articles

img

வசந்தத்தின் இடி முழக்கம்

கடந்த ஒரு வருடகாலமாக நாட்டின் 90 கோடி விவசாயிகள் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடுகிறார்கள். நவம்பர் 26 அன்று ஓராண்டு நிறைவு பெறுகிறது. இந்தப் போராட்டம் ஒன்றிய பாஜக அரசாங்கத்தின் மீது பெரும் நிர்பந்தத்தை உருவாக்கியது. இதிலிருந்து எப்படித் தப்பிக்கலாம் என்ற யோசனையில் இருந்தது ஒன்றிய அரசு. விவசாயச் சட்டங்களை வாபஸ் பெறுகிறோம் என்று பிரதமர் அறிவித்தது விவசாயிகள் இயக்கத்தின் மிகப்பெரும் வெற்றியாகும். தேச சுதந்தரத்திற்குப் பிறகு மிக நீண்ட நாட்கள் நடைபெற்ற ஜனநாயக எழுச்சியாக விவசாயிகள் போராட்டம் மாறியது. இந்தச் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட வேண்டும். அதற்காகக் காத்திருக்கிறோம் என்கிறார்

ஹன்னன் முல்லா 

வரலாறு காணாத விவசாயிகள் பேரெழுச்சியின் கள நாயகர்களில் ஒருவர் ஹன்னன் முல்லா. அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர். இந்த ஓராண்டு காலம் முழுவதிலும் அவர் போராட்டக் களத்தில் சுற்றிச் சுழன்றார். எத்தனை எத்தனைக் கூட்டங்கள். ஒவ்வொரு அமைப்பையும் போராட்டத்திற்குள் ஈர்த்தார். ஒருங்கிணைத்தார். செங்கொடியின் நாயகர்களில் ஒருவரான ஹன்னன் முல்லா, தேசாபிமானி நாளிதழின் தில்லி தலைமைச் செய்தியாளர் எம்.பிரசாந்த்துக்கு அளித்த நேர்காணல்:

வழிகாட்டிய சிவப்புக் கொடி

விவசாயிகள் போராட்டத்தில் அகில இந்திய விவசாயிகள்     சங்கத்தின் பங்களிப்பு என்ன?

பல்வேறு சங்கங்களின் கூட்டமைப்பை உறுதிசெய்து போராட்டத்தை வலுப்படுத்துவதிலும், ஒற்றுமையை உறுதிசெய்வதிலும் எங்களின் அகில இந்திய விவசாயிகள் சங்கம் தீர்மானிக்கத்தக்க பங்கு வகித்தது. நிலம் கையகப்படுத்தல் சட்டத்திற்கு எதிராக பல்வேறு சங்கங்களை ஒன்றுதிரட்டி “பூமி அதிகார் அந்தோலன்”-என்ற அமைப்பு உருவாக அகில இந்திய விவசாயிகள் சங்கம் வடிவம் தந்தது. பிறகு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கியது. 

முதலில் 250 விவசாயிகள் சங்கங்கள் கொண்ட  கூட்டமைப்பு உருவானது. பிறகு இப்போது விவசாய சட்டங்களுக்கு எதிராக 500 சங்கங்கள் கொண்ட சம்யுக்த கிசான் மோர்ச்சா உருவானது. இந்தச் செயல்முறைகளிலெல்லாம் அகில இந்திய விசாயிகள் சங்கம் தலைமைப் பங்கு வகித்தது. காரணம், விவசாயிகள் சங்கம் தேசம் முழுவதும் வேரூன்றியுள்ள பேரியக்கம் ஆகும். சம்யுக்த கிசான் மோர்ச்சாவில் அங்கம் பெற்றுள்ள 500 அமைப்புகளில் சில கிராம அளவிலோ, ஒன்றிய அளவிலோ மட்டும் செயல்படுபவையாகும். ஒரு மாநில அளவிலோ, இரண்டு மாநிலங்கள் அளவிலோ மட்டும் செல்வாக்குள்ள சங்கங்களும் உண்டு. ஆனால், அகில இந்திய  விவசாயிகள் சங்கம் எல்லா மாநிலங்களிலும் பரந்து விரிந்த அமைப்பு.

இது பஞ்சாப்பை மையப்படுத்திய போராட்டம் மட்டும்தான் என்று சித்தரிப்பதற்கு ஒன்றிய அரசு முயற்சித்தது. உண்மை நிலை என்ன?

அது சரியல்ல. பஞ்சாப்பில் மட்டும்தான் என்றால் ‘பாரத்  பந்த்’தும், மற்ற போராட்டங்களும் எவ்வாறு சாத்தியமானது? மூன்று ‘பாரத் பந்த்’துகள் நடைபெற்றனவே. இவற்றில் 50 கோடி  விவசாயிகள் பங்கேற்றனர். மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா,  ஆந்திரா, பீகார், மகாராஷ்டிரா முதலான மாநிலங்களிலெல்லாம் பந்த்துக்கு பெரும் ஆதரவு கிடைத்தது.

தொழிலாளி-விவசாயி ஒற்றுமையின் எதிர்காலம்?

தொழிலாளி-விவசாயி ஒற்றுமைதான் இப்போது வெளிப்பட்ட மக்கள் எழுச்சியின் சிறப்பு. சாதாரணமாக, தொழிலாளர்கள் போராடும்போது விவசாயிகள் பார்வையாளர்களாக இருப்பார்கள். விவசாயிகள் போராடும்போது தொழிலாளர்கள் பார்வையாளர்களாக இருப்பார்கள். ஆனால், இப்போதைய  விவசாயிகள் போராட்டத்தில் துவக்க நாள் முதல் 10 மத்தியத் தொழிற்சங்கங்களும் மனப்பூர்வமாக ஆதரவளித்தன. அரசு ஊழியர்கள் சங்கங்கள் ஆதரவளித்தன. இந்த ஆதரவு போராட்டத்திற்குப் பெரும் வலுசேர்த்தது. விவசாயிகளும் தொழிலாளர்களும் பொருள்களை உற்பத்தி செய்பவர்கள். மற்றவர் அனை வரும் பயன்படுத்துபவர்கள் மட்டுமே. இந்த இரண்டு உற்பத்திப் பிரிவினர் விவசாயச் சட்டங்களாலும், தொழிற் சட்டங்களாலும் தாக்கப்படுகிறார்கள். நிலத்தைப் பறித்து பெரும் முதலாளிகளிடம் ஒப்படைப்பதே விவசாயச் சட்டங்களின் குறிக்கோள். தொழிலாளர்களின் எல்லா உரிமைகளையும் பறிப்பதுதான் நான்கு தொழிற்சட்டங்கள். இரண்டிலும் பயனடைபவர்கள் கார்ப்பரேட் முதலாளிகள்தான்.

இந்தப் போராட்டத்திற்குப் பின்னால் தீவிரவாதிகளும் காலிஸ்தானிகளும் நக்சலைட்டுகளும் உள்ளனர் என்று பெரிதாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதை எவ்வாறு முறியடித்தீர்கள்?

விவசாயிகள் சரியான விவரங்களைச் சேகரித்தனர். மக்களுக்கு விழிப்புணர்வூட்டினர். ஊடகங்கள் விவசாயிகளை அவதூறு செய்கின்றன என்று விழிப்புணர்வூட்டப்பட்டது. கடந்த குடியரசு தினத்தின்போது அரசு பெரும் சதித்திட்டம் தீட்டியது. மோடியின் ஏஜென்டாகிய ஒரு நபர் குழப்பங்களை உருவாக்கினார். பிறகு சிலரைப் பயன்படுத்தி போராட்டத்தைச் சீர்குலைக்க முயன்றனர். இவற்றையெல்லாம் விவசாயிகள் அம்பலப்படுத்தினர்.

விவசாயிகள் போராட்டத்தில் இடதுசாரிகளின் பங்களிப்பை எவ்வாறு மதிப்பீடு செய்யலாம்?

இடதுசாரி கட்சிகள் ஆரம்பம் முதலே போராட்டத்துடன் இணைந்திருக்கின்றன. மோடி அரசு கொண்டு வந்துள்ள விவசாயச் சட்டங்களில் உள்ள பல விஷயங்களுக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்களின் அறிக்கைகளில் எதிர்ப்பு தெரிவித்தன. மற்ற எதிர்க்கட்சிகளின் தெளிவான ஆதரவு ஆரம்பத்தில் இந்தப் போராட்டத்திற்கு இருக்கவில்லை. ஆறேழு மாதங்கள் கடந்து போராட்டம் முழு தீவிரமடைந்த சமயத்தில்தான் மற்ற கட்சிகள் ஆதரிக்க முன்வந்தன.

பொதுமக்களின் ஆதரவை ஒன்றிய பாஜக அரசு இழக்க ஆரம்பித்துவிட்டதா?

நிச்சயமாக. ஒன்றிய அரசுக்குக் கவலை யெல்லாம் ஓட்டுக்கள் விஷயத்தில் மட்டும்தான். வேறு கவலை இல்லை. அதனால்தான் தேர்தல்களை  அரசியல் ஆயுதமாக்க விவசாய சங்கங்கள் தீர்மானித்தன. பாஜகவைத் தோல்வியுறச் செய்ய அறைகூவல் விடுத்தன. வரவிருக்கிற தேர்தல்களிலும் இதே அறைகூவல் உண்டு.  உத்தரப்பிரதேசத்திலும் உத்தரகண்டிலும் பஞ்சாபிலும்  பாஜகவைத் தோல்வியுறச் செய்வதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச ஆதாரவிலையை சட்டப் பூர்வமாக்கும் வரை போராட்டத் தைத் தொடர்வதென்றே விவசாயிகள் முயற்சி உள்ளதா? 

2014-ல் நிலம் கையகப்படு த்தல் அவசரச் சட்டம் அரசு கொண்டு வந்திருந்தது. அதை  எதிர்த்து விவசாயிகள் மூன்று  ஆண்டுகள் வரை போராடினர். அவசரச் சட்டத்தை வாபஸ் பெறுவோம் என்று ‘மன் கி  பாத்’தில் பிரதமர் அறிவித்தார். ஆனால் இன்றுவரை அது சட்ட ரீதியாக வாபஸ் பெறப்பட வில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டரீதியாக உறுதிசெய்யப்பட வேண்டி யுள்ளது. நாட்டில் நான்கு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். விவசாய விளைபொருட்களின் விலை வீழ்ச்சியே இதற்குக் கார ணம். விவசாய விளைபொரு ட்களுக்குக் கட்டுபடியாகும் விலையை உறுதிசெய்யவேண் டும். அதற்காகப் போராட்டம் தொடரும். போராட்டமுறையில் மாற்றம் வரலாம். சம்யுக்த கிசான் மோர்ச்சா இறுதி முடிவு எடுக்கும்.

தமிழில்: தி.வரதராசன்

 

 

 

;