிலையுடன் ஒப்பிடும்போது, பாதியாக வெட்டிக் குறைத்திருக்கின்றன. பணவீக்கத்துடன் இணைத்துப்பார்க்கும்போது, தொழிலாளர்களின் ஊதியங்கள் சுமார் 70 சதவீதம் வீழ்ந்திருப்பதைக் காட்டுகின்றன. இவ்வாறாக தொழிலாளர்களின் ஊதியங்களில் பெருமளவில் வெட்டினை ஏற்படுத்தி இருப்பதன் மூலம் பெருமளவில் லாபங்களைப் பெற்றிருப்பது, வர்க்கச் சுரண்டலின் கோரமான முகத்தைக் காட்டுகிறது. இத்தகைய இந்துத்துவா-நவீன தாரளமயக் கொள்கைகளை அமல்படுத்துவதற்காகவே, குடிமக்களுக்கு அளிக்கப்பட்ட அரசமைப்புச்சட்டத்தின் ஒவ்வொரு உரிமையும் நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. டாக்டர் அம்பேத்கர், “அரசமைப்புச்சட்டம் என்னதான் நன்றாக இருந்தபோதிலும், அதனை அமல்படுத்தவேண்டியவர்கள் மோசமானவர்களாக இருந்தால், அதனையும் மோசமானதாக மாற்றுவது நிச்சயம்,” என்று எச்சரித்திருந்தார். “மோசமான பேர்வழிகள்” அரசமைப்புச் சட்டத்தை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
குடியரசு தின அணிவகுப்பை, குடிமக்கள் தொடர்ந்து இடைவிடாமல் தங்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார உரிமைகளுக்காக நடத்திவரும் போராட்டத்தினைத் தொடர்ந்து மேலும் உறுதியாக நடத்துவதற்கு உறுதியேற்றிடப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விவசாயிகளின் டிராக்டர்கள் அணிவகுப்பு இந்தப் போரட்ட த்திற்கான ஓர் எடுத்துக்காட்டாகும். அரசமைப்புச்சட்டத்தை அழித்துக்கொண்டிருக்கிற இந்துத்துவா பேர்வழிகளை முறியடித்திடுவதற்கான அரசியல் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது மிகவும் முக்கியமாகும்.
(ஜனவரி 20, 2021)
தமிழில்: ச. வீரமணி