articles

img

திரிணாமுல் ஏவிய வன்முறை - வெறியாட்டங்களை மீறி - பஞ்சாயத்து தேர்தலில் முன்னேறிய இடதுசாரி அணி

மேற்குவங்க உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரலாறு காணாத வன்முறைகள் மூலம் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ஊடகங்கள்  திரிணாமுல் வெற்றியை மட்டுமே குறிப்பிடுகின்றன. அந்த கட்சி அரங்கேற்றிய வன்முறைகள் குறித்து பேசுவது இல்லை. தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கி யதிலிருந்து இதுவரை சுமார் 70 பேர் கொல்லப் பட்டுள்ளனர். வன்முறை எல்லையில்லாமல் நடந்த காரணத்தால் கொல்கத்தா உயர்நீதிமன்றம் தேர்தல் முடிவுகள் அனைத்தையுமே நிறுத்தி வைத்துள்ளது. இவ்வாறு நடப்பது  முதல்முறையாகும்.  மறுபுறத்தில் தேர்தல் முடிவுகள் திரிணாமுல்- பா.ஜ.க. இடையே மட்டுமே நடந்த போட்டியாக சித்தரிக்க முயற்சிகள் செய்யப்படுகின்றன. ஆனால்  உண்மையான களநிலவரம் அப்படி இல்லை. மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் மூன்று முக்கிய செய்திகளை சொல்கின்றன. 

  1.     தேர்தல் வெற்றிக்காக எத்தகைய மகாபாதகச் செயலையும் செய்ய திரிணாமுல் காங்கிரஸ் தயங்காது.
  2.     பா.ஜ.க.வின் ஆதரவு சரிந்து கொண்டுள்ளது.
  3.     இடதுசாரிகளும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வலுப்பெற்று வருகின்றன.

மீண்டெழும் இடதுசாரி அணி!

இடதுசாரிகள்-மதச்சார்பற்ற சக்திகளின் அணி  மீண்டு வருவதையும் பா.ஜ.க.  வாக்குகள் சரிந்து வருவதையும் கீழ்கண்ட விவரங்கள் மூலம் அறியலாம்: (அட்டவணை 1 )

கடந்த 2 ஆண்டுகளில் பா.ஜ.க. 16% வாக்குகளை இழந்துள்ளது. அதே சமயம் இடதுசாரி - காங்கிரஸ் அணி 11% வாக்குகளை கூடுதலாக பெற்றுள்ளது. திரிணாமுல் 6% கூடுதல் வாக்குகள் பெற்றாலும் அதன் வன்முறை வெறியாட்டம் மூலமே  இந்த வாக்குகள் பெறப்பட்டுள்ளன என்பதை கவனத்தில் கொள்வது அவசியம். திரிணாமுல் வன்முறை தாக்குதல்கள் இடதுசாரி அணி மீது தான்  கூடுதலாக ஏவப்பட்டது. பல இடங்களில் பா.ஜ.க.வின் வெற்றியை அனுமதித்த திரிணாமுல் குண்டர்கள்  இடதுசாரி அணியின் வெற்றியை அனைத்து வழி களிலும் சிதைக்கவும் பறிக்கவும் எல்லையில்லா வன்முறையை ஏவினர். திரிணாமுல் காங்கிரஸ் தனது வெற்றியை வன்முறை மூலம் நிலைநிறுத்திக் கொண்ட அதே சமயத்தில் இரண்டாவது இடம்  இடதுசாரிகள் பெற்றுவிடக்கூடாது என்பதிலும் கவனம் செலுத்தியது. பல இடங்களில் திரிணாமுல்  மற்றும் பா.ஜ.க.வுக்கு இடையே மறைமுக புரிதல் உருவானது. திரிணாமுல் மற்றும் காவல்துறையின் வன்முறையை மீறித்தான் இடதுசாரி-காங்கிரஸ் அணி தனது வாக்கு வலிமையை இரட்டிப்பாக்கி 11% கூடுதலாக பெற்றுள்ளது. 

உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்ல; கடந்த இரு வருடங்களில் நடந்த பல்வேறு சட்டமன்ற இடைத்தேர்தல்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களின் வாக்கு விவரங்கள் பா.ஜ.க.வின் சரிவையும் இடதுசாரி கூட்டணியின் மீட்சியையும் தெளிவாக காட்டுகின்றன: (அட்டவணை 2 ) ஒரு புறம் பா.ஜ.க. கடந்த சில ஆண்டுகளாக தனது வாக்கு வங்கியை இழந்து கொண்டிருக்க மறுபுறத்தில் இடதுசாரி- காங்கிரஸ் அணி தனது வலிமையை மீட்டெடுத்து வருகிறது என்பது தெளிவு. மேற்கு வங்க மக்கள் பா.ஜ.க.வை விட்டு சீராக விலகுவதை இந்த விவரங்கள் தெளிவாக்குகின்றன. மேற்குவங்க அரசியல் என்பது திரிணாமுல் காங்கிரசுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையேதான் எனும் ஊடகங்களின் பிரச்சாரம் உண்மை அல்ல. திரிணாமுல் காங்கிரசின் அராஜகங்களை எதிர்த்து  பின்னுக்குத் தள்ளும் வலிமை இடதுசாரி அணிக்கே  உண்டு என்பதை மக்கள் உணரத்  தொடங்கியுள்ள னர். மேலும் இடையில் இழந்த சிறுபான்மை வாக்கு களை மீண்டும் இடதுசாரிகள் பெறத் தொடங்கியுள்ள னர் என்பதையும் அரசியல் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்துகின்றனர். 

திரிணாமுல்லின் வன்முறைக்கு வானமே எல்லை

இந்த உள்ளாட்சி தேர்தல்களில் வேட்பு மனு தாக்கல் தொடங்கி மனு திரும்பபெறுதல்/ பிரச்சாரம்/  வாக்குப் பதிவு/ வாக்கு எண்ணிக்கை என ஒவ்வொரு கட்டத்திலும் வன்முறைகள் ஏவப்பட்டன. சென்ற தேர்தலில் இடதுசாரி அணி பாதி இடங்களுக்கும் குறைவாகவே மனுதாக்கல் செய்ய முடிந்தது. ஏனெனில் திரிணாமுல் குண்டர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கவில்லை. இந்த முறை யும் அதே வன்முறையில் திரிணாமுல் காங்கிரஸ் இறங்கியது. எனினும் மக்களின் போராட்டங்கள் மூலமாக 60,000க்கும் அதிகமான இடங்களில் சுமார் 50,000 மனுக்களை இடதுசாரி அணி தாக்கல்செய்தது.  எனினும் மனுதாக்கல் செய்த பலரை மிரட்டி மனுவை திரும்பப் பெறச் செய்ய திரிணாமுல் குண்டர்கள் முயன்றனர். மிகப்பெரும்பான்மையோர் தைரியமாக மனுவை திரும்பப் பெற மறுத்தனர். இத்தகைய எதிர்வினையை திரிணாமுல் எதிர்பார்க்கவில்லை. எனவே தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது பல  இடங்களில் வன்முறைகள் ஏவப்பட்டன. இத்தகைய வன்முறைகளுக்கு இடையேதான் இடதுசாரிகளின் பிரச்சாரம் தொடர்ந்தது மட்டுமல்ல; பல இடங்களில் மக்களின் மகத்தான ஆதரவையும் பெற்றது. மனுதாக்கல்/ பிரச்சாரம் ஆகிய இரு கட்டங்களில் தனது மிரட்டல் எடுபடவில்லை என்பதால் ஆத்திரம் கொண்ட திரிணாமுல் குண்டர்கள் வாக்குப் பதிவின்  போது மிகப்பரவலான வன்முறையை அரங்கேற்றினர். குறிப்பாக எந்த பகுதிகளில் இடதுசாரிகளுக்கு வலுவான ஆதரவு உள்ளதோ அந்த பகுதிகளில் வன்முறைகள் ஏவப்பட்டன. இடது சாரி வாக்காளர்களை, வாக்களிப்பதிலிருந்து தடுப்பதே இதன் நோக்கம். வாக்குப் பதிவின் போது  பரவலான வன்முறைக்கு பின்னரும் இடதுசாரி அணி  சவாலாக வந்துவிடுமோ எனும் அச்சம் திரிணா முல்லை வாட்டியது. எனவே வாக்கு எண்ணிக்கை யின் போதும் இதுவரை கண்டிராத வன்முறைகள் உருவாக்கப்பட்டன.

வன்முறைகளுக்கு  சில “சாம்பிள்கள்”:

  1.     தேர்தலில் வெற்றி பெற்ற ஒரு சிபிஐ(எம்) பெண் வேட்பாளரை திரிணாமுல் காங்கிரசுக்கு கட்சி மாற நிர்ப்பந்தித்து அவரது மகனை கடத்தி கொன்று விடுவோம் என மிரட்டினர்.
  2.     ஒரு தொகுதியில் சிபிஐ(எம்) வேட்பாளர் வெற்றி  பெறுவது உறுதி என தெரிந்தவுடன் அவருக்கு  விழுந்த பல வாக்கு சீட்டுகளை எடுத்துக்கொண்டு  ஓடிவிட்டனர். மீதமுள்ள வாக்குகளை எண்ணி திரிணாமுல் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
  3.     இன்னொரு தொகுதியில் சிபிஐ(எம்) வேட்பாளர் 4 வாக்கு வித்தியாசத்தில் வென்றார். ஆனால் திரிணாமுல் வேட்பாளர் அவருக்கு விழுந்த 5 வாக்கு சீட்டுகளை வாயில் போட்டு விழுங்கி விட்டார். எனவே திரிணாமுல் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. n    எங்கெல்லாம் இடதுசாரி-காங்கிரஸ் வேட்பாளர்கள் வென்றார்களோ அங்கெல்லாம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. நள்ளிரவில் வன்முறைகளை ஏவி இடதுசாரி-காங்கிரஸ் வேட்பாளர்கள் மற்றும் ஆதர வாளர்களை விரட்டிவிட்டு திரிணாமுல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
  4.     பல இடங்களில் வாக்கு சீட்டுகள் நடு சாலையிலும் சாக்கடையிலும் கண்டெடுக்கப்பட்டன. அவை அனைத்தும் இடதுசாரி வேட்பாளர்களுக்கு விழுந்த வாக்குகள்.
  5.     சிபிஐ(எம்) சார்பாக வெற்றி பெற்ற ஒரு பெண் வேட்பாளரின் வீட்டுக்கு சென்ற குண்டர்கள் அவருக்கு வழங்கப்பட்ட சான்றிதழை எரிக்கா விட்டால் அவரை எரித்து விடுவோம் என மிரட்டி  வெற்றிச் சான்றிதழை எரித்தனர். அங்கு திரிணா முல் வேட்பாளருக்கு வெற்றிச் சான்றிதழ் தரப்பட்டது.
  6.     ஒரு இடத்தில் ஐ.எஸ்.எஃப். வேட்பாளர் 5000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். ஆனால்  அங்கு திரிணாமுல் வெற்றி பெற்றதாக அறி விக்கப்பட்டது. இதனால் கோபமுற்ற இடதுசாரி-காங்கிரஸ்- ஐ.எஸ்.எஃப். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்கள் மீது துப்பாக்கி  சூடு நடத்தி அதில் தான் 4 பேர்கொல்லப்பட்டனர். n    மனோஜ் கோஷ் எனும் திரிணாமுல் வேட்பாளர் 80,000 கை வெடி குண்டுகளுடன் தேசிய  புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டார்.  
  7.     பசாரத் எனும் இடத்தில் வாக்கு எண்ணும் அறையிலேயே ஹபீப் அலி எனும் சிபிஐ(எம்) தோழர் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.  
  8.     சோனாப்பூர் எனும் ஊரில் இரண்டு சிபிஐ(எம்) வேட்பாளர்கள் வெற்றி பெற்றும் சான்றிதழ் வழங்கப்படவில்லை. திரிணாமுல் குண்டர்கள் படை அங்கு வந்தது. சிபிஐ(எம்) வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் வெடி குண்டு மூலம் துரத்தப்பட்டனர். பின்னர் திரிணாமுல் வென்ற தாக அறிவிக்கப்பட்டது.
  9.     பவுரிபூர் எனும் தொகுதியில் முதல் சுற்றி லிருந்து இறுதி சுற்றுவரை சிபிஐ(எம்) வேட்பாளர்  முன்னணியில் இருந்தார். வாக்கு எண்ணிக்கை யில் வெல்ல முடியாத திரிணாமுல் குண்டர்கள் அவரை அங்கேயே கடுமையாக தாக்கினர். அவர்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டி ருக்க இங்கு திரிணாமுல் வென்றதாக அறிவிக்கப்பட்டது.


இப்படி பல வன்முறைகள் அரங்கேற்றப்பட்டன. உடனடியாக முடிவுகளை தெரிந்து கொள்ளாம லிருக்கவும் முடிவுகளை மாற்றி அமைக்கவும் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் முடக்கப் பட்டது. இந்த முறைகேடுகள் அனைத்தும் காவல்துறை மற்றும் மாநில தேர்தல் ஆணையத்தின் முழு ஆதரவோடு அரங்கேற்றப்பட்டது. இத்தனை தகிடு தத்தங்களையும் மீறித்தான் இடதுசாரி-காங்கிரஸ்- ஐ.எஸ்.எஃப்.  அணி தனது வெற்றியை பதிவு செய்தது மட்டுமல்ல; 21% வாக்குகளை பெற்றுள் ளது. சட்டமன்ற தேர்தல்களுடன் ஒப்பிடும் பொழுது  வாக்குகள் இரட்டிப்பாகியுள்ளன. இந்த வன்முறைகள் மேற்கு வங்க மக்களிடையே திரிணாமுலுக்கு எதிராக  கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. அதன் விளைவுதான் உயர் நீதி மன்றம் தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைத்து ஆணை பிறப்பிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.

மக்களின் பதிலடி - புதிய அம்சம்

இந்த தேர்தலில் புதிய அம்சம் என்னவெனில் பல இடங்களில் மக்களே நேரடியாக திரிணாமுல் குண்டர்களுக்கு எதிராக களம் இறங்கி பதிலடி கொடுத்ததுதான். சென்ற சில தேர்தல்களில் திரிணா முல் வன்முறைக்கு பயந்து பலர் ஒதுங்கியிருந்தனர். ஆனால் இந்த முறை மக்களின் நேரடி எதிர்ப்பு என்னவென்பதை திரிணாமுல் குண்டர்கள் காண வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மக்களின் மகத்தான ஆதரவு இருந்த காரணத்தால்தான் 75%க்கும் அதிகமான இடங்களில் இடதுசாரி அணி வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடிந்தது. மனுக்களை திரும்பப் பெற மிரட்டியும் இடதுசாரி வேட்பாளர்கள் உறுதியாக மறுத்தனர். அதனால் வன்முறைகள் ஏவப்பட்டன. அப்பொழுதும் அவர்களின் உறுதி நிலைகுலையவில்லை.  மார்க்சிஸ்ட் கட்சிக்கு விழுந்த வாக்கு சீட்டுகளை சாக்கடையில் திரிணாமுல் குண்டர்கள் வீசிய பொழுது அந்த வாக்கு சீட்டுகளை காப்பாற்ற பினாக்கி எனும் கட்சியின் ஊழியர் போராடினார். அவரை திரிணாமுல் குண்டர்கள் கடுமையாக தாக்கினர். அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை  பிரிவில் உள்ளார். இது போன்ற பல ஊழியர்கள் தமது உயிரைப் பணயம் வைத்து கட்சியின் வெற்றிக்காக போராடினர். 

பழங்குடி இன மக்கள் வாழும் ஜார்க்ரம் வனப்பகுதிகளில் 2011க்கு பின்னர் இப்பொழுது மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். பர்துவான் மாவட்டத்தில் அமர்பூர் பகுதியில்தான் கட்சி ஊழியர் ரஜிபுல் ஹக் தேர்தல் பணியின் பொழுது படுகொலை செய்யப் பட்டார். அங்குள்ள ஊராட்சியில் மார்க்சிஸ்ட் கட்சி 19 வார்டுகளில் 13ல் வென்றுள்ளது. திரிணா முல்லின் கொலை வெறி கண்டு மக்கள் அச்சம் கொள்ளவில்லை. பல மாவட்ட ஊராட்சி தொகுதி களில் திரிணாமுல் அமைச்சர்களின் வாரிசுகள்  இடதுசாரி-காங்கிரஸ் அணியால் தோற்கடிக்கப் பட்டுள்ளனர். எவ்வளவு வன்முறைகள் ஏவியும் முர்ஷிதாபாத்/ மால்டா ஆகிய மாவட்டங்களில் திரிணாமுல் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள இயலவில்லை. இந்த தேர்தல்கள் குறித்து ஒரு பத்திரிகையாளர் கீழ்கண்டவாறு கூறினார்: “வன்முறை காரணமாக திரிணாமுல் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் இந்த வன்முறை நாடாளுமன்ற தேர்தல்களில் திரிணாமுலுக்கு பெரும் பின்னடைவை தரும். சிபிஐ(எம்) தனிப்பட்ட முறையிலும் அதன் கூட்டணியும் வலுவடைந்துள் ளது. எனினும் நீண்ட தூரம் செல்ல வேண்டும்.” இடதுசாரிகளின் முன்னேற்றமும் திரிணாமுல்/பா.ஜ.க.வின் சரிவும் மேற்கு வங்கத்தில் தவிர்க்க முடியாதது மட்டுமல்ல; இன்றைய தேவையும் கூட!

                                          2021 சட்டமன்றத் தேர்தல்       2023 உள்ளாட்சித் தேர்தல்   மாற்றம்
திரிணாமுல் காங்கிரஸ்                               47%                   53%                +6%
பா.ஜ.க.                                                              38%                   22%               -16%
இடதுசாரி-காங்.-ஐ.எஸ்.எஃப். அணி         10%                       21%            +11%

                          பா.ஜ.க.வின் வாக்கு சரிவு  இடதுசாரி-காங். அணி வாக்குகள் மீட்சி
 

சாந்திப்பூர் சட்டமன்ற தொகுதி            -27%    +15%
பாலிகன்ஜ் சட்டமன்ற தொகுதி              -8%    +24%
சாகர்திகி சட்டமன்ற தொகுதி              -10%    +28%
அசன்சால் சட்டமன்ற தொகுதி               -21%    +1%
கொல்கத்தா மாநகராட்சி தேர்தல்     -22%    +7.2%
85 நகராட்சிகள்                                           -22%    +4%
நான்கு மாநகராட்சி தேர்தல்கள்           -24%    +4.5%
பஞ்சாயத்து தேர்தல்கள் 2023                  -16%    +11%

ஜனநாயகத்திற்காகப் போராடும் வங்க மக்களுடன் நிற்போம்: சிபிஎம்

புதுதில்லி, ஜூலை 13- ஜனநாயகத்திற்காகப் போராடும் மேற்குவங்க மக்களுக்கு ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக்கொள்வோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. இது தொடர் பாக கட்சியின் அரசியல்  தலைமைக்குழு வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: மேற்கு வங்க மாநிலத்தில் மூன்று அடுக்கு  பஞ்சாயத்துத் தேர்தலுக்காக மக்களால் அளிக்கப்பட்ட வாக்குகள் எண்ணும் நடைமுறை யில் எழுந்துள்ள நிகழ்ச்சிப்போக்குகள் சீற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மாநில நிர்வாகமும், மாநில தேர்தல் ஆணையமும் ஆளும் கட்சியுடன் உடந்தையாக இருந்துகொண்டு, தலைமைத் தேர்தல் ஆணையத்தின் ஆணை களை மீறி, மக்களால் அளிக்கப்பட்ட தீர்ப்பினை பெரிய அளவில் மாற்றியமைத்திருக்கின்றனர். உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் வெளிப்படையாகவே மீறப்பட்டிருக்கிறது. பாங்கர் பகுதியில் நடைபெற்ற ஜில்லா  பரிஷத் தேர்தலில், இடதுசாரிகள் ஆதரவுடன் நின்ற ஐஎஸ்எஃப் வேட்பாளர் அபரிமிதமான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருந்தும் கூட, தேர்தல் அதிகாரிகள் தேர்தல் முடிவை  மாற்றி, அங்கே திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவித்திருக் கிறார்கள். இதற்கெதிராக மக்கள் கிளர்ந்தெழுந் திருக்கிறார்கள். அவர்கள் மீது காவல் துறை யினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கின்றனர். இதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.  பின்னர், அந்தப் பகுதியில் காவல்துறையினரின் காட்டாட்சி கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. அந்தப் பகுதி முழுவதுமே எவரும் அணுகமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. பாங்கர் சம்பவம் மிகப்பெரிய அளவில் தில்லு முல்லுகள் நடைபெற்றிருக்கிறது என்பதற்கான அடையாளமாகும். மாநிலத் தேர்தல் ஆணை யத்தின் இணைய தளம் செயலிழக்கப்பட்டு விட்டது. வாக்கு எண்ணும் செயல்முறையும்கூட இவ்வாறு தேர்தல் முடிவுகளை மாற்றியமைப்ப தற்கு ஏதுவாக மிகவும் மெதுவாக மேற்கொள்ள ப்பட்டிருக்கிறது.

பஞ்சாயத்து சமிதி மற்றும் ஜில்லா பரிஷத் தேர்தல் முடிவுகளும் நியாயமான ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் வாக்கு எண்ணும் இடங்களிலிருந்து இடதுசாரி மற்றும் மதச்சார்பற்ற சக்திகளின் முகவர்களை விரட்டியடித்துவிட்டு, நள்ளிரவில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. வாக்கு எண்ணும் மையங்களுக்கு வெளியே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்த வாக்குச்சீட்டுகள் பெரிய அளவில் கைப்பற்றப்பட்டிருப்பதிலிருந்து, வாக்கு எண்ணிக்கையின்போது முறைகேடுகள் எந்த அளவிற்கு இருந்திருக்கும் என்பதை ஊகித்திட முடியும். இவ்வாறு வெளியே கிடந்த வாக்குச்சீட்டுகள் எண்ணுவதற்குக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. எதார்த்தநிலை முற்றிலும் மாறுபட்டவிதத்தில் இருந்தபோதிலும், வாக்கு எண்ணும் பணியில் நடைபெற்றுள்ள தில்லுமுல்லுகள், திரிணாமுல் காங்கிரசின் வெற்றியை உறுதிப்படுத்தும் விதத்திலும், பாஜகவை இரண்டாவது இடத்திற்குத் தள்ளக்கூடிய விதத்திலும் அமைந்திருப்பது தெளிவாகவே தெரிகிறது. ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கி யிருக்கும் இந்தத் தேர்தல் முடிவுகள் காரணமாக கொல்கத்தா உயர்நீதிமன்றம் தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைத்திடுமாறு இன்றைய தினம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு,  திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக-விற்கு எதிராக ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் ஜீவ மரணப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் கட்சி, ஐஎஸ்எஃப் மற்றும் இதர மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுக்கு தன் ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக் கொள்கிறது. இத்தகு இக்கட்டான தருணத்தில் மேற்கு வங்க மக்களின் பக்கம் நிற்குமாறு நாட்டில் ஜனநாயக எண்ணம் கொண்ட மக்களை அரசியல் தலைமைக்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.              (ந.நி.)​​​​​​​