articles

img

கருதுவார்க்கு ஆற்ற எளியன் கண்டாய்...-செ.முத்துக்கண்ணன்

“பனியும் குளிர் காற்றும் இல்லையென்றால்
வசந்தத்தின் வெம்மையும் மணமும் எப்படி இருக்க முடியும்?
துன்பங்கள் என்னை பக்குவப்படுத்தி எஃகாக்கின 
அவை மேலும்  என் இதயத்துக்கு வலு
வூட்டின” 

-    மூங்கில் கழிகளைக் கொண்டு யானையின் குடல்களை பிடுங்கிடுவோம் என, பிரெஞ்சு - அமெரிக்க கூட்டுப்படை தாக்குதலுக்கு எதிராக மக்களை மார்க்சிய லெனினியத் தத்துவத்தின் பலத்தால் தட்டி எழுப்பிய வியட்நாமியப் புரட்சித் தலைவர் ஹோ சி மின்  அவர்களின் அனுபவமிக்க வரிகளே மேலுள்ளவை.

கம்யூனிஸ்ட்கள் அதிகாரத்திற்கு வரும் போது...

2011 ஆம் ஆண்டு திருப்பூர் தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட காலம் துவங்கி பதவி வகித்த காலம் முழுவதும் தன்னுடைய செயல்பாட்டால் மக்களையும், இதர அரசியல் இயக்கங்களையும், சுருங்கச் சொன்னால் அனைத்து பிரிவினரையும் ஈர்த்தவர். 

“கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களின் நலன்களுக்காக உறுதியுடன் போராட வேண்டும். தங்களைத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களுடனும், மக்களுடனும் முடிந்த அளவு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வாக்காளர்களுக்கும் மக்களுக்கும் சட்டமன்ற வேலைகளைப்பற்றி அவ்வப்போது தெரியப்படுத்துவதுடன் அவர்களது ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் தொடர்ச்சியாக கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பி னர்கள் பெற வேண்டும்”

“சொந்த வாழ்க்கையில் உயர்தரமான தூய்மை யும், நேர்மையும் படைத்தவர்களாக கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர்கள் விளங்க வேண்டும். அவர்கள் ஆடம்பரமில்லாத வாழ்க்கை நடத்துவதுடன் மக்களுடன் தொடர்பு கொள்ளும் போதும், பழகும் போதும் தன்னடக்கம் உள்ளவர்களாகவும் நடந்து கொள்ள வேண்டும். கட்சியின் நலனுக்கு அவர்களின் சொந்த நலனை உட்பட்டதாக ஆக்க வேண்டும்.” 

- என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்புச் சட்டம் - பிரிவு 20ல் சொல்லப்பட்டுள்ளதற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர்; எளிய மக்களின் தோழனாய்  வாழ்ந்து காட்டியவர்; மக்கள் பிரதிநிதி என்றாலும் படாடோபம் இல்லாமல் கம்யூனிசப் பண்புகளை தனதாக்கிக் கொண்டவர் தோழர் கே.தங்கவேல்.. 

அனுபவப் பள்ளி ஆசானாய்!

எட்டாம் வகுப்பே படித்து பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றியவர். தனது அயராத உழைப்பின் காரணமாக, பட்டங்கள் பல பெற்ற கல்வியாளர்கள் கூட்டத்தில் ஆளுமைப்பண்பு குறித்தும், நேர நிர்வாகம் குறித்தும் வகுப்பு எடுக்கும் ஆசானாக உயர்ந்தார் என்றால் மிகையாகாது.  உங்க ளுக்கு மட்டும் எப்படி  நேரம் கிடைக்கிறது என கேட்ட போது உரிய திட்டமிட்ட உழைப்பைச் செலுத்தும் எல்லோருக்கும் நேரம் வேண்டியளவு கிடைக்கும் என்பார். அதேபோல் எண்ணற்ற தோழர்களின் குடும்ப பிரச்சனைகள், தொழிற் பிரச்சனைகளில் தனி கவனம் செலுத்தி தீர்வு கண்டவர். 

எதையும் அறிவியல் பூர்வமாகவும், நீண்ட உரை யாடல், விவாதம், கணிப்பு, மதிநுட்பம் காரணமாக வரலாற்று அறிஞர்களையும், பேராசிரியர்களையும், தொழிலதிபர்களையும்; இளைஞர்கள், மாணவர்க ளையும் தனது அரவணைப்பில் வைத்திருந்தார். திக்கெட்டும் சென்று தனது அறிவை விரிவாக்கியவர். அகழாய்வு, தொல்லியல், இலக்கியம், புத்தகத் திரு விழாக்கள், சிற்பக்கலை,  சினிமா என அனைத்து தளங்களையும் விரிவாக தொட்டவர். 

புத்தக நண்பர்கள் ஏராளம்

தோழர் கே.தங்கவேல் அவர்களின் தீராத வாசிப்பும், இலக்கிய நேசிப்பும் அவரை அனைத்துப் பகுதியினரிடமும் எளிய முறையில் அணுக உதவி செய்தது. அவர் செல்லும் இடங்களில் எங்கு புத்தகக் கண்காட்சி நடந்தாலும் சென்று புத்தகங்களை தேர்வு செய்து வாங்குவதும், வாசிப்பதும் அவரது முக்கிய பழக்கமாக இருந்தது. அங்கு வரும் தொழில் முனைவோர், பல்துறை சார்ந்தவர்களோடும், இளைஞர்கள், மாணவர்கள் உட்பட அனைத்து பிரி வினர்கள் மத்தியில் கலகலப்போடு புத்தகங்கள் குறித்து பேசுவார். இதனால் புத்தக நண்பர்களை ஏராளமாக வைத்திருந்தார். எளிமையான முறையில் நகைச்சுவை ததும்ப அனைவரையும் சிந்திக்க வைப்பார். தன்னைச் சுற்றி இருப்பவர்களை எப்போ தும் கலகலப்பாக வைத்திருப்பார்.  அவரிடம் சென்றால் தனது பிரச்சனையை தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை வெகுமக்களிடம் வேரூன்றியது என்றால் மிகையல்ல. 

எப்போது வாசிக்கிறார் என்று தெரியாத அளவிற்கு  தனது அறையையே நூலகமாக மாற்றிய பல்கலைக் கழகமாக திகழ்ந்தார். அதனால் தான் அவரது உரைகள் அனைத்தும் ஆழமாகவும், அழுத்தமாக வும், தெளிவாகவும், கேட்பவரை மனம் கசக்காமல் தேனினும் இனிதாக அமைந்து அனை வரையும் கட்டி இழுத்தவர். அதே நேரத்தில் போராட்டக் களத்தில் போராளியாகவும், வர்க்கப் போரில் சமரச மற்ற தலைவராகவும், பன்முகத்தன்மையராகவும் இருந்தவர் தோழர் கே.தங்கவேல். 

தனது உடையையும், வாழ்விடத்தையும் எளிமை யாகக் கொண்டு கடைசி வரை வாழ்ந்தவர். திருப்பூரின் அடையாளங்களில் ஒருவராக மாறிப் போனவர்.

உழைக்கும் வர்க்கத்தின்  போர்க் குரலாய்!

தொழிலாளர்களை கூடுதல் நேரம் வேலை வாங்கவும், பெண் தொழிலாளர்களை இரவுப் பணிக்கு அமர்த்தவும், ஒப்பந்தத் தொழிலாளர் முறையை பின்பற்றவும் அனுமதிப்பது என தொழிலாளர் நலன்க ளில் சமரசம் செய்கிறது அரசு; சலுகைகள் கொடுப்ப தால் வரும் முதலீடு நிரந்தரமானதா? தமிழக மக்க ளுக்கு அது நலன் தருமா? - ஒரு பானைச் சோற்றுக்கு நோக்கியா கம்பெனி ஒரு பதமாகும் என அன்றே சட்டமன்றத்தில் சங்கநாதம் முழங்கியவர்.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சட்ட உரிமைகள், சாலைப் பணியாளர்களின் சமூகப் பாதுகாப்பு, அனை த்து தொழிலாளர்களுக்கு ஞாயிற்றுக் கிழமை விடுமுறை வழங்கிடவும், திருப்பூரில் தொழிலாளர் நிரந்தரமாக தங்க விடுதிகளின் தேவை பற்றியும், குடி யிருப்பதற்கான குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தினார்.

சிறு, குறு உற்பத்தியாளர்களின் குரலாய்...

ஜவுளி சார்ந்த அனைத்துத் தொழில்கள் மற்றும் தோல் பதனிடல் உள்ளிட்ட உள்நாட்டுத் தொழில்களில் 50 லட்சம் வேலை வாய்ப்புகள் உள்ளன. இவற்றை பாதுகாக்க வேண்டும்; தொழில் துறை ஒப்பந்தங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும்; விசைத்த றிக்கான மின்சாரம், சாயக்கழிவுப் பிரச்சனை, சி-பாரம் உள்ளிட்ட பனியன் தொழில் பாதுகாப்பு பிரச்சனை போன்றவற்றில் தலையீடுகளும், தமிழ்நாடு ஒரு போதும் அமெரிக்காவின் டெட்ராய்ட் போல் ஆகி விடக்கூடாது. (டெட்ராய்ட் என்பது தொழிற்சாலைகள் நிறைந்த அமெரிக்க மாகாணம். இங்கு அரசின் மோச மான கொள்கைகளால், தொழில்கள் நசிந்து, தொழிலா ளர் கடும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டனர்.) அதனால் அரசு கண்ணும் கருத்துமாக தமிழகத் தொழில்க ளை பாதுகாக்க வேண்டும் என சிறு குறு உற்பத்தியா ளர்களின் குரலையும்  எதிரொலித்தார்.  

அதேபோல் விளைநிலங்களை தொழிற்பேட்டை களுக்கு எடுக்கக்கூடாது; நில வழிகாட்டி மதிப்பை நிர்ணயம் செய்யும் போது ஜனநாயகத் தன்மையும், நில உரிமையாளர்களின் உரிமைகளுக்கு மதிப்ப ளிப்பதும் அவசியம் எனவும் வலியுறுத்தினார்.  

தோழமையின் உறைவிடம்!

ஏராளமானோரின் திருமணங்களை நடத்தி வைத்துள்ளார் தோழர் கே.தங்கவேல். சிலரது குடும்பப் பிரச்சனைகளில் உரிய தீர்வு காண மாதக்கணக்கில் பொறுமையாகப் பேசி தீர்வு கண்டுள்ளார். ஓரிரு மாதங்கள் ஆனாலும் தோழர்கள், நண்பர்கள், தகவல் தெரிந்து செல்ல வேண்டிய வீடுகளுக்கு சுக, துக்கங்களுக்கு நேரம் ஒதுக்கி சென்று பார்த்து வருபவர். கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அவர் இருந்த தருணத்தில் கூட தனது அலைபேசி யில் இருந்த எண்களுக்கு அழைத்து பேசி கொரோனா தடுப்பு அறிவுரை வழங்கியவர். தனது பால்ய நண்பர்களின் முகவரி தேடி விசாரித்து சென்று நலம் விசாரிப்பார். சட்டமன்ற உறுப்பினர் என்ற ஆடம்பரம் இல்லாமல் பேருந்துகள், இரண்டு சக்கர வாகனங்களில் எளிமையாக வந்து செல்பவர். தனக்கான மருத்துவத்தை அரசு மருத்துவமனையி லேயே பார்த்த எளிமையாளர்.

கொரோனா பெருந்தொற்றுதான் அவரை கால ஓட்டத்தில் நம்மிடம் இருந்து பிரித்து எடுத்து விட்டது. சிரித்த முகமும், மங்காத புன்னகையும், முன் வரிசை யில் நின்று துணிவோடு வருவதை எதிர் கொள்ளும் செயலும் அவரிடம் தனித்துவமிக்கது. நட்பும், தோழ மையும் பாராட்டுவதில் அவருக்கு நிகர் அவரே.  

“உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும் இனிது எனத்
தமியர் உண்டலும் இலரே, முனிவிலர்
துஞ்சலும் சிலர், பிறர் அஞ்சுவது அஞ்சிப் 
புகழ் எனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர்
அன்னமாட்சி அனைய  ராகித்
தமக்கென முயலா நோன்தாள்

பிறர்க்கென முயலுநர் உண்மை யானே”  (புறநானூறு - 182)

இந்திரனுக்குரிய அமிழ்தமே கிடைத்தாலும், அது இனிமையானது என்று தனித்து உண்ண மாட்டர்கள்; யாரையும் வெறுக்க மாட்டார்கள்; சோம்பலின்றிச் செயல்படுவார்கள்; பிறர் அஞ்சுவதற்குத் தாமும் அஞ்சுவார்கள்; புகழ்வரும் என்றால் தம் உயிரையே வேண்டுமானாலும் கொடுப்பர்; பழிவரும் என்றால் உலகம் முழுவதும் கிடைப்பதானாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்; மனம் தளர மாட்டார்கள். இத்தகைய சிறப்புடையவர்களாகித் தமக்காக உழைக்காமல், பிறர்க்காக வலிய முயற்சியுடன் உழைப்பவர்கள் இருப்பதால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டி ருக்கிறது என்ற புறநானூறு பாடலுக்கு இலக்கண மாகத் திகழ்ந்தவர் தோழர் கே.தங்கவேல். 

2024 செப்டம்பர் 13 அவரது 4 ஆம் ஆண்டு நினைவு நாள் ஆகும். இதையொட்டி, தோழர் கே.தங்கவேல் குறித்த ஆவணப்படம் இன்று  (அக்டோபர் 8) திருப்பூரில் வெளியிடப்படுகிறது. 

கட்டுரையாளர் : சிபிஐ(எம்) திருப்பூர் மாவட்டச் செயலாளர்