articles

img

வண்ணக்கதிர் 1

ரோஸ்மீர் கதை! - நவகவி

முன்னொரு காலத்தில் அங்கியில் ரோஜாவை செருகி அலங்கரித்துக் கொண்ட ஒரு அரசரின் முன்னோர் பிறந்த பிரதேசம் அது. அவரை “ரோஜாவின் ராஜா” என்பர்.  சாம்ராஜ்யத்தின் அந்தப் பிரதேசத்தையும் ரோஸ்மீர் என்று பொருத்தமாக பிரபலமாக பெயரிட்டழைத்தனர்.  சாம்ராஜ்யத்தின் தலை போன்ற பகுதி அது. தேசத்தின் சிரம் மட்டுமா ?.....அதை இயற்கையின் வரம் என்றும் இயம்பலாம்!  சாம்ராஜ்யத்தின் புதிய ராஜா அங்கே உல்லாசப் பயணம் போக உத்தேசித்து இருந்தார்!  ரோஜாவின் ராஜா மீது இவர் வெறுப்புற்றிருந்த வேந்தர் ஆவார்! ஆகவே அவரை நினைவுபடுத்தும் ரோஸ்மீர் எனும் பெயரை பேஷ்மீர் என்று பெயர் மாற்றம் செய்ய பிரயாசைப் பட்டார்.  “பெயர் மாற்றப் பேரரசர் “எனும் பெருமைமிகு பட்டப்பெயரும் அவருக்கு ஏற்கனவே உண்டு ! எனினும்  அந்த ஆசையை தற்காலிகமாய் நம் அரசர்க்கரசர் ஒத்திவைத்துவிட்டு ரோஸ்மீர் போக நாள் குறிக்க பஞ்சாங்கத் தேதிபார்க்கச் சொன்னார்  உள்ளடி வேலை செய்து எதிரிகளை உருட்டி மிரட்டும் உள்துறை மந்திரி (உள்துறை மந்திரி என்பதைவிட உள்ளடி மந்திரி எனும் பெயரே சாலப் பொருந்தும் பெயர் என்று சாற்றுகின்றனர் சாம்ராஜ்ய மக்கள் ) ஒற்றர்களை விட்டு உண்மை நிலையை ஓர்ந்து உணர்ந்து அரசரிடம் உரைத்தார்:--  மகாராஜா!தாங்கள் போகும் நேரம் அங்கே மலைமுடியில் உதிக்கும் சூரியன் தங்களின் மணிமுடி போல் தோற்றம் காட்டி அரசக் கிரீடத்தை அவமானப் படுத்தலாம்.... ஆகவே  அங்கே தாங்கள் இருக்கும் வரை  கார் முகில்களால் கதிரவனை மூட ஆயத்தம் செய்யும் அவசியம் உள்ளது.  மேலும் கேளீர் மேதகையீர் ! புல்வெளியில் ஆங்காங்கே அங்கே புலப்படுகிறதாம் சில முட்செடிகள்! மகாராஜாவின் பாதங்கள் புண்படாவிடினும் பாதுகைகள் முள் குத்தி பாவம் பாதுகைகள் பரிதவிக்கலாம். முட்களை முற்றும் அகற்றிய பின் அரசே தாங்கள் அங்கே செல்லலாம் !  இன்னும் கேட்பீர் ஏந்தலே !அங்கே எல்லை தாண்டிவரும் பகைதேச எறும்புகள் விட்டெத்தி யாகநும் புட்டத்தில் ஊர்ந்து  கொடுக்கை கொண்டு கடுப்பை ஏற்றி இடுப்பை கடித்து இம்சை புரிந்து தேவரீருக்கு எதிராய் அரசதுரோகம் செய்யும் ஆபத்துள்ளது.  கானகப் புல்வெளியில் கட்டெறும்புகளை கண்ணி வைத்துப் பிடித்து அகற்றி சிறை செய்வதற்கு சில நாள் ஆகும்.  அது மட்டும் இன்றி அண்டை தேச பகைராஜாவின் ஆபத்துதவிகளின்  மூச்சுக்காற்றுகள்  அங்கே முகாம் இட்டிருப்பதாய் மோப்பம் பிடித்துச் சொல்கின்றன அரசே நமது அரண்மனை நாய்கள்.  உள்ளடி மந்திரி ---மன்னிக்கவும்!உள்துறை மந்திரி --- உரைத்த முட்டுக்கட்டைகளை விட மாமன்னருக்கு வேறொரு பிரச்சனை மனதில் நெருடியது ...  கிரீடம் அணிந்த கீர்த்திமிகு ராஜா ரோஸ்மீர் பிரதேசத்தின் குல்லா அணிந்த குடிமக்களை ஐயத்துடன் அணுகுகிறார்.  கிரீடத்தை கேலி செய்யவே அவர்கள் குல்லா அணிவதாய் குமுறுகிறார்! அல்லது .... அனைத்து குடிமக்களுக்கும் குல்லா போடுகிற அவரின் கொள்கையை இப்படி விமர்சிக்கிறார்களோ என வெம்புகிறார்!  மகாராஜாவும் அவர் பரிவாரமும் ரோஸ்மீர் பிரதேச மனிதர்கள் அனைவருமே குறுந்தாடியிலும் பெருந்தாடியிலும் குளவிக்கூடுகளை மறைத்து வளர்த்து தங்கள்மேல் ஏவ தயாராய் இருப்பதாய் குமுறுகிறார்கள்!சந்தேகிக்கிறார்கள்!  எங்கும் இருப்பது போல் அங்கும் சில இழிபிறவிகள் உண்டுதான் எனினும்... தலைமுடியில் சில பேன்களை அகற்ற “தலையையே வெட்டு “என கத்தி தருகிற அறிவுலக மேதைநம் அரசர்க்கரசர்.  அது மட்டும் அல்லாமல் பேனை வளர்த்துப் பெருமாள் ஆக்கி மக்களுக்கு பூச்சாண்டி காட்டுவதிலும் மகா கில்லாடி --மன்னிக்கவும் -- மகா வில்லாளி நமது மாமன்னர் !  ஃபக்கீர்கள் தான் ராஜாவுக்கு பரம வைரிகள்! ஆனால் பாதுஷாக்களை மட்டும் அவர்களின் தாடியை நீவியபடி தழுவிக் கொள்வார்!  சீதளம் நிறைந்த இப் பகுதியை தவிர்த்து பாலைகள் நிறைந்த பாதுஷா தேசத்திற்கு பாதுஷாவுடன் பாதுஷா சாப்பிட பயணமானார் மகாராஜா!  பாதாளத்தில் பாயும் சரஸ்வதி நதி தான் பாலைவன தேசத்தில் எண்ணை நதியாய் கொப்பளிப்பதாய் எண்ணிய மாமன்னர்...அதை சுல்தானுக்கு சொல்ல முனையும் சுவாரசியமான தருணத்தில் ....  அரசரின் தேசத்தில் இங்கே அவலம் ஒன்று அரங்கேறியது... தேசத்தின் சிரசில் சம்மட்டியால் அடித்தது போல் ஒரு சம்பவம் நடந்தது ...  குயிலோசை கேட்கும் மலையில் குண்டோசை கேட்டது ... புண்ணியதேசம் புண்தேசம் ஆனது ... ரம்மிய தேசம் ரணதேசம் ஆனது ....  கானகப் புல்வெளியில் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்த காதலர்களுக்கும் குழந்தைகளுக்கும் நடுவில் காட்டெருமைகள் நுழைந்த கணக்காய் வெறியர்கள் புகுந்து வேட்டை நடத்தினர்....  ரோஜா தோட்டத்தில் கள்ளிச்செடி தலைகாட்டிய கதையாய்... ஆப்பிள் கூடையில் எட்டிப் பழம் கலந்த சதியாய் கயமை அங்கே களிநடம் புரிந்தது ....  வண்டு துளைக்கும் ஆப்பிள் மரங்களை குண்டு துளைக்கும் கொடுமை நேர்ந்தது ....  சுல்தான்  பாதுஷாவையும் சுவைத்த பாதுஷாவையும் அப்படியே விட்டு ஆகாய ரதத்தில் விரைந்து திரும்பினார் வேந்தர்.  “அரக்கப் பறக்க அரசர் வருகிறார், பிணங்களையும் ரணங்களையும் கண்டு மன்னர் கண்கலங்குவார் ... “என்று காத்திருந்தனர் குடிமக்கள் .   ரோஸ்மீர் வந்து ரோஷமாய் கோபமாய் தேசத்தின் பிரஜைகளை தேற்றி கயவரை ஒழிக்க கங்கணம் கட்டுவார் “ என்று காத்திருந்தனர் காயப்பட்ட குடிமக்கள் .  ஆனால் ஆனால் ஆகாய ரதம் “பேஜார் “ என்னும் பிரதேசம் நோக்கி வாயுவேக மனோ வேகமாய் வானில் சென்றது!  ஐம்பத்தாறு பிரதேசத்தையும் ஆளும் ஐம்பத்தாறு விரற்கடை மார்பர் ஓசை பெற்றுயர் ஓங்காரக் குரலில் உறுமினார் !  கற்பனைக்கு எட்டாத கர்ஜனைக் குரலில் “கற்பனைக்கு எட்டாத தண்டனை “ தருவதாய் சபதம் செய்தார் சாம்ராஜ்யாதிபதி !  ஆனால் ஆனால் அந்த கர்ஜனை கொடியோரை அழிக்க சபதம் ஏற்று குமுறும் குரல்என சிலரே சொல்கிறார்!  குஸ்தி போடு வதற்கு முன்னால் கூச்சல் போட்டு கூவும் குரல் அது என்றே மிகப் பலர் இயம்புகிறார்கள்! பிந்தைய கருத்தே பெரிதும் சரி என இந்தஇக் கவிக்கும் எண்ணம் உள்ளது!  ஏனெனில் அந்த “பேஜார் “ பிரதேசத்தில் இன்னும் சில தினங்களில் குஸ்திப் போட்டி ஒன்று நடக்க இருக்கிறது!  “மாதம் சில போனபின் நடக்கப் போகும் மல்யுத்தப் போட்டியில் தனது அரண்மனை விசுவாசிகள் பக்கத்துக்கான  ஆதரவுக் குரல் அது ! ஆவேச குரல் அது ! “ என்றே பலரும் இயம்புகிறார்கள்!  “கற்பனைக்கும் எட்டாத தண்டனை தருவதாய் “ மல்யுத்த எதிர் கோஷ்டிக்கு அவர் சவால் விட்ட சத்தம் என்கின்றனர்!  கொலைக்களத்தில் எதிரிகளை எதிர்ப்பவரின் கோபக் குரல் போல் தோன்றினாலும் அது குஸ்திக் கூடத்தில் முண்டா தட்டுபவரின் கொக்கரிப்பு  கூச்சல்என் கின்றனர்!  சாவு வீட்டில் சடுகுடு ஆடுபவர் உரக்கப்போடும் ஓசை போல் அவர் ஓசை உள்ளதாம்! உரைக்கிறார் மிகப் பலர்!  ஆனால் அந்தோ!அரசர் தனது உதட்டைக் கடித்து உறுமியதில் உதிரம் கசிந்தது உதட்டில்! எதிரியின் உதிரம் சிந்தியதோ இல்லையோ இவரது உதடு உதிரம் கசிந்ததே என்னே தியாகம்!  அரசரின் ஆக்ரோஷம் அடிப்பொடிகளையும் ஆகர்ஷித்தது ! மரத்தைப் பிளக்க கூரான ஆப்பு ! மக்களைப் பிளக்க ஜோரான பேச்சு! திரியை தூண்டி தீ மூட்டுதல் போல் வெறியை தூண்டும் வேந்தர் பேச்சு! என்று மகிழ்ந்தது அரண்மனை பரிவாரம் !  குல்லா தாடிக் “கொடியவர் “ தலைமுடிக்குள் குத்துவாள் மறைத்து இருப்பதாய் கூறி பேன் பார்ப்பவரை விட பெரும் கவனத்துடன் தேடுதல் வேட்டை திறம்பட நடந்தது !  தாடி ஆடுகளை பராமரிப்போர் மதவிரோதிகள் எனவும் சனாதனத்துக்கு சவால் விடுவதாகவும் தண்டோரா போடப்பட்டது!  பேஜார் பிரதேசத்தில் இனி வரப்போகும் குஸ்திப் போட்டிக்கு இப்போதே ஆயத்தமாகும் அரசரின் சங்கேதமான சைகை ஓசை இது என்று அவரின்  பரிவாரங்கள் பகுத்து உணர்ந்தனர்,  இந்த ஆரவார ஓசையில் ரோஸ்மீர் படுகொலைகளின் அவல ஓலம் அடங்கலானது.  மலைவேழம் எனும் பிரதேசத்தினள். தந்தையை பறி கொடுத்த மங்கை ஒருத்தி சொன்ன சொல்லுடன் இந்த சோகக் கதையை முடிப்போம்!  “என் தந்தையை நான்இழந்து வந்தேன் . எனினும் அங்கெனை காப்பாற்றிய இரு  ரோஸ்மீர் சகோதரரை எனது இரண்டு கண்களாய் ஏற்று வந்தேன் ! அவர்களின் தாடிக்குள் குளவிக் கூட்டைநான் காணவில்லை! அந்த தாடிகள் அமைதிப் புறாக்கள் அடையும் கூடாய் எனக்குத் தோன்றின என்பதே உண்மை!”