articles

img

கச்சிதமாக முடிந்த பெட்டி பேரம்...பாமக அடித்த அந்தர் பல்டி....

“தமிழ்நாட்டின் வளர்ச்சி இலக்குகள் விரைந்து எட்டப்பட வேண்டும். தமிழ்நாடு இழந்த உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். உழைப்பும் தொழிலும் சிறக்க வேண்டும்”. 

-பாமக வெளியிட்டுள்ள  2021 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தல் அறிக்கை அட்டையில் மருத்துவர் ச. ராமதாசு இப்படித் தெரிவித்திருக்கிறார்.இந்த அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய பாமக தலைவர்கள் “இந்த நல்ல ஆட்சி தொடர வேண்டும்” என்றனர்.

பாமகவின் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையை அலசுவதற்கு முன்பு, மருத்துவர் ராமதாசும், அவரது மகன் மருத்துவர் அன்புமணியும் சில மாதங்களுக்கு முன்பு என்ன சொன்னார்கள் என்பதை பார்ப்போம்.‘‘தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - திமுகவுடன் 100 அல்ல 101 சதவீதம் கூட்டணி கிடையாது! கிடையாது!! வேண்டும் என்றால் பத்திரம் எழுதி கையெழுத்து போட்டுத் தரட்டுமா?’’ என்று செய்தியாளர்களிடம் ‘சத்தியம்’ செய்தார் மருத்துவர் ராமதாசு.கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அன்புமணி, “இப்போது நடந்து கொண்டிருக்கும் அதிமுக ஆட்சியில் இருப்பவங்க ‘மானங்கெட்டவங்க’ எடப்பாடிக்கு நிர்வாகம்னா என்னனு தெரியுமா? தெரியாது! பன்னீர் செல்வத்துக்கும் நிதி நிர்வாகமும் பற்றி எதுவும் தெரியாது! அவங்களுக்கு தெரிந்ததெல்லாம் கையெழுத்து போடுனு சொன்னா போடுவாங்க. காலுல விழனும்னு சொன்னதும் அப்படியே விழுந்துடுவாங்க’’ என்று வெளுத்து வாங்கினார்.வேறு ஒரு நிகழ்ச்சியில், “இவங்க (அதிமுக எம்எல்ஏக்கள்) அத்தனை பேரும் தேர்தல் ஓட்டு கேட்கப் போனா ஒவ்வொரு ஊரிலும் துரத்தி துரத்தி அடிப்பாங்க. இந்த சட்டமன்றத் தேர்தலில் அண்ணா திமுக எதிர்க்கட்சியாக கூட வரப்போவதில்லை. 234 தொகுதியிலும் தோல்வி உறுதி. இவரு முதலமைச்சராக மக்கள் என்னமோ இவருக்கு ஓட்டு போட்டு மாதிரியும், மக்களிடம் செல்வாக்கு இருப்பதாகவும் நினைக்கிறார். இவர் மட்டுமல்ல, அமைச்சர்கள் அத்தனை பேரும் சொந்த தொகுதியிலேயே டெபாசிட் இழப்பார்கள். அந்த அளவுக்கு இவங்க மீது மக்கள் கோபத்தில் இருக்காங்க’’ என வீர ஆவேசமாக முழங்கினார் அன்புமணி. 

“மாற்றம், முன்னேற்றம், அன்புமணி” என முழங்கிய பாமக, இந்த தேர்தலில் 23 சீட்டுக்காக அதிமுவிடம் சரணாகதியாகி, முதல்வர் கனவும் கானல் நீரானதால்; முதியோர், பத்திரிகையாளர் ஓய்வூதியம் உயர்த்தப்படும், 12 ஆம் வகுப்பு வரைக்கும் இலவசக் கல்வி என இலவச வாக்குறுதிகள் பாமக தேர்தல் அறிக்கையில் அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளது.அதே நேரம், அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளான பழைய ஓய்வூதியம் அமலாக்க வேண்டும் என்பது பற்றியோ, ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தியது குறைக்கப்படும் என்றோ ஒரு வார்த்தைகூட கிடையாது.

ஆனால், தமிழ்நாட்டை மூன்றாக பிரிப்போம் என்றும், திருச்சி,மதுரை என மேலும் இரண்டு தலைநகரங்கள் உருவாக்கப்படும் என்றும் தற்போதுள்ள மாவட்டங்களை மேலும் பிரிக்கும் யோசனையையும் முன் வைத்துள்ளனர்.ஆளும் அதிமுக அமைச்சர்கள் மீது 24 பக்க ஊழல் பட்டியலை ஆளுநரிடம் அளித்தது பற்றி தப்பி தவறிக்கூட ஒரு வார்த்தையும் இல்லை. காரணம், “கூட்டணி பேரம் கனகச்சிதமாக’ முடிந்ததாகும்.

தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசி மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும்போது சர்ச்சைக்குரிய 6 கேள்விகள் கேட்கப்படாது என்று கூறியிருக்கும் இந்த அறிக்கையில், புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தப்படவில்லை.
அவசர அவசரமாக இந்த அறிக்கையை வெளியிடக் காரணம், தந்தையும்-மகனும்  இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு எந்த முகத்துடன் செல்வது என்பதற்காக நடத்திய “கூட்டணி பெட்டி பேரம்” தான்.

கட்டுரையாளர் : சி.ஸ்ரீராமுலு

;