articles

img

இங்கிலாந்து ராணி மறைவுக்கு இந்தியாவில் ஏன் துக்கம்? - டி.கே.ரங்கராஜன்

இங்கிலாந்து மகாராணி எலிசபெத் அவர்கள் கடந்த செப்டம்பர் 8 அன்று கால மானார். அவரது இறுதி நிகழ்ச்சி செப்டம்பர் 19 (இன்று) பிரிட்டனின் வின்ட்சர் கேஷில் எனப்படும் அரச குடும்ப இல்ல வளாகத்தில் நடைபெறு கிறது. உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு நாடுகளின் தலைவர்கள் ராணி எலிசபெத்துக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக லண்டன் வந்திருக்கிறார்கள். இந்தியாவிலிருந்து ஜனாதிபதி திரௌபதி முர்மு பங்கேற்கிறார்.  பிரிட்டனிடம் பல நூறாண்டு காலம் அடிமைப் பட்டுக் கிடந்த இந்தியா, தற்போது ராணி எலிசபெத்தின் மறைவுக்கு ஒரு நாள் துக்கம் அறிவித்திருக்கிறது. ‘அடிமைகளும்’ நேசிக்கக்கூடிய துக்க தினமாக இது  மாற்றப்பட்டிருக்கிறது. இந்தியாவைப் போல அடி மையாக இருந்த கனடா அரசும், துக்கதினம் மட்டு மல்ல, தேசிய விடுமுறை தினமாக அறிவித்திருக் கிறது. அதற்கு அங்கே கடும் எதிர்ப்பும் எழுந்திருக் கிறது. 

பிரிட்டனும் இந்தியாவும்

பிரிட்டிஷ் நாடாளுமன்றம் 1801ஆம் ஆண்டு ஜனவரி  மாதம் முதல் செயல்படத் துவங்கியது. முன்னதாக  1760ல் தொழிற்புரட்சி ஏற்பட்ட சமயத்தில் நிலப்பிர புத்துவம் முடிவுக்கு வந்தது. அப்போது நிலமெல்லாம் மன்னரின் கைகளில் இருந்தது. தொழிற்புரட்சியின் விளைவாக அங்கே நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்பட்டது என்ற போதிலும் அரசன் அல்லது அரசி தொடர்ந்து நீடித்தார்கள். மன்னரைப் போலவே மதமும் முக்கியத்துவமான இடத்தைப் பெற்றிருந்தது. ஒரு குறிப்பிட்ட மதம் மட்டுமல்ல, பல மதங்களும் கலந்த ஒரு நாடாக பிரிட்டன் இருந்து வருகிறது. இந்தியாவில் நாடு விடுதலை பெற்ற நிலையில் குடியாட்சி வளர்ந்து முடியாட்சி ஒழிக்கப்பட்டது. 565 மன்னர்களின் ராஜ்ஜியங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இந்தியா என்ற நாடு உருவானது. மன்னர்கள் ஒழிந்தாலும் இங்கு நிலப்பிரபுத்துவம் தொடர்கிறது. மதமும், பிரிட்டனைவிட கூடுதல் அம்சமாக சாதியமும் தீவிரமாகத் தொடர்கின்றன.

ராணி எலிசபெத்தின் மரணத்தை அறிவிக்கும் போது பக்கிங்ஹாம் அரண்மனையின் மீது இரண்டு வானவில்கள் தோன்றியதாக குறிப்பிட்டு தேவனே ராணியை ஆசிர்வதித்துவிட்டதாக மூடநம்பிக்கை கட்டுக்கதைகளை பிரிட்டன் உள்ளிட்ட நாகரிக வளர்ச்சியடைந்த நாடுகளின் பத்திரிகைகளில் விழுந்து விழுந்து எழுதின. முதலாளித்துவத்திற்கும் மூடநம்பிக்கை தேவைப்படுகிறது. ராணியின் இறுதி நிகழ்வுக்காக வரக்கூடிய தலைவர்கள் தனி விமானத்தில் வரவேண்டாம்; பயணிகள் விமானத்திலேயே வாருங்கள்; உடன் இணையரைத் தவிர்த்து வேறு எவரையும் அழைத்துவர வேண்டாம் என்பது உள்ளிட்ட பிரிட்டனி லிருந்து வேண்டுகோள் தகவல்கள் பறந்தன என்பது உள்ளிட்ட விபரங்களும் வெளியாகியுள்ளன. பாதுகாப்புக் காரணங்களுக்காக இவ்வாறு கூறப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். 

பிரிட்டனுக்கு ஒரு எழுதப்பட்ட அரசியல் சாசனம் எதுவும் இல்லை. இந்தியாவில் அம்பேத்கர் தலைமையிலான அரசியல் நிர்ணய சபை விவாதித்து உருவாக்கி எழுத்துப்பூர்வமாக நாம் பின்பற்றி வருகிற அரசியலமைப்புச் சட்டம் போன்று  பிரிட்டனில் ஒன்று கிடையாது.  கடந்த 700-800 ஆண்டுகளாக அங்கு நடைமுறையில் உள்ள பழக்க வழக்கங்களை வைத்துக் கொண்டே அந்த நாடு நடந்து கொண்டிருக்கிறது.

கம்யூனிஸ்ட் கட்சியின் குரல்

பிரிட்டனில் மன்னராட்சிக்கு எதிராக இடைவிடாது குரல் கொடுக்கக்கூடிய ஒரே கட்சி பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே. மன்னர் என்பவர் தேவை யில்லை; மன்னர் குடும்பம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரும் செலவினங்கள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது. தற்போது ராணி எலிசபெத் மறைவையொட்டி, நாடே துக்கத்தில் ஆழ்ந்திருப்பது போன்று ஒரு தோற்றத்தை உருவாக்குகிற துக்கதின நடைமுறைகள் எல்லாம் தேவையற்றவை என்றும், ராணி இறந்தவுடனே கால்பந்து போட்டிகள் உட்பட அனைத்தும் ரத்து செய்யப்பட்டது அதீதமானது என்றும் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.  செப்டம்பர் 8ஆம் தேதி காலமான ராணியின் உடலை 10 நாட்கள் வைத்திருந்து, 19ஆம் தேதி அடக்கம் செய்வது, ஒருவிதமான அரசியல் என்பதை  புரிந்து கொள்ள வேண்டும். 10 நாட்களும் ராணியைப் பற்றியும் அவரது தலைமையிலான அரசாட்சியின் மேன்மைகளைப் பற்றியும் அவரது குடும்பத்தின் மேன்மைகளைப் பற்றியும் பிரிட்டன் மக்களிடையே மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஊடகங்கள் வாயிலாக இடைவிடாமல் பிரச்சாரம் செய்வதற்கான ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. பிரிட்டனில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகிய  நான்கு மாகாணங்கள் உள்ளன. இந்த நான்கு பிர தேசங்களிலும் அரசகுடும்பத்தின் பெருமைகளை  முன்வைத்து பழமைவாதக் கட்சி(கன்சர்வேட்டிவ் கட்சி) தேர்தல் ஆதாயங்களை உறுதிசெய்து கொள்வதற்கும் ராணியின் மரணத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக விமர்சிக்கிறது.

எவ்வளவு செலவு?

அரச குடும்பத்தைப் பேணுவதற்கும் அவர் களுக்கு உரிய மரியாதைகளைச் செய்வதற்கும் பிரிட்டன் அரசு பல்லாயிரம் கோடி பவுண்டுகளை செலவழித்துக் கொண்டிருக்கிறது. இப்போது ராணி எலிசபெத்தின் மறைவையொட்டி நடக்கக்கூடிய செல வுகள் நம்மை தலைசுற்ற வைக்கிறது.  தற்போது மறைந்துள்ள ராணி இரண்டாம் எலிசபெத் தாயாரான முதலாம் எலிசபெத் மறைவுக்கு பிரிட்டன் அரசு செல வழித்த தொகை 54லட்சம் பவுண்டுகள் ஆகும். அதேபோல தற்போதைய ராணியின் பேரன்கள் - அதாவது இளவரசர் சார்லஸின் மகன்கள் - வில்லியம் மற்றும் ஹாரி ஆகிய இளவரசர்களின் திருமணச் செலவு 60லட்சம் பவுண்டுகள். ஒரு பவுண்ட்டின் மதிப்பு, இந்திய ரூபாயில் டாலர் மதிப்பை விட அதிகம்; 92 ரூபாய்.  தற்போது ராணி எலிசபெத்தின் மரணத்தை யொட்டி பிரிட்டிஷ் அரசு செலவு செய்யும் என மதிப்பிடப்பட்டுள்ள தொகை 90லட்சம் டாலர் ஆகும். இது தவிர ராணி மறைந்த இரண்டு நாளிலேயே இளவரசர் சார்லஸ், மன்னராகப் பதவியேற்றார். அதற்கான செலவுக் கணக்கு தனி.

இந்தச் செலவுகளும் கடுமையான விமர்சனத்தைக் கிளப்பியுள்ளன. இன்றைய நிலையில் பிரிட்டன் மிகப்பெரிய அளவிற்கு பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியிருக்கிறது. வாழ்வியல் செலவுகள் அனைத்தும் கடுமையாக அதிகரித்துள்ளன. அத்தியாவசியப் பொருட்களை மக்களால் வாங்க முடியவில்லை. இந்த குளிர்காலத்தில் எரிபொருட்களின் விலை 27 சதவீதம் அதிகரிக்கும் அபாயம் உறுதியாகியுள்ளது. சுமார் 13லட்சம் மக்கள் புதிதாக வறுமையின் பிடியில் சிக்குவார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 2019ல் பிரிட்டனுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வந்த போது அவரது பாதுகாப்புச் செலவு மட்டும் 35லட்சம் பவுண்டுகள். இது உள்பட ஒவ்வொரு முறையும் லட்சக்கணக்கில் பிரிட்டன் அரசு  செலவழிக்கிறது. இவை அனைத்தும் மக்களின் வரிப்பணம் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகை மற்றும் ஊடக விமர்சனங்கள் அம்பலப்படுத்தி யுள்ளன. கடந்த பத்து நாட்களாக இதுபோன்ற பல விபரங்களை கம்யூனிஸ்ட் கட்சி ஏடான ‘தி மார்னிங் ஸ்டார்’ அம்பலப்படுத்தி வருகிறது.

பிரிட்டன் அரசின் இத்தகைய நடவடிக்கைகளைக் கண்டித்தும் தற்போதைய அதீத செலவினங்களைக் கண்டித்தும் பல இடங்களில் இடதுசாரிகளின் மறியல்கள் - ஆர்ப்பாட்டங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் இவையெல்லாம் சர்வதேச ஊடகங்களில் இடம்பெறுவதில்லை.

கொடிய காலனியாதிக்கம்

பிரிட்டன், உலகின் மிகப்பெரிய காலனிய ஆதிக்க சக்தியாக இருந்த நாடு. விக்டோரியா மகாராணி காலத்தில் 56 நாடுகளை தங்களது அடிமைகளாக வைத்திருந்தார்கள். அவற்றில் இந்தியா தான் மிகப்பெரிய அடிமையாக இருந்தது. இந்தியாவை கிழக்கிந்தியக் கம்பெனி, டச்சுக்காரர்கள், போர்ச்சுக் கீசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள் என நான்கு காலனி யாதிக்க சக்திகளும் அடிமைப்படுத்தி ஆண்டு வந்தன. இந்த நான்கு சக்திகளும் ஒரே காலத்தில் இந்தியாவை அடிமைப்படுத்தியிருந்தன என்றாலும்,  இவர்களிடம் மொத்தமாக இந்தியா அடிமையாகக் கிடந்த ஆண்டுகளைக் கூட்டினால் 1100 ஆண்டுகள்.  உலகிலேயே மிகக்கடுமையாகச் சுரண்டப்பட்ட நாடு இந்தியா. இவ்வளவு கடும் சுரண்டலை எதிர்கொண்ட ஒரு நாட்டை வரலாற்றில் நீங்கள் பார்க்க  முடியாது என்று எழுதுகிறார் மாமேதை லெனின். அன்றைய கணக்குப்படியே, 1765 முதல் 1938 வரை இந்தியாவிலிருந்து பிரிட்டிஷார் கொள்ளையடித்துச் சென்ற வளங்களின் மொத்த மதிப்பு 45 டிரில்லியன் டாலர். (1 டிரில்லியன் = 1 லட்சம் கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது.

1857ல் மங்கள்பாண்டே துவக்கி வைத்து நடைபெற்ற மாபெரும் முதல் சுதந்திர போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான இந்தியர்கள்; அதற்கு முன்னதாக 1806ல் வேலூர் புரட்சியில் உயிர்த்தியாகம் செய்த நமது மகத்தான வீரர்கள், திப்பு சுல்தான், அவரது மகன்கள் என  தூக்கிலேற்றப்பட்ட இந்திய விடுதலையின் மகத்தான  தியாகிகளில் துவங்கி பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்ட இரண்டாம் பகதூர் ஷா வரையில்;  பிரிட்டிஷாருக்கு எதிராக தூக்கு கயிற்றை முத்தமிட்ட மாவீரர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு வரையில், பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக இந்தியா கொடுத்த விலை எண்ணிப்பார்க்க முடியாதது; விலை மதிப்பற்றது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், இந்தியாவை மட்டு மல்ல; ஆப்பிரிக்க கண்டத்தில் பல நாடுகளை ஒட்டச்சுரண்டினார்கள். அதேபோல பிஜி தீவுகள் பிரிட்டிஷாரின் கைகளில் சிக்கி மிகக்கொடூரமான சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டது. இது தெற்கு பசிபிக்  பெருங்கடலில் உள்ள 300க்கும் மேற்பட்ட குட்டி குட்டித் தீவுகளின் தொகுப்பு நாடு ஆகும். பிஜி தீவில்  பிரிட்டிஷார் நடத்திய கொடுமைகளைப் பற்றி அன்றைக்கு மகாகவி பாரதி எழுதினார். இந்தியா விலிருந்து அங்கு அடிமைகளாக கொண்டுசெல்லப் பட்ட தொழிலாளர்கள், கரும்புத் தோட்டங்களில் எப்படி கொடுமைக்குள்ளாக்கப்பட்டு சுரண்டப்படு கிறார்கள் என்பதை எண்ணி அவர் எழுதினார்:

‘கரும்புத் தோட்டத்திலே - ஆ!
கரும்புத் தோட்டத்திலே
ஏழைகள் அங்கு சொரியும் கண்ணீர் வெறும்
மண்ணிற் கலந்திடுமோ? - தெற்கு
மாகடலுக்கு நடுவினிலே, அங்கோர்
கண்ணற்ற தீவினிலே - தனிக்
காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றார் - அந்தக்
கரும்புத் தோட்டத்திலே’.

இப்படி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பரந்து விரிந்த சாம்ராஜ்யம் உலகின் கொடிய ஆட்சிகளில் ஒன்று. அதற்கு தலைமை தாங்கியவர்கள்தான் பிரிட்டன் மன்னர்கள், மகாராணிகள்.

மார்க்ஸ் சொன்னார்

இந்தியர்கள் மீதான பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கொடுங்கோன்மையை 1858லேயே மாமேதை மார்க்ஸ் கடுமையாக சாடுகிறார்: “பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் இந்தியாவின் மிகப்பெருவாரியான மக்கள் எல்லா வற்றையும் இழந்து கையறு நிலையில் சிக்கி யிருக்கிறார்கள். வார்த்தைகளில் வடிக்க முடியாத அளவிற்கு துயரமும் கொடூரமும் அவர்களைச் சூழ்ந்திருக்கிறது. பல்வேறு விதமான வரிகள் விதிக்கப்பட்டு அவர்கள் மிகக்கொடூரமாக உறிஞ்சப் படுகிறார்கள். உலகிலேயே வேறு எந்தவொரு நாட்டை யும் விட மிக மிகக் கடுமையாக ஒடுக்கப்பட்டு கிடக்கிறார்கள்”.  மார்க்ஸ் குறிப்பிட்டதைப்போல, உலகிலேயே மிகமோசமான காலனி ஆதிக்க - ஏகாதிபத்திய சக்தியாக இருந்த பிரிட்டனின் கதை கடந்த கால நிகழ்வு கள் மட்டுமல்ல; இன்றும் கூட பிரிட்டன், உலக ஏகாதிபத்திய சக்திகளில் முதன்மையான நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இன்றைய உலகில் அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்தி வருகிற ஒவ்வொரு கொடிய யுத்தத்தின் பின்னணியிலும் பிரிட்டனின் கையும் உதவியும் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. 

இன்றைய ஏகாதிபத்தியம்

ராணி எலிசபெத்தின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சவூதி அரேபிய மன்னர் முகமது பின் சல்மான் வருகை தந்திருக்கிறார். அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஏகாதிபத்திய சக்திகளின் மிக  நெருக்கமான கூட்டாளி இவர். இவரது வருகையைப் பற்றி கம்யூனிஸ்ட் கட்சியின் ஏடு ‘தி மார்னிங் ஸ்டார்’ கீழ்க்கண்டவாறு எழுதுகிறது:

“முகமது பின் சல்மான், கைகளில் இரத்தக்கறை யோடு லண்டனுக்கு வந்திருக்கிறார் என்றுதான் சொல்லமுடியும். 2018ஆம் ஆண்டில், சவூதி மன்னராட்சியை விமர்சித்து எழுதி வந்த சர்வதேச பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியை, துர்க்கியே நாட்டின் இஸ்தான்புல்லில் உள்ள சவூதி தூதரகத்தில் வைத்து கொடூரமாக படுகொலை செய்த  உத்தரவுக்குச் சொந்தக்காரர் இந்த சவூதி அரேபியா வின் மன்னர்; கடந்த ஏழாண்டு காலமாக ஏமன்  மீது கொத்துக் கொத்தாக குண்டுகளை வீசி எண்ணற்ற குழந்தைகளுக்கு மரணத்தைப் பரிசளித்த இரத்தக் கறை அவரது கரங்களில் படிந்திருக்கிறது; இதே போல வளைகுடா பிராந்தியம் எங்கும் அமெரிக்கா நடத்துகிற கொடிய தாக்குதலுக்கு உடந்தையாக இருக்கிற நாடு சவூதி அரேபியா; இங்கிலாந்து மக்களே, நீங்கள் நினைவில் கொள்ளுங்கள், சவூதி அரேபியா மன்னரின் கரங்களில் படிந்திருக்கும் இரத்தக்கறைக்கு அடிப்படைக் காரணமாக இருப்பவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள்; இவர்களும் அவர்களும் இணைந்துதான் மக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கிறார்கள்”. 

அன்று முதல் இன்று வரை இப்பூவுலகை தனது காலடியின்கீழ் கொண்டு வந்து அடிமைப்படுத்தி, அடக்குமுறைக்கு உள்ளாக்கி ஆட்சி நடத்தி யவர்கள்; இன்றும் அதேவேட்கையோடு உலகெங்கும் சுரண்டலையும் ஏகாதிபத்திய போர் வெறியையும் கட்ட விழ்த்துவிட்டிருப்பவர்கள் பிரிட்டிஷ் மன்னராட்சியின் பிரதிநிதிகள். மகாராணி இரண்டாம் எலிசபெத்தும் அத்தகைய ஏகாதிபத்திய கொடுங்கோன்மையின் வழித்தோன்றலே! இந்த நிலையில் அவரது மரணத்திற்காக, அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவும் துக்கம் அனுஷ்டிப்பதற்கு என்ன இருக்கிறது?






 

 

;