articles

img

மனுஸ்மிருதியே ஆர்எஸ்எஸ் அரசமைப்பு சாசனம்.... சுபாஷினி அலி,...

இந்திய அரசமைப்பை விட ஆர்எஸ்எஸ் தூக்கிப்பிடிப்பது மநுஸ்மிருதி (மநுநீதி) யைத்தான். துவக்கப்பட்ட காலம் முதல் மனுஸ்மிருதியே அவர்களது வேதமாக இருந்து வருகிறது. இன்னும் இந்தியஅரசமைப்பை உட்கொள்ள ஆர்எஸ்எஸ் -ஆல் முடியவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். அரசமைப்புச் சபை இந்த சாசனத்தை ஏற்றுக்கொண்ட நான்கு நாட்களுக்குள் அவர்கள் அதற்கு எதிராக களமிறங்கினர். 1949 நவம்பர் 30, அன்று  ஆர்கனைசர் ஏட்டின் தலையங்கம் இதற்கு சான்றாக உள்ளது. 

“பாரதிய தன்மை எதுவும் அதில் இல்லை என்பது புதிய அரசமைப்பை இன்னும் மோசமாக்குகிறது. பண்டைய பாரதியத்தின் தனித்துவமான அரசமைப்பைப் பற்றி இதில் எதுவும் குறிப்பிடவில்லை. மனுஸ்மிருதியில் விவரிக்கப்பட்டுள்ள அவரது (மநு) சட்ட நெறிமுறை  உலகைஉற்சாகப்படுத்தி, ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. மனுஸ்மிருதி என்பது நாட்டிற்கு ஏற்ற நடத்தை நெறி என்று இது காட்டுகிறது.’’ என்று இந்திய அரசமைப்பை சிறுமைப்படுத்தி ஆர்கனைசர் ஏட்டின் தலையங்கம் மனுஸ்மிருதியை பாராட்டியது.

திருமாவளவனுக்கு எதிரான கொலைவெறி முழக்கம்
மத்தியில் பாஜக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த நிலையில், ஆட்சியின் முழு கட்டுப்பாடும் ஆர்எஸ்எஸ்கைகளுக்கு சென்றுள்ளது. இதனால் உற்சாகமடைந்த ஆர்எஸ்எஸ் மற்றும் சங் பரிவார் மனுஸ்மிருதியின் விதிகளை செயல்படுத்த வேண்டிய அவசியம் குறித்து பேச ஆரம்பித்தன. மனுஸ்மிருதியில் பெண் விரோத சித்தாந்தத்தை கடுமையாக விமர்சித்த விடுதலை சிறுத்தைகள்  கட்சித் தலைவரும், தமிழக எம்.பி.யுமான திருமாவளவனுக்கு எதிராக கொலைவெறி முழக்கத்தோடு பாஜக கடந்த மாதம் சென்னையில் ஒரு பெரிய பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.மனுஸ்மிருதிக்கு எதிராக எந்த விமர்சனமும் எழக்கூடாது என்று பாஜக இப்போது முடிவு செய்துள்ளது. 2020ஆகஸ்ட் 5 அன்று நடந்த நிகழ்வு இந்த அணுகுமுறையின் தொடர்ச்சியாகும், இது மிகவும் முக்கியமானது. ஜம்மு-காஷ்மீர் மக்களின் அரசமைப்பு சாசன உரிமைகள் மீதான மிருகத்தனமான தாக்குதலின் முதல் ஆண்டு விழாவான ஆகஸ்ட் 5 ஆம் தேதி, பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் பூமி பூஜை நடைபெற்றது. 

விழாவின் போது, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மனுஸ்மிருதியிலுமிருந்து சில வரிகளை பாடினார்.‘நாட்டில் முதலில் பிறந்தவரிலிருந்து (அதாவது பிராமணர்கள்) மற்றவர்கள் அனைவரும் அவரவர் கடமைகளுக்குக் கீழ்ப்படிந்தவர்கள்’. இந்த விழாவில் மோகன் பகவத் மனுஸ்மிருதியிலிருந்து எடுத்த துதிப்பாடலின் தேர்வு ஒரு துல்லியமான குறிப்பை அளிக்கிறது. இந்துராஷ்டிராவின் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது என்பதையும், இந்து ராஷ்டிராவின் அடிப்படை சட்டங்கள் மனுவின் சட்டக் குறியீடாக இருக்கும் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

சமத்துவமின்மையும் குலத்தொழிலும்  
இந்து ராஷ்டிரம் நிறுவப்பட்டால் தாங்கள் எதையும் இழக்கப்போவதில்லை என்பது பெரும்பான்மை சமூகத்தில் உள்ள பெரும்பகுதியினரின் கட்டுக்கதை. சங் பரிவார் அமைப்புகளின் தொடர்ச்சியான பிரச்சாரம் அத்தகைய நம்பிக்கைக்கு வழிவகுத்தது. சிறுபான்மையினரின் உரிமைகள் மட்டுமே பறிக்கப்படும். அவர்கள்தான் பாகுபாட்டை எதிர்கொள்வார்கள். ஒடுக்குமுறை சிறுபான்மையினரால் மட்டுமே எதிர்கொள்ளப்பட வேண்டும் என்பதே அவர்களின் கருத்து. ஆனால் உண்மை என்னவென்றால், இது அப்படி இல்லை. ஒவ்வொரு அர்த்தத்திலும் மநுவின் சட்டத்தால் முன்வைக்கப்பட்ட சித்தாந்தம் சமூக, பொருளாதார, பாலின சமத்துவமின்மை. பிறப்பு அடிப்படையிலான (நால்வர்ணம்) சமத்துவமின்மையிலிருந்து யாரும் தப்ப முடியாதுஎன்ற கருத்தை சங் பரிவார் போற்றுகிறது. ஏற்கனவே, பெண்கள், தலித்துகள், ஆதிவாசிகள், தொழிலாளர்கள் பரிதாபமான சமத்துவமின்மையாலும் சுரண்டலாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரிவினரின் துயரத்தை இரட்டிப்பாக்க புதிய முறையை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.‘எந்த சாதியில் பிறக்கிறாரோ அந்த சாதியின் அடிப்படையிலான குலத்தொழிலை செய்வதற்கே அவருக்கு உரிமை உள்ளது’ என்பதே மனுஸ்மிருதியின் சாரம். வேறொரு சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் குலத்தொழிலை ஏற்றுக்கொள்வதற்கான எந்தவொரு முயற்சியும் பாவமாக கருதப்படுகிறது. அதன்படி, அத்தகைய முயற்சியை மேற்கொள்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற விதி உள்ளது. 

இந்தச் சூழலில்தான் பின்தங்கிய சாதிகள் மற்றும்தலித்துகளுக்கு வேலைப் பாதுகாப்பு அறிமுகப்படுத்தப்படுவதை உயர் சாதியினர் கடுமையாக எதிர்க்கின்றனர். சங் பரிவாரின் ஆதரவுடன், உயர் சாதியினர் பின்தங்கிய வர்க்கங்களும் தலித்துகளும் தங்களுக்கு தகுதியான வேலைகளை கொள்ளையடிக்கிறார்கள் என்பதை நிறுவமுயற்சிக்கின்றனர். இந்நிலையில்தான் பாஜக அரசுபல்வேறு வழிகளில் இடஒதுக்கீட்டை அகற்ற முயற்சிக்கிறது. இடஒதுக்கீட்டிற்கு ஏற்படும் கடுமையான எதிர்ப்பும், மத்திய அரசின் அணுகுமுறைகளும் மநுவாதி அமைப்பிற்கான ஆர்வத்தை முன்வைக்கின்றன.

சூத்திரர்களுக்கு சொத்து கூடாது
அனைத்து முக்கியமான பணிகளும் உயர் சாதியினருக்கு மட்டும் என்பதை உறுதி செய்வதே மநுவாதிகளின் நகர்வு. மனுஸ்மிருதியின் பல்வேறு அத்தியாயங்கள் உழைப்பின் பிரிவுகள், ஒவ்வொரு சமூகமும் பின்பற்றவேண்டிய நிபந்தனைகள், அதை மீறினால் விதிக்கப்படும் தண்டனைகள் ஆகியவற்றை விவரிக்கிறது. மனுஸ்மிருதியின் எட்டாவது அத்தியாயத்தின் 129 ஆவது வசனம் சூத்திரர்கள் சொத்துக்களைப் பெறக்கூடாது என்று கூறுகிறது. சூத்திரர்கள் சொத்து வாங்கினால், அவர்கள் பிராமணர்களுக்கு தீங்கு விளைவிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

‘சண்டாளர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் கிராமத்திற்கு வெளியே வாழ வேண்டும். அவர்கள் வைத்திருக்க வேண்டிய ஒரே சொத்து ஒரு நாய் மற்றும் கழுதை மட்டுமே. அவர்கள் இறந்தவர்களின் ஆடைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். உடைந்த கிண்ணத்தில் சாப்பிட வேண்டும். இரும்பை மட்டுமே நகைகளாக அணிய வேண்டும் ‘(மனுஸ்மிருதி அத்தியாயம் 10, வசனங்கள் 51முதல் 56 வரை). இந்து ராஷ்டிரம் நிறுவப்பட்டால் தங்களின்சமூக அந்தஸ்து உயரும் என்று உயர் சாதியினர் நம்புகிறார்கள். உயர் சாதியினர் ஆதிக்கத்தை நிலைநாட்ட பெண்களின் சமத்துவமின்மையும் தேவை. சாதி அமைப்பைப் பேணுவதற்கு பெண்களை ஒதுக்கி வைக்கவேண்டியதன் அவசியத்தையும் பார்க்கிறார்கள். பெண்களின் சமூக வாழ்க்கையை கட்டுப்படுத்த கடுமையான சட்டம் அவசியம் எனவும் இவர்கள் வரையறுக்கின்றனர்.

இந்துராஷ்டிராவின் சட்டக்குறியீடாக மநு
பசுக்களைக் கொல்வதை ஒரு பெரிய குற்றமாக பார்க்கிறார்கள். மநுவாதிகள் மூலம் சமத்துவமற்ற சட்டங்களை பாஜக அரசு இப்போதே செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. உ.பி.யில் ஒரு தலித் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துகொடூரமாக கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு சத்ரிய இளைஞர்களைப் பாதுகாக்க யோகி அரசுமேற்கொண்ட முயற்சி இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இந்துராஷ்டிராவின் சட்டக் குறியீடு மனுஸ்மிருதியை அடிப்படையாகக் கொண்டவை என்பதையே இவை சுட்டிக்காட்டுகின்றன. சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளும் இதை புரிந்துகொள்ள வேண்டும். சமத்துவம் மற்றும் நீதிக்கான நமது உரிமையை கபளீகரம் செய்யும் இந்த அச்சுறுத்தலை எதிர்க்க அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

...சுபாஷினி அலி...சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்

தேசாபிமானி இணைய இதழிலிருந்து...   

தமிழில் : சி.முருகேசன்

;