articles

img

பைசாபாத்: ஒரு துளி இந்தியா!-மு. இக்பால் அகமது

அது பழமையான நகரம். விக்கி கணக்குப்படி 70% இந்துக்கள், 28% முஸ்லிம்கள் வாழும் நகரம். இரண்டு விழுக்காடு கிறித்துவர்கள், பெளத்தர்கள் என பிற மதத்தினர்.சர்ச்சைக்குரியதாக ஆக்கப்பட்ட அயோத்தி நகரம் இந்த நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டது.

1986இல் சர்ச்சைக்குரிய கோவிலின் பூட்டு திறக்கப்பட்டு பூஜைகள் அனுமதிக்கப்பட்டது உத்தரப்பிரதேசத்தில் 24 மாவட்டங்களில் கலவரம் மூண்டபோதும் இந்த நகரம் அமைதி யாக இருந்துள்ளது. இரண்டு தரப்பு மக்களும் பொறுப்பு மிக்க ஜனநாயக அமைப்புகளும் சமூக அமைதியை தொடர்ந்து பேணி உறுதி செய்து வந்துள்ளார்கள். 

1988இல் என்.டி.திவாரி முதல்வராக இருந்த போது உள்ளூர் நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக ஒரு கலவரம் வெடித்துள்ளது. 

திட்டமிட்ட சதியால் கலவரம்

சமாஜ்வாதிகட்சியின் அகிலேஷ் முதல்வராக இருந்தபோது 2012 அக்டோபர் 24 அன்று துர்கா பூஜை பண்டிகையின்போது உள்ளூர் பிஜேபி  எம்.எல்.ஏ. ஆன ராம் சந்திர யாதவும் ஆர் எஸ் எஸ்  உள்ளிட்ட பிற வலதுசாரி இந்துத்துவா அமைப்பு களும் திட்டமிட்டு நடத்திய கலவரத்தில் இசுலாமிய மக்கள் நடத்தி வந்த அறுபதுக்கும் மேற்பட்ட கடைகளை கொள்ளை அடித்து தீ வைத்து சாம்பலாக்கினார்கள். 

களத்தில் நேரடி விசாரணை செய்து ஆய்வு நடத்திய ரிஹாய் மஞ்ச் என்ற அமைப்பு, கலவரம் மிக திட்டமிட்ட முறையில் நடத்தப்பட்டது என்றும் இஸ்லாமிய மக்களின் கடைகள் இலக்கு வைக்கப் பட்டு கொள்ளையடிக்கப்பட்டன என்றும் துர்கா பூஜை ஊர்வலத்துக்கு கொண்டுவரப்பட்ட வேன்களிலும் டிராலிகளிலும் கொள்ளை அடிக்கப்பட்ட பொருட்களை ஏற்றிச் சென்றார் கள் என்றும் அறிக்கை அளித்தது.

உள்ளூர் பிஜேபி கட்சியினரும் ஆர்எஸ்எஸ் காரர்களும் கலவரத்துக்கு ஒரு மாதம் முன்பே இஸ்லாமிய மக்கள்தான் துர்காதேவி சிலையை திருடிச் சென்றுவிட்டார்கள் என்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் பாடல்கள், சொற்பொழிவுகள் அடங்கிய பதிவுகளை மக்கள் மத்தியில் விநியோகம் செய்து கலவரத்தை தூண்ட எல்லா ஏற்பாடும் செய்து வந்ததாகவும் நேரடி சாட்சிகளும் கூட பதிவு செய்தார்கள். கலவரம் நடந்தபோது போலீஸ் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்கள் என்றும் மக்கள் கூறினார்கள்.

பிஜேபி எம்எல்ஏ உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்றாலும் சாட்சிகள் பிறழ்ந்தார்கள் என்றும் போலீஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் மீது குற்றத்தை நிரூபிக்க போதிய சான்றுகளை தரவில்லை என்றும் காரணம் கூறி 2023ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்கள்.

அமைதி காத்த மக்கள்

குறிப்பிடத்தக்க இதுபோன்ற திட்டமிடப்பட்ட கலவரங்களை தவிர்த்து எப்போதும் அந்த நகரம் அமைதியாகத்தான் இருந்துவருகிறது. இரண்டு மத மக்களும் தமது அன்றாட வாழ்க்கை நடத்தும் பொருட்டு உழைக்கிறார்கள். இரண்டு தரப்பு மக்களின் பண்டிகைக் காலங்களில் அமைதியும் வணிக உறவும் சிறப்பாக நீடித்து அமைதியை காத்துள்ளது.

குறிப்பாக ஒரு பதிவை இங்கே சொல்ல வேண்டும். பைசாபாத் நாடாளுமன்ற தொகுதி யில் பிஜேபி இது வரையிலும் 5  முறை மட்டுமே  வென்றுள்ளது. அதாவது பாபர் மசூதி பிரச்சனை யை கிளப்பிய 1991, 96, 99, 2014, 2019 ஆகிய தேர்தல்களில் வெறுப்பு அரசியலை விதைத்து தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. 

2024இல் இப்போது சமாஜ்வாடி கட்சி வென்றுள்ள நிலையிலும் ஒட்டுமொத்த உ.பி.மக்களும் இப்போது வேறு அரசியல்  நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையிலும்  நீண்ட கால அரசியல் ஆதாய இலக்கை நோக்கி பிரச்சாரம் செய்யப்பட்ட ராமர் கோவிலும் கட்டப்பட்டு விட்ட நிலையிலும் இனிமேல் பைசாபாத் தொகுதி பிஜேபிக்கு ஒருகாலத்திலும் கிடைக்காது என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது.

கடந்த காலங்களில் இந்த தொகுதியில் காங் கட்சி ஏழு முறை, சமாஜ்வாடி இரண்டு முறை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முறை, ஜனதா கட்சி ஒரு முறை, பகுஜன் சமாஜ் கட்சி ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன.

குறி வைத்து கலவரம், கொள்ளை

மண்டைக்காடு, கோயம்புத்தூர், குஜராத்,  உத்தரப்பிரதேசம், மணிப்பூர் என நாடெங்கும் பிஜேபி, ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி, விஸ்வ  இந்து பரிஷத், பஜ்ரங் தள் அமைப்புக்கள் நடத்தும் கலவரங்கள் யாவும் நன்கு திட்டமிட்ட வை என்பதும் ஏற்கனவே குறி வைக்கப்பட்ட வணிக நிறுவனங்களை கொள்ளை அடித்து அதன் பின் தீ வைத்து கொளுத்துவது அவர்களின் பாரம்பரியமான நடைமுறை என்பதும் மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வந்துள்ளது. 

இவை யாவும் மதத்தின் பேரால் நடத்தப்பட்ட வை. மக்கள் ஒற்றுமையை சீர்குலைத்து நடத்தப்பட்ட கொள்ளைகள், கொலைகள். இவை யாவற்றுக்கும் மக்கள் இப்போது ஒரு முடிவு  கட்டி உள்ளார்கள். எந்த மக்கள்? எந்த ஊரில் அமைந்த இராமர் கோவிலின் பெயரால் இந்தியா எங்கிலும் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக மதவெறி பிரச்சாரம் செய்து வந்தார் களோ, அதே ஊரின் மக்கள் இப்போது பிஜேபி, ஆர்எஸ்எஸ்  பரிவார் குடும்பத்துக்கு மிக வலிமை யான அர்த்தம்மிகு பாடத்தை புகட்டி உள்ளார்கள். 

அதை மேலும் உறுதிசெய்வதாக அந்த மாநில மக்கள் சமாஜ்வாடி கட்சிக்கு   இடங்களை அதாவது  மொத்த 80 தொகுதிகளில் பாதிக்கு மேற்பட்ட 43 இடங்களில் இந்தியா கூட்டணியின் வெற்றியை உறுதி செய்துள்ளார்கள் என்பதை சாதாரணமான ஒன்றாகப் பார்க்க முடியாது. 400க்கும் மேற்பட்ட இடங்களில் நாங்கள் வெல்வோம் என்ற மார்தட்டி திரிந்த மோடியின் அகங்காரத்தை, முதலமைச்சர் யோகி ஆதித்ய  நாத்தின் பிளவுவாத, உழைக்கும் மக்களுக்கு எதிரான அரசியலை பைசாபாத் மக்களும்  ஒட்டுமொத்த உ.பி.மக்களும் நிராகரித்துள் ளார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்துத்துவா சக்திகள் தம் அரசியல் ஆதாயங்களுக்காக பிரச்சாரத்துக்குப் பயன் படுத்தி வந்த ராமர் இனிமேல் அவர்களுக்கு பயன்படமாட்டார். ராமருக்கும் பைசாபாத் மக்களுக்கும் தம் அன்றாட வாழ்க்கை அமைதி யாக நடந்தேற மத நல்லிணக்கம், சமூக அமைதி ஆகியன அவசியம் என்பதை நன்கு உணர்ந்து உள்ளனர். குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்பு, தொழில், வணிக உறவு ஆகிய வற்றின் மீது அவர்களின் கவனமும் கவலை யும் குவிந்துள்ளது என்பதே ஒட்டுமொத்த உ.பி. மக்களும் குறிப்பாக பைசாபாத் மக்களும் இப்போது  ஏனைய இந்திய சகோதர சகோதரிகளுக்கு விடுத்துள்ள செய்தியும் சமிக்ஞையும் ஆகும்.


 

;