articles

img

சாம்சங் தொழிலாளர் போராட்டம் சாதித்தது என்ன? - இ.முத்துக்குமார்

மூலதனம், சுரண்டல், இதை எதிர்கொள்ளுகிற தொழிலாளி வர்க்கத்தின் போராட்டம்- ஆகியவற்றை சமூகத்தின்  முக்கிய விவாதப் பொருளாக மாற்றி இருப்பது சாம்சங் போராட்டத்தின் பல வெற்றிகளில் ஒன்றாகும். 

தமிழ்நாட்டில் செயல்படும் சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 37 நாட்களாக நடைபெற்ற வேலை நிறுத்தம் அதன் துவக்கமும் முடிவும் உலகத்தின் பார்வையை தன் பக்கம் ஈர்த்தது. போராட்டத்தை ஒட்டி எழுந்த விவாதங்கள் இப்போதும் தொடர்கின்றன. 

சங்கம் எப்படி உருவாகிறது?

தொழிற்சாலைகளில் சங்கம் அமைப்பது என்பது தொழிலாளர்களின் சிந்தனையில் இருந்து பிறக்கும் ஒரு வலுவான கருத்தாகும். அதற்கான விதையை விதைப்பது  நிர்வாகத்தின்  கொள்கைகளும் அதை எதிர் கொள்ளுகிற தொழிலாளர்களின் அனுபவங்க ளுமே. நவீன தொழிற்சாலைகளில் எந்த ஒரு தொழிலாளி யையும் தொழிலாளிகளுக்கு சம்பந்தம் இல்லாத ஒருவரால் தொடர்பு கொள்ளவோ அவர்களோடு பேசவோ இயலாது. பல்வேறு பகுதியில் இருந்து சங்கமித்திருப்பவர்கள் தான் ஆலையில் பணி செய்யக்கூடிய தொழிலாளிகள். ஒரு அரசியல் கட்சி தன் வளர்ச்சிக்காக தன் கொள்கைகளை விளக்கி பிரச்சாரம் செய்வதைப் போல; சில மத அமைப்புகள் பிரச்சாரம் செய்து தங்கள் மதத்தை நிறுவுவதைப் போல; ஒரு கிராமத்துக் குள் சென்று கிராம மக்களை ஒரு குறிப்பிட்ட பிரச்ச னைக்காக போராட்டத்தில் ஈடுபடுத்துவதைப் போல ஒரு தொழிற்சாலையில் தொழிலாளர்களை திரட்டி சங்கம் அமைப்பதோ, போராட்டத்தை உருவாக்குவதோ தொழிலாளர் அல்லாத எவர் ஒருவராலும் முழுக்க முழுக்க சாத்தியமற்ற ஒன்று

சங்கம் என்கிற சிந்தனை தொழிலாளர்களிடம் உருவாகிற போதே அதை அழிப்பதற்கான எதிர் சிந்தனை உடனடியாக நிர்வாகத்திற்குப் பிறந்து விடு கிறது. இதை ஆலைக்குள்ளே வேலை செய்கிற தொழி லாளர்களால் மட்டுமே அறிய முடியும்; உணர முடியும். எந்த ஒரு முதலாளித்துவ தொழிற்சங்கமோ அல்லது இடதுசாரி சிந்தனை கொண்ட தொழிற் சங்கமோ ஒருபோதும் ஆலைக்குள் சங்கத்தை உருவாக்குவது என்பது நடைமுறை சாத்தியமற்றது. அது உண்மையும் அல்ல. தொழிற்சங்கம் என்பது தொழிலாளிகள் தமது தேவையில் இருந்து அவர்கள் மேற்கொள்கிற  துணிச்சல் மிக்க ஒரு நடவடிக்கை யாகும். சாம்சங் தொழிற்சாலையிலும் 17 ஆண்டுக ளுக்குப் பிறகு,  தொழிலாளிகளுக்கு தங்களது தொழிற் சங்கம் தேவை என்பது, ஒவ்வொரு நாளும் தாங்கள் சந்தித்த முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கு மான உறவுகளில் ஏற்பட்ட முரண்பாடுகளில் இருந்து உருவான சிந்தனையே தவிர, அது வெளியில் இருந்து உருவாக்கப்பட்ட சிந்தனை அல்ல. இது எல்லா நிறு வனங்களுக்கும் பொருந்தும். எல்லா நாட்டு நிறு வனங்களுக்கும் பொருந்தும்.  

எந்த நாட்டின் நிறுவனமாக இருப்பினும்...

இதுவரை சங்கம் அமைக்கப்பட்டிருக்கிற காஞ்சி புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அமெரிக்கா, கொரியா, ஸ்பெயின்,  பிரான்ஸ், தைவான், இங்கிலாந்து, பின்லாந்து, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைத் தலைமையிடமாகக் கொண்ட அனைத்து பன்னாட்டு நிறுவனங்களிலும் தொழிலாளர்கள் தமது சங்கத்தை அமைத்துள்ளனர். இந்திய நாட்டின் நிறுவனங்களான அப்பல்லோ, ஜெ.கே.டயர், ஏசியன் பெயிண்ட்ஸ், பி.பி.ஜி ஏசியன் பெயிண்ட்ஸ்,யுனைடெட் இண்டஸ்ட்ரி, மெட்ராஸ் இன்ஜினியரிங்- இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட அந்நிய - இந்திய நிறுவனங்களில் சங்கம் அமைக்கப்பட்டிருக்கின்றது.  சிஐடியு  மடடுமல்ல; ஐஎன்டியுசி, யுஎல்எப், ஏஐசிசிடியூ, ஏஐடியூசி, பிஎம்எஸ், தொமுச என அனைத்து வகையான சங்கங்களும் இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பான்மையான தொழிலாளர்கள் தேர்வு செய்து இருக்கிற சங்கம் சிஐடியு தொழிற் சங்கமாகும். சீன நாட்டின் நிறுவனமான கிரிடோ என்கிற கார் டயர்களுக்கான அச்சு (மோல்டு) எந்திரங்களை தயாரிக்கும் மிக நவீன தொழிற்சாலையிலும் சிஐடியு ஆதரவு தொழிற்சங்கம் அமைக்கப்பட்டிருக்கின்றது. அங்கும் போராட்டங்கள் நடக்கின்றன.  எனவே தொழிலாளர்கள் எந்த நாட்டின் நிறுவனம் என்பதை பார்த்து வேலைக்கு சேர்வதும் இல்லை; நாடுகளை குறி வைத்து சங்கம் அமைக்கப்படுவது மில்லை; தங்கள் போராட்டங்களை நாடுகள் அடிப்ப டையில் திட்டமிடுவதுமில்லை. எனவே, இது தொ டர்பான அவதூறுப் பிரச்சாரம் முழுக்க முழுக்க  வலதுசாரி மற்றும் முதலாளித்துவ கருத்துடைய - கார்ப்பரேட் ஆதரவு மற்றும் கம்யூனிச எதிர்ப்பு பிரச்சா ரமே தவிர, இதில் சிறிதளவும் உண்மை இல்லை.

முற்றிலும் வேறுபட்டது சிஐடியு

இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) என்பது இந்திய நாட்டின் தொழிற்சங்க பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு தேசிய அளவிலான தொழிற்சங்கமாகும். தன் அமைப்பு விதிகளில் எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் தொழிலாளர் பிரிவு என்று அதன் விதிகளில் எங்கும் இல்லை. ஆனால், தேசிய அளவிலான இதர முதலா ளித்துவ தொழிற்சங்கத்திலிருந்து சிஐடியு முற்றிலும் மாறுபட்டது. தொழிலாளி வர்க்கத்தின் மீதான கொடூரச் சுரண்டலை, நமது நாட்டின் தொழிலாளர் நலன் சார்ந்த அனைத்து சட்டங்களுக்கும் உட்பட்டு கட்டுப் படுத்தவும் ஒழுங்குபடுத்தவும்; சட்டத்தின் பலன் களை பெறுவதற்கும் அனுபவிப்பதற்கும்; அவர்கள் சங்கமாக திரள்வதற்கும் அமைப்பு ரீதியாக தமது செயல்பாட்டை அமைத்துக் கொள்ளவும் நமது நாட்டின் சட்டப்படி உதவிடும் அமைப்பாகும். உழைப்புச் சுரண்டலற்ற ஒரு சமூகச் சூழல், சோசலிச சமூகத்தில் மட்டுமே சாத்தியம் என்பதனை உணர்ந்து தனது அமைப்பு விதிகளில் சோசலிச லட்சியங்களை சிஐடியு முன்னிறுத்துகிறது. இந்த  அமைப்பு விதிகளை ஏற்று தொழிலாளி வர்க்கத்துக்கு விசுவாசமாகச் செயல்படும் எவர் ஒருவரும் அனைத்து தலைமைப் பொறுப்புகளுக்கும் வர முடியும். இதில் குறிப்பிட்ட கட்சியில் உறுப்பின ராக இருப்பதோ உறுப்பினர் இல்லாமல் இருப்பதோ நிபந்தனை அல்ல.  தொழிலாளிகளுக்கான அரசியல் இருக்கிறது; அது முதலாளி வர்க்கம்- தொழிலாளி வர்க்கம்-  என இரு தரப்பு அரசியல் என்பதையும்; இந்த வர்க்க அரசியலை தொழிலாளிகளுக்கு புரிய வைப்பதையும் தனது தொழிற்சங்க பயணத்தில்  ஒரு பகுதியாக சிஐடியு  மேற்கொள்கிறது. 

தொழிலாளர் அல்லாத தலைவர்கள், ஏன்?

அரசு மற்றும் நிறுவனத்தின் வலிமையான எதிர்ப்பை எதிர்கொள்வதற்கு ஒரு சாதாரண தொழிலாளியால் இயலாது என்கிற பின்னணியில் தான், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்து, போ ராட்டங்களும் சர்ச்சைகளும் ஆய்வுகளும் நடந்த அனுபவப் பின்னணியில், தொழிலாளர் அல்லாத ஒரு பகுதியினர் நிர்வாகிகளாக இருந்து செயல்பட; ஒரு தொழிற்சங்கத்தை வழிநடத்த சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.  அப்படி இருப்பதினால் மட்டும்தான் தொழி லாளர்கள் தன் உரிமைகளை ஓரளவுக்கு அடைய முடியும். கடந்த நூறாண்டுகால அனுபவத்தில் தொழிற்சங்க இயக்கம் பெற்றிருக்கிற அனைத்து உரிமைகளும் இந்தப் பின்னணியில் இருந்துதான் சாத்தியமாகி இருக்கிறது. ஆலையில் வேலை செய்கிற நிராயுதபாணியாய் இருக்கிற ஒரு தொழிலா ளியால் ஒருபோதும் - மிக நவீன உலகளாவிய பலம் பொருந்திய ஒரு நிறுவனத்தை எதிர்த்து  நிமிர்ந்து  கூட பார்க்க முடியாது. எனவே, தனக்கு தலைக்கவச மாக தனக்கான தலைமையை அவர்கள் தேர்வு செய்கிறார்கள். தொழிலாளர் அல்லாத தலைவர்கள், இந்தப் பின்னணியிலேயே தொழிற்சங்கத்துக்கு தலைமைப் பொறுப்பினை ஏற்கிறார்கள்.   இந்த தலைமைப் பொறுப்பு என்பது முழுக்க முழுக்க தொழிலாளர்கள் விரும்பி எடுக்கும் முடிவே தவிர, வெளியில் இருந்து நிர்பந்தித்து எடுக்கப்படும் முடிவு அல்ல.

சாம்சங் வேலை நிறுத்தம் சாதித்தது என்ன?

35 நாட்களாக எத்தனையோ அடக்குமுறை களை எதிர்கொண்ட போதிலும் கம்பீரமாக எழுந்து நின்றது சாம்சங் தொழிலாளர்களின் எழுச்சி.  பொருளாதாரக் கோரிக்கைகளுக்கான இந்தப் போராட்டம் பல்வேறு காரணங்கள் மற்றும் சூழல்க ளால் அரசியல் ரீதியான போராட்டமாக உருவெடுத்த பின்னணியில்தான் அரசின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டது.  இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட ஏற்பு அறிவுரை வடிவிலான உடன்பாடுகள், மகத்தான வெற்றியே ஆகும். இந்த உடன்பாடு எதை சாதித்தது என்று கேள்வி கேட்பவர்களுக்கு; “37 நாள் வேலைநிறுத்த போராட்டமும் அதற்கு முந்தைய சவால்களையும்  நெருக்கடிகளையும் கடந்து அனைத்து தொழிலாளி களும் சிந்தாமல் சிதறாமல் தொழிற்சாலைக்குள் மீண்டும் சங்க அமைப்போடு உள்ளே செல்வதே சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் பெற்று இருக் கிற மகத்தான வெற்றி ஆகும்” என்பதே ஆகும்.  நாங்கள் முன் வைத்திருக்கிற கோரிக்கையின் மீது  நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக பதில் சொல்லியாக வேண்டும் என்பதும், இவ்வளவு தாக்குதலுக்குப் பிறகு  சங்கத்தை நிலை நிறுத்தி இருப்பது என்பதும் இந்த போராட்டத்தின் உயர்ந்தபட்ச வெற்றியாகும்.  நிர்வாகத்தின் பதிலுரையில், எங்கள் கோரிக்கை யை மறுக்கலாம்; நிராகரிக்கலாம்; அல்லது சிறு பகுதி யைக் கூட ஏற்கலாம்; எதுவாக இருந்தாலும், கடும் நெருக்கடிகளை எதிர் கொண்ட ஒரு தொழிற்சங்க இயக்கத்திற்கு அடுத்து வரக்கூடிய சவால்கள் ஒன்றும் பெரிதல்ல; புதிதும் அல்ல.  சாம்சங் நிர்வாகத்தின்  செயலை இப்போது தொழி லாளர் சங்கம் சட்டத்திற்கு உட்படுத்தி இருக்கிறது; இனி சட்டத்தின் வழியாகவும் அதை மேற்கொள்ள ஒரு வாய்ப்பினை இந்த போராட்டம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இதுவரை ஒரு தொழிற்சங்க இயக்கம் மட்டும் போராடிக் கொண்டிருந்த நிலை மாறி, நமது நாட்டு சட்டத்திற்காக, நமது நாட்டின் தொழிலாளிவர்க்க இயக்கத்தின் உரிமைகளுக்காக ஒட்டுமொத்த முற்போக்குச் சமூகமும் போராட முன்வந்துள்ள பரிணாம வளர்ச்சியை தமிழ்நாட்டில் சாம்சங் போராட்டம் ஏற்படுத்தி இருக்கிறது.  இந்த மகத்தான பரந்துபட்ட ஒற்றுமை முற்போக்கு அரசியலையும் முன்னுக்கு எடுத்துச் செல்வதற்கான ஒரு கதவை திறந்து இருக்கிறது. மூலதனம், சுரண்டல், இதை எதிர்கொள்ளுகிற தொழிலாளி வர்க்கத்தின் போராட்டம்- ஆகியவற்றை சமூகத்தின் முக்கியவிவாதப் பொருளாக மாற்றி இருப்பது வேலைநிறுத்தப் போராட்டத்தின் பல வெற்றி களில் ஒன்றாகும்.  மேலும் தொழிலாளர்கள் அமைப்பாக திரள்வ தற்கான ஒரு நம்பிக்கையையும் அனைத்துப் பகுதி தொழிலாளர்கள் மத்தியில் இப்போராட்டம் விதைத்துள்ளது.

கட்டுரையாளர் : தலைவர்,  சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் (சிஐடியு)