மற்ற கடவுள்களுக்கெல்லாம் இல்லாத ஒரு செல்லப்பெயர் முருகனுக்கு உண்டு. முருகன் தமிழ்க் கடவுள். உள்ளத்தால், உணர்வால், உயிர்ப்பால், உறைவிடத்தால் அவன் கலப்படமற்ற பச்சைத் தமிழ்க் கடவுள். எங்கள் பகுதியில் அவனுக்கு ஆலயம் இல்லாத ஊரே இருக்காது. தைப்பூசம் வந்துவிட்டால் தெரு வெங்கும் அவன் பக்தர்கள் கூட்டம். வீதிகளெங்கும் அவன் புகழ் மணம். கிராமங்கள் முழுவதிலும் பக்திப் பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும். “குன்றத் ்திலே குமரனுக்கு கொண்டாட்டம்” என்ற பாடல் வரி களைக் கேட்டவுடன் தலை தானாக தாளம் போடத் துவங்கும். “திருப்பரங்குன்றத்தில் முருகா! நீ சிரித் தால்” என்ற பாடலைக்கேட்டால் நம் அகமெல்லாம் சிலிர்க்கும்.
ஈனம் மறைந்ததா?
டிஎம்எஸ்ஸின் “உள்ளம் உருகுதய்யா” என்ற பாடலைக்கேட்டு உருகாதார் யார்? அந்த பாடலை டிஎம்எஸ்க்கு முதலில் சொன்னது யார் என்பது பற்றி ஒரு செய்தி படித்தேன். ஆச்சரியமாக இருந்தது.
“பாசம் அகன்றதய்யா - பந்த பாசம் அகன்றதய்யா உந்தன்மேல் நேசம் வளர்ந்ததய்யா ஈசன் திருமகனே - எந்தன் ஈனம் மறைந்ததய்யா”
என்ற பாடலை பழனியில் ஒரு லாட்ஜில் வேலை பார்த்த ஒரு இஸ்லாமியச் சிறுவன் தன் வாய்க்குள் அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டிருந்த போது கேட்ட டிஎம்எஸ் அதற்கு தன் கந்தர்வக் குரலில் சாகாவரம் தந்ததாகக் குறிப்பிட்டிருந்தது. அப்பாடலில் ஒரு வரி மிகவும் ஆழமானது. முருகன்மேல் நேசம் வளர்ந்தவுடன் மனதில் இருந்த “ஈனம்” மறைந்தது என்பதுதான் கவனிக்கவேண்டிய அம்சம். கோபம், காமம், வன்மம், ஆங்காரம், ஆணவம், பொறாமை, பேராசை ஆகிய தீங்குகள் ஈனமா னவை என்று வகைப்படுத்தப்படும். ஆனால் மாபெரும் முருக பக்தர்கள் என்று தங்களை வெளிப்படுத்திக் கொள்ள முயற்சிக்கும் பாஜக தலைவர்களும், தொண் டர்களும் அதனை அறிந்ததாகத் தெரியவில்லை.
சேவல் கொடியோன் சந்நிதியில் பாஜக கொடி பிடித்ததேன்?
முருகன்மேல் அவர்களுக்கு உண்மையிலே நேசம் இருந்தால் அவன் சந்நிதானத்தில் பாஜக கொடி யைப் பிடிக்கவேண்டிய அவசியமென்ன? அவன் சேவல் கொடியோன். அவன் கொடி மட்டும் தானே அவன் சந்நிதானத்தில் பறக்கவேண்டும்! அவன் கொடிக்கு அவமரியாதை செய்பவர்களை முருக பக்தர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? திருப்பரங்குன்றம் பிரச்சனைக்காக சென்னை யில் பேரணி நடத்த அனுமதி கோரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி வழக்கு தொடர்ந்த இந்து முன்னணி அமைப்பினருக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கும் சென்னையில் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டுள்ள இடத்திற்கும் என்ன தொடர்பு என்று கேட்ட நீதிபதி, தேவையில்லாமல் பிரச்சனை களை உருவாக்க முயற்சிப்பதாக இந்து முன்னணி யினரை எச்சரித்துள்ளார். ஒற்றுமையாக வாழும் மக்களை பிளவுபடுத்த முயற்சிக்கும் போராட்டம், ஊர்வலம் என்கிற பெயரில் எந்த அரசியல் நடவ டிக்கைக்கும் அனுமதி வழங்கக்கூடாது என்ற நீதியரசர் இளந்திரையன் அவர்களின் தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.
சமூக விரோதிகளின் போலி சுவரொட்டிகள்...
மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் சார்பில் திருப்ப ரங்குன்றம் தர்காவில் ஆடுகளைப் பலியிட்டு நடத்தப் படும் சம்பந்தி விருந்துக்கு அழைப்பதாக சில சமூக விரோதிகள் போலியாக சுவரொட்டிகளை அச்சிட்டு மாவட்டம் முழுவதும் ஒட்டியுள்ளதை மதுரை இஸ்லா மிய சமூகத்தினர் காவல் துறைக்கு புகார் செய்துள் ளனர். திருப்பரங்குன்றத்தினை இஸ்லாமியர் கைப்பற்றி அதனை சிக்கந்தர் மலையாக மாற்ற சதி செய்வதாகவும் அந்த சதியை முறியடித்து முரு கனையும், அவன் குடியிருக்கும் குன்றத்தையும் காப்பாற்ற இந்துக்களும், முருக பக்தர்களும் திரள வேண்டும் என்பதும், மலையின் ஒரு சிறுபகுதியில் நூற்றாண்டுகளாக இருந்துவரும் சிக்கந்தர் பாதுஷா தர்காவை அகற்ற வேண்டும் என்பதும், அதுவரை தர்காவில் கந்தூரி போன்ற இஸ்லாமிய வழிபாடுகள் நடக்க அனுமதிக்கக்கூடாது என்பதும் பாஜக மற்றும் இந்து வலதுசாரி அமைப்பினர் வைக்கின்ற கோரிக்கைகள். இந்த கோரிக்கைகளிலும், குற்றச்சாட்டுகளிலும் துளியேனும் உண்மையும் நியாயமும் இல்லை என்பதை நாமும் அறிவோம். நாடும் அறியும். குறிப்பாக திருப்பரங்குன்றத்திலும் அதனை சுற்றி யுள்ள பகுதிகளிலும் வாழும் மக்கள் நன்கு அறிவர். அங்குள்ள பெரும்பான்மை இந்துக்களும், சிறு பான்மை இஸ்லாமியரும் காலம் காலமாக அண்ணன் தம்பியராக, மாமன் மச்சான்களாக வாழ்ந்துவருவ தோடு மட்டுமல்லாமல் ஒருவருடைய மத நம்பிக்கை களை மற்றொருவர் மதித்து விழாக்காலங்களை சேர்ந்து கொண்டாடி சமூக ஒற்றுமைக்கும், சமய நல்லிணக்கத்துக்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகின்றனர்.
இஸ்லாமியர் வெறுப்புப் பிரச்சாரமும் அண்ணாமலை கம்பெனியும்
சிறுபான்மை இஸ்லாமியர் மீது திட்டமிடப்பட்ட பொய்ப் பிரச்சாரங்களை அவிழ்த்துவிட்டு, அவர்கள் மீது பெரும்பான்மை இந்து மக்களுக்கு வெறுப்பை யும், துவேஷத்தையும் உருவாக்கி நாடு முழுவதும் நச்சு அரசியலின் விதைகளை விதைத்து தேர்தல் காலங்களில் வாக்குகளாக அறுவடை செய்வதில் வட மாநிலங்களில் பாஜகவினர் தொடர்ந்து பெற்று வரும் தேர்தல் வெற்றிகளை தமிழ்நாட்டிலும் சாத்தியமாக்க அண்ணாமலை அண்டு கம்பெனி கையில் எடுத்தி ருக்கும் ஆயுதமே “திருப்பரங்குன்றம் பிரச்சனை” என்பதில் நமக்கு ஐயமில்லை. மண்டைக்காடு துவங்கி திருப்பரங்குன்றம் வரை அவர்கள் நடத்திவரும் இந்த நச்சுப்பிரச்சாரம் இது வரை தமிழகத்தில் அவர்களுக்கு தேர்தல் வெற்றி களைப் பெற்றுத்தரவில்லை என்றாலும், தெய்வபக்தி உள்ள இந்துக்களில் ஒரு பகுதியினர் அதனை நம்பத்துவங்கியுள்ளனரோ என்ற அரசியல் நோக்கர்க ளது சந்தேகங்கள் நியாயமானவை என்றே நான் கருதுகின்றேன். அதற்கு காரணம் அந்த மக்கள் மனதில் இருக்கும் துவேஷமும், வெறுப்பும் அல்ல. இந்து மதத்தின் மீது அவர்களுக்கிருக்கும் ஆழ்ந்த நம்பிக்கையும், முருகன் -பிள்ளையார் போன்ற கடவுள்களின் மீது அவர்களுக்கிருக்கும் பற்றும் பாச மும்தான். உலகிலேயே மிக அதிகமான இறை நம்பிக்கை உள்ள மக்கள் இந்தியர்கள் என்ற சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி முடிவையும் கவனத்தில் கொண்டால் இது புரியும். வேலை வாய்ப்புகள் இல்லாமை, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீரழிவு, உணவுப் பற்றாக் குறை, ஊழல், அடிப்படை தேவைகள் இல்லாமை போன்ற வாழ்வாதாரப் பிரச்சனைகளைக்கூட சகித்து ஏற்றுக்கொண்டு வாழப்பழகிக் கொண்ட நமது மக்கள் தாங்கள் வணங்கும் தெய்வங்களுக்கு நிந்தனை, அவ மரியாதை என்றால் ஒரு கணங்கூட பொறுக்க மாட்டார்கள், பொங்கியெழுவார்கள் என்பதுதான் நமது மக்களின் சமூகக் குணம். இதனைத்தான் இன்று பாஜக அதனது அரசியல் முதலீடாகக் கருது கின்றது. தொடர்ந்து இந்த தவறான பிரச்சாரத்தை தொய்வின்றி மேற்கொண்டால் என்றாவது ஒருநாள் அதில் வெற்றி பெற முடியும் என்று அவர்கள் நம்பு கிறார்கள்.
வெறுப்பு அரசியலை வீழ்த்த..
வட இந்தியர்களைப்போல நம் மக்கள் அவ்வ ளவு இலகுவாக வீழ்ந்துவிடமாட்டார்கள் என்றாலும், சமூக நீதிக்கான ஜனநாயக சக்திகள், வெறுப்பு அரசியலின் வீச்சிலிருந்து நம் மக்களை காப்பாற்றும் பணிகளை தொடர்ந்து தொய்வில்லாமல் மேற் கொள்ளவேண்டும். நம் மண் எப்படிப்பட்ட “பண்பட்ட மண்” என்பதை நம் மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கவேண்டும்.
ராவுத்தர்களின் கோவில் திருப்பணிகள்
ராவுத்தர் என்ற சொல் இஸ்லாமியரைக் குறிக்கும் சொல்லாகும். 10ஆம் நூற்றாண்டை ஒட்டி குதிரை வணிகம் ஒரு பெரிய சந்தையாக தமிழகத்தில் உரு வாகியது. மாணிக்கவாசகர் முன் சிவபெருமான் குதிரை ராவுத்தனாக தோன்றினார் என்கிறது திருவிளை யாடற்புராணம். அருணகிரிநாதருக்கு முருகன் ராவுத்த னாக காட்சி தருகின்றான். “மாமயில் ஏறும் ராவுத்த னே” என்கிறார் அருணகிரிநாதர். பாண்டியன் சடைய வர்மன் காலத்தில் இந்து கோவிலுக்கு இஸ்லாமி யர்கள் சமயப்பணி செய்ததாகவும் செய்தி உண்டு.இந்துக்களின் அனைத்து சாதியினரோடும் சேர்ந்து இஸ்லாமியரும் அக்கோவிலுக்கு திருப்பணி செய்துள் ளனர். மதுரை வெத்திலைக்குண்டு ஆலயத்தைப் பராமரித்தவர் எலவை ராவுத்தர். காஞ்சி மடத்துக்கு பேரரசன் பதூர்ஷா 115 வராகன் பொன் வழங்கினார். தமிழகத்தின் ஒவ்வொரு தெருவிலும் கிராமங்களிலும் இதைப்போன்ற நல்லிணக்க வரலாற்றுச் சம்ப வங்களை சொல்லிக் கொண்டே போகலாம். மக்கள் மத்தியில் இருக்கும் சாதி, மதம் போன்ற அடையாள அரசியல், சமூகப் பிளவுகளை, வேறுபாடு களை களைந்து அவர்களை சித்தாந்த ரீதியாக, கொள்கைகளின் அடிப்படையில் ஒருங்கிணைப்பது தான் ஒரு சராசரி அரசியல் கட்சியின் செயல்பாடும், நோக்கமுமாக இருக்கமுடியும். இருக்க வேண்டும்.
நல்ல கொள்கையல்ல, சமூகப் பதற்றமே...
மக்கள் ஆதரவினைப் பெற்று தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியையும் அதிகாரத்தையும் கைப்பற்ற வெகுஜன அரசியல் கட்சிகளுக்கு நல்ல கொள்கைக ளும், சிறந்த திட்டங்களும், தங்களுடைய அர்ப்பணிப் பாலும், கடின உழைப்பாலும் மக்களின் நம்பிக்கை யைப் பெற்றுள்ள தலைவர்களும் தேவை. ஆனால் பாஜகவுக்கோ ஏதாவது ஒரு ஊரில் இருக்கும் ஒரு பள்ளிவாசலோ, தர்காவோ, ஒரு கிறித்தவ தேவால யமோ அதிகாரத்தைக் கைப்பற்ற போதுமானது. அந்த பள்ளிவாசலை மையமாக வைத்து அங்கே வாழ்கின்ற இஸ்லாமிய சமூகத்தினர் மீது மாற்று சமூகத்தினருக்கு வெறுப்பினை உருவாக்கி, அதனால் ஏற்படும் “சமூக பதற்றத்தை” வாக்குகளாக மாற்றுவதை பாஜக தற்போது தங்களது அங்கீ கரிக்கப்பட்ட தேர்தல் யுக்தியாக எவ்வித கூச்சமும், நாச்சமும் இன்றி தொடர்ந்து பின்பற்றி வருகின்றது. “கடைசி பள்ளிவாசல் இருக்கின்றவரை ஜெயித்துக் கொண்டே இருப்போம்” என்று ஒரு பாஜக தலைவர் வெளிப்படையாக பேசியதை புறந்தள்ள முடியாது. இந்த அடிப்படையில்தான் தமிழக பாஜக திருப்ப ரங்குன்றம் பிரச்சனையை கையில் எடுத்துள்ளது. இதை மையமாக வைத்து அரசியல் களமாடினால் சமூகநீதி மற்றும் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட சமயச்சார்பற்ற அரசியல் சக்திகளை வீழ்த்தி விடமுடியும் என்று பாஜக உறுதியாக நம்புகிறது.
பாஜகவின் சதிவலை
தங்களது தனிப்பட்ட ஆதாய அரசியலுக்காக கொள்கைகளை விற்கத் தயாராக இருக்கும் பலவீன மான அரசியல் தலைவர்களை உடன் சேர்த்துக் கொண்டு, ஒன்றிய அரசோடு ரகசியத் தொடர்பில் இருக்கும் அரசு அதிகாரிகள், காவல் துறையினர், விலைக்கு வாங்கப்பட்ட சில ஊடகங்கள் ஆகியோரின் ஆதரவினையும் ஒருங்கிணைத்துவிட்டால் இந்த முறை தங்களுக்கு வெற்றி சாத்தியம் என்று நம்பு கிறார்கள். இந்த வகுப்புவாத அரசியலுக்கு சிலநேரங்க ளில் தெரிந்தோ தெரியாமலோ சில நீதிபதிகளும் அனு சரணையாக இருப்பது நமக்கேற்பட்டுள்ள பெரும் துரதிருஷ்டம். இந்த பொய்ப் பிரச்சாரங்களை மிகப்பெரிய அளவில் சமூக ஊடகங்கள் மூலம் பரப்ப பெரும் பணத்தை செலவிட அவர்கள் தயாராக உள்ளார்கள். இந்த சதி வலையில் இருந்து தமிழகத்தையும், தமிழர்களையும் காப்பாற்றுவதுதான் நமக்கிருக்கும் பெரும் சவால். தெய்வ நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்ற அதேவேளையில் மதச்சார்பற்ற அரசி யலிலும், சமூக நீதியிலும், ஜனநாயகத்திலும் நம்பிக்கைகொண்டவர்களாக இருக்கின்ற மக்கள் சக்தியை ஒருமுகப்படுத்துவதே நமது முதல்பணி.
மகாகவியின் வார்த்தைகள்
கடவுள் ஒருவர் என்பதுமட்டுமே உண்மை. மதங்கள் என்பவை வெறும் நம்பிக்கைகளே! அவரவர் நம்பிக்கைக்கேற்ப அவரவரது கடவுள்களை அவர வர்கள் சித்தரித்துக் கொள்கிறார்கள். எந்த பெயரில் அழைக்கப்பட்டாலும், எங்கே வைத்து வணங்கப் பட்டாலும், யாரால் வழிபாடு செய்யப்பட்டாலும் அது ஒரே இறைவனை நோக்கித்தான் இருக்கமுடியும். இருக்க வேண்டும்.
“விநாயக தேவனாய், வேலுடைக் குமரனாய்,
நாராயணனாய், நதிச்சடை முடியனாய்,
பிறநாட்டிருப்போர் பெயர் பல கூறி
அல்லா, யெஹோவா எனத்தொழுதின்புறும்
தேவருந் தானாய், திருமகள், பாரதி
உமையெனுந் தேவிய ருகந்த
வான் பொருளாய்,
உலகலாங் காக்கு மொருவனைப் போற்றுதல்”
என்று பாடிய மகாகவியின் வார்த்தைகள் எவ்வளவு அர்த்தமுள்ளவை என்று உணரும்போது நமக்கு மெய்சிலிர்க்கின்றது. இன்று நமக்கு தேவை சமயச்சார்பற்ற அரசியல் மட்டுமல்ல. சமயச்சார்பற்ற ஆன்மீகமும் கூட!