சங் பரிவாரத்தின் இந்துத்துவா கொள்கை களை பரப்புவதில் அவர்கள் பயன்படுத்தும் பல கருத்தாக்கங்களில் ஒன்று பசுவின் புனிதம். இந்த புனிதத்தின் அடிப்படை யில் கடந்த சில வருடங்களாக பல கும்பல் படுகொலை கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. இதில் அதிகம் கொல்லப்பட்டது முஸ்லீம்களும், தலித் மக்களும் ஆவர். பசுவின் பெயரால் நடக்கும் தாக்குதல்களை பிரதமர் மோடி ‘விமர்சித்தாலும்’ இவை நிற்கவில்லை. பிரதமரின் விமர்சனம், படுகொலைகள் குறித்து வெளி நாடுகளில் உருவாகும் இந்தியா மீதான களங்கத்தை திசை திருப்பும் செயலா எனும் கேள்வி எழுகிறது.
சில நாட்களுக்கு முன்பு ஆர்யன் மிஸ்ரா எனும் இந்து மாணவர் பசு குண்டர்களால் படுகொலை செய்யப் பட்டது மிகப்பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது. முஸ்லீம்களோ அல்லது தலித் மக்களோ பசு குண்டர்களால் தாக்கப்படும் பொழுது கள்ள மவுனம் காக்கும் ஊடகங்கள் ஆர்யன் மிஸ்ரா படுகொலைக்கு பின்பு இதனை முக்கிய செய்தியாக வெளியிட்டன. ஆர்யனின் பெற்றோரே கேட்டது போல முஸ்லீம் மக்களின் உயிர் எனில் அது மலிவாக ஆகிவிட்டதா எனும் கேள்வி முன்னுக்கு வருவதில் ஆச்சர்ய மில்லை. ஆர்யனின் படுகொலை சில மாநிலங்களில் எந்த அளவுக்கு புறச்சூழல் இந்துத்துவா கருத்தாக்கத் தால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை கோரமாக வெளிப்படுத்துகிறது.
ஆர்யன் மிஸ்ராவின் படுகொலை
ஆகஸ்ட் 23 அன்று 12ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஆர்யன் மிஸ்ரா அவரது நண்பர்களால் நடு இரவில் அழைக்கப்படுகிறார். நண்பர்கள் ஒன்று சேர்ந்து ஒரு காரில் கிளம்புகின்றனர். இந்த காரில் இரு பெண்கள் உட்பட 5 பேர் இருந்தனர். ஆர்யன் தவிர மீதி 4 பேரும் ஆர்யன் குடியிருக்கும் வீட்டின் சொந்தக் காரர்கள். அதில் மூத்த மகன் மீது ஒரு கொலை குற்றம்சாட்டப்பட்டுள்ளதால் அவரை காவல்துறை யினருக்கு தெரியாமல் தங்கவைக்க ஒரு இடத்தைத் தேடி அவர்கள் சென்றதாக தெரிகிறது. இளைய மகன் காரை ஓட்டினார். அப்படி அவர்கள் காரில் பயணித்து கொண்டிருந்த பொழுது இன்னொரு கார் அவர்களை துரத்தியது. அவ்வாறு துரத்திய காரில் காவல்துறை யின் சிவப்பு விளக்கு இருந்ததால் ஆர்யன் இருந்த கார் வேகம் எடுத்தது. துரத்துபவர்கள் தங்களின் எதிர் கோஷ்டி அல்லது காவல்துறை என நினைத்த ஆர்யனின் கார் நிற்காமல் வேகமாக சென்றது. சுமார் 30 கி. மீ. துரத்தலுக்கு பின்னர் ஆர்யன் சென்ற கார் மடக்கப்படுகிறது. முதலில் தோள்பட்டையிலும் பின்னர் தலையிலும் ஆர்யன் சுடப்பட்டார். அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகொலை செய்யப்பட்ட ஆர்யன் ஒரு பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த, கடவுள் நம்பிக்கை அதிகமாக உள்ள இளைஞர். அவர் எப்பொழுதும் பொட்டு இல்லாமல் இருந்ததே இல்லை என அவரின் தாயார் கூறுகிறார். சமீபத்தில் நடந்த கன்வார் யாத்திரை யில் ஆர்யன் பங்கேற்று நீண்ட தூரம் பாதயாத்திரை சென்றுள்ளார். சுட்ட பின்னர்தான் துரத்திய கும்ப லுக்கு தாங்கள் தவறான நபரை சுட்டுவிட்டோம் என தெரிந்தது. எனவே அவர்கள் தப்பிவிட்டனர். அந்த காரில் பயணித்த பெண்கள் முதலில் தங்களை எதிர்கோஷ்டி ஒன்று சுட்டது என திசைதிருப்ப முயன்ற னர். பின்னர் விசாரணையில் சுட்டது பசுக் குண்டர்கள் என்பது தெரிந்தது. இந்த படுகொலை காரணமாக அனில் கவுசிக் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கும்பலின் தலைவன் அனில் கவுசிக். இதற்கு பின்னர் நடந்த நிகழ்வுகள்தான் கவலை தரும் பல கேள்விகளை எழுப்புகின்றன.
கொலையாளி நேர்மையான மனிதரா?
கொலையாளிகள் 30 கி.மீ தூரத்துக்கு ஆர்யன் பயணித்த காரை துரத்தியுள்ளனர். அது தேசிய நெடுஞ்சாலை. அவ்வளவு தூரம் எங்குமே காவல்துறையின் இரவு கண்காணிப்பு வாகனங்கள் இல்லையா? இது நடைபெற்ற தலைநகர் தில்லிக்கு மிக அருகாமை இடம் என்பது கவனிக்கத்தக்கது. காவல்துறையினர், ஆர்யனின் தந்தை சியானந்த் மிஸ்ராவை காவல் நிலையத்துக்கு அழைத்து முக்கிய குற்றவாளி அனில் கவுசிக்கை சந்திக்க வைத்துள்ளனர். அப்பொழுது அவரது காலில் விழுந்த அனில் கவுசிக் தெரியாமல் ஒரு இந்துவை கொன்றுவிட்டதாகவும் தன்னை மன்னிக்கும்படியும் கேட்டார். ஆர்யனின் தந்தை அனில் கவுசிக்கை சந்திக்க ஏன் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்? ஆர்யனின் குடும்பம் இந்த படுகொலை யை மென்மையாக அணுகவைக்கவும் அனில் கவுசிக்கை காப்பாற்றவும் முயற்சிகள் செய்யப்படு கிறதா எனும் கேள்வியை இது எழுப்புகிறது. மேலும் ஆர்யன் ஒரு இந்து என தெரியாமல் கொன்றுவிட்ட தாக கூறும் அனில் கவுசிக், முஸ்லீமாக இருந்தால் தெரிந்தே கொன்று இருப்பார் என்பதை சொல்லாமல்சொல்கிறார்.
அனில் கவுசிக் ஒரு நேர்மையான மனிதர் என காவல்துறையினர் தன்னிடம் கூறியதாக ஆர்யனின் தந்தை சொன்னதாக, பின்னர் அவரைச் சந்தித்து ஆறுதல் கூறிய மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் பிருந்தா காரத் வெளிப்படுத்தியுள்ளார். பசுவின் பெய ரால் கொலை செய்பவர்கள் நல்ல மனிதர்கள் என காவல்துறையினர் மதிப்பீடு செய்கின்றனர் எனில் சூழல் எந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்பதை நாம் அறியலாம். இந்த பிரச்சனை குறித்து ஊர் மக்களிடம் விசாரணை செய்த பொழுது சிலர் “அனில் கவுசிக் போன்ற நல்லது செய்யும் ஒருவர் ஏன் ஆர்யனை கொலை செய்ய வேண்டும்? ஏதாவது முன்பகை இருக்க வேண்டும்” என கூறியதாக பிரிண்ட் இதழ் நிருபர் தெரிவிக்கிறார். “நல்லது செய்வது” எனில் பசுவின் பெயரால் கொலை செய்வதும் அடங்கும் என சாதாரண மக்கள் எண்ணுவது எவ்வளவுஆபத்தானது?
அரசும் பசுக்குண்டர்களும்கை கோர்க்கும் பொழுது...!
கடந்த வாரத்தில் ஆர்யன் படுகொலை மட்டு மல்ல; பசுக்குண்டர்கள் ஒரு முஸ்லீம் பெரியவரை மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி கல்யாணிலிருந்து மும்பை செல்லும் ரயிலில் தாக்கி னர். அதனை வீடியோவும் எடுத்தனர். உண்மையில் அவர் தனது மகளுக்காக ஆட்டிறைச்சிதான் கொண்டு சென்றார். கொடுமை என்னவெனில் அந்த பசுக்குண்டர்கள் காவல்துறை பணி தேர்வுகளுக் காக சென்று கொண்டிருந்தனர். இவர்கள் காவல்துறையில் தேர்வு செய்யப்பட்டால் என்ன ஆகும்? இதே வாரத்தில் ஹரியானாவில் ஒரு வெளி மாநில தொழிலாளி மாட்டிறைச்சி சாப்பிட்டார் என குற்றம்சாட்டப்பட்டு பசுக்கும்ப லால் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைகளும் தாக்குதல்களும் ‘பசுவின் புனிதம்’ எனும் பெயரில் புரையோடி இருக்கும் மோசமான சூழலை பறைசாற்றுகிறது.
பா.ஜ.க. ஆளும் பல மாநிலங்களில் பசுவின் புனிதம் காக்க சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. மாட்டி றைச்சியோ அல்லது மாடுகளையோ வாகனங்களில் கொண்டு செல்வது குற்றமாக கருதப்படுகிறது. அதே சமயத்தில் இந்தியா மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்வதில் இரண்டாவது இடம் வகிக்கிறது. இந்த ஏற்றுமதியாளர் களில் பலரும் முஸ்லீம் அல்லாதவர்கள். பசுக்குண்டர்கள் இந்த நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவது இல்லை. மாடுகளை ஏற்றிச்செல்லும் சில அப்பாவிகளை - பெரும்பாலும் முஸ்லீம்களையும் தலித் மக்களையும்தான் தாக்குகின்றனர். பல இடங் களில் காவல்துறையினர் பசுக்குண்டர்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். மாடுகள் கடத்தப்படுவதாக தகவல் காவல்துறையினருக்கு வந்தால் அவர்கள் உடனடியாக பசுக்குண்டர்களிடம் தகவல் தெரிவிக்கின்றனர். பின்னர் பசுக்குண்டர் கள்தான் அந்த வாகனங்களை துரத்துவதும் அதில் உள்ளவர்களை தாக்குவதும் நடக்கிறது. பசுக்குண்டர் களின் செயல்கள் சட்டப்பூர்வமான செயல்களாக பா.ஜ.க. மாநில அரசுகளால் கருதப்படுகின்றன.
அந்த தாக்குதலில் உயிரிழப்பு ஏற்பட்டால் கொலை யாளிகளான பசுக்குண்டர்களை தப்ப வைக்க காவல்துறையினர் முயல்கின்றனர். உயிரிழப்பு ஏற்படாமல் கடும் காயங்கள் ஏற்பட்டால் அவர்களை பசுக்குண்டர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைக்கின்றனர். தாக்கிய பசுக்குண்டர்களை விட்டு விட்டு காவல்துறையினர் தாக்கப்படவர்கள் மீது வழக்கு போடுகின்றனர். இதுதான் பல பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் நடைமுறையாக உள்ளது. சட்டத்தை நிலைநாட்டும் தனது அதிகாரத்தை அரசு பசுக்குண்டர்களுக்கு தாரை வார்த்துள்ளது. பெரும்பான்மையினரின் மன உணர்வு எனும் பெயரால் பசுக்குண்டர்கள் வன்முறையை ஏவுகின்றனர். ஆனால் அதற்கான தண்டனையை அவர்கள் பெறுவதில்லை. வட மாநிலங்களில் (கர்நாடகா போன்ற தென் மாநிலங்களில் சில பகுதிகளிலும்) இது பொதுவான சமூகத்தின் அங்கீகாரம் பெயர் வைக்கப்பட்டிருப்பது மேலும் கவலை அளிக்கும் அம்சமாகும்.
“பசுவை அல்லது மாட்டிறைச்சியை கொண்டு சென்றாலும் முஸ்லீம்களை கொலை செய்ய உங்களுக்கு என்ன உரிமை உள்ளது?” என ஆர்யனின் தாயார் கேள்வி எழுப்புகிறார். “பசுவை காப்பாற்றுவது எனும் பெயரால் இப்படி சட்டவிரோத மாக நடக்கும் செயல்கள் நிற்க வேண்டும். என்னால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என கூறு கிறார் ஆர்யனின் தந்தை. நியாயமான கூற்றுகள். ஆனால் சங் பரிவாரமும் மதப்பிளவுகளை கூர்மை படுத்தினால் தான் தனது அரசியல் நிலைக்கும் என எண்ணும் பா.ஜ.க.வினரும் இதனை உணர்வது மிகவும் கடினம். மக்கள் சக்திதான் இந்த சூழலை மாற்ற இயலும். அந்த மக்களில் ஒரு கணிசமான பிரிவினர் பசுவின் புனிதம் எனும் பெயரில் நடக்கும் வன்முறைகளை அங்கீகரிக்கும் சூழல்தான் இன்று மதச்சார்பின்மை சக்திகள் முன்பு உள்ள மிகப்பெரிய சவால் ஆகும்.