articles

img

தீர்ப்பளிக்கும் முன்னர் வாக்காளர் சிந்தனைக்கு....

ஏப்ரல் 6- ல் தமிழக சட்டமன்ற தேர்தல். அன்றைய தினம் தமிழக வாக்காளர்கள் தங்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும் வாக்குரிமையைப் பயன்படுத்த உள்ளனர். அதற்கு முன்னர் கடந்த 7 ஆண்டுகால மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. ஆட்சி குறித்தும், தமிழகத்தில் நடந்து வரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி குறித்தும் ஒரு சரியான மதிப்பீட்டிற்கு வாக்காளர்கள் வர வேண்டியுள்ளது. அவர்களது ஆட்சி சிறுபான்மை மக்களுக்கு மட்டுமின்றி பெரும்பான்மை மக்களுக்கும் இழைத்துள்ள கெடுதல்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். அந்த மதிப்பீடு தான் வாக்காளர்கள் சரியான முடிவெடுத்து தீர்ப்புஎழுதும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்கும். 

மக்கள் விரோதச் சட்டங்களுக்கும் திட்டங்களையும் எதிர்த்த ஜெ. 
கடந்த சட்டமன்ற தேர்தல் 2016ல்  நடைபெற்றது. அப்போது செல்வி ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சர். அத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பாஜக சேர்க்கப்படவில்லை. திமுக - காங்கிரஸ் ஓர் அணியாக நின்றது. பா.ஜ.கதலைமையில் ஒரு அணி. அன்றைக்கு மக்கள் நலக் கூட்டணி சார்பில் மூன்றாவது அணியும் தேர்தல் களத்தில்இருந்தது. 2014 ல் மோடி தலைமையில் தேசிய ஜனநாயகஅணி ஆட்சி  மத்தியில் அமைந்தது. செல்வி ஜெயலலிதா அவர்கள் மத்திய பா.ஜ.க ஆட்சியின் மக்கள் விரோதச் சட்டங்களையும், திட்டங்களையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.

 மோடி ஒரு நாள் இரவில் தொலைக்காட்சியில்தோன்றி 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது எனும் பணமதிப்பிழப்பு நீக்க அறிவிப்பை வெளியிட்டார். ஒரே இரவில்பல கோடி ஏழை நடுத்தர மக்கள் ஓட்டாண்டிகளாக்கப்பட்டனர். கறுப்புப் பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட இந்த அறிவிப்பால் கறுப்புப் பணம் மீட்கப்படவில்லை. மாறாக கறுப்புப் பணம் அனைத்தும் ஆளும் கட்சியினரின் அனுசரணையோடு வெள்ளையாக மாற்றப்பட்டது.தொழில்கள் நலிந்தன. வணிகம் தடுமாறியது. பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டது. பண மதிப்பு நீக்கத்தை கடுமையாக விமர்சித்தார் ஜெயலலிதா. 

மோடியா? லேடியா?
தமிழகத்தில் மருத்துவராகும் கனவோடு படித்து வரும்கிராமப்புற, ஏழை எளிய மாணவர்கள் அது நாள் வரையிலும் மேல்நிலைப்பள்ளி இறுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்பில் சேர்ந்து வந்தனர். அதற்கு உலை வைக்கும் வகையில் நீட் தேர்வு கொண்டு வந்த போது அதை  ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தோடு,தமிழகத்தில் நீட் தேர்வு நுழையாமல் பார்த்துக் கொண்டார்.பெட்ரோல், டீசல், சமையல் வாயு விலைகள் அதிகரிக்கப்பட்ட போதெல்லாம் கடுமையாக கண்டித்தவர்  ஜெயலலிதா. இப்படி மத்திய பா.ஜ.க அரசின் மக்கள் விரோதச் சட்டங்களையும், திட்டங்களையும் எதிர்த்ததோடு, மாநில உரிமைகளைப் பறிக்கும் அனைத்தையும் கண்டித்து வந்தார். தன் அதிகாரத்துக்குட்பட்டு சில திட்டங்கள் தமிழகத்தில் நுழையாமலும் பார்த்துக் கொண்டார். 

இந்நிலையில் தான் 2016 சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. தாமரை மலர்ந்தே தீரும் எனும் முழக்கத்தோடு  ஒரு சில கட்சிகளோடு இணைந்து போட்டியிட்டது. பிரதமர்மோடியும் தமிழகத்தில் வலுவான பிரச்சாரத்தை மேற்கொண்டார். உடல் நிலையையும் பொருட்படுத்தாது பிரச்சாரம்செய்த செல்வி ஜெயலலிதா அன்றைக்கு தமிழக மக்களைப் பார்த்து முன் வைத்த கேள்வி தான் மோடியா? இந்தலேடியா என்பது. தமிழக மக்கள் மோடியை நிராகரித்தனர். ஒரு இடம்கூட பெற முடியாமல் பா.ஜ.க படுதோல்வி அடைந்தது. அதிமுக சிறு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்க ஜெயலலிதா முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

ஜெயலிதாவின் மர்ம மரணமும் தொடர் காட்சிகளும்
2016 இறுதியில்  ஜெயலலிதா திடீர் நோய் வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீண்ட நாட்கள் சிகிச்சை. அவர் உடல் நலம் தேறி வருவதாக தினசரிஅறிக்கைகள். ஒரு கட்டத்தில் முதல்வர் பொறுப்பு ஓ.பி.எஸ்.க்கு வழங்கப்படுகிறது. ஆளுநரே மருத்துவமனைக்கு வந்து முதல்வர் தேறி வருவதாக ஊடகங்களிடம் கூறினார். ஆனால் திடீரென ஒரு நாள் செல்வி ஜெயலலிதா மரணமடைந்தார்.மக்களுக்கு பெரும் அதிர்ச்சி .பிரதமர் மோடி வந்தார். சுசிகலாவுக்கு ஆசி வழங்கினார்.ஓ.பி.எஸ்.ஐ தழுவி  ஆறுதல் கூறினார். ஓ.பி.எஸ். முதலமைச்சராக பதவி ஏற்றார். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.உட்படஅனைத்து அமைச்சர்களும் சசிகலா புகழ்பாட ஆரம்பித்தனர். சசிகலாவின் காலில் விழுந்து ஆசி வாங்கும் காட்சிகள் அரங்கேறின. சட்டமன்றத்தில் கூட சின்னம்மாவின் பெருமைகள் பேசப்பட்டன. 

திடீரென ஒரு நாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. முதல்வராக சசிகலா தேர்வு. அதை அறிவித்த ஓ.பி.எஸ்.திடீரென ஜெயலலிதா நினைவிடம் சென்று அம்மாவின் மரணத்திற்கு நீதி வேண்டுமெனக் கூறி தர்ம யுத்தம் துவங்கினார். மறுபக்கம் கூவத்தூர் கூத்துக்கள் அரங்கேறின. இந்நிலையில் தான் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டவர்களுக்கு எதிரான ஊழல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் திடீரென விசாரணைக்கு வருகிறது. முதல் குற்றவாளி ஜெயலலிதா மரணமடைந்ததால் அவரைத் தவிர சசிகலா உள்ளிட்ட மற்ற அனைவருக்கும் தண்டனை வழங்கப்படுகிறது. சசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்படுகிறார். சசிகலாவின் முடிவுப்படி அவரது விசுவாசி எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகிறார். சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிய போது ஓ.பி.எஸ். உள்ளிட்டஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் இ.பி.எஸ்.க்குஎதிராக வாக்களிக்கின்றனர். அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பிக்கிறது. கட்சி மாறல் தடைச்சட்டத்தின்படி ஓ.பி.எஸ் .உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை துவங்குகிறது. பா.ஜ.க தலையீட்டால் அதிமுகவில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.க்கிடையே சமரசம் செய்யப்படுகிறது. ஆளுநரே இருவரையும் இணைத்து வைக்கிறார். ஓ.பி.எஸ். துணை முதல்வர் ஆகிறார். ஆறுமுகசாமி விசாரணை கமிசன் அமைக்கப்பட்டு, ஜெயலலிதா மர்ம மரணம் குறித்த பிரச்சனை கிடப்பில் போடப்படுகிறது. தர்மயுத்தம் முடிவுக்கு வருகிறது.

பாஜகவின் பினாமி ஆட்சி
சட்டமன்ற தேர்தலில் ஓரிடத்தைக் கூட பெற முடியாதபா.ஜ.க இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதிமுக தலைமையை தனது பினாமியாக மாற்றி செயல்படத் துவங்கியது. அது நாள் வரை  ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவின் கொள்கைகள் அப்படியே தலைகீழாக மாறின. பாஜக தலைமையிலான மத்திய அரசு எத்தகைய மக்கள் விரோதச் சட்டங்கள் அல்லது திட்டங்கள் கொண்டுவந்தாலும் அத்தனைக்கும் ஆதரவுக் கரம் நீட்டும் கட்சியாகவும், அரசாகவும் மாறியது. ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசியாக அதிமுகவின் முதலமைச்சர், துணைமுதல்அமைச்சர், அமைச்சர்கள் செயல்படத் துவங்கினர். தங்களது ஆட்சி நீடிக்க மோடியின் தயவு தேவை. மேலும் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள். மடியிலே கனம். மோடியிடம் பயம். இதனால்தமிழகத்தில் நீட் நுழைந்தது. அனிதா உள்ளிட்ட பல மாணவர்கள் உயிரைப் பறித்தும் அதிமுக அரசு கபட நாடகம்  ஆடியது. புதிய கல்விக் கொள்கை, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட மாநில உரிமைகள் பறிப்புக்கெல்லாம் எந்த முணுமுணுப்பும் இல்லை.  சிஏஏ சட்ட திருத்தம், முத்தலாக் சட்டம், காஷ்மீர் மாநில  உரிமைகளை பறித்து அம்மாநிலத்தை துண்டாடிய சட்ட திருத்தம், தொழிலாளர் உரிமை பறிப்புச் சட்டங்கள், வேளாண் சட்டங்கள் என அனைத்து மக்கள் விரோதச் சட்டங்களும் அதிமுக தயவில் நிறைவேறின. தற்போதைய அதிமுக எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா தலைமை தாங்கிய இயக்கமல்ல. மாறாக பாஜகவின் கொத்தடிமை கட்சியாகவே உள்ளது.

அதிமுக ஆட்சியின் அவலங்கள்
அ.திமு.க. ஆட்சி ஊழல் ஆட்சி. மக்களின் வரிப்பணம் அதிமுக முதல்வர் மற்றும் அமைச்சர்களால் கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது. எங்கும் எதிலும் ஊழல் என்பதே அன்றாடக் காட்சி. கொரோனா நிவாரணமாக மக்களுக்கு மாதம் ரூ. 7500 வழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகோரியும் செவி மடுக்காத அ.தி.மு.க. அரசு கொரோனா நிவாரண நடவடிக்கைகளில் கூட ஊழல் செய்த கொடுமையை பார்த்தோம்.சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போய் கிடக்கிறது. பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல்கள்,வன்முறைகள் தொடர்ந்து , பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக மாறிவருகிறது என்பதற்கு பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு ஏற்பட்ட அனுபவமே சாட்சி. சுற்றுச்சூழல் மாசுபட்டு வாழ்வு பாழ்படுகிறது என்பதற்காக அமைதியாகப் போராடிய தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி காக்கை குருவிகளைப் போல் சுட்டுக் கொன்ற காட்சியை தமிழகம்இதற்கு முன்னர் கண்டதேஇல்லை. சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தையும், மகனும் காவல்துறையினரால் சித்திரவதை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டதை  மறக்க முடியுமா?

தேர்தலும் நமது கடமையும்
இத்தேர்தலின் மூலம் ஆட்சி மாற்றம் மட்டுமே தமிழக மக்களை காப்பாற்றும். அதிமுக பாஜகவுடனும், பிற சில கட்சிகளுடனும் சேர்ந்து தேர்தலை சந்திக்கிறது. தமிழகஉரிமைகளைப் பறி கொடுத்து, இந்தியைத் திணித்து தமிழைப் புறக்கணிக்கும் மக்கள் விரோத பாசிச வகுப்புவாத பா.ஜ.கவோடு ஊழல்கறை படிந்த மக்கள் விரோத அதிமுக கூட்டாக வருகிறது. இந்த மக்கள் விரோதக் கூட்டணியை நிராகரிப்பதன் மூலமே ஆட்சிமாற்றம் ஏற்பட முடியும். மக்கள் வாழ்வில் மாற்றம் காண முடியும். 
இதற்கான வலுவான கூட்டணியாக திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், ம.தி.முக மற்றும் பல கட்சிகளைக் கொண்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வலுவான சக்தியாக களத்திலே உள்ளது. இதற்கிடையில் நிற்கின்ற சில கட்சிகளாலோ, அணிகளாலோ தேர்தலில் எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்த இயலாது.  அவை வாக்குகளை பிரிப்பதன் மூலம் அதிமுக - பாஜக மக்கள் விரோத கூட்டணிக்கு மறைமுக உதவியே செய்யும். எனவேதான்  ஏப்ரல் 6 ல் தமிழக வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று தங்களது வக்குரிமையைச் செலுத்தும் போது மக்கள் விரோத, வகுப்புவாத அதிமுக, பாஜக கூட்டணியை முறியடித்திடவும், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தவும், மக்கள்நல அரசு ஏற்படவும் வாக்குகளை சிந்தாமல்,சிதறாமல் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு அளிப்பதே இன்றைய தேவை.வரலாற்றுக் கடமை. 

கட்டுரையாளர் : எஸ்.நூர்முகமது, சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர்

;