articles

img

கேரள மக்கள் இஜமு பக்கம்....

“எப்பொழுதெல்லாம் இந்த தேசத்தின் மீது என் நம்பிக்கைகுறைகிறதோ அப்பொழுதெல்லாம் கேரளா தான் எனக்கு மீண்டும் நம்பிக்கை கொடுக்கிறது.”“இந்தியாவில் மதவாதம் தலைவிரித்தாடுகிற பொழுது, இந்தியாவில் மனிதமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு கேரளாவில் கம்யூனிசத்தின் வெற்றி”

இவை கேரள உள்ளாட்சி தேர்தல் குறித்த சில டுவிட்டர் பதிவுகள்.

கேரளா உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியின் மகத்தான வெற்றி பல கோணங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில்இடது ஜனநாயக முன்னணிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டது.மழை/வெள்ளம்/கோவிட் வைரஸ் என இயற்கைப் பேரிடர்கள்பெரும் தாக்குதலை தொடுத்தன. தங்கக் கடத்தல் மற்றும் சிலமுக்கியமான மக்கள் நலத் திட்டங்களில் ஊழல் என காங்கிரசும்பாஜகவும் ஒன்று சேர்ந்து ஒரே அலைவரிசையில் அவதூறுப்பிரச்சாரம் செய்தன. மோடி அரசாங்கம் புலனாய்வு அமைப்புகளை ஏவிவிட்டு கேரள அரசாங்கத்தை களங்கப்படுத்த கடும் முயற்சி செய்தது. இதற்கு உறுதுணையாக பல ஊடகங்கள் ஒத்து ஊதின. ஒரு பக்கம் ஆர். எஸ்.எஸ். மறுபுறம் கேரள இஸ்லாமிய மக்களை பிளவுபடுத்த எண்ணும் சில தீவிரவாத அமைப்புகள். இவை அனைத்தையும் முறியடித்துதான் இடது ஜனநாயக முன்னணி கேரளாவில் மகத்தான வெற்றியை சாதித்துள்ளது.

வரலாற்றை மாற்றி எழுதிய வெற்றி!
கடந்த 20 ஆண்டு கால தேர்தல் அரசியல் வரலாற்றை இந்த வெற்றி மாற்றி எழுதியுள்ளது. எந்த முன்னணி ஆட்சியில் இருக்கிறதோ அவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதில்லை. இது பொதுவாக கேரள வாக்காளர்களின் அரசியல்கணக்கு. இப்பொழுது மாநிலத்தை ஆளுகின்ற இடது ஜனநாயக முன்னணி உள்ளாட்சித் தேர்தலிலும் வென்றுள்ளது. அந்த வகையில் இந்த வெற்றி மூலம் இடது ஜனநாயக முன்னணி வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது என்றால் மிகை அல்ல.கடந்த நான்கு ஆண்டுகளில் கேரளா இரண்டு முறை வரலாறுகாணாத வெள்ளத்தை சந்தித்தது. இத்தகைய இயற்கைப் பேரிடர்வேறு எந்த மாநிலத்தில் நடந்திருந்தாலும் அதன் சமூக பொருளாதாரம் அநேகமாக அதல பாதாளத்திற்கு சென்றிருக்கும். ஆனால்மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு “மீள்வோம்” எனும் அசாத்திய நம்பிக்கை தந்தது தோழர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம். இந்த அசாத்திய நம்பிக்கை அடிப்படையிலான தலைமைப் பண்புதான் மிக விரைவாக கேரளாவின் பொருளாதாரம் மீள்வதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

கேரளாவின் பொருளாதாரத்தில் கூட்டுறவு இயக்கம் மிகப்பெரிய பங்காற்றுகிறது. மோடியின் தான்தோன்றித்தனமான பணமதிப்பிழப்பு நடவடிக்கை கூட்டுறவு இயக்கத்திற்கு சமாதி கட்டுவதாக அமைந்தது. இதனை கண்டித்து இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் பெரிய இயக்கத்தை நடத்தியது. கூட்டுறவுஇயக்கத்தை வலுப்படுத்தும் விதமாக அனைத்து கூட்டுறவு வங்கிகளையும் பங்குதாரர்களாக இணைத்து “கேரள வங்கி” என்னும்புதிய முயற்சியை இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் உருவாக்கியது. இந்த முயற்சியை தோற்கடிக்க காங்கிரஸ் பல வழக்குகளை தொடுத்தது. எனினும் உயர்நீதிமன்றம் வழக்குகளை தள்ளுபடி செய்தது. கேரளாவில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்துவதற்கு குறிப்பாக விவசாயத்துறையின் தேவைக்கு இந்த வங்கி மிகப்பெரிய உந்துசக்தியாக உருவாகும்.

மக்கள் பக்கம் நின்ற அரசாங்கம்
நட்டத்தில் இயங்கிய பல மாநில பொதுத்துறை நிறுவனங்களை லாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றிய சாதனையை செய்தது இஜமு அரசாங்கம்.  பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க மோடி அரசாங்கம் வெறிகொண்டு செயல்படும் இந்த தருணத்தில்தான் மாநில பொதுத்துறை நிறுவனங்களை கேரள அரசாங்கம் வலுப்படுத்தியது. கொச்சி மற்றும் கண்ணூர் விமான நிலையங்களை கேரள அரசாங்கம் நிர்வகிக்கிறது. இந்த அடிப்படையில்தான் திருவனந்தபுரம் விமானநிலையத்தையும் அதானிக்கு தராமல் மாநில அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என கேரள அரசாங்கம் கோரியது. ஆனால் மோடி அரசாங்கம் அதானிக்கு தந்துவிட்டது. இதனை கேரள மக்களின் சுயச்சார்பு பிரச்சனையாக மாற்றுவதில் இஜமு வெற்றி பெற்றது. அதனால் தான் கேரள மக்களின் விருப்பத்தை மீறிஅதானி குழுமம் செயல்பட்டால் மாநில அரசாங்கம் ஒத்துழைப்பு தருவது கடினம் என அரசியல் தைரியத்துடன் முதல்வர் பினராயி விஜயன்  மோடி அரசாங்கத்துக்கு கடிதம் எழுதினார். மோடி அரசாங்கம் ஊஹஹ/சூஞசு/சூசுஊ கொண்டுவந்த பொழுது கேரள சமூகம் முழுவதையும் ஒன்றுபடுத்துவதில் இஜமுவெற்றிபெற்றது. சிறுபான்மை மக்கள் நம்பிக்கை பெற்றனர்.இந்தியாவில் முதல் முறையாக பிற்படுத்தப்பட்ட/தலித்/ஆதிவாசி பிரிவினரை சேர்ந்தவர்களும் கோவில் அர்ச்சகர்களாக கேரள அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டனர். சமூகநீதி பயணத்தில் இது ஒரு பெரும் முன்னேற்றம்.

கோவிட் தொற்று இந்தியாவின் கதவுகளை தட்டிக்கொண்டிருந்த பொழுது மோடி அரசாங்கம் தனது சுயநல அரசியல் நிகழ்ச்சிநிரலை பூர்த்தி செய்து கொண்டிருந்தது. ஆனால் கேரள அரசாங்கம் மருத்துவப் பாதுகாப்பு, பொருளாதாரப் பாதுகாப்பு எனஇரண்டிலும் வேகமாக செயல்பட்டது. கேரள அரசாங்கம் அறிவித்த 20,000 கோடி ரூபாய் பொருளாதார பாதுகாப்பு திட்டம் ஒருமைல் கல். வேறு எந்த மாநில அரசாங்கமும் இது போன்று செயல்படவில்லை என்பது மட்டுமல்ல; மோடி அரசாங்கம் தனது கைகளை கழுவிவிட்டது. கேரளாவில் முதல் கட்டத்தில் வைரஸ்பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டதற்கும் இப்பொழுது மரணவிகிதத்தை கட்டுப்படுத்தியதற்கும் மருத்துவப் பாதுகாப்பு/ பொருளா
தாரப் பாதுகாப்பு இரண்டும் முக்கியக் காரணம் ஆகும்.

இவ்வளவு கடினமான சூழலிலும் ஏழைகளுக்கு வீடுகட்டும் திட்டம்/அதிகரிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்/ அரசு பள்ளிகளை வலுப்படுத்துதல் போன்ற பல நலத்திட்டங்கள் வேகமாகச் செயல்படுத்தப்பட்டன. கேரள மண்ணுக்கு ஏற்ற தொழில் மற்றும் பொருளாதாரத் திட்டங்களும் பல கட்டங்களில் அமலாக்கப்பட்டு வருகின்றன.  இவையெல்லாம் இடது ஜனநாயக முன்னணிக்கு மக்களிடம் பெரும் செல்வாக்கை உருவாக்கியது. இதே நிலை தொடர்ந்தால் தமக்கு அரசியல் எதிர்காலம் இல்லை என காங்கிரசும் பா.ஜ.க.வும் பயந்தன. அப்பொழுதுதான் அவர்களுக்கு தங்கக்கடத்தல் பிரச்சனை வரப்பிரசாதமாக கிடைத்தது. அதனை முன்வைத்து மிகப்பெரிய அவதூறு பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டனர். மோடி அரசாங்கமும் தனது அனைத்து புலனாய்வு அமைப்புகளையும் ஏவிவிட்டது. நேரடியாக முதல்வர் பினராயி விஜயன் மீது குறிவைக்கப்பட்டது. ஊடகங்கள் ஊதுகுழல்களாக மாறின. இதனுடன் வீடுகட்டும்  திட்டங்களில் ஊழல் எனும் பொய்ப்புகாரையும் இணைத்துக் கொண்டனர். பா.ஜ.க.வின் அதே அலைவரிசையில் காங்கிரசும் தப்புத்தாளம் போடும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த உரத்த பிரச்சாரம் தமக்குமிகவும் உதவும் என நம்பினர். ஆனால் அவர்களின் நம்பிக்கைபொய்த்துவிட்டது.

கானல் நீரான காங்கிரஸ்/பாஜக கனவுகள்
மாநில அரசாங்கத்தின் மீது உள்ள அதிருப்தி வாக்குகளாக மாறவில்லை என காங்கிரஸ் தலைவர்கள் புலம்புகின்றனர். ஆனால் முஸ்லீம் லீக்கின் தலைவர் குன்ஹாலி குட்டி இந்தமுடிவுகள் குறித்து காங்கிரஸ் கூட்டணி ஆழமாக பரிசீலனை செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.  இடதுசாரி கூட்டணியும்காங்கிரஸ் கூட்டணியும் சேர்ந்து தங்களை தோற்கடித்துவிட்டதாக பாஜக ஒரு வினோத குற்றச்சாட்டை முன்வைக்கிறது. உண்மையில் பல இடங்களில் காங்கிரசும் பாஜகவும்தான் ஒத்துழைத்து கொண்டன. உதாரணத்திற்கு திருவனந்தபுரம் நெடுங்காடு வார்டில் பா.ஜ.க. 3626 வாக்குகளும் சிபிஎம் 3442 வாக்குகளும் பெற்றன. ஆனால் காங்கிரஸ் வெறும் 74 வாக்குகள் மட்டுமேற்றது. இங்கு  தனது வாக்குகளை பாஜக பக்கம் திருப்பியதன் மூலம் அந்த கட்சி வெற்றிபெற வைத்தது காங்கிரஸ்தான் என ஏ. விஜயராகவன் குற்றம்சாட்டியுள்ளார். இந்த முறை திருவனந்தபுரம் மாநகராட்சியை எப்படியும் வென்றுவிடுவது என கங்கணம் கட்டிக்கொண்டு பாஜக பணியாற்றியது. ஆனால் அது நடைபெறவில்லை. மொத்தம் 3000 வார்டுகளில் வெல்வது என்பது பாஜகவின் கனவு. ஆனால் சென்ற முறையைவிட ஒரு சில வார்டுகளை மட்டும்தான் கூடுதலாக வென்றுள்ளனர். இடுக்கி மாவட்டத்தில் ஒரு வார்டில் பாஜக வேட்பாளர் பூஜ்யம் வாக்கு பெற்று சாதனை புரிந்துள்ளார்.பல பாஜக மாநில தலைவர்களும் மேயர் வேட்பாளர்களும் தோல்வியை தழுவினர்.

இளைய வெற்றியாளர்
இஜமு வேட்பாளர்கள் பல சாதனைகளை புரிந்துள்ளனர். காங்கிரஸ் தலைவர்களான முல்லப்பள்ளி ராமச்சந்திரன்/உம்மன் சாண்டி/ ரமேஷ் சென்னித்தலா ஆகியோரின் சொந்த பகுதிகளில் இஜமு வென்றுள்ளது. கொல்லம் கொடக்கால் ஊராட்சியில் உள்ள 19 வார்டுகளிலும் இஜமு வென்றது. வேட்புமனு தாக்கல் இறுதி நாள் அன்று 21 வயது பூர்த்தியான ரேஷ்மா மரியம் ராய் இஜமு சார்பாக வென்றுள்ளார். இவர்தான் மிகவும் இளைய வெற்றியாளர்.  தொழிற்சங்க தலைவர் வி.ஏ. நாராயணன் எனும் தோழரின் இரண்டு புதல்விகளும் ஒருபுதல்வரும் வெவ்வேறு மாவட்டங்களில் வென்றனர். இன்னொருபுதல்வி ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்றார். இஜமு சார்பாக வென்ற ஜரீனா பானு வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு நாள் முன்னதாக ஒரு விபத்தில் உயிரிழந்தார். இடது ஜனநாயக முன்னணி பெற்ற வாக்குகளை சட்டமன்ற தொகுதிகளுக்கு பொருத்தினால் 2016ஆம் ஆண்டு வென்ற 90 தொகுதிகளிலும் இடது ஜனநாயகமுன்னணி முன்னிலையில் உள்ளது.சில பின்னடைவுகளையும் மறுப்பதற்கு இல்லை. திருவனந்தபுரம் பகுதியில் பாஜக -வின் செல்வாக்கு கவலை தருவதாக உள்ளது. கண்ணூரில் முதல் முறையாக ஒரு வார்டில் பாஜக வென்றுள்ளது. சில இடங்களில் இஸ்லாமிய மக்களைபிளவுபடுத்தும் அமைப்புகள் வென்றுள்ளன. சில வார்டுகளில் இஜமு எதிர்பார்த்த அளவு வெற்றியை நிலைநாட்ட இயலவில்லை. இவையெல்லாம் பரிசீலனை செய்யப்படும் என சிபிஎம்கேரள மாநில செயற்குழு கூறியுள்ளது.இந்த வரலாற்று வெற்றி சட்டமன்ற தேர்தல்களிலும் தொடரும் என்பதில் ஐயமில்லை. எனினும் பாஜக பல சதித் திட்டங்கள் மூலம் இடது ஜனநாயக முன்னணி வெற்றியை தடுக்க எத்தனிக்கும். காங்கிரசும் அதற்கு பக்கதாளம் வாசிக்கும். இந்தச் சதிகளை மீறி இஜமு வெல்லும். ஏனெனில் மக்கள் அதன் பக்கம் உள்ளனர்.

                                                                             மொத்த வார்டுகளில் கட்சிகள் வென்ற விவரம்:

 

                                          கிராம   ஊராட்சி                 ஊராட்சி  ஒன்றிய               மாவட்ட   ஊராட்சி                நகராட்சி              மாநகராட்சி          

மொத்த வார்டுகள்          15962                                             2080                                              331                                        3078                           414       

            இஜமு                        7263                                            1267                                               212                                        1167                            207       

காங்கிரஸ்  கூட்டணி      5893                                              727                                               110                                         1172                           120      

 பா.ஜ.க. கூட்டணி             1182                                               37                                                    2                                           320                            59       

           மற்றவர்                     1619                                               49                                                    6                                           416                            27    

 

==அ.அன்வர் உசேன்==