articles

img

மோடி சர்க்கார் முர்தாபாத்...

ஆறாவது முறை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறது மத்திய அரசு. ஆனால் ஒரே பேச்சுத்தான், மூன்று வேளாண் சட்டங்களையும், மின்சாரச் சட்டத்தையும் ரத்து செய்ய முடியுமா? முடியாதா?  வரலாறு காணாத பேரெழுச்சி, மோடி அரசை மீள முடியாத அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியிருக்கிறது. அத்தகைய பேரெழுச்சியை நேரில் காணும் உந்துதலோடு சென்னையிலிருந்து ரயில்வே தொழிலாளர்கள் 10 பேர், தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர்இயு-சிஐடியு) செயல்தலைவர் அ.ஜானகிராமன் தலைமையில் டிசம்பர் 5 அன்று தில்லி சென்றார்கள். அங்கிருந்து 30கிலோமீட்டர் தூரத்திலுள்ள தில்லி - ஹரியானா எல்லையான திக்ரி எனும் இடத்தில் கண்ணுக்குகெட்டும் தூரம் வரை குவிந்திருக்கும் விவசாயப் பெருங்குடிகளை, சிஐடியு அகில இந்திய செயலாளர் ஆர்.கருமலையான் உதவியுடன்  நேரில் சந்தித்தார்கள். போராட்டக் களத்தில் அவர்கள் கண்ட காட்சிகளை, அடைந்த உணர்வுகளை எழுத்தில் தருகிறார் அ.ஜானகிராமன்...

இருநாடுகளுக்கு இடையே போர் நடைபெறுவதுபோல் துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டிருந்தன. தில்லி எல்லைக்குள் விவசாயிகள் வராமல் தடுப்பதற்கு மிகப்பெரிய கான்கிரீட் தடுப்புகள், இரும்புத் தடுப்புகள், அதற்கு மேல் முள் வேலிகள் என திக்ரி எல்லையிலிருந்து விவசாயிகள் போராடும் எல்லைப் பகுதிக்கு யாரும் நுழையாமல் தடுப்பதற்கு காவல் படைகளும் தடுப்பு அரண்களும் அமைத்து ரோதக் ஹைவே முழுவதும் முடக்கப்பட்டிருந்தது. காவல்துறை, ஸ்வெட்டர் இல்லாமல் வெறும் சட்டையுடன் செல்லும்போது தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என யூகித்து இந்த வழியில் செல்லக்கூடாது என தடுத்தனர். நாங்கள் சென்னையிலிருந்து வருகிறோம், போராடும் விவசாயிகளை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என அனுமதி கோரினோம். மனிதநேயம் மிக்க துணை ராணுவ வீரர் ஒருவர், வந்த வழியே திரும்பிச் செல்லுங்கள்; இடதுபுறம் ஒரு சந்து பாதை வரும்; அதன் வழியே ஊருக்குள் சென்று அங்கிருந்து விவசாயிகள் போராட்ட இடத்திற்கு செல்லுங்கள் எனக் கூறினார். 

                                         ***********************

எங்கு நோக்கிலும் டிராக்டர்கள் மனித கடல்போல் காட்சியளித்தது. ஒவ்வொரு டிராக்டரிலும் குறைந்தது 10க்கும் மேற்பட்டவர்கள் சாரை சாரையாக வந்து கொண்டிருந்தனர். போராட்டக் களத்தின் முகப்பில் திக்ரி எல்லையில் மிகப்பெரும் மேடை அமைத்து விவசாய சங்கத் தலைவர்கள் மோடி அரசின் நாசகர வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், மின்சார திருத்தச் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும் தொடர்ச்சியாக உரையாற்றுகின்றனர். இடையிடையே கோஷங்கள் மோடி அரசின் கார்ப்பரேட் கொள்கைகளை எதிர்த்தும் தனியார்மயக் கொள்கைகளை எதிர்த்தும் பெண்களும் ஆண்களும் விண்ணதிர முழக்கங்களை எழுப்புகின்றனர்.

                                         ***********************

அங்கிருந்து 3கி.மீ. தொலைவில் நடந்து சென்றால் அகில இந்திய விவசாய சங்கங்களின் ஹரியானா மாநில மையத் தலைவர்களின் கூடாரம் உள்ளது. அங்கே வந்து சேருமாறு ஹரியானா மாநில விவசாய சங்கப் பொதுச்செயலாளர் ஜெய்பகவான் கூறினார். தட்சிண ரெயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் 10 அடிக்கு செவ்வக அளவிலான பேனரில் விவசாயிகள் போராட்டத்தை வாழ்த்தியும், மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்தும் அச்சிடப்பட்ட பேனரை எடுத்துச் சென்றோம். போகும் இடம் எல்லாம் தென்னகத்தில் இருந்து வருகிறார்கள், ரெயில்வே தொழிலாளர்கள் வருகிறார்கள் என உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆங்காங்கே பேனருடன் சென்ற எங்களை நிறுத்தி பேரணியில் இருந்து விவசாயிகள் எங்களுடன் புகைப்படம் எடுத்தனர். வீடியோ எடுத்தனர். பெண்களும் சாரை சாரையாக போராட்டத்திற்கு வந்துகொண்டிருந்தனர். குழந்தைகள் உட்பட “மோடி சர்க்கார் முர்தாபாத்” (மோடி அரசு ஒழிக) என்ற முழக்கங்கள் ஒலித்துக்கொண்டே இருந்தது. வழியெங்கும்  “WE HATE MODI MORE THAN MOSQUITOS,WE ARE FARMERS WE ARE NOT TERRORISTS”   என்ற கையெழுத்து வாசகத்துடன் பதாகைகளை வைத்திருந்தனர்.

                                         ***********************

நடந்து சென்ற பாதை எங்கும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து மூட்டை மூட்டையாக காய்கறிகள், உருளை, காளிபிளவர், பட்டாணி என எல்லா காய்கறிகளும் அனைத்து விவசாயிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

                                         ***********************

உள்ளூர் கிராமங்களிலிருந்து டிராக்டர்களில் கேன் கேனாக பால் ஒவ்வொரு விவசாய கூடாரத்திற்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. அடுத்த டிராக்டர்களில் லஸ்ஸி, கோதுமை மாவு, அவர்களுக்கு அன்றாட தேவைகளுக்கான உணவுப் பொருட்கள்வரை தொடர்ச்சியாக பல்வேறு சுற்றுப்புற மாநிலங்களிலிருந்தும், ஸ்பான்ஸர் மூலமாகவும் தன்னார்வலர்கள் மூலமாகவும் வந்துகொண்டே இருக்கிறது.

                                         ***********************

வழிநெடுகிலும் அவர்கள் குளிப்பதற்கு, சுத்தம் செய்து கொள்வதற்கு டேங்கர் லாரிகளில் தண்ணீர் நிரப்பிக் கொண்டிருக்கின்றனர். சமையல் செய்வதற்கு என்று தோழர்களுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டு தொடர்ச்சியாக சிலர் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

                                         ***********************

இலவச மருத்துவக்குழு, மருத்துவர்கள், மாத்திரைகளுடன் கூடாரங்களுக்குள் தேவையான சேவைகளை செய்துகொண்டிருக்கின்றனர். மருத்துவர்கள் சுழற்சி முறையில் வருவதும், ஓய்வுபெற்ற மருத்துவர்கள் அங்கேயே தங்கி  இருப்பதும், மெடிக்கல் பிரதிநிதிகள் அமர்ந்தும் தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். 

                                         ***********************

3 கி.மீ தாண்டிய பிறகு ஹரியானா மாநில விவசாய சங்க மைய தோழர்களின் கூடாரம் வருகிறது. அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் திக்ரி எல்லையின் தொடர்பு மையமாக செயல்படுகிறது. எங்களை சந்தித்தவுடன் ஹரியானா மாநில விவசாய சங்கத் தலைவர் உற்சாக வரவேற்பு அளித்தார். கடந்த 10 நாட்களாக நடைபெற்ற நிகழ்வுகளை விவரித்தார். 

                                         ***********************

ஹரியானா மாநில சாதிய கட்டுமானத்தை மீறி விவசாயிகள் என்ற உணர்வோடு ஒரு பேரெழுச்சியாக இது அமைந்துள்ளது. இதுபோல் வரலாற்றில் பார்த்தது இல்லை. 

                                         ***********************

முதலில் பஞ்சாப் மாநில விவசாயிகள் தான் போராட்டத்தைத் துவக்கினார்கள். அதிலிருந்து ஏற்பட்ட வீச்சு ஹரியானா மாநில விவசாயிகளையும் புரட்டிப் போட்டது. பஞ்சாப் விவசாயிகள் தில்லி நோக்கிப் புறப்பட்டபோது நாமும் அவர்களுடன் இணைந்து போராட வேண்டும் என்ற உணர்வை ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்படுத்தியது. 

                                         ***********************

கிராமம் கிராமமாக இந்த வேளாண் சட்டம் நிறைவேற்றப்பட்டால் இருக்கும் நிலங்கள் அத்தனையும் கார்ப்பரேட் முதலாளிகள் பறித்துக் கொள்வார்கள் என்ற உணர்வு ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்பட்டது. நிலத்தை இழந்துவிடுவோம் என்ற அச்ச உணர்வுதான் இந்த உறுதிமிக்க போராட்டத்திற்கான அடிப்படை. மின்சாரமும் இல்லை, விவசாயத்திற்கு அரசு உதவியும் இல்லை. கார்ப்பரேட்டுகளிடன் கையேந்தும் நிலையில் கடைசியில் நிலமும் பறிபோகும். கார்ப்பரேட்டுகள் ஒப்பந்தம் போட்டு நிலத்தைப் பறித்த பின்பு எந்த நீதிமன்றத்திலும் வழக்கும் போட முடியாது. அரசின் மீது வழக்கும் போடமுடியாது என்ற உண்மை அனைத்து கிராமங்களில் உள்ள கிராம பஞ்சாயத்தின் மூலம் தொடர்ச்சியாக எடுத்துச் செல்லப்பட்டது.

                                         ***********************

ஹரியானா, பஞ்சாப்பில் 2 ஏக்கர், 3 ஏக்கர் வைத்திருக்கும் சிறு விவசாயிகூட சொந்த டிராக்டர் இல்லாமல் இருக்கமாட்டார். வயல் வேலைகளுக்கும் டிராக்டர்தான். விவசாய விளைபொருட்கள விற்பதற்கும் டிராக்டர்தான். குடும்பம் குடும்பமாக வெளியே செல்லவும் டிராக்டர்தான். இதனால்தான் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட டிராக்டர்கள் தில்லியைச் முற்றுகையிட்டுள்ளன. 

                                         ***********************

ஓரிரு நாட்களில் ஜெய்ப்பூரிலிருந்து தில்லி நோக்கி வரும் சாலை முழுவதும் ராஜஸ்தான் விவசாயிகளால் முடக்கப்படும். இந்தப் போராட்டம் பிற மாநிலங்களில் உள்ள விவசாயிகளை சுண்டி இழுக்கும்.

                                         ***********************

வேளாண் சட்டங்களை ரத்து செய்தால்தான் அரசுடன் பேச்சுவார்த்தை, அரசு விவசாயப் பொருட்களை கொள்முதல் செய்யாத போது, எங்களை அழிக்கச் சட்டம் இயற்றிய பிறகு எந்த திருத்தமும் அதில் தேவையில்லை. அனைத்து விவசாயிகளும் அரசிடம்  கேட்கும் கேள்வி “ஆமாம்” இல்லை” Yes or NO  என்ற பதில் மட்டுமே. அதானி மற்றும் அம்பானிகளின் உருவ பொம்மைகளை மோடி உருவ பொம்மையுடன் சேர்த்து இளைஞர்கள் கிராமங்களில் எரித்து வருகின்றனர். அதானியின் குடோன்களை விவசாயிகள் முடக்கி வைத்துள்ளனர். அரசு சட்டத்தை ரத்து செய்யும் வரை அது ஆறு மாத காலம் ஆனாலும் சரி, ஒரு வருடம் ஆனாலும் சரி, வெற்றியடையாமல் போராட்டம் ஓயாது. 

                                         ***********************

இங்கிருந்து மேலும் 18 கி.மீ நீளத்திற்கு டிராக்டர்களும் கூடாரங்களும் வழிநெடுக உள்ளது.  உலகச் சிறப்பு வாய்ந்த இந்த வீரமிகு போராட்டத்தில் இதுவரை 6 விவசாயிகள் பலியாகி உள்ளனர். எத்தனைக் களப்பலி ஏற்பட்டாலும் அதிலிருந்து முளைக்கும் வித்துக்கள் இந்த முதலாளித்துவ, கார்ப்பரேட் மய கூட்டணியின் நாசகர கொள்கைகளை அழிப்பதற்கான உரங்களாகவே அமையும் என சிலிர்ப்புடன் விவசாயிகள் பகிர்ந்துகொண்டனர்.மோடி அரசை எதிர்த்துப் பொதுத்துறை தனியார்மயம், வங்கி, இன்சூரன்ஸ் தனியார்மயம் என தொடர்ந்து மோடி அரசின் கொள்கை எதிர்த்துப் போராடி வந்த நமக்கு, வடக்கிலிருந்து கோடிக்கணக்கான குரல்கள், கோடிக்கணக்கான கைகள் “மோடி சர்க்கார் முர்தாபாத்” என விண்ணதிரச் செய்யும் அந்த முழக்கத்தை கேட்கும்போது மனக்கண்ணில் வர்க்கக் கொடி பறக்கிறது. உலக வரலாற்றில் இப்படி ஒரு போராட்டத்தை பார்க்க இயலாது. இது ஒரு கின்னஸ் சாதனை ஆகும். இந்திய நாட்டின் அனைத்து தொழிலாளி வர்க்கமும் இந்த விவசாயிகளை தங்களுடன் இணைத்துக் கொண்டால் பாசிச மோடி அரசு வீழ்வது நிச்சயம்.

===அ.ஜானகிராமன்===

;