articles

img

ரஜினிகாந்த் ஓய்வும் ஓயாத தவளைகளும்....

நடிகர் ரஜினிகாந்த்தின் அறிவிப்பு அவருடைய உண்மையான ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும், அவரை வைத்து தமிழகத்தில் காலூன்றிவிடலாம் என்று மனப்பால் குடித்து வந்தவர்களுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அவருடைய ரசிகர்கள் பலரும், அவருடைய உடல்நிலைதான் முக்கியம், எனவே அவருடைய முடிவை முழுமனதோடு ஏற்றுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளனர். சிலர் மட்டுமே இனிமேல் அவருக்கு பேனர் வைக்க மாட்டோம், போஸ்டர் ஒட்டமாட்டோம் என்று விரக்தியாக கூறியுள்ளனர். ஒரு ரசிகன் என்ற நிலையைக் கடந்து வேறு ஏதோ எதிர்பார்ப்புடன் இருந்தவர்கள் மட்டுமே இவ்வாறு கூறியுள்ளனர்.

மறுபுறத்தில் ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்த போது, தம்முடைய கட்சியின் மேற்பார்வையாளர் என்று அவரால் அறிவிக்கப்பட்ட தமிழருவி மணியன்தான் மிகவும் வேதனையடைந்துள்ளார். இறப்பு என்னை தழுவும் இறுதிநாள் வரை நான் அரசியலில் மீண்டும் அடியெடுத்து வைக்க மாட்டேன் என்று விடுத்துள்ள விம்மல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அவர் அறிவிப்பது இரண்டாவது முறை. ஏற்கெனவே தன்னுடைய காந்திய மக்கள் இயக்கம் தேர்தலில் படுதோல்வி அடைந்த நிலையில் இனி அரசியலின் பக்கம் எட்டிப்பார்க்கமாட்டேன் என்று வீரசபதம் செய்தார். பின்னர் தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டார். அரசியலில் முழுகுவதும் பின்னர் எழுவதும் அவருக்கு வாடிக்கையான ஒன்று. இராமேசுவரம் கடலில் பாவம் கழிக்கச் செல்பவர்கள் மூழ்கி மூழ்கி எழுபவர் போல அவர் அரசியலில் குதிப்பதும் பின்னர் இனி குதிக்கமாட்டேன் எனத் தலையைத் துவட்டிவிட்டு மீண்டும் குதிப்பதும் வாடிக்கையான ஒன்றுதான். 

காமராஜர் ஆட்சியை தமிழகம் தரிசிக்க வேண்டும் என்ற என் கனவை நனவாக்க தொடர்ந்து முயன்றதுதான் நான் செய்த ஒரே குற்றம் என்று அவர் தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளார். தில்லியில் காமராஜர் இருந்த வீட்டைக் கொளுத்தி அவரையேகொல்ல முயன்றவர்களுக்கு மறைமுகமாக ஜிஎஸ்டி வரி இல்லாமலேயே சேவை செய்ய முயன்றவர், காமராஜர் ஆட்சி பற்றியெல்லாம் பேசும்போது அவர் தன்னுடைய அறிக்கையில் அடிக்கடி பயன்படுத்துகிற நேர்மை, அறம், தூய்மை, எல்லாம் விடுப்பில் போய்விடும் போலிருக்கிறது.

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தவுடன் தன்னுடைய காந்திய மக்கள் இயக்கத்தை அதனுடன் இணைத்துவிடுவேன் என்று தமிழருவி மணியன் கூறியிருந்தார். தற்போது அந்தப் பிரச்சனையும் இல்லை. அவர் அரசியலிலிருந்து விலகிவிட்டதால் அந்த தலைமறைவு இயக்கமும் தானாகவே காலாவதியாகிவிட்டது என்று கொள்ளலாம். மறுபுறத்தில் தப்புக்கணக்கு போடுவதையே தத்துவமாகக் கொண்டுள்ள ஆடிட்டர் குருமூர்த்தி இப்போதும் கூட ரஜினிகாந்த்தை விட்டுவிடுவதாக இல்லை. ரஜினிகாந்த் அரசியல் நடவடிக்கைகளிலிருந்து முற்றிலும் விலகுவதாக கூறவில்லை என்று கொக்கி போடுகிறார். அதிமுக, திமுக இரண்டையும் பிடிக்காதவர்களின் வாக்குகளைப் பெறும் வல்லமை ரஜினிக்கு உள்ளது. இப்போது அவர் கட்சி தொடங்காவிட்டாலும் தன்னை நம்பும் வாக்காளர்களுக்கு வழிகாட்டலாம். அதில் புதிய அணியாகவும் இருக்கலாம், அதிமுக, பாஜக அணியாகக் கூட இருக்கலாம் என்று கூறியிருக்கிறார். இவரைப் போன்றவர்களின் அழுத்தம் காரணமாகவே ரஜினிகாந்த்தின் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டது. தனது உடல்நிலை கருதி ஒதுங்கிக் கொள்வதாக அவர் கூறியபோதும் இவர் விடாமல் விரட்டிக் கொண்டிருக்கிறார். ரஜினிகாந்த் வந்திருந்தால் பாஜகவுக்குத்தான் இழப்பு அதிகமாக இருந்திருக்கும். இப்போது ரஜினியின் முடிவால் பாஜகவுக்கு கூடுதல் வாக்கு கிடைக்கும் என்று சமாளிக்க முயல்கிறார். எப்படியாவது பாஜகவுக்கு ஆதரவாக அவரை இழுத்துவிடுவதன் மூலம் தேரை இழுத்து தெருவில் விட்டுவிடலாம் என்பதுதான் இப்போதும் குருமூர்த்தியின் குயுக்திக் கணக்காக இருக்கிறது. இவர் போன்றோர்களிடம்தான் ரஜினிகாந்த் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பாஜகவின் அறிவுசார் பிரிவு தலைவர் பதவியிலிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு ஆரம்பிக்காத ரஜினி கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட அர்ஜுன மூர்த்தி அளித்துள்ள பேட்டியில், ரஜினிகாந்த்துடன் தொடர்ந்து பயணிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். அண்ணாத்த படத்தில் சிறு வேடத்தில் நடிக்கலாம் என்று நினைக்கிறார் போலிருக்கிறது. ரஜினியும், மோடியும் தன்னுடைய இரு கண்கள் என்றும் அவர் கூறியுள்ளார். பாஜக பாசத்திலிருந்து அவர் விடுபடவேயில்லை. நல்லவேளை இவரை நம்பி ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்காமல் இருந்தார். அப்படி ஆரம்பித்திருந்தால் ஒரு கண்ணால் மட்டுமே ரஜினி கட்சியை பார்த்திருப்பார். 

ரஜினிகாந்த் வாய்ஸ் கொடுப்பாரா என்று கேட்டதற்கு, அவரை யாரும் நிர்ப்பந்தம் செய்ய முடியாது, அவருக்கு தோன்றுவதையே செய்வார் என்று கூறியுள்ளார். ஆனால் அத்துடன் நில்லாமல் அவருக்கு அவ்வப்போதைய சூழ்நிலைக்கேற்ப மனதில் ஒரு சொல் ஏற்படும், அதையே அவர் கூறுவார் என்று அர்ஜீன மூர்த்தி தெரிவித்துள்ளார்.  ரஜினிகாந்த் தனக்கு தோன்றிய சொல்லின் அடிப்படையிலேயே இப்போதும் இல்லை, எப்போதும் இல்லை என்று தெளிவுபடுத்தியிருக்கிறார். ஆனால் இவரோ கூடவே இருந்து குட்டையைக்குழப்பமுடியுமா என்று விடாமல் முயற்சித்துக்கொண்டிருக்கிறார். தன்னுடைய உடல்நிலையை கருத்தில் கொண்டு அறிவித்துள்ள முடிவில் ரஜினிகாந்த் உறுதியாக இருப்பதே அவருக்கும், அவரது உண்மையான ரசிகர்களுக்கும் நல்லது. குருமூர்த்தி, அர்ஜீன மூர்த்தி போன்றவர்கள் ஆபத்தானவர்கள் என்பதை ரஜினிகாந்த் விரைவிலேயே புரிந்துகொண்டு விட்டார். அதனால்தான் கட்சி ஆரம்பிக்கப்போவதில்லை என்று தப்பித்துவிட்டார்.  இனிமேலாவது சில ஊடகங்கள் போயஸ்கார்டன் வாசலில் தவம் கிடப்பதை விடுத்து மக்கள் பிரச்சனைநோக்கி திரும்பட்டும். ரஜினிகாந்தின் மவுனத்திற்குக் கூட பொழிப்புரை எழுதிக்கொண்டிருந்தபாஜகவின் ஆதரவு கருத்து கந்தசாமிகள் ஜோதிடம் உள்ளிட்ட பிற கலைகளில் கவனம் செலுத்துவதும் பொருத்தமாக இருக்கும். அங்கு அறிவுசார் அணி அதற்காகவே இருக்கிறது.

;