articles

img

தாய்மொழியை நேசித்த பன்மொழி வித்தகர் ஏங்கெல்ஸ்....

காரல் மார்க்சும் பிரடெரிக் ஏங்கெல்சும் பொதுவுடமை தத்துவம் மற்றும் இயக்கத்தின் இருபெரும் ஆசான்கள். மார்க்சின்பெயர் உச்சரிக்கும் போது ஏங்கெல்சின் பெயரும் இணைந்துதான் இருக்கும். அதேபோல ஏங்கெல்சின் பெயரை உச்சரிக்கும் பொழுது காரல் மார்க்சின் பெயரும் இணைந்திருக்கும். தத்துவம் /அரசியல் ஆகியவற்றில் இரு பெரும் ஆசான்களுக்கும் ஒரே மாதிரியான சிந்தனை இருந்தது. அதே சமயத்தில் நடைமுறை வாழ்வில் சில அம்சங்களில் மார்க்சிடமிருந்து ஏங்கெல்ஸ் வேறுபட்டிருந்தார்.  அந்த காலத்தில் இங்கிலாந்தில்  பிரபலமானவர்களிடம் சில கேள்விகளை எழுப்பி பதில்களை வாங்கி ஒப்புதல் வாக்குமூலம் என்ற வடிவத்தில் பதிவு செய்வது வழக்கமாக இருந்தது. உங்களது முதன்மை குணாதிசயம் என்ன என்றகேள்விக்கு காரல் மார்க்ஸ் “நோக்கத்தில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்துவது” என பதில் தந்தார். இதே கேள்விக்குஏங்கெல்ஸ் அவர்கள் “ஒவ்வொன்றையும் பாதி அளவு தெரிந்து கொள்வது” என்ற பதிலை அளித்தார். எதையும் எளிதாகவும் நகைச்சுவையாகவும் எடுத்துக்கொள்வது ஏங்கெல்சின் அணுகுமுறையாக இருந்தது.

வாழ்க்கை பற்றிய அணுகுமுறை:

தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் ஏங்கெல்ஸ் அளித்த சில பதில்கள்:

$ மகிழ்ச்சி பற்றிய கருத்து- சேட்டிவ் மார்கக்ஸ் 1848     (மிகவும் தரம் வாய்ந்த ஒயின்)

$  துன்பம் பற்றிய கருத்து- பல் மருத்துவரிடம் செல்வது

$  பிடித்த கதாநாயகன்- எவரும் இல்லை.

$  பிடித்த கதாநாயகி- ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல

$  அதிகபட்ச எதிர்பார்ப்பு- அப்படி எதுவும் இல்லாமல்  இருப்பது

$  வாழ்க்கை பற்றிய அணுகுமுறை- எதையும் எளிதாக எடுத்து கொள்.

நடைமுறை வாழ்வு குறித்த ஏங்கெல்சின் அணுகுமுறையை இந்த பதில்கள் கோடிட்டு காட்டுகின்றன. ஏங்கெல்ஸ் இருக்குமிடம் எப்பொழுதும் கலகலப்பாகவும் சிரிப்பும் நிறைந்து இருக்கும் என அவரது போராளி நண்பர்கள் பலரும் பதிவு செய்துள்ளனர். ஏங்கெல்ஸ் கோபத்தைவெளிப்படுத்திய தருணங்கள் மிகவும் குறைவு. எப்பொழுதும் நிதானத்தை வெளிப்படுத்துவது ஏங்கெல்சின் அணுகுமுறையாக இருந்துள்ளது. அவர் சில போர்களில் கலந்து கொண்டார். அப்பொழுது கூட போர்க்களத்தில் பதற்றம் அடையாமல் எதிரிகளுடன் போரிட்டார். மரணம் பற்றிய பயம் அவரிடம் சிறிது கூட இருந்திருக்கவில்லை என கூறுகிறார் எலியனோர் மார்க்ஸ்.எந்த பின்னடைவும் ஏங்கெல்சிடம் சோர்வு அல்லது அவநம்பிக்கையை விளைவித்தது இல்லை. ஏங்கெல்சின் நகைச்சுவை உணர்வும் எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் பக்குவமும்தான் அவரது இறுதி காலத்தில்  அவருக்கு ஏற்பட்ட தொண்டை புற்றுநோயும் அதன் தாளமுடியாத வலியும் கூட அவரை அதிகமாக துன்பப்படுத்தவில்லை. வெற்றியின் பொழுது தலைக்கனம் கொள்ளாமல் இருப்பதும் தோல்வியின் பொழுது துவளாமல் இருப்பதும் ஏங்கெல்சின்வாழ் விலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஆகும்.

ஞாயிறு விருந்துகள்
மான்செஸ்டரில் ஏங்கெல்ஸ் தனது தந்தையின் பஞ்சாலையில் பணியாற்றிய பொழுது பல முதலாளித்துவ வட்ட மனிதர்களிடம் பழக வேண்டியிருந்தது. அவர்களில் பலருக்கு ஏங்கெல்ஸ் முதலாளித்துவத்தின் வீழ்ச்சிக்கு அயராது பணியாற்றுபவர் என்பது தெரியாது. ஏங்கெல்சின் அறிவு விசாலமும் தனது பணியில் அவர் காட்டும் அசாத்தியதிறமையும் பலரை அவரது வீடு தேடி வரவழைத்தது. அதேசமயத்தில் சாமுவேல் மூர் (மூலதனம் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்), லெஸ்னர் (மார்க்ஸ்/ஏங்கெல்சின் நம்பிக்கை பெற்ற போராளி) போன்ற சோசலிச போராளிகளும் ஏங்கெல்சின் வீட்டுக்கு வந்தனர். இதன்விளைவாக எந்த பாதகமான நிகழ்வும் உருவாகிவிடக்கூடாது என்பதற்காக ஏங்கெல்ஸ் இரண்டு வீடுகளை நிர்மாணித்தார். ஒன்று மான்செஸ்டர் நகரத்தின் மையத்தில்! அங்கு அவரது முதலாளித்துவ நண்பர்கள் வருகை புரிந்தனர். இன்னொரு வீடு நகரத்தின் வெளிப்புறத்தில்!  அங்குதான் போராளிகள் கூடினர். அது “சோசலிசப் பாசறை” என அழைக்கப்பட்டது. 
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பாசறையில் பல சோசலிஸ்டுகள் கூடினர்.தொழிலாளர் வர்க்க இயக்கங்கள் குறித்தும் அரசியல் குறித்தும் நீண்ட விவாதங்கள் நடந்தன. ஆனால் அனைத்தும் ஏங்கெல்ஸ் பாணியில் நகைச்சுவை உணர்வுடன் அரங்கேறின. இங்கிலாந்தில் அகதியாகவந்தடைந்த எந்த சோசலிசப் போராளி அல்லது முற்போக்காளரும் ஏங்கெல்சின் வீட்டுக்கு வரலாம்! விவாதிக்கலாம்! அந்த விவாதங்கள் நடு இரவையும் தாண்டி நடக்கும்.குறிப்பாக அனைவருக்கும்  உணவு/ஒயின்/சூடானபானங்கள் தொடர்ந்து பரிமாறப்பட்டுக் கொண்டேயிருக்கும். ஏங்கெல்சின் இந்த ஞாயிறு விருந்துகள் போராளிகளிடையே மிகவும் பிரபலமான ஒன்று! 

இத்தகைய விருந்துகள் ஏங்கெல்ஸ் லண்டனுக்கு குடியேறிய பின்னரும் தொடர்ந்தது. ஜெர்மனியில் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலில் போட்டியிட்டது. தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் அன்றைக்கு ஏங்கெல்ஸ் வீட்டில் அனைத்துசோசலிசப் போராளிகளும் கூடினர். உணவு மேசையில்  உணவு நிரம்பியிருந்தது. தந்திதான் தகவல் சாதனம்! ஏங்கெல்ஸ்தான் ஒவ்வொரு தந்தியையும் திறந்து உரக்கமுடிவை அறிவித்தார். கட்சிக்கு வெற்றி எனில் கொண்டாடினார்கள். தோல்வி என்றாலும் கொண்டாடினார்கள். தோல்வியை கொண்டாடலாமா என சிலர் கேள்வி எழுப்பியபொழுது வெற்றியும் தோல்வியும் சமமாக கருதப்பட வேண்டும் என ஏங்கெல்ஸ் வலியுறுத்தினார். 

மொழி நேசம்
“ஏங்கெல்சின் வாய் 20 மொழிகளை பேசும்” எனசர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஒரு பிரதிநிதி நகைச்சுவையாக குறிப்பிட்டார். அது உண்மையே! குறைந்தபட்சம் 12 மொழிகளில் பேச்சு/எழுத்து திறமையை கொண்டிருந்தார் ஏங்கெல்ஸ். தனது 70வது வயதில் நார்வே மொழியை கற்றுக் கொண்டார். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தகவல் போக்குவரத்து பொறுப்பாளராக செயல்பட்ட பொழுது அந்தந்த தொழிலாளர் அமைப்புகளுக்கு அவரவர் தாய் மொழியிலேயே கடிதம் எழுதினார். இதன் காரணமாக அந்த அமைப்புகள் சர்வதேச அமைப்புடன் மேலும் நெருங்கிவர வாய்ப்புகள் உருவாகின.

ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை மார்க்சின் மருமகனும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் தலைவருமான பால் லாப்ஃரே குறிப்பிடுகிறார். ஒரு முறை அவரும் ஏங்கெல்சும்கடற்கரையில் நடந்து கொண்டிருந்தனர். அப்பொழுது ஒருகுள்ளமான மனிதர் பிரேசில் நாட்டு இராணுவ உடையில் நின்று கொண்டிருந்தார். அவரிடம் சென்று ஏங்கெல்ஸ் ஸ்பானிய மொழியில் பேசினார்; பதில் இல்லை. போர்த்துகீசிய மொழியில் பேசினார்; பதில் இல்லை. ஆங்கில மொழியில் பேசினார்; பதில் இல்லை. பின்னர் ஐரிஷ் மொழியில் “நீங்கள் என்ன பிரேசில் உடை தரித்த ஐரிஷ் மனிதரா?” எனக் கேட்டார். அவ்வளவுதான்! அந்த மனிதர்கதறி அழுதுவிட்டார்.  ஏன் என கேட்டதற்கு பல மாதங்களுக்கு பின்னர் இப்பொழுதுதான் எனது தாய் மொழியை கேட்கிறேன் என அவர் பதில் அளித்தார். மொழி மனிதர்களிடத்தில் என்ன தாக்கத்தை உருவாக்கும் என்பதற்கு இது சான்று என ஏங்கெல்ஸ், லாப்ஃரேயிடம் கூறினார்.

கம்யூனிஸ்ட் போராளிகள் கற்றுக் கொள்ளும் ஒவ்வொருமொழியும் அவர்கள் கையில் கிடைக்கும் கூடுதல் ஆயுதம் என்பது ஏங்கெல்சின் நம்பிக்கை. அனைத்து மொழிகளையும் அவர் நேசித்தார். மனித குலம் உற்பத்தியில் உழைப்பை செலுத்திய பொழுது தமக்குள் தகவல் பரிமாறிக்கொள்ள உருவாக்கியதுதான் மொழி; எனவே மொழியின் அடிப்படை உழைப்புதான் என்பது ஏங்கெல்சின் ஆய்வாகும். பல மொழிகளைக் கொண்ட இந்தியாவில் இதன் முக்கியத்துவம் பற்றிக் கூற வேண்டியது இல்லை. தோழர் பி.ராமமூர்த்தி அவர்களும் இந்தியாவின் முக்கியபல மொழிகளில் ஆற்றல் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தாய் மொழி தமிழை நேசித்து அதனை சங்பரிவாரத்திடமிருந்து பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் அதே சமயம் பல மொழிகளை அறிந்து கொள்வதன் நன்மைகளையும் ஏங்கெல்சின் மொழி நேசம்  உணர்த்துகிறது.

குடும்ப நேசம்
ஏங்கெல்ஸ் “இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின்வாழ்நிலைமைகள்” எனும் புகழ்பெற்ற நூலை எழுதுவதற்கு உறுதுணையாக இருந்தவர் ஆலைத் தொழிலாளி மேரி பர்ன்ஸ். இவர் ஐரிஷ் தேசிய போராளியும் கூட! பின்னர்ஏங்கெல்சின் இணையராக வாழ்ந்தார். அவர் இறந்த பொழுது “மேரியுடன் தனது இளமை முழுவதும் மறைந்துவிட்டது போல உணர்கிறேன்” என ஏங்கெல்ஸ் மார்க்சுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார். பின்னர் அவரது சகோதரிலிஸ்ஸி பர்ன்ஸ் ஏங்கெல்சின் இணையராக இணைந்தார்.  அவரும் ஐரிஷ் தேசிய போராளிதான்! லிஸ்ஸி தனது மரணபடுக்கையில் இருந்த பொழுது தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஏங்கெல்சை வேண்டினார். அவரது இறுதிஆசையை ஏங்கெல்ஸ் நிறைவேற்றினார். தனது அணுகுமுறை எதுவாக இருப்பினும் தான் நேசித்தவர்களுக்காக  சிலசிறிய சமரசங்களை செய்து கொள்வதில் தவறு இல்லை என்பது ஏங்கெல்ஸ் நமக்கு தரும் படிப்பினை ஆகும். 

ஏங்கெல்ஸ் தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை. மார்க்சின் குழந்தைகளை தனது குழந்தைகளாகவே ஏங்கெல்ஸ் நேசித்தார். அவர்களும் ஏங்கெல்சை இரண்டாவதுதந்தையாகவே உணர்ந்தனர். குறிப்பாக பின்னாளில் பெரிய போராளியாக பரிணமித்த மார்க்சின் இளைய புதல்வி எலியனோர், ஏங்கெல்சின் இணையற்ற அன்பை பெற்றிருந்தார். மார்க்சின் குழந்தைகள் ஏங்கெல்ஸ் வீட்டிற்கு வந்துவிட்டால் கொண்டாட்டம்தான்! தனது பணிகளை தூரவைத்துவிட்டு நாடகம்/ சுற்றுலா/ பூங்காக்களுக்கு செல்வது/படகு சவாரி என கிளம்பிவிடுவார்கள்!

ஒருமுறை எலியனோர் கருத்து வேறுபாடு கொண்டுமார்க்சின் வீட்டை விட்டு வெளியேறி  பள்ளியில் ஆசிரியையாக சேர்ந்து ஒரு விடுதியில் தங்கியிருந்தார். அவருக்கு அப்பொழுது வயது 19. இதனை கேள்வியுற்ற ஏங்கெல்ஸ் கவலைப்பட்டார். ஏங்கெல்ஸ் நிதி உதவி அளித்தாலும் எலியனோர் எப்பொழுதும் அதனை ஏற்றுக்கொள்வது இல்லை. இதில் தமது தமக்கைகளிடமிருந்து அவர் முற்றிலும் மாறுபட்டிருந்தார். சில நாட்களுக்கு பின்னர் எலியனோர் வீடு திரும்பினார். 
அப்பொழுது ஏங்கெல்ஸ் கூறினார்: “எலியனோர் தனதுபாதையை தானே தேர்வு செய்யும் தருணம் வந்துவிட்டது.”

குறிப்பிட்ட வயதுக்கு பின்னர் குழந்தைகள் மீது பெற்றோர்கள் தமது விருப்பத்தை திணிப்பது கூடாது என்பதில் ஏங்கெல்ஸ் உறுதியாக இருந்தார். இதனை “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்” ஆவணத்தில் 21வது கேள்விக்கானபதிலில் குறிப்பிடுகிறார். இதனையே கம்யூனிஸ்டு அறிக்கையும் குறிப்பிடுகிறது. குழந்தைகளை நேசிப்பது என்பதுஅவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது அல்ல! போட்டி உலகில் தமது குழந்தைகள் மீது தேவையற்ற ஆதிக்கம் செலுத்தும் இன்றைய பெற்றோர்களுக்கு ஏங்கெல்சின் அணுகுமுறையில் கற்றுக்கொள்வதற்கு நிறைய உள்ளது.

படைப்பு உரிமை- ஏங்கெல்சின் தீர்வு
ஏங்கெல்சின் முதுமை காலத்தில், குறிப்பாக அவருக்குபுற்றுநோய் கண்டறியப்பட்ட பொழுது ஒரு சிக்கல் எழுந்தது.மார்க்ஸ்- ஏங்கெல்ஸ் ஆகிய மகத்தான போராளிகளின் படைப்பு உரிமை பற்றிய முரண்பாடுதான் அது! இரு பேராசான்களும் ஜெர்மனியை சேர்ந்த கம்யூனிஸ்ட்டுகள் என்பதால் அந்த உரிமை ஜெர்மானிய கம்யூனிஸ்ட் கட்சிக்குதான்உண்டு என அந்த கட்சி, குறிப்பாக அதன் மகத்தான தலைவர்ஆகஸ்ட் பேபல் வாதிட்டார். மேலும் அன்றைக்கு மார்க்ஸ்-ஏங்கெல்ஸ்  படைப்புகளை உலகம் முழுதும் கொண்டு செல்வதற்கான வாய்ப்புகளை அந்த கட்சி பெற்றிருந்தது.இதனை எலியனோர் மார்க்ஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. மார்க்சும் ஏங்கெல்சும் தம்மை உலக குடிமகன்கள் எனஅறிவித்து கொண்டனர். ஜெர்மனிக்கு மட்டும் அவர்கள் சொந்தமில்லை. மேலும் பிரிட்டன் என்னதான் முதலாளித்துவ தேசமாக இருந்தாலும் ஜெர்மனியைவிட கூடுதல்ஜனநாயக உரிமைகளை பெற்றிருந்தது. ஒரு வேளை ஜெர்மனி சர்வாதிகாரத்தின் பிடியில் சிக்குண்டு ஆசான்களின் படைப்புகள் அழிக்கப்பட்டுவிட்டால் என்ன ஆவதுஎனும் கேள்வியை எலியனோர் எழுப்பினார். படைப்புரிமையை பறிப்பதற்காகவே லூசி காவுட்ஸ்கியை ஏங்கெல்சுக்கு உதவியாளராக பேபல் அனுப்பியுள்ளார் எனும் ஐயம் எலியனோருக்கு ஆழமாக இருந்தது.
இந்த இரண்டு வாதங்களிலும் உண்மைகள் உள்ளன என்பதை மறுக்க இயலாது.

இந்த முரண்பாடுகளை தீர்க்க வேண்டிய அவசியம் ஏங்கெல்சுக்கு எழுந்தது. காரல் மார்க்சின் பெயரில் உள்ள அனைத்து படைப்புகளும் எலியனோருக்கும் அவரது தமக்கை லாராவுக்கும் சொந்தம் எனவும் தனது பெயரில் உள்ள படைப்புகளும் மார்க்ஸ்- ஏங்கெல்ஸ் கூட்டு படைப்புகளும் ஜெர்மன் கட்சிக்கு சொந்தம் எனவும் ஏங்கெல்ஸ் உயில் எழுதினார். பிரச்சனை சுமுகமாக தீர்வை எட்டியது.ஏங்கெல்ஸ் மரணத்திற்கு பிறகு தனது உடல் எரியூட்டப்பட வேண்டும் எனவும் சாம்பலை கடலில் கலக்க வேண்டும் எனவும் விரும்பினார். அதனை எலியனோர் மார்க்ஸ்/ லெஸ்னர் ஆகியோர் நிறைவேற்றினர். உழைப்பாளிகளுக்காக தமது வாழ்வை அர்ப்பணித்தவர்கள்தான் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் வாழ்வை ஆழமாக நேசிக்க முடியும். இதனை ஏங்கெல்ஸ் மற்றும் மார்க்ஸ் வாழ்வு நிலைநாட்டுகிறது. ஏங்கெல்சின் 200வது பிறந்த தினத்தில் இதனை மனதில் கொள்வது மிக அவசியம்!

==அ.அன்வர் உசேன்==

 

;