articles

img

தேர்தல் ஆணைய சீர்திருத்தம் அவசியம்!

தலைமைத் தேர்தல் ஆணையம் சமீபத்தில் மேற்கொண்ட சில நிலைப்பாடுகளும், நடவடிக்கைகளும், இந்திய அர சமைப்புச்சட்டத்தால் அதற்கு அளிக்கப்பட்ட பங்களிப் பின் அடிப்படையில், அது இதுநாளும் பெற்றுவந்த,  நடுநிலை வகித்துவந்த பாரபட்சமற்ற நடுவர் என்ற பெயருக்கும், நேர்மையாகவும் நியாயமாகவும் தேர்தல்களை நடத்தி வந்த மேற்பார்வையாளர் என்ற நன்மதிப்புக்கும் ஏற்றவிதத்தில் அமைந்திடவில்லை. கடந்த சில ஆண்டுகளில், குறிப்பாக மோடி அரசாங்கம் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பின்னர், தேர்தல் ஆணையமானது அரசாங்கத்தின் விருப்பத்திற்கு ஏற்ப பணிந்து செல்வது என்பது அதிகரித்திருப்பதைப் பார்க்க முடிகிறது. அதுமட்டுமல்ல, ஏற்கனவே அது பின்பற்றிவந்த சுயேச்சையான நிலைப்பாடுகள் சிலவற்றிலிருந்து பின் வாங்கியிருக்கிறது.

மட்டுமீறி தலையிடுவது

இத்தகைய துரதிர்ஷ்டவசமான போக்குகளை அதன் சமீபத்திய செயல்பாடுகள் சில உயர்த்திப்பிடிக்கின்றன. தேர்தல் ஆணையம், தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கும் பிரச்சனை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஒரு நிலைப்பாட்டினை எடுத்தி ருந்தது. அதாவது, தேர்தல் சமயத்தில் அரசியல் கட்சிகள் இலவ சங்கள் அளிப்பதாக வாக்குறுதிகள்  அளிக்கப்படுவது தொடர் பாக தேர்தல் ஆணையம் எவ்வித முடிவும் எடுக்க முடியாது என்றும் அது தன் வரையறைக்குள் வரவில்லை என்றும் கூறி யிருந்தது. இந்த விஷயத்தில் தலையிட ஏதேனும் முயற்சி மேற் கொள்ளப்பட்டால் அது அரசியல் கட்சிகள் மற்றும் வாக்காளர்க ளுக்கு இடையிலான “அதிகாரங்களில் மட்டுமீறி” தலையிடுவ தாகும் (“overreach of powers”) என்றும் கூறியிருந்தது. இவ்வாறு தேர்தல் ஆணையம் இந்த ஆண்டு ஏப்ரலில் விதி விலக்கில்லாத நிலைப்பாட்டினை (unexceptionable position) எடுத்திருந்தபோதிலும்,

தேர்தல் ஆணையம் இப்போது தன் நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்டிருக்கிறது. அதாவது ஜூலையில் பிரதமர் மோடி ‘இலவசங்கள் கலாச்சாரத்திற்கு’ (‘Revdi’ culture) எதிராகப் பேசி, மக்களுக்கு இலவசங்கள் அளிப்பதற்கு எதிர்க்கட்சிகளைக் குறை கூறியபின்னர், தேர்தல் ஆணையம் இவ்வாறு தன் நிலைப்பாட்டினை மாற்றிக் கொண்டிருக்கிறது.  அக்டோபர் மாதத்தில், தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகளுக்குத் தாக்கீது அனுப்பியிருக்கிறது. அதில், தான் தேர்தல் நடத்தை விதிகளைத் திருத்தத் திட்டமிட்டிருப்பதாகவும், அதில் அரசியல் கட்சிகள் அளித்திடும் தேர்தல் வாக்குறுதிகள் என்ன, அவற்றை நிறைவேற்ற நிதிப் பாதிப்புகள் (financial impli cations) என்ன என்ற விவரங்களை அளிக்கக்கூடிய மாதிரி  படிவம் (proforma) ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறி யிருந்தது. மேலும், அரசியல் கட்சிகள், தங்கள் தேர்தல் வாக்குறு திகளை நிறைவேற்ற, கூடுதல் செலவினங்களுக்கான நிதி ஆதாரங்களை எப்படி உருவாக்கப்போகிறீர்கள் என்று  காட்ட வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தது. 

கட்சிகளின் கொள்கையில் தலையிடும் முயற்சி

அரசியல் கட்சிகள் மக்களுக்கு அளிக்கும்  உறுதிமொழி கள் தொடர்பான இத்தகைய தலையீடு, தேர்தல் ஆணையம் அர சியல் கட்சிகளின் கொள்கையில் தலையிடுவதற்கான ஒரு முயற்சியேயாகும். அரசியல் கட்சிகளின் இத்தகைய தேர்தல் வாக்குறுதிகளை மதிப்பீடு செய்வதற்கு தேர்தல் ஆணை யத்திற்கு எந்த அதிகாரமும் கிடையாது. இவ்வாறு நடவடிக்கை எடுப்பதன் மூலம், அது, ஒருசில மாதங்களுக்கு முன்பு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தன் சொந்த நிலைப்பாட்டிற்கு முர ணாகச் சென்று, பிரதமரின் கட்டளைக்குப் பணிந்துசெல்லும் நிலைக்குத் தன்னை ஆளாக்கிக் கொண்டிருக்கிறது.

தேர்தல் பத்திரங்கள்; நிலையிலும் மாற்றம்

இதேபோன்றே தேர்தல் ஆணையம், தேர்தல் பத்திரங்கள் முதலில் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சமயத்தில், தேர்தல் பத்திரங்கள் திட்டத்திற்கு எதிராக மிகச்சரியாகத் திட்ட வட்டமானமுறையில் ஒரு நிலைப்பாட்டினை எடுத்திருந்தது.  இவ்வாறு அரசியல் கட்சிகள் அநாமதேய நபர்களிடமிருந்து நிதி பெறும் திட்டம் நேர்மையாகவும் நியாயமாகவும் தேர்தல் நடத்துவதைப் பாதிக்கும் என்று கூறி இவ்வாறு நிதிஅளிப்ப வர்களை மூடி மறைக்கும் முறைக்குத் தன் ஆழமான கவலை களை (serious reservations) வெளிப்படுத்தி இருந்தது. அதேபோல் தேர்தல் ஆணையம் 2018இல் கூறியிருந்தது. அதன்பின்னர் இப்போது இந்தப் பிரச்சனை உச்சநீதி மன்றத்தின் முன் விசாரணைக்கு வரும்போது, இதே தேர்தல் ஆணையம் இதனைத் தீவிரமாகத் தொடரவில்லை.

ரூ.2 ஆயிரம் பெறுவதை தடுக்க முயலும் ஆணையம் கோடிகளை தடுக்காததேன்?

தேர்தல்கள் நடைபெறும் சமயத்தில் அநாமதேயப் பேர் வழிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி அளிப்பதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் எடுப்பதற்குப் பதிலாக, தேர்தல் ஆணையம் இப்போது அரசியல் கட்சிகள் மிகச் சிறிய அளவில் நன்கொடைகள்  பெறுவதை எப்படிக் கண்காணிப் பது என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறது.   தற்போதுள்ள சட்டத் தின்படி, அரசியல் கட்சிகள் 20 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் நன் கொடைகள் பெற்றால், நன்கொடை அளித்தவரின் பெயரை அறிவித்திட வேண்டும். இவ்வாறு 20 ஆயிரம் ரூபாய் என்றி ருப்பதை  2 ஆயிரம் ரூபாயாகக் குறைத்திட வேண்டும் என்று கூறி அவ்வாறு சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று கோரி,  செப்டம்பர் மாதம் சட்ட அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருக்கிறது.  இவ்வாறு 2 ஆயிரம் ரூபாய் பெறுவதைக்கூட இறுக்கிட வேண்டும் என்று விரும்பும் தேர்தல் ஆணையம், தேர்தல் பத்திரங்கள் மூலமாக அநாமதேயப் பேர்வழிகள்  கோடானு கோடி ரூபாய்கள் அளிப்பதைத் தடுத்திட எவ்வித நடவடிக்கையும்  எடுக்காது இருப்பது குறித்து என்னென்று கூறுவது? இது முரண்பாடாக உள்ளது.  இப்போது கடைசியாக 22ஆவது முறை யாக தேர்தல் பத்திரங்கள் கடந்த அக்டோபரில் வெளியிடப் பட்டபின்னர், இதுவரை 10,791 கோடி ரூபாய்கள் தேர்தல் பத்தி ரங்கள் மூலமாக விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. இதில் பெரும் தொகை, ஆளும் கட்சிக்கே சென்றிருக்கிறது.

குஜராத் தேர்தலுக்காக கால நீட்டிப்பு

தேர்தல்பத்திரங்கள் ஆண்டிற்கு நான்கு முறை – ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபரில் – மாதத்தில் முதல் பத்து  தேதிகளுக்குள் வெளியிடப்படுகின்றன. ஆயினும், இந்தாண்டு அக்டோபரில் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டபின்னர், மோடி அரசாங்கம் இது தொடர்பான விதிகளில் ஒரு திருத் தத்தைக் கொண்டு வந்திருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் அளிக்கும் காலக்கெடுவை மேலும் பதினைந்து நாட்களுக்கு நீட்டித்து நவம்பர் 8 அன்று திருத்தம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் விதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தத் திருத்தம், டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறவுள்ள  குஜராத் தேர்தல்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டே செய்யப்பட்டி ருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகும்.   ஆளும் கட்சிக்கு எப்போதும் சேவை செய்துகொண்டி ருக்கும் கூட்டுக் களவாணி வர்த்தகர்கள் மற்றும் கார்ப்ப ரேட்டுகள் மிகப்பெரிய அளவில் பாஜக-விற்கு நிதி அளிப்பார் கள் என்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. தேர்தல் பத்திரங்கள் திட்டத்தைக் கிழித்தெறியாமல், தேர்த லில் அனைத்து அரசியல் கட்சிகளும் சம நிதி நிலையுடன் போட்டிபோடுவது என்பது சாத்தியமில்லை. தேர்தல் செலவு களுக்காக, கணக்கில் வராத பணம் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிப்பது என்பதும் சாத்தியமில்லை. எனினும், தேர்தல் ஆணையமானது 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நன் கொடை அளிப்பவர்களைக் கணக்கெடுத்தால் போதும் என்று திருப்தி கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையம், குஜராத் சட்டமன்றத் தேர்தல்கள் நடத்துவது தொடர்பாக புதிய நிலைப்பாடுகளை அறிவித்தி ருக்கிறது. முதலாவதாக, இமாசலப் பிரதேச சட்டமன்றத் தேர் தல்கள் அறிவிக்கப்பட்டு மிகவும் காலம் தாழ்த்தி, குஜராத்திற்குத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. இந்த இடைப்பட்ட நாட்களில் குஜராத் மாநிலத்தில் எண்ணற்ற திட்டங்கள் தினந்தோறும் பிரதமர் தொடங்கி வைக்கப்பயன்படுத்திக் கொண்டதை ஒவ்வொருவரும் பார்த்தோம்.  

ஆபத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள வழக்கத்திற்கு மீறிய மற்றுமொரு நடவடிக்கையும் குஜராத்தில் நடந்தி ருக்கிறது. குஜராத்தில் செயல்படும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுடன் தேர்தல் ஆணையம் புரிந்து ணர்வு ஒப்பந்தங்கள் செய்துகொண்டிருக்கின்றன. இந்த ஒப் பந்தங்களின்படி,  தேர்தல்களில் பங்கேற்கும் தொழிலாளர்க ளை, கார்ப்பரேட் நிறுவனங்கள் கண்காணிக்க வேண்டும் என்றும், தேர்தலில் வாக்களிக்காத தொழிலாளர்களின் பெயர்க ளை அறிவிப்புப் பலகைகளிலும், இணைய தளங்களிலும் வெளியிட வேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டிருக்கிறது. வாக்களிக்கும் உரிமையை வலுக்கட்டாயமாக்கி இருப்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். இவ்வாறு இப்போது தங்கள் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் தேர்தலில் வாக்களிப்பதைக் கண்காணிக்கும் பொறுப்பு சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளின் மேலாண்மை நிர்வாகத்திடம் ஒப்படைக் கப்பட்டிருக்கிறது. அடுத்த நடவடிக்கை என்பது வாக்காளர்கள் எப்படி வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்துவதாக அமைந்திடும்.

ஆணையத்தை சீர்திருத்துவோம்

தேர்தல் ஆணையம் என்பது நம் ஜனநாயகத்தின் மிகவும் மதிப்பிடற்கரிய கேந்திரமான ஓர் அமைப்பாகும். அதன் சுதந்தி ரமான மற்றும் நேர்மையான செயல்பாடுகள் எதேச்சதிகார அரசாங்கத்தால் அரிக்கப்பட அனுமதித்திட முடியாது. இது, தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தங்கள் கொண்டுவரு வதற்கான தருணம். இதனை, தேர்தல் ஆணையர்களை, ஒரு குழுவின் மூலமாகத் தெரிவு செய்வதிலிருந்து தொடங்குவோம். அந்தக் குழுவில் இந்தியாவின் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும், நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் உறுப்பினர்களாக இருந்திட வேண்டும். இப்போது அது முழுமையாக ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டின்கீழ்தான் இருக்கிறது. இரண்டாவதாக, தேர்தல் ஆணையர்கள் ஓய்வு பெற்ற பின்பு, எந்தவொரு அதிகாரப் பொறுப்பையும் எடுத்துக் கொள்ளக்கூடாது அல்லது எந்தவொரு அரசியல் கட்சியாலும் நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்களாக நியமனம் செய்யப்படுவதும் கூடாது.

நவம்பர் 16, 2022, தமிழில் : ச.வீரமணி
 

;