articles

img

வர்க்கப் போர்! - கே. பாலகிருஷ்ணன், மாநில செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த வீர வரலாறு படைத்த விவசாயிகள் போராட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. நவம்பர் 26 அன்று ஒரு வருடம் நிறைவடைய இருந்த நிலையில் இவ்வளவு காலம் பிடிவாதம் பிடித்திருந்த பிரதமர் மோடி தற்போது மூன்று வேளாண் விரோதச் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். ஒன்றுபட்ட விவசாயிகள், தொழிலாளர்கள் போராட்டம் மோடியின் அதிகார பீடத்தை தகர்த்துள்ளது. எதிர்காலத்தில் அடக்குமுறை அராஜகங்களை எதிர்த்துப் போராடும் மக்களுக்கு இப்போராட்ட வெற்றி பெரும் உந்து சக்தியாக திகழும் என்பது திண்ணம்.

எத்தனை எத்தனை சிறப்புகள்!

நடைபெற்ற இந்த போராட்டம் இந்திய வரலாற்றில் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒருவருட காலம் தில்லியை முற்றுகையிட்டு நடைபெற்ற போராட்டமாகும். கோரிக்கைகள் வெற்றியடையும் வரையில் ஊர் திரும்பமாட்டோம் என்ற வைராக்கியத்துடன் விவசாயிகள் போராடினார்கள். ஒரு வருட காலம் பல விழாக்கள், குடும்ப நிகழ்வுகள் என எத்தனையோ நிகழ்வுகளைக் கடந்து இப்போராட்டத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கெடுத்துள்ளனர். போராட்டம் தில்லியை சுற்றியுள்ள சிங்கு, திக்ரி, காஸிப்பூர்,  ஷாஜகான்பூர், பால்வால் மற்றும் மேவாத் ஆகிய ஐந்து மையங்களில் நடைபெற்றபோதிலும் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் விவசாயப் பெண்கள், போராடும் விவசாயிகளுக்காக  உணவுப் பொருட்கள், குடிதண்ணீர், தங்குமிடம், மருத்துவம், பால், தயிர் போன்ற அனைத்து பொருட்களையும் வீடுவீடாக சென்று திரட்டி ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான டிராக்டர் களில் ஏற்றி வந்து வழங்கி வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். ஓராண்டு காலம் பல லட்சம் பேருக்கு உணவு, தங்குமிடம், மருத்துவ முகாம்,  கழிப்பிட வசதிகள் என புதிய கிராமங்களையே உருவாக்கியுள்ளார்கள். உண்மையில் இப்போராட்டம் மகத்தான மக்கள் இயக்கமாக பரிணமித்துள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட சங்கங்களை விலை பேசுவதற்கும், அவர்களுக்குள் முரண்பாடுகளை உருவாக்குவதற்கும் மோடி அரசு மேற்கொண்ட அத்துனை முயற்சிகளையும் முறியடித்து உருக்குப் போன்ற ஒற்றுமையை உருவாக்கி நடைபெற்ற போராட்டம் இது. எதிர்காலத்தில் கூட்டுப் போராட்டங்களை வழி நடத்த முன்னுதாரணமான போராட்டமாக இது திகழும்.

வழக்கமாக விவசாயிகள் தனியாகவும், தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் தனியாகவும் போராடுவது இதுவரை நாம் கண்ட காட்சியாகும். ஆனால் இந்த போராட்டம் வேளாண் விரோதச் சட்டங்களை நிறைவேற்றிய உடனேயே வட மாநிலங்களில் உள்ள விவசாயிகள் கொந்தளித்து எழுந்தார்கள். பல கட்ட போராட்டங்களை நடத்தினார்கள். படிப்படியாக இந்த ஒற்றுமை உருவாக்கப்பட்டு 500க்கும் மேற்பட்ட சங்கங்கள் இணைந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதே நேரத்தில் அகில இந்திய தொழிற்சங்கங்கள் 2020 நவம்பர் 26, 27 தேதிகளில் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்திருந்தன. தொழிலாளர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தினமான நவம்பர் 26 அன்று நாங்கள் தில்லியை முற்றுகையிடுவோம் என அறிவித்து அன்றைய தினம் துவங்கப்பட்டது விவசாயிகளின் போராட்டம். அன்று முதல் இன்று வரை விவசாயிகளும், தொழிலாளர்களும், விவசாயத் தொழிலாளர்களும் இணைந்து வர்க்கப் போராட்டமாக இந்த போராட்டம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தப் போராட்டத்தை அடக்குவதற்கு பாஜக அரசுகள் எண்ணற்ற அடக்குமுறைகளை ஏவிவிட்டன. போராடுகிறவர்கள் தில்லிக்குள் நுழைந்து விடக் கூடாது என்பதற்காக சாலைகளில் தடுப்புகளை உருவாக்கினார்கள். சாலைகளையே பொக்லைன் வைத்து பிளந்து எடுப்பது, போராடுகிறவர்களைச் சுற்றிலும் கம்பி வேலி கட்டி அவர்களை திறந்த சிறையில் அடைப்பது, பல ஆயிரக்கணக்கான விவசாயிகளைக் கைது செய்வது, பலர் மீது தேச விரோத வழக்குகளை பதிவு செய்வது, இவர்கள் காலிஸ்தான் தீவிரவாதிகள், பாகிஸ்தானுடைய கைக்கூலிகள் என தொடர்ச்சியாக முத்திரை குத்துவது, இந்தப் போராட்டம் நிலபிரபுக்களும் வசதிபடைத்தவர்களும் நடத்துகிற போராட்டம் எனவும், இது சீக்கியர்களின் போராட்டம் எனவும் திசை திருப்ப ஊடக பலத்தைக் கொண்டு அவதூறுப் பிரச்சாரம் செய்வது என எல்லாவிதமான முயற்சிகளையும், விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டம் தவிடுபொடியாக்கியது. தங்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையிரையும் கூட அரவணைத்து அவர்களுக்கு உணவு வழங்கினார்கள் போராட்டக்குழுவினர்.  எண்ணற்ற ஆத்திரமூட்டல்கள் வன்முறை வெறியாட்டங்கள் நடந்த போதும் நிலைகுலையாமல் அமைதிக்கு எந்த பங்கமும் ஏற்படாமல் விவசாயிகள் போராடினார்கள். போராட்டக் களத்தில் 720க்கும் மேற்பட்ட விவசாயிகள் தினம் தினம் மடிந்த போதும்; லக்கிம்பூர்கெரி என்ற இடத்தில் பாஜக ஒன்றிய அமைச்சரின் மகன் காரை ஏற்றிக் கொடூரமாக கொலை செய்த போதும் உறுதிகுலையாமல் ஒற்றுமையாகப் போராடினார்கள்.

இந்த காலம் முழுவதும் உலகையே கொடுமைக்கு உள்ளாக்கிய கொரோனா பேரிடர் காலமாகும். தில்லி, ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் கொரோனா நோய்த் தொற்று மிகப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. கொரோனா நோய்த் தொற்றால் இந்திய நாடு மட்டுமல்லாமல் உலக நாடுகளையே முடக்கிப் போடுகிற சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், கொரோனா பேரிடருக்கு அஞ்சாமல் நெஞ்சுறுதியோடு விவசாயிகள் போராடினார்கள். இக்காலத்தில் இயற்கை இடர்பாடுகளும் எண்ணற்ற சோதனைகளை ஏற்படுத்தின.  இவ்வளவையும் எதிர்கொண்டு விவசாயிகள் நெஞ்சுறுதியோடு போராடினார்கள்.

கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை இருக்கும் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், மொழி, இனம், மதம் என வேறுபாடு இன்றி அனைவரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டது இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது எனலாம்.

இவ்வாறு இந்திய வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு விவசாயிகள் - தொழிலாளர்கள் வர்க்க ஒற்றுமையை முன்னிறுத்தி மதம், சாதி, இனம் என வேறுபாடுகள் களைந்து நீடித்து நடந்த மகத்தான போராட்டமாகும் இது. எந்தவொரு அரசியல் கட்சியின் சார்புத் தன்மையுடன் இப்போராட்டம் நடைபெறவில்லை என்பதே இதனுடைய சிறப்பு அம்சமாகும். ஆனால் அதே நேரத்தில்,  விவசாயிகளுக்கு விரோதமான பாஜகவை அடுத்தடுத்த தேர்தலில் தோற்கடிப்பதே எங்களது அரசியல் இலக்கு என அறிவித்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்த அறிவிப்பு பாஜகவுக்கு பெரும் அடியாக அமைந்தது. 2021 ஏப்ரல் - மே மாதத்தில் நடைபெற்ற ஐந்து மாநில தேர்தலில் பாஜக படுதோல்வியடைந்தது. மேலும், அடுத்து நடைபெற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற இடைத் தேர்தல்களிலும் பாஜக பெரும்பகுதியான இடங்களில் தோல்வியையே தழுவியது. அடுத்து நடைபெறவுள்ள உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல்களிலும் பாஜக தோல்வியடைவது உறுதி என்ற நிலை உருவாகியுள்ளது.

அலைகடலென  ஆதரவு இயக்கங்கள்

இப்போராட்டத்திற்கு ஆதரவாக உலக நாடுகள் முழுவதிலும் இயக்கங்கள் நடைபெற்றுள்ளன. சில நாடு களில் நாடாளுமன்றங்களில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளன. இந்திய நாடு முழுவதும், ஆண்டு முழுவதும் தொடர்ச்சியான ஆதரவு இயக்கங்கள் நடை பெற்றுள்ளன. கடந்த ஆண்டு டிசம்பர் 8, 2021 மார்ச் 26, செப்டம்பர் 27 ஆகிய தேதிகளில் தொழிற்சங்கங்கள், விவ சாய அமைப்புகள் கூட்டாக  ‘பாரத் பந்த்’ நடத்தின. ஜனவரி 26 அன்று நாடு முழுவதும் குடியரசு தினத்தை யொட்டி பிரம்மாண்டமான பேரணிகள் நடத்தப் பட்டன. ஜனவரி 30 மகாத்மா காந்தி  நினைவு தினத்தன்று நாடு முழுவதும் அமைதிப் பேரணிகள் நடைபெற்றன. பிப்ரவரி 18 முழுவதும் இரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. மார்ச்  6 அன்று தேசிய நெடுஞ்சாலைகளில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினத்தன்று பெண் விவசாயிகள் தினமாக நடத்தப்பட்டது. மார்ச் 23  பகத்சிங் நினைவு தினத்தன்று நாடு முழுவதும் இளை ஞர்கள் போராட்டம் நடைபெற்றது. ஏப்ரல் 10, 11 தேதிகளில் மீண்டும் நெடுஞ்சாலைகள் மறியல் போராட்டம், ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்த தினத்தன்று அரசியல் சாசன பாதுகாப்பு தினம் என அடுத்தடுத்து ஆதரவுப் போராட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டன. லக்கிம்பூரில் விவசாயிகளின் மீது கார் ஏற்றி படுகொலை  செய்ததைக் கண்டித்து நாடு முழுவதும் கண்டன இயக்கங்கள் நடைபெற்றன. அக்டோபர் 11 அன்று மகா ராஷ்டிராவில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. லக்கிம்பூர்கெரி சம்பவத்தை தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் மெழுகுவர்த்தி ஊர்வலம், அஸ்தி ஊர்வலம் என ஏராளமான இயக்கங்கள் நடத்தப்பட்டன. இந்த வழக்கில் குற்றவாளியான ஆசிஷ் மிஸ்ராவை கைது செய்யக் கோரி அக்டோபர் 18 அன்று நாடு தழுவிய இரயில்  மறியல் போராட்டம் நடைபெற்றது. பல மாநிலங்களில் பாஜக தலைவர்கள் வீடுகளுக்கு முன்னால் கருப்புகொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தியாவின் கடைக்கோடி கிராமத்திலும் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

சட்டமன்றத் தீர்மானங்கள்

கேரள சட்டமன்றத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டில் திமுக  பதவியேற்றவுடன் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோன்று வேறு பல மாநிலங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. ஒட்டுமொத்தத்தில் போராடும் விவசாயிகளுக்கு பின்புலமாக இந்திய நாட்டின் அனைத்து உழைப்பாளி மக்களும் அணிதிரண்டு ஆதரவு இயக்கங்கள் நடத்தி யதைக் காண முடிந்தது. சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற அமைப்பின் தலை மையில் நடைபெற்ற கூட்டுப் போராட்டங்களை முன்னெடுப்பதில் அகில இந்திய விவசாயிகள் சங்கம்,  சிஐடியு, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் ஆகியவை முக்கிய பாத்திரத்தை வகித்தன.

நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் என்பது திடீரென உருவான போராட்டமல்ல. கடந்த சில பத்தாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் உலகமய தாராளமயக் கொள்கைகள் இந்திய விவசாயிகளை ஒட்டுமொத்தமாக அழிவுக்கு இட்டுச் சென்றுள்ளன. மோடி ஆட்சியில் ஒருநாளைக்கு சராசரியாக 52 விவ சாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக ஆய்வு விப ரங்கள் தெரிவிக்கின்றன. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கி தருவோம் என வாக்குறுதி கொடுத்து 2014இல் மோடி ஆட்சிக்கு வந்தார். ஆனால் தனது ஆட்சிக் காலத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரை யின் அடிப்படையில் விலை தீர்மானிக்க மறுத்ததுடன் அரசின் கொள்முதலைக் கைவிடவும் ஒட்டுமொத்தத்தில் இந்திய உணவு கார்ப்பரேசனையே கலைத்து விடவும் மோடி அரசு முடிவுகளை மேற்கொண்டது.

புதிய உந்து சக்தி

இன்னொரு பக்கம், ஆட்சிக்கு வந்ததும் மோடி  ஏற்கனவே உள்ள நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில்  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக திருத்தங் களை செய்து நிறைவேற்ற முயற்சித்தார். இதனை  எதிர்த்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய அமைப்பு கள் ஒன்றிணைந்த ‘பூமி அதிகார் அந்தோலன்’ என்ற  அமைப்பு உருவாக்கப்பட்டு நடத்தப்பட்ட பிரம்மாண்ட மான போராட்டத்தின் விளைவாக அந்த சட்டத்திருத்தம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அனுதினமும் இந்திய நாட்டை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை  வார்க்கும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது. ஆத்ம நிர்பார் என்ற பெயரில் இந்தியாவின் பொதுத் துறை நிறுவனங்களையும், இரயில்வே, விமான நிலை யங்கள், துறைமுகங்கள், சுரங்கங்கள், தொலைத் தொடர்பு, வங்கிகள், இன்சூரன்ஸ், பாசன திட்டங்கள், மின்சாரம், கல்வி, மருத்துவம், பாதுகாப்புத்துறை உள்ளிட்ட அனைத்தையும் உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்த்து வருகிறது.  இதன் ஒருபகுதியாகவே இந்திய விவசாயத்தை யும், விவசாய வணிகத்தையும் ஒட்டுமொத்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மடை மாற்றிவிடும் நோக்கோடு மூன்று சட்டங்களை அவசர அவசரமாக நிறைவேற்றியது.

இத்தகைய சட்டங்களை நிறைவேற்றுவதற்கு முன்னால் அமைச்சரவையில் கூட முழுமையாக விவாதிக்கவில்லை என தேசிய ஜனநாயக கூட்ட ணியில் இடம்பெற்றிருந்த சிரோமணி அகாலி தள தலை வர்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டியதுடன் ஒன்றிய அமைச்சராக இருந்த ஹர் சிம்ரத் கவுர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் விவசாயம், விவசாய வணிகம் உள்ளிட்ட துறை களில் சட்டம் இயற்றுவதற்கான முழு அதிகார வரம்பி னை அரசியல் சாசனம் மாநில அரசுகளுக்கே வழங்கி யுள்ளது. ஆனால் அதையும் மீறி மாநில அரசுகளின் உரிமைகளை தடுக்கும் வகையில் இந்த மூன்று சட்டங் களை அவசர அவசரமாக மோடி அரசு நிறைவேற்றியது. கடந்த பல ஆண்டுகளாக நெருக்கடியில் கொந்த ளித்துப் போயிருந்த விவசாயிகள் மேற்கண்ட மூன்று சட்ட ங்கள் நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து பெரும் ஆவேசம் கொண்டனர். ஒன்றுபட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டம் விளைவித்துள்ள வெற்றி, விவசாயிகள், தொழிலாளிகள், உழைப்பாளி மக்களின் ஒன்றுபட்ட வீரியமிக்க போராட்டங்களை மேலும் முன்னெடுக்க புதிய உந்துசக்தியாக அமையும்!

 

;