articles

img

கூட்டாட்சி: வரலாறும் எதிர்காலமும் - டி.கே.ரங்கராஜன், மூத்த தலைவர்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் “மாநில உரிமை  பாதுகாப்பு மாநாடு”  (ஜூலை 23-மதுரை) சிறப்புக் கட்டுரை - 7

ஆக்டோபஸின் கரங்கள் போல, எல்லா பக்கங்களிலிருந்தும் இந்திய துணைக் கண்டத்தை ஆர்எஸ்எஸ் தலைமை யிலான பாஜக அரசாங்கம் பிடித்து நெரித்துக் கொண்டிருக்கும் சூழலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருக்கும் மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு முக்கியத்துவம் வாய்ந்த முயற்சி ஆகும். இந்திய துணைக் கண்டத்தின் மொத்த அதிகாரத்தை தன்னகத்தே குவித்துக்கொள்ள முனையும் பாஜகவின் வீழ்ச்சியை மாநிலங்களே உருவாக்க முடியும்.

ஒற்றை ஆட்சிமுறையின்  முதல் வடிவம்

இந்திய துணைக்கண்டப் பிராந்தியங்களை ஒன்றாக நிர்வகித்து அதிகாரங்களை மையத்தில் குவித்துக் கொள்வதற்கான முயற்சி முதன்முதலாக 1935ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்தியாவில் முன் னெடுக்கப்பட்டது. பிரிட்டிஷ் காலனியாதிக்க அரசு, ‘இந்திய அரசாங்க சட்டத்தை’ (Government of India Act) 1935ஆம் ஆண்டு நிறைவேற்றியது. ஒற்றை ஆட்சிமுறையின் சட்டப்பூர்வ வடிவமாக அச்சட்டம் விளங்கியது. ‘இந்திய அரசாங்க சட்டம்’ தான் முதன் முதலாக இந்தியாவை ஒருங்கிணைந்த கூட்டமைப்பாக (All India Federation) அங்கீகரித்த சட்டம் ஆகும். இந்தியக்கூட்டமைப்பை ஒன்றியமாகவும் மாகா ணங்களாகவும் அச்சட்டம் பிரித்தது. மூன்று பட்டியல்கள் கொண்டு நிர்வாகம் பிரிக்கப் பட்டிருந்தது. ஒன்றியப் பட்டியல், மாகாணப் பட்டியல் மற்றும் பொதுப் பட்டியல். மேலும் அச்சட்டம் ரிசர்வ் வங்கி, நீதிமன்றம் ஆகியவை உருவாகவும் வழிவகுத்தது. 3% மக்கள்தொகைக்கு மட்டுமே இருந்த வாக்குரிமை 14% மக்களுக்கு விரிவாக்கப் பட்டது. இந்தியக் கூட்டமைப்புக்கு தலைமையாக ஒரு  கவர்னர் ஜெனரல் நியமிக்கப்பட்டார். மாகா ணத்தில் அவருக்கான பிரதிநிதிகளாக கவர்னர்கள் நியமிக்கப்பட்டனர். மாகாணங்களின் அதிகாரம் வெகுவாக குறைக்கப்பட்டது. காங்கிரஸ்  உள்ளிட்ட பல கட்சிகளும் எதிர்த்ததால், முழுமையாக அச் சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் சுதந்திரம் பெற்ற பிறகு, இந்திய அரசியல் சட்டத்தின் முக்கியமான ஏழாவது அட்டவணைப் பகுதிக்கு அடிப்படையாக அச்சட்டம்தான் இருந்தது.

குடியரசு மலர்ந்த பிறகு...

இந்தியா குடியரசான பிறகு காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தது. இந்தியா குறித்த பிரிட்டிஷ் ஆட்சி யின் பதற்றம், பதவிக்கு வந்ததும் காங்கிரஸ் கட்சிக் கும் வந்தது. ஒன்றிய அரசுக்கும் மாகாண அரசுக ளுக்கும் இடையில் இருந்த அதிகார வரம்பில் கடு மையான மாறுபாடுகள் இருந்தன. கூடுதலாக மாகாண உரிமைகள் சார்ந்த பிரச்சனைகள் தலை தூக்கத் தொடங்கின. மொழி வழியிலான மாநிலங்க ளுக்கான கோரிக்கை எழுந்தது. தெலுங்கு பேசுப வர்களைக் கொண்டு தனி மாநிலம் உருவாக்கப்பட வேண்டுமென பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்தார். தமிழ்நாடு எனப் பெய ரிடக்கோரி சங்கரலிங்கனார் 1956ஆம் ஆண்டு  உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். மொழி வழி மாகாணங்களுக்கு அன்றைக்கு காங்கிரஸ் கட்சி ஒப்புக் கொள்ளவில்லை. இதில் முரண் என்னவென்றால், பொட்டி ஸ்ரீராமு லுவும் சங்கரலிங்கனாரும் காங்கிரஸில் இருந்தவர் கள் என்பதுதான். அவர்கள் பணியாற்றிய அதே காங்கிரஸ் கட்சி,  அவர்களின் மொழி வழி மாகா ணக் கோரிக்கைக்கு செவிமடுக்கவில்லை.  மொழி வழிமாநிலங்கள் தனி நாடு கோரிக்கைக்கு வித்திடக்  கூடும் என காங்கிரஸ் கொண்டிருந்த தவறான புரிதல் தான் அதற்குக் காரணம். ஆனால் உண்மை யில், மொழி வழி மாநிலங்கள்தான் நாட்டின் ஒருமைப்பாடுக்கான அடித்தளமாக இருந்து வருகின்றன என்பது கண்கூடு.

கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு

மொழி வழிப் பிரிவினை, தமிழ்நாடு பெயர் மாற்றம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி  கம்யூனிஸ்ட் கட்சி, திமுக உள்ளிட்ட பலகட்சிகள் இணைந்து ஒன்றிய அரசைக் கண்டித்து 1956ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி போராட்டம் நடத்தின. போலீஸ் நடத்திய தடியடியில் கம்யூ னிஸ்ட் தலைவர்கள் ஜீவாவும் எம்.ஆர்.வெங்கட் ராமனும் காயங்கள்பட்டனர். 1956இல் உயிரிழப்பதற்கு முன், தன் உடலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடம் ஒப்படைக்க வேண்டுமென சங்கரலிங்கனார் கேட்டுக் கொண்டார். என்பது, இந்த மாபெரும் போராட் டத்தில், கம்யூனிஸ்ட்டுகளின் முதன்மைப் பங்கினை உணர்த்தும்.  சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயர் சூட்டக் கோரி, நாடாளுமன்றத்தில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பி.ராம மூர்த்தி தாக்கல் செய்த தனிநபர் மசோதாவை பூபேஷ் குப்தா அவைக்கு கொண்டு வந்து உரை யாற்றினார். மறுபக்கம், கேரளத்தில் முதன்முத லாக இடதுசாரி அரசு தோழர் இஎம்எஸ் தலைமை யில்1957ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது. இடது ஜனநாயக முன்னணி அரசு நிலச்சீர்திருத்தத்தை பெரிய அளவில் அமலாக்கியது. இதனால் நில வுடைமையாளர்கள் கடும் அதிருப்தி கொண்டனர். நம்பூதிரிகள், நாயர்கள் உள்ளிட்ட பல நிலவுடமை சாதிகளும் காங்கிரசின் தலைமையில் இணைந்து இஎம்எஸ் அரசுக்கு எதிரான போராட்டங்களை  ‘விமோசன சமரம்’ என்ற பெயரில் மேற்கொண் டன. இறுதியில் 1959 ஆம் ஆண்டில் இஎம்எஸ் ஆட்சி கலைக்கப்பட்டது. ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தப்பட்டது.மாநில உரிமைகள் மற்றும் கோ ரிக்கைகளை பொருட்படுத்தினால் ஒன்றியத்துக்கு அதிகாரம் பறிபோய்விடுமோ என்கிற பயமும் காங்கிரசுக்கு இல்லாமலில்லை. 1967ஆம் ஆண்டில் கடுமையான வீழ்ச்சியை காங்கிரஸ் சந்தித்தது. எட்டு மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியுற்றது. எட்டு மாநிலங்களிலும் ஆட்சிக்கு வந்த திமுக (தமிழ்நாடு), இடது ஜனநாயக முன்னணி (கேரளா) உள்ளிட்ட கட்சிகள் நிறைவேற்ற பிரதானமாக ஒரு கடமை இருந்தது; அது மாநில நலன் மற்றும் உரிமைகள்!

இடது ஜனநாயக முன்னணி அரசு காட்டிய வழி

மாநில உரிமைகள்சார்ந்த அரசியலை முன் வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக போன்ற கட்சிகளின் பிரச்சாரத்தால் மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்பட்டது.1967ஆம் ஆண்டு கேர ளத்தில் மீண்டும் தோழர் இஎம்எஸ் தலைமை யிலான இடது ஜனநாயக முன்னணி அரசு ஆட்சி க்கு வந்ததும், நிலச்சீர்திருத்தம் தொடர்ந்தது. கோவில்களின் நிலங்கள் கூட கேரளாவில் நில உச்சவரம்பின் கீழ்கொண்டு வரப்பட்டன. அச்சம யத்தில் ஒன்றிய அரசின் நான்காவது ஐந்தாண்டு திட்டம் கடுமையான தோல்வி அடைந்திருந்தது. ஆனால் கேரளம் பெரிய பாதிப்பு அடையவில்லை. இதற்கான காரணம் , எளிதானது.

மூன்று ஐந்தாண்டு திட்டங்களின் நெருக்கடி யால் மக்களின் வாங்கும் சக்தி சுருங்க ஆரம்பித் திருந்தது. விளைவாக, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில், கேரளாவில் நிலச்சீர் திருத்தம் செய்ததால் மக்களின் கைகளில் பணம் புழங்கத் துவங்கியது. குழந்தைகளுக்கு கல்வி எளி தானது. கல்வியும் சுகாதாரமும் கேரளத்தில் மேம்பட்டது. அதிகாரம் மத்தியில் குவிக்கப்படுவதை எதிர்த்து மாநில நலன்கள் அடிப்படையிலான அதிகாரத்தை நிலைநிறுத்தும் அமைப்புகளை இஎம்எஸ் உரு வாக்கினார். 1967-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும் மாநில அளவில் திட்டக்கமிஷனை உருவாக்கினார் இஎம்எஸ். மத்திய திட்ட கமிஷனுக்கு மாற்றாக மட்டும் இல்லாமல் ஒரு படி மேல சென்று கூட்டாட் சித் தத்துவத்தை வலியுறுத்தும் பணியையும் அந்த அமைப்பு செய்தது. நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் தோல்வி அடைந்திருந்த நிலையில், இஎம் எஸ்ஸை தலைவராக கொண்டிருந்த கேரள மாநில திட்டக் கமிஷன் ஓர் ஆய்வு கருத்தரங்கத்தை 1968-இல் நடத்தியது. அங்கு முன்வைக்கப்பட்ட ஆய்வுகளை தொகுத்து இந்தியாவுக்கான மாற்றுப் பொருளாதாரத் திட்டமாக இஎம்எஸ் வெளியிட்டார். மாநிலங்களுக்கு அதிகாரம் அதிக அளவில் வழங்கப்பட வேண்டும் என்கிற மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் செயல்திட்டத்தை முன் வைத்து, காங்கிரஸ் அல்லாத முதலமைச்சர்களையும் அமைச்சர்களையும் கூட்டி 1969ஆம் ஆண்டில் கேரளாவிலும் காஷ்மீரிலும் கல்கத்தாவிலும் கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதிபாசு கூட்டங்கள் நடத்தினார்.

திமுக அரசு அமைத்த கமிஷன்

தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்திருந்த திராவிட முன்னேற்றக் கழகம், அதே 1969ஆம் ஆண்டில், கூட்டாட்சியில் மாநிலத்துக்கான அதிகாரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க இராஜ மன்னார் தலைமையில் ஒரு கமிஷனை அமைத்தது. 1971 ஆம் ஆண்டு இக்கமிஷன் முக்கியமான பரிந்துரைகளை அளித்தது. 355, 356, 365 போன்ற மாநில அரசுக்கு எதிரான சட்டப்பிரிவுகளை நீக்கவும் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற தேசிய அளவிலான பதவியிடங்களை நீக்கவும் ஒன்றிய அரசின் திட்டக் கமிஷனுக்கு பதிலாக மாநிலத்தில் திட்டக் கமிஷன் உருவாக்கவும் பரிந்துரைத்திருந்தது. ஆனால் ஒன்றிய அரசு இப்பரிந்துரைகளை ஏற்கவில்லை.  1967ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய துணைக்கண்டத்தில் புதுவகை சூழல் உரு வானது. மாநில உரிமைகளைக் கோரும் அரசியல் இந்தியாவுக்கு அறிமுகமானது. மாநில சுயாட்சி மற்றும் உரிமைகள் ஆகியவற்றைப் பற்றிய அரசி யல் உரையாடல்கள் நடைபெறத் தொடங்கின. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அச்சூழலில் மாநில உரிமைகளை வலியுறுத்தும் பிரதான பணியை செய்தது. தோழர் ஏ.பாலசுப்பிரமணியம் ‘எழுதிய மாநில சுயாட்சி ஏன்?’ என்கிற குறுநூல் முக்கிய மான பிரசுரம்.

அதிகாரம் குவிக்கப்பட்டால்...

பிறகு அதிகாரம் குவிக்கப்பட்ட ஒன்றிய அரசு என்ன கொடூரங்களை செய்ய முடியும் என்பதற்கான  சான்றாக அமைந்தது அவசர நிலைக்காலம் நெருக்கடி போன்ற ஒரு நிலை வருமென்பதை இடதுசாரிகள் முன்பாகவே உணர்ந்திருந்தனர். வேலையின்மை, உணவுப்பற்றாக்குறை, விலை வாசி உயர்வு ஆகியவற்றால் மூண்டெழுந்த ரயில்வே தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டமும் ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்களது போராட்ட இயக்கமும் தொழிற் சங்கங்களின் போராட்டங்களும் இந்திரா காந்தி யின் ஆட்சியை ஸ்தம்பிக்க வைத்துக் கொண்டிருந்த காலம் அது. 1975ஆம் ஆண்டில் நெருக்கடி நிலை அறிவிக்கப்படுவதற்கு முன் நடந்த சிஐடியு மாநாட்டில் தோழர் பி.டி.ரணதிவே பேசுகையில் “இந்தியாவில் மிகப் பெரிய பொருளாதார நெருக் கடி வரும். அந்தப் பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியை உருவாக்கும்” என்றார்.

நெருக்கடி நிலை  என்றால் என்ன?

பொருளாதார ரீதியாக மக்கள் கொள்ளும் அதிருப்தி உச்சம் பெறுவதை, இருக்கும் சட்டங்களை கொண்டு சமாளிக்க முடியாது என்கிற  நிலை வரும்போது, அவற்றை தாண்டிய சட்டத்தின் துணை கொண்டு அரசு ஒடுக்குமுறையை கட்ட விழ்ப்பதுதான் நெருக்கடி நிலை. இருக்கும் சட்டங்க ளுக்கும் மேலான அதிகாரம் கொண்ட சட்டம்தான் நெருக்கடி நிலையை அறிவிக்கும் 352ஆம் சட்டப்பிரிவு. நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட காலத்தில் 42ஆவது சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. நீதிமன்றங்கள், மாநில அரசுகள் ஆகியவற்றின் அதிகாரம் வெகுவாக குறைக் கப்பட்டது. பிரதமரிடம் அதிகாரம் குவிக்கப்பட்டது. 1977ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் இந்திரா காந்தி தோல்வியுற்றார். ஜனதா கட்சி வெற்றி பெற்றது.   முதன்முதலாக காங்கிரஸ் அல்லாத கட்சி மத்தியில் ஆட்சி அமைத்ததும் அப்போதுதான். அவசரநிலை காலக்கட்டத்தில் கொண்டு வரப் பட்ட 42ஆவது சட்டத்திருத்தம் ரத்து செய்யப் பட்டது.

நவீன தாராளமயக் கொள்கையின் வருகை

1991-க்கு பின் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை இந்தியாவில் அமலானது. இக்கொள் கை, அடிப்படையிலேயே பெரிய மாற்றத்தை உருவாக்குவதாக அமைந்தது. திட்டமிட்ட பொருளாதாரத்திலிருந்து சந்தைப் பொருளாதாரத்துக்கு இந்தியப் பொருளாதாரத்தை நவீன தாராளமயக் கொள்கை மாற்றியது. சந்தையே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் என்கிற நிலை உருவாக்கப்பட்டது. அரசின் வேலை, சந்தையை ஒழுங்கமைப்பது மட்டும் தான் என்றானது. 1991ஆம் ஆண்டில் நிதி சீர்திருத்தத்துக்காக நரசிம்மம் கமிட்டியும் வரி சீர்திருத்தம் குறித்து ஆராய்வதற்காக ராஜா செல்லையாவின் தலைமை யில் ஒரு கமிட்டியும் உருவாக்கப்பட்டன. அடுத்த டுத்து பல கமிட்டிகள் அமைக்கப்பட்டு  இந்தியாவின் பொருளாதாரத்தை, சந்தைக்கு உவப்பான வழியில் மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டன. நீதித்துறை சீர்திருத்தம், தொழிலாளர் சட்டங்கள் சீர்திருத்தம், மின்சார சீர்திருத்தம் என மேலும் மேலும் ஒன்றிய அரசுக்கு அதிகாரம் கொ டுக்கக்கூடிய சீர்திருத்தங்கள் செய்யப்பட்டி ருக்கின்றன. ஜிஎஸ்டி போன்ற வரிமுறைகள் மத்தியில் அதிகாரத்தை குவிக்கும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டன. நீட் தேர்வுமுறைகளும் கூட கல்வியை சந்தையுடன் இணைக்கும் முகமா கத்தான் கொண்டு வரப்பட்டிருக்கிறது. கூட்டுறவு வங்கிகளையும் ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வரும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது.

பொருளாதாரத்தில் மாநில அரசுக்கு பங்கு இல்லையா?

“அரசாங்கத்தின் வேலை வணிகம் செய்வ தல்ல” என்றவர் மோடி. வணிகம் என அவர் குறிப்பிட்டது பொதுத்துறைகளை. பொதுத்துறை யை நாட்டு வணிகம் எனக் கருதியதால்தான், அவை எல்லாவற்றையும் சந்தையுடனும் பன்னாட்டு மூலதனத்துடனும் இணைக்கும் வேலையைத்தான் அவர் செய்து வருகிறார். மொழி, பண்பாடு மற்றும் மாநில உரிமை ஆகியவற்றில் ஒன்றிய அரசின் தலையீட்டை எதிர்ப்பது போலவே பொருளாதா ரத்தின் மீதான தாக்குதலை வலுவாக எதிர்க்க வேண்டும். சந்தைதான் எல்லாவற்றையும் தீர்மா னிக்கும் என்றால், சந்தையை ஒழுங்குபடுத்துவது மட்டும்தான் ஒன்றிய அரசின் வேலை என்றால், சந்தையிலோ பொருளாதாரத்திலோ மாநில அரசின் பங்கு என்ன? அதிகாரம் என்ன? சந்தையை முழுவதுமாக இயக்கும் முதலாளி களுக்கும் மூலதனத்துக்கும் ஆவன செய்து கொடுப்பதுதான் ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் பணி என்றாகிறது. சந்தை மையப் படுத்தப்பட்டு இயங்குகையில்,  இயல்பாகவே அது ஒன்றியத்தின் அரசியல் மற்றும் பொருளா தார ஆதிக்கத்தை தன்னுள் கொண்டிருக்கும். சந்தையின் வழியாகவும் மாநில உரிமைகளுக்குள் ஒன்றிய அரசு மூக்கை நுழைப்பது இதனால் சாத்தியப்படுகிறது. ‘நீட்’ தேர்வு ஒரு உதாரணம்! மேலும் தேர்தல் பத்திரங்கள் போன்ற வழிகளில் மிக அதிக நெருக்கத்துடன் பெருநிறுவனங்க ளுடன் அரசுகள் உறவாடும் நிலை உருவாக்கப் பட்டிருக்கிறது. தேர்தல் நன்கொடை பெற வேண்டிய கட்டாயத்தில், மாநில தேர்தல்களில் போட்டியிடும் கட்சிகள் ஆட்சியமைத்த பின், அந்தப் பெருநிறுவனங்களின் முதலீட்டை தங்களின் மாநிலங்களில் கொண்டு வருகின்றன. இடதுசாரிக் கட்சிகளைத் தவிர, பல கட்சிகளும் தேர்தல் பத்திரங்களின் வழியாக நன்கொடைகளைப் பெறுகின்றன.

வர்க்கப் போராட்டமும் தத்துவார்த்தப் போராட்டமும் 

நம்முடைய மொழி, பண்பாடு போன்றவற்றை பாதுகாக்க வேண்டுமென்றாலே மாநிலங்களுக்கு பொருளாதாரம் உள்ளிட்ட எல்லா அம்சங்களிலும் சுயாட்சியும் அதிக அதிகாரமும் தேவை. நவீன தாராளமயத்தை காக்க ஆர்எஸ்எஸ் தலைமையில் இருக்கும் பாஜக அரசு, மதவாதத்தையும் சாதிய வாதத்தையும் துணை வைத்திருக்கிறது. மதவாதம், சாதியவாதம் மற்றும் நவீன தாராளமயம் ஆகியவற்றை எதிர்த்தால் மட்டும்தான் மாற்றுப் பாதையில் செல்ல முடியும். அதற்கு வர்க்கப் போராட்டத்துடன் தத்துவார்த்தப் போராட்டத்தை யும்  இணைத்து நடத்த வேண்டும்.

இடதுசாரிகளின் உரத்த குரல்

இந்தப்பின்னணியில்,  பாஜகவை எதிர்த்து உரு வாக்கப்பட்டிருக்கும் இந்தியா (INDIA) கூட்டணி யின் பிரதானக் கோரிக்கைகள் இவைதான்:

1. மாநில உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
2. மாநிலங்களை பாதிக்கக் கூடிய பகுதிகளை அரசியல் சாசனத்திலிருந்து நீக்க வேண்டும்.
3. மாநில சுயாட்சி சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்பட வேண்டும்.


ஏனெனில் இந்திய துணைக்கண்டத்தின் சுதந்திர கால வரலாற்றில் ஒற்றை ஆட்சியாக அதிகாரம் குவிக்கப்பட்ட ஒன்றிய அரசு அமையும் போதெல் லாம், அதை வீழ்த்தி ஜனநாயகத்தை காக்கும்  சக்தியாக மாநில அரசுகளே இருந்து வந்திருக் கின்றன. இவற்றைத் தாண்டி இந்தியாவில் முழுமையான மாற்றம் வருவதற்கு, மக்கள் ஜனநாயக முன்னணி கட்டப்பட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் செயல்திட்டத்தில் அழுத்தமாக குறிப்பிட்டி ருப்பதை தொடர்ந்து இடதுசாரிகள் வலியுறுத்த வேண்டியிருக்கிறது.


 

;