articles

img

சூழும் பேரிடர்களும் திட்டமிடலின் கேலிக்கூத்தும் - திகேந்தர் சிங் பன்வார்

நீரில் மூழ்கிய பெங்களூரு சாலைகள், கேரளாவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆறுகள் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பேரழிவை ஏற்படுத்தும் மழை ஆகியவை இந்தாண்டு பருவமழையின் நிலையான காட்சிகள். இமாச்சலப் பிரதேசத்தில் பருவமழை தொடங்கிய 2 மாதங்களில் 200 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் பல பகுதிகளி லும், அண்டை நாடான பாக்கிஸ்தானிலும் பெய்த கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமை யாகப் பாதிக்கப்பட்டது. உலகளவில் கரியமில வாயுக் கழிவுகள் வெளியேற்றத்தில் 1 சதவீதத்திற்கும் குறைவான பங்களிப்பை அளித்து வரும் பாகிஸ்தான்,  பருவநிலை மாற்றத்தின் கடுமையான சீற்றத்தை எதிர்கொள்கிறது. காலநிலை மாற்றத்தின் தாக்கம் அதிகமாக  உள்ள தெற்காசியாவில் உயிர்கள் மற்றும் சொத்துக் களுக்கு குறிப்பிடத்தக்க பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த பகுதிகளில் உள்கட்டமைப்புக்காக பின்பற்றப் பட்ட வளர்ச்சி உத்திகள் மக்களுக்கும், நிலங்களுக்கு மான பாதிப்பை அதிகரித்துள்ளன. இதன் மீது உரிய  கவனம் செலுத்தாததாலும், தகவமைப்பு பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்காததாலும் ஒவ்வொரு ஆண்டும் இழப்பு அதிகரித்து வருகிறது. இரண்டு உதாரணங்களைப் பார்ப்போம்:

இமயமலையின் நிலை

இமயமலைக்கு வேறு ஒரு வளர்ச்சி முன்னு தாரணம் தேவைப்படுகிறது. முதலாவதாக இமாசலப்  பிரதேசம், இமயமலையின் மடியில் இருக்கும்  ஒரு மாநிலம். உலகின் இளைய மலைத்தொடர் களில் இமயமலை ஒன்றாகும். இந்த மாநிலத்திற்கு காலநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையேயான குழு (ஐபிசிசி) அறிக்கை உட்பட பல புவியிய லாளர்கள் மற்றும் காலநிலை வல்லுநர்கள், சரியான  கவனம் செலுத்த வேண்டும் என்று கூறுகின்றனர். இமயமலை உலகின் முக்கிய நதி அமைப்புகளில் ஒன்றாக இருப்பதால், கங்கை முதல் சட்லஜ் வரை, பியாஸ், ரவி போன்ற சுற்றுச்சூழல் அமைப்பு களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நதி அமைப்பு கள் நீர்மின் ஆற்றலுக்கு மிகப்பெரிய ஆதாரமாக உள்ளன. இமாச்சலப் பிரதேசத்தில் சுமார் 30,000 மெகா  வாட் மின் உற்பத்தி செய்ய முடியும். கிட்டத்தட்ட 10,000 மெகாவாட் மின் உற்பத்தி தற்போது நடக்கிறது.  நீர்மின் நிலையங்கள் இமயமலையில் குறிப்பிடத்தக்க சவால்களை முன்வைக்கின்றன. குறிப்பாக இமாச்சலப் பிரதேசத்தில், பெரிய அணை மற்றும் ‘ஆற்றை ஓடச் செய்யும் அணை’ என இரண்டு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பக்ரா, பாங் மற்றும் கோல்டம் அணைகள் பெரிய அணை தொழில்நுட்பத்தின் எடுத்துக்காட்டுகள். இதனால் ஒரு பெரிய நிலப்பரப்பு நீரில் மூழ்கியதோடு, மக்கள் நீண்ட காலமாக பயிரிட்ட நிலங்களையும் இழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தில் 1 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான வளமான நிலம், நீர் மின் திட்டங்களில் மூழ்கியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

‘ஆற்றை ஓடச் செய்யும் அணை’ தொழில்நுட்பம் வேறு. இங்கு மலைகள் வழியாக ஹெட் ரேஸ் சுரங்கப்பாதையில் ஆற்றைக் கடத்துவதன் மூலம் ஆற்றலை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறு உருவாக்கப்படுகிறது. இதனால் விசையாழிகள் மீது தண்ணீரை பலத்த வேகத்தில் செலுத்துவதன் மூலம் ஆற்றலை உருவாக்குகிறது. இது நன்றாக இருந்தா லும், மலையை துளையிட்டு நதியை கடத்துவது  முழு சுற்றுச்சூழல் அமைப்பையும் பாதிக்கிறது. மேலும், நீர் அமைப்பு, பாறைகளின் அடுக்குகள், மலைகளில் விவசாயம் மற்றும் தோட்டக்கலை ஆகியவற்றையும் பாதிக்கிறது. இமயமலைப் பகுதி யில் குறிப்பாக குலு மற்றும் கின்னாவூர் மாவட்டங் களில் ஏற்படும் பெரிய நிலச்சரிவுகளுக்கு முக்கிய கார ணம் மலைகளைத் துளையிடுவதுதான். மழைக்காலத்தில் ஏற்படும் இந்த நிலச்சரிவுகளால் பலர் இறந்துள்ளனர். இதுவே சமீபத்திய உயிரிழப்பு களின் சாட்சியாக உள்ளது. தொடர்ந்து நிலச்சரிவு காரணமாக கின்னூரில் உள்ள நாத்பா கிராமம் அதன் அடையாளத்தை இழந்து வேறு இடத்திற்கு பெயர்ந்துள்ளது. ஒரு மலையை புதைத்தால் எப்படி அது ஒட்டுமொத்த சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துமோ, அதே அளவுக்கு மோசமானது மலைகளின் வழியாக நதியைக் கடத்துவது.

நிலச்சரிவுகளுக்கு என்ன காரணம்

பெரிய அணை கட்டுமானம் மற்றும் சமீபத்திய தொழில்நுட்பங்கள் இமாச்சல் மாநிலத்தை மோசமாக பாதித்துள்ளன. அதனால்தான் “இல்லை என்றால் இல்லை” என்ற முழக்கத்துடன் ஒரு புதிய  திருப்பத்தை ஏற்படுத்தும் அளவிற்கு பழங்குடி யினரின் இயக்கம் ஒரு நிலையை எட்டியுள்ளது. கின்னாவூர் மாவட்டத்தில் இனி நீர் மின் திட்டங்கள் வேண்டாம் என்ற முழக்கத்தை முன்வைத்து பழங்குடி யினர் அதை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்த இயக்கம் விரைவில் சில நீர்மின் திட்டங்களை அகற்றவும் முற்படும். அதேபோல், தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பது  மற்றும் ஏற்கனவே உள்ள சாலைகளை இரண்டு முதல் நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்துவது ஆகியவை பெரிய நிலச்சரிவை ஏற்படுத்துகின்றன. இதனால், மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. பலதரப்பு நிறுவனங்களின் உதவியுடன் இந்த திட்டங்களுக்கு மாநிலத்தில் நிதி ஒதுக்கீடு செய்வது, மலைகளின் சுற்றுச்சூழலுக்கு மதிப்பளிக்காமல் இத்தகைய கட்டுமான நடவடிக்கைகளில் லாபத்தை அதிகரிப்பதற்காக, நிலம் படிக்கட்டுகளாக வெட்டப்படுவதற்கு பதில் செங்குத்தாக வெட்டப்படு கிறது. குறிப்பாக பிலாஸ்பூரில் இருந்து மணாலி நெடுஞ்சாலை மற்றும் பர்வானு முதல் சிம்லா நெடுஞ் சாலை வரை நான்கு வழிச்சாலை விரிவாக்கம் செய்யப்படுவதால் மலைகளின் பாதிப்பு அதிகரிக் கிறது. இதுவே நிலச்சரிவுகளுக்கான முக்கிய காரண மாகும்.

மலைகளில் நகர்வு முறை என்னவாக இருக்க வேண்டும் என்பது மக்களோடு தொடர்பு கொண்டு ஆராயப்பட வேண்டிய விஷயம் என்பதற்கு மாறாக, நெடுஞ்சாலை அதிகாரிகள் அல்லது மாநில அரசுகளிடம் அதிகளவில் கடன் பெறும் பல்துறை முகமைகளின் வற்புறுத்தலின் கீழ், சாலைகளை அகலப்படுத்துதல், பெரிய இயந்திரங்களை (கர்சர்கள்) மலைகளுக்கு கொண்டு வருவதை உறுதி  செய்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு மக்கள்  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர், மேலும் ‘பூமி ஆதிகிரஹன் பிரபவித் மஞ்ச்’ என்ற பதாகையின் கீழ், மக்கள், நிலத்தை வலுக்கட்டாயமாக ஆக்கிர மிப்பதை எதிர்த்துப் போராடி வருகிறார்கள்.

மக்களின் குரலைக் கேளுங்கள்

உண்மையில், காலநிலை மாற்றத்தின் தாக்கம் மற்றும் வளர்ச்சிப் பாதை ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, மக்களின் குரல்கள் கேட்கப்பட்டு அத்தகைய திட்டங்களில் இணைக்கப்பட வேண்டும். வளர்ச்சித் திட்டம், பேரழிவு தணிப்பு மற்றும் தழுவல் திட்டம் என்ற இரண்டு இணைகள் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாமல் நடைபெறுவதால், அதன் தாக்கம் மட்டும் வெளிப்படுகிறது.

தலைநகர் தில்லியின் நிலை

இரண்டாவது உதாரணம் தலைநகரான தில்லியின் சமீபத்திய நிகழ்வுகள். இங்கு சரோஜினி நகரில் (ஜிபிஆர்ஏ) பொதுக் குளம், குடியிருப்புக்காக மரங்கள் வெட்டப்பட்ட வழக்கு மிகவும் கவனிப்புக்கு உரியது. இந்த திட்டங்களுக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதிகளில் நிபந்தனைகள் உள்ளன என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் மக்களவையில் கூறிய போதும், அரசே அதை மீறுவதாகக் கூறப்படும் ஒரு மறுமேம்பாட்டுத் திட்டமாகும். நிபந்தனைகள் கடுமையாக மீறப்பட்டிருப்பது சமீபத்திய ஆய்வில் இருந்து தெரிய வருகிறது. எடுத்துக்காட்டாக, “கட்டுமான நடவடிக்கை களின்போது ஏற்படும் பாதிப்புகள், நிலப்பரப்பு மற்றும்  நிலப் பயன்பாட்டின் தாக்கம்” என ஒப்பந்ததாரர் குறிப்பிட்டுள்ளதில், தில்லி வளர்ச்சி ஆணையத்தின் (டிடிஏ) விதிகளின்படி குடியிருப்புப் பகுதிகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளதால், நிலம் பயன்பாடு, நிலப்பரப்பு ஆகியவற்றில் எந்த மாற்றமும் இருக்காது; எனவே, இது நிலப்பரப்பை மாற்றாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

நேஷனல் பில்டிங்ஸ் கன்ஸ்ட்ரக் ஷன் கார்ப்ப ரேஷன் லிமிடெட் (என்பிசிசி) உடனான புரிந்துணர்வு ஒப்பந்தம், பெரிய அளவிலான வணிக மற்றும் அலுவலகப் பகுதிகள் இருக்கும் என்றும், தில்லி மாஸ்டர் பிளான் 2021 இல் மாற்றங்களை மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும் என்றும் வெளிப் படையாகக் கூறுகிறது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு  (இஐஏ) அறிக்கையில் 8.07 லட்சம் சதுர மீட்டர் வணிகப் பகுதி என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. இதில் மிகவும் வேடிக்கையானது என்னவென்றால், கள ஆய்வுகள் ஏதுமின்றி தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை, பணித்தளத்தைச் சுற்றி யுள்ள கிராமங்களின் பட்டியலை” காட்டுகின்றன. அது “நாடாளுமன்ற தெரு”, மற்றும் “கனாட் பிளேஸ்” ஆகும். எனவே, இந்த இரண்டு இடங்களும் தற்போது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை யில் கிராமங்களாக மாறி விட்டன.

மேலும் இதில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. இவ்வளவு பெரிய திறந்தவெளியை வணிகத் திட்டங்களுக்காக கையகப்படுத்தியவுடன், சுற்றுச்சூழல் தடத்தில் ஏற்படும் தாக்கத்தை கூட ஆவணப்படுத்தாமல் இருந்தால், அது நிலைமையை மேலும் மோசமாக்கும். நகர்ப்புற வெள்ளத்திற்கு நான் மீண்டும் மீண்டும் உணரப்படும் முக்கிய கார ணங்களில் ஒன்று, நகரங்களில் இத்தகைய மறுமேம்பாட்டுத் திட்டங்களுக்கான உந்துதல் ஆகும். அவை ஸ்மார்ட் சிட்டி, சென்ட்ரல் விஸ்டா போன்ற பல்வேறு போர்வைகளில் வருகின்றன. மழைப்பொழிவு முறை வியக்கத்தக்க வகையில் மாறி வருவது மிகத் தெளிவாகத் தெரிகிறது. மழைப் பொழிவு அதிகரிப்பதில் ஒரு போக்கு உள்ளது. ஆனால்  அந்த அதிக மழைப்பொழிவு குறுகிய காலத்தில் ஏற்படுகிறது. இதுதொடர்ந்தால், இந்த முறைக்கு ஏற்ற வகையிலான கட்டமைப்பு தேவைப்படுகிறது. அது, இன்றைய இயற்கைப் பேரிடர் தீவிரமடையும் சூழலில் பொது விவாதத்திற்கு வரவேண்டிய அம்சம் ஆகும்.

கட்டுரையாளர் : சிம்லா மாநகர முன்னாள் துணை மேயர்
மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்
நன்றி டெக்கான் ஹெரால்ட்
தமிழில் : ராமு
 

;