articles

img

துணிச்சல் மிக்க இஸ்லாமியப் பெண்களை இழிவுபடுத்தும் ‘ஆணாதிக்க மதவெறி’ சூழ்ச்சி - மரியம் தாவ்லே

பி ரபலமான இஸ்லாமியப் பெண்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் போன்றவர்களை ஏலம் விடுவதாக கூறிய ‘சுல்லி டீல்ஸ்’ என்ற செயலிக்குப் பிறகு, இஸ்லாமியப் பெண்களை குறி வைத்து ‘புல்லி பாய்’ என்ற செயலி சமூக ஊடகத்தில் வெளிவந்துள்ளது.  இத்தகைய சம்பவம் முதல் முறை நடந்தபோதே இச்செயலை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கையை காவல்துறை எடுத்திருந்தால், ஆறு மாத காலத்தில் இத்தகைய சம்பவம் மீண்டும் நடைபெற்றிருக்காது என பெண்ணிய செயல்பாட்டாளர்கள் கருதுகின்றனர்.  இவ்விஷயத்தில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்களின் உடனடித் தலையீட்டைக் கோரி ஐந்து மாதர் அமைப்புகள் தற்போது மனு அளித்துள்ளன.  இப்பிரச்சனை குறித்து டெக்கான் ஹெரால்டு பத்திரிகையின் ஷெமின் ஜாய்க்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே அளித்த நேர்காணல்:

u பெண்களுக்கு இந்த புத்தாண்டு கசப்பான குறி யீடோடு துவங்கியுள்ளது.  தற்போது நாம் ‘புல்லி பாய்’ என்ற செயலியை பார்க்கிறோம்.  ‘சுல்லி டீல்ஸ்’ என்ற செயலி வந்த சில மாதங்களில் இது வெளி வந்துள் ளது.  இது போன்ற சம்பவங்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

அநீதியையும், தங்களுக்கு இழைக்கப்படும் எந்த விதமான தாக்குதல்களையும் எதிர்க்க முன்வருவ தோடு, அதற்கெதிராகத் தங்களது குரலை எழுப்பும் துணிச்சலான சிறுபான்மையினத்தைச் சார்ந்த பெண்களை அச்சுறுத்தி, பீதியடையச் செய்யவே இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.  பாஜக-ஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் ஆட்சி நடைபெறுகிற தற்போதைய அரசியல் சூழலில் இத்தகைய சூழ்ச்சிகள் பயன்படுத்தப்படுகின்றன.  சிறு பான்மை மக்களை அவர்கள் குறி வைக்கிறார்கள்.  இத்தகைய தாக்குதலைத் தொடுப்பவர்கள் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.  இது இவர்களுக்கு மேலும் ஊக்கத்தை அளிக்கிறது. 

u இதற்கு முன் வெளிவந்த ‘சுல்லி டீல்ஸ்’ செயலி தொடர்பாக போதுமான நடவடிக்கை மேற்கொள் ளப்படவில்லை.  மேலும், அதுவே ‘புல்லி பாய்’ செய லியை வெளியிட்டவர்களை இது  ஊக்குவித்தது என நீங்கள் நினைக்கிறீர்களா?

நிச்சயமாக. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் பட்டபோது, அந்த இணையதளம் அல்லது செயலி முடக்கப்பட்டு விட்டது என்பதை முதலில் அமைச்சர் தெரிவித்தார்.  ஆனால், தண்டனை  நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.  இச்செயலில் ஈடுபட்ட வர்கள் கைது செய்யப்படவில்லை.  துரதிர்ஷ்டவசமாக, சிறுபான்மை மக்களுக்கு எதிராக குற்றமிழைப்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத குறுகிய நோக்கத்துடான சூழல் இந்நாட்டில் ஏற்பட்டுள்ளது.  ‘தர்ம சன்சத்’ என்ற பெயரில் நடைபெற்ற கூட்டத்தில் சிறுபான்மையினரை படுகொலை செய்திட வெளிப் படையாக அறைகூவல் விடுத்தவர்கள் பாதுகாக்கப் படுகிறார்கள் என்பதை சமீபத்தில் பார்த்தோம்.  எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  ‘மனுவாதிகளைப்’ பொறுத்தவரையில், இவர்கள் எல்லாம் தேசத் துரோகி கள் அல்ல.  அதே நேரத்தில், அநீதிக்கும், தாக்குதல்க ளுக்கும் எதிராகக் குரல் கொடுப்பவர்கள் மீது பொய் வழக்குகள் தொடுக்கப்படுகின்றன.  இத்தகைய போக்கை எதிர்த்து நாம் தற்போது போராட வேண்டும். 

u நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

இந்திய தேசிய மாதர் சம்மேளனம், அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கம், அகில இந்திய முற்போக்கு பெண்கள் அமைப்பு, பிரகதி ஷீல் மகிளா சங்கடன் மற்றும் அகில இந்திய மகிளா சம்ஸ்கிருதிக் சங்கடன் ஆகிய ஐந்து மாதர் அமைப்புகள், குடியரசுத் தலைவ ரின் தலையீட்டைக் கோரி கூட்டாக கடிதம் எழுதி யுள்ளன.  துரதிர்ஷ்டவசமாக, ஆணவத்தோடு பெண்ணி னத்தை வெறுக்கும் கருத்துக்களை வெளிப்படுத்தும் அருவருப்பான காட்சியை ஒரு வருட காலத்திற்குள் இரண்டாவது முறையாக நாங்கள் காண்கிறோம் என நாங்கள் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளோம்.  அநீதிக்கும், ஊழலுக்கும் எதிராக எழுதுகிற, போராட் டங்களை நடத்துகிற துணிச்சல்மிக்க இஸ்லாமியப் பெண்களை அச்சுறுத்தி, இழிவுபடுத்தவே இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.  இதற்குக் காரணமானவர்கள் மீது உத்தரப்பிரதேசத்திலும், தில்லியிலும் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளபோதும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது வருத்த மளிக்கிறது என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளோம். அரசு நிர்வாகத்தின் சில பிரிவுகளும், நீதித்துறையுமே கூட சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் குற்றச் செயல்களை வெறும் பார்வையாளர்களாகப் பார்த்துக் கொண்டிருப்பதையும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளோம்.   தங்களைத் தாங்களே இந்து மதத்தலைவர்கள் என சொல்லிக் கொள்பவர்களால் நடத்தப்படும் பொதுக் கூட்டங்களில்  இனப்படுகொலை தாக்குதல்களை அரங் கேற்றிட அறைகூவல் விடுக்கப்பட்டு வரும் சூழலில் இந்த சமீபத்திய கொடுமை நடைபெற்றுள்ளது என்பதையும்  குடியரசுத் தலைவருக்கு நினைவூட்டியுள்ளோம்.  

u இச்சமூகத்தில் மதச்சார்பின்மை உணர்வோடு உள்ள பகுதியினரை மேலும் அடிபணியச் செய்வது என்ற வலதுசாரி நிகழ்ச்சி நிரலின் சமீபத்திய பகுதியே இது என நீங்கள் நினைக்கிறீர்களா?

ஆம், நிச்சயமாக அப்படித்தான் நினைக்கிறேன்.  இது வெறும் மதச்சார்பின்மை மீதானது மட்டுமல்ல.  நமது நாட்டின் முற்போக்கு, ஜனநாயக, மதச்சார் பற்ற மாண்புகளை ஆதரித்து தங்களது குரலை எழுப்ப முனையும் ஒவ்வொருவரையும் அழித்தொழிப்ப தற்கான நடவடிக்கையாகும்.  தங்களது ‘மனுவாதி’ மதிப்பீட்டின்படி நமது அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றவே பாஜக-ஆர்எஸ்எஸ் விரும்புகிறது. 

u ஆளுமைநிறைந்த பெண்கள் இந்த ஆணாதிக்க சக்திக ளுக்கு பிரச்சனையாக இருக்கிறார்கள் என்கிறீர்களா?

ஆம்.  இவர்களைப் பொறுத்தவரையில், பெண் என்பவள் அடிமையாக, கீழ்ப்படிபவளாக இருப்பதோடு, அவள் தனது குரலை எழுப்பக் கூடாது. 

u பெண்ணின் திருமண வயதை 18 என்பதிலிருந்து 21 ஆக உயர்த்த அரசு முன்மொழிந்துள்ள தருணத்தில் இத்தகைய தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன.  பொது சிவில் சட்டத்தை நோக்கிய முயற்சி இது என நினைக்கிறீர்களா?

பொது சிவில் சட்டத்தை நோக்கிய நகர்வு இது என நான் இதைக் குறிப்பிட மாட்டேன்.  நமது நாட்டின் கலாச்சார நடைமுறையில் ‘மனுவாதி’ கருத்துக்களைத் திணிக்கும் வகையில் இது உள்ளது.  பொது சிவில் சட்டமாக அன்றி இருபாலினத்தவருக்கும் பொதுவான சட்டமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் குறிப்பிட் டுள்ளோம். 

u பெண்களின் திருமண வயது உயர்த்தப்படுவதை நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள்?

பல்வேறு பிரச்சனைகள் இதில் உள்ளடங்கி யுள்ளன.  கல்வி மற்றும் ஊட்டச்சத்து குறைவு என்ற வாதங்கள் அரசுத் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளன.   பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் வாழ்நாள் முழுவதும் அவர்களது ஊட்டச்சத்து நிலையை மேம் படுத்துவதன் மூலம் தாய், சேய் உடல் நலன் தொ டர்பான பிரச்சனைகளுக்கு போதுமான தீர்வை அளிப்ப தோடு, அவர்களது சுயஉரிமையை பாதுகாத்து, மேம் படுத்த இயலும்.  குறிப்பாக, திருமணம் மற்றும் தாய்மை குறித்து குடும்பத்தின், சமூகத்தின், கண்காணிப்பு அமைப்புகளின், அல்லது அரசின் வற்புறுத்தல் எதுவு மின்றி சுயேட்சையாக முடிவெடுப்பதற்கான வயது வந்த பெண்களின் உரிமை பாதுகாக்கப்பட்டு, மேம் படுத்தப்படும் என நாங்கள் நம்புகிறோம்.  

அதுமட்டுமின்றி, பெண்களின் வயது உயர்த்தப் பட்டால், வயது வந்த ஆண்-பெண் இடையேயான பரஸ்பரசம்மதத்துடனான திருமணங்களை அது குற்றமாக ஆக்குவதோடு, வயது வந்த பெண்ணின் சுயமாக முடிவெடுக்கும் உரிமையைப் பறிப்பதில் சென்று முடியும்.  மேலும், திருமண வயதை உயர்த்தி, பரஸ்பர சம்மதத்துடனான உறவை குற்றச் செயலாக நீங்கள் ஆக்கிவிட்டீர்கள் என்பதால் மட்டுமே, பரஸ்பர உறவிற்காக அந்த இளைஞனை எப்படி நீங்கள் சிறையில் அடைப்பீர்கள்?   2000 ஆண்டு துவங்கி, 13 முதல் 19 வயதில் நடை பெறும் திருமணங்கள் 51% குறைந்திருப்பதாக அறிக்கை கள் தெரிவிக்கின்றன.  சராசரி திருமண வயது 22.1 ஆக அதிகரித்திருப்பதாக 2019ஆம் ஆண்டு வெளி யிடப்பட்ட அரசு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.  ஆண்க ளும் பெண்களும் சிறு வயதிலேயே திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது.  அப்படியானால், சிறு வயதுத் திருமணங் கள் எங்கே நடக்கின்றன?  

அடிப்படையில், சிறு வயதில் திருமணம் செய்து கொள்பவர்கள் வாழ்வாதாரமும், கல்வியும் இன்றி மிகவும் வறுமையில் உழன்று வருபவர்கள் ஆவர். பொருளாதார ரீதியாக பெண்கள் யாரையும் சார்ந்திருக் காமல் இருப்பது அவர்களை ஆளுமைப்படுத்துவ தற்கான அடிப்படைத் தேவையாகும்.  ஆனால், இந்தி யாவில் நாடு விடுதலை அடைந்ததிலிருந்து மிக அதிக அளவிலான வேலையில்லாத் திண்டாட்டம் பெண்களிட மே காணப்படுகிறது.  இப்பிரச்சனைக்கான தீர்வை அரசால் அளிக்க இயலவில்லை.  இதுபோன்ற பிரச்ச னைகளுக்கு தீர்வு காணாமல், பெண்ணின் திருமண வயதை உயர்த்தும் முடிவை அரசு எடுத்து நாட்டு மக்களை ஏமாற்றுகிறது.

தமிழில் : எம்.கிரிஜா
 

 

;