articles

img

தொழிலாளர் வர்க்க சித்தாந்தத்தின் வலுவான செல்வாக்கை மீட்போம் -சுதிப் தத்தா, அகில இந்தியச் செயலாளர், சிஐடியு ,சுனந்த், தில்லி மாநிலச் செயலாளர், சிஐடியு

நேற்றைய தொடர்ச்சி

ஏகாதிபத்தியத்தை  எதிர்த்துச் சமர்புரிவோம்

தொழிலாளி வர்க்கத்தை அதன் தொழிற்சாலை சார்ந்த, உள்ளூர் அல்லது பொருளாதாரக் கோரிக்கை களுக்குள் மட்டுப்படுத்திடும் சீர்திருத்தவாதக் கண்ணோட்டத்திற்கும், உலக அளவிலான தொழிலாளர் வர்க்கத்தை சர்வதேச நிதி மூலதனத்து டன் பிணைத்திருக்கும் எதார்த்த நிலைக்கும் இடையே இடைவெளி இருப்பது வெளிப்படை யாகவே தெரிகிறது. சர்வதேச நிதி மூலதனம், தொழி லாளர்களை மேலும் ஒட்டச் சுரண்டும் விதத்திலும், சிறிய அளவிலான உற்பத்தியை ஒழித்துக்கட்டக்கூடிய விதத்திலும், கொள்ளை லாபம் ஈட்டுவதை உத்தர வாதப்படுத்தும் விதத்திலும் ‘உலகத்தின் தெற்கில்’ உள்ள நாடுகள் அனைத்திலும் மனிதாபிமானமற்ற தொழிலாளர் கொள்கைகளை அமல்படுத்துமாறு கட்டளையிடுகிறது. காலனிய ஆதிக்கக் காலத்திலி ருந்தே ‘உலகின் தெற்கே’ உள்ள நாடுகளில் வாழும் தொழிலாளர்களுக்கும் ‘வடக்கே’ வாழும் தொழிலா ளர்களுக்கும் இடையே தொழிலாளர்களின் வாழ்க்கை வசதிகளில் பெரும் இடைவெளி இருந்து வருகிறது. இந்நிலையில், நவீன தாராளமய உலக மயக் கொள்கைகள் அமல்படுத்தப்படும் இன்றைய கால கட்டத்தில் மூலதனம் மேலும் மோசமான முறையில் கொள்ளையடிக்கக்கூடியதாக மாறி இருக்கிறது. இது, உலகின் வடக்கிலும் கூட பெரிய அளவில் தொழில்மயம் கைவிடப்படுவதற்கும், மிகப் பெரிய அளவில் வேலை வாய்ப்புகளை ஒழித்துக் கட்டுவதற்கும் இட்டுச் சென்றுள்ளது.  கொஞ்ச நஞ்சம் இருந்த சமூக நலத் திட்டங்களும் வெட்டப் பட்டுக் கொண்டிருக்கின்றன. நிலைமைகள் வெடிக்கக் கூடிய அளவிற்கு மாறிக் கொண்டிருக்கிறது. முதலா ளித்துவத்தைக் காப்பாற்றுவதற்கான கடைசி முயற்சியாக, நவீன பாசிச அரசியல் மேலாண்மை ஏகாதிபத்தியப் போர்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இவ்வாறு நெருக்கடியின் மையம் ஒரு நாட்டிலிருந்து பிறிதொரு நாட்டிற்கு இடம் பெயர்வது தொடர்கிறது.

இத்தகைய சூழ்நிலையில், புரட்சிகரமான வர்க்கக் கண்ணோட்டத்துடன் செயல்படும் தொழிற்சங்க இயக்கமானது, ஏகாதிபத்தியம் நெருக்கடியைச் சமாளிப்பதற்காகக் கட்டவிழ்த்துவிடும் ஒவ்வொரு ராணுவ-அரசியல் நடவடிக்கைக்கும் எதிர்ப்பு தெரி வித்து ஒருமைப்பாட்டுடன் போராட வேண்டியது முக்கி யக் கடமையாகும். ஏகாதிபத்தியம்,  நாடுகளுக்குப் பொருளாதாரத் தடை விதிப்பதன் மூலமாகவோ அல்லது ராணுவ ஆக்கிரமிப்புகளை ஏற்படுத்துவதன் மூலமாகவோ அல்லது யுத்தங்களை ஏவுவதன் மூலமாகவோ மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அதனை எதிர்த்து முறியடித்து அதனை தனிமைப்படுத்துவது அவசியமாகும். இந்தப் போராட்டத்தை உயிர்ப்புடன் இருக்கும் தொழிலாளர் வர்க்கத்தால் மட்டுமே மேற்கொள்ள முடியும். இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கான வல்லமை படைத்த ஒரே சித்தாந்தம், சர்வதேசியத்துடன் கூடிய சமூக மாற்றத்திற்கான சித்தாந்தமேயாகும்.

21ஆம் நூற்றாண்டில்  தொழிலாளர் வர்க்கம்

இன்றைய தினம், அனைத்து மத்தியத் தொழிற் சங்கங்களிலும் உள்ள உறுப்பினர் எண்ணிக்கையில் 90 விழுக்காட்டினர் முறைசாராத் தொழிலாளர்களே யாவர்.  உண்மையில் அவர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் வேலை செய்து வருகிறார்கள். அவர்க ளில் பெரும்பகுதியினர் குறைந்தபட்ச ஊதிய அளவை விட மிகவும் குறைவாகவே ஊதியம் பெற்று உயிர் வாழ்வதற்கே கடுமையாகப் போராடி வருபவர்களா வார்கள். நிச்சயமாக இவர்கள் எண்ணிக்கையில் அதிகமானவர்கள்.

தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையிலும், கேசுவல் முறையிலும், அப்ரண்டீஸ் முறையிலும் மற்றும் இதுபோன்று பல வடிவங்களிலும் தற்காலிக ஊழியர்களாக அமர்த்துவதன் மூலம் தொழிலாளர் வர்க்கத்தின் போராடும் வல்லமையைக் குறைத்திடும் விதமாக மூலதனத்தின் வடிவங்கள் அமைந்தி ருக்கின்றன. மிகவும் கேந்திரமான மற்றும் நவீன  உற்பத்தி/சேவைகளில் பணிபுரியும் இந்த தொழிலாளர்கள் (இவர்கள் பல்வேறு வடிவங்களில் நிரந்தரமற்ற தொழிலாளர்களாக இருந்தபோதிலும்) மிகவும் முன்னேறிய, திறன்படைத்த, சமூக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய போராட்டத்தில் முன்னணிப் பாத்தி ரம் வகிக்கக்கூடிய வல்லமையையும் பெற்றவர்களா வார்கள்.   

இன்றைய மக்கள்தொகையில் இளைஞர்கள் பெரும்பகுதியினராக உள்ளனர். உண்மையில் அவர்களும் மூலதனத்திற்கு எதிரான போராட்டத்தை வழிநடத்துவதில் ஒரு சக்தியாக உள்ளனர். சுரண்டப்படும் உழைக்கும் மக்களை அணிதிரட்ட இந்த இளைஞர்களால் முடியும்.

வரலாற்றிலிருந்து  முன்னோக்கிச் செல்லும் பாதை

மேற்கண்ட அரசியல் பின்னணியில், இந்தியத்  தொழிலாளர் வர்க்கம் இப்போதுள்ள நெருக்கடியிலி ருந்து மீண்டு, சமூக மாற்றம் அடைந்திட- தொழிலா ளர்கள் மத்தியில் பெரிய அளவில் கருத்தொற்று மையை உருவாக்கிட - என்ன செய்ய வேண்டும்? இதற்கு ஒரு வரியில் விடை காண முடியாது. ஆனால் ரஷ்யத் தொழிலாளர் வர்க்கம் 1905இல் அங்கு அரசி யல் புயல் மையம் கொண்டிருந்த காலத்தில், வர லாற்றைப் பயன்படுத்தி, உறுதியான செயல் பாதையை நோக்கி முன்னேறியதை நினைவு கூர்ந்திடுவோம்.

1905 ஜனவரியில் கொடூரமான ஜாரிஸ்ட் ரஷ்யா வில், பணி நிலைமைகள் மேம்படுத்தப்பட வேண்டும், அரசியல் பிரதிநிதித்துவம் வேண்டும் மற்றும் அரசியல் நிர்ணயசபை அமைக்கப்பட வேண்டும் முதலான கோரிக்கைகளை வலியுறுத்தி செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் நடைபெற்ற போராட்டத்தில் ஒரு லட்சம் ஆலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஜாரின் சிப்பாய்கள், போராடிய தொழி லாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து 122 நகரங்கள் மற்றும் மையங்களில் சுமார் இரண்டு மாதங்களுக்கு வேலை நிறுத்தம் நீடித்தது. இதில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் பங்கேற்றனர். செப்டம்பர் மாதத்தில் அச்சகத் தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு பிரிவு களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அக்டோபர் முதல் வாரத்தில் ரயில்வே தொழிலாளர்கள், நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தனர். இவற்றின்மீது ஜார் நிர்வாகம் கொடூரமான ஒடுக்கு முறையையும் அடக்குமுறையையும் ஏவியது.

இந்த முக்கியமான கூட்டத்தில் ரஷ்யத் தொழிலா ளர்கள் ஒரு வரலாற்றுப் பாய்ச்சலை மேற்கொண்ட னர்; இது மனிதகுல நாகரிகத்தின் போக்கையே அடுத்து வந்த ஆண்டுகளில் மாற்றியது. அக்டோபர் 10ஆம் தேதி முதல் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள், அடுத்த நடவடிக்கையைத் திட்டமிட வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களின் பொதுவான கூட்டத்தை நடத்த தூதுக்குழுக்களை அனுப்பத் தொடங்கினர். அக்டோபர் 13 அன்று, அரசியல் நிர்ணய சபையைக் கோரி அரசியல் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து, அனைத்து தொழிற்சாலைக ளுக்கும் பிரதிநிதிகளை அனுப்புமாறு கேட்டுக் கொண்டனர். தொழிற்சாலை மட்ட வேலைநிறுத்தக் குழுக்களை அமைப்பதன் மூலம் தொழிற்சாலைக ளில் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மூன்று நாட்களுக்குள், 96 தொழிற்சாலைகளைப் பிரதிநிதித்து வப்படுத்தி 226 பிரதிநிதிகள் வந்திருந்தனர். அக்டோ பர் 17 அன்று, இந்த குழு “தொழிலாளர் பிரதிநிதிகள் சோவியத்” என்ற பெயரை ஏற்றுக்கொள்ள முடிவு செய்து, 22 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு தற்காலிக குழுவைத் தேர்ந்தெடுத்து அதன் சொந்த செய்தித் தாளை வெளியிடத் தொடங்கியது.

சோவியத், தொழிலாளர்களின் அரசியல் பிரதி நிதித்துவத்தின் மையமாக மாறியது. அது, விரை வில் தொழிலாளர்களின் சொந்த நாடாளுமன்றமா கவும் மாறியது. ஜனநாயகத்தை நேரடியாக அமல் படுத்துவதற்காக கீழேயிருந்து அமைக்கப்பட்ட முதல் புரட்சிகர மையம் இதுவேயாகும். 1905  செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உருவான சோவியத், ரஷ்யா முழுவதும் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் வீரர்களின் சோவியத்துகளை உருவாக்கு வதற்கான பாதையை வகுத்தது. இதனைத் தொடர்ந்து 1917இல் ‘அனைத்து அதிகாரங்களும் சோவி யத்துக்கே’ என்னும் முழக்கத்துடன் புரட்சியின் உச்சக்கட்டத்தை அடைந்தது.

மூன்று படிப்பினைகள்

உலகப் புரட்சிகர தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் இந்தப் புகழ்பெற்ற அனுபவத்திலிருந்து மூன்று முக்கியமான படிப்பினைகளை வெளிப்படுத்தின. முதலாவதாக, போராட்டத்தின் முக்கியமான கட்டத்தில் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் நேரடி ஜனநாயகத்தைக் கடைப்பிடித்தது, உண்மையில் நம்பிக்கையை அளித்தது. இது ரஷ்யாவின் உழைக்கும் மக்களின் இதர பிரிவினர் மத்தியிலும், விவசாயிகள் மற்றும் வீரர்கள் மத்தியிலும் புரட்சித் தீயை விரைவாக எடுத்துச் சென்றது. இரண்டாவதாக, பொருளாதாரக் கோரிக்கைகள் என்பதில் இருந்து, அரசியல் இலக்குகள் என்ற கட்டத்திற்கு போராட் டத்தை எடுத்துச் சென்றது. வெகுஜனங்களின் ஜன நாயக உரிமைகள் பற்றிய கேள்வியை எடுத்துக்கொள் வதும்; அனைத்து உழைக்கும் பிரிவினரை உள்ள டக்கிய பொது வேலை நிறுத்தம் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்துவதும் பாட்டாளி வர்க்கத்தை அனைத்து உழைக்கும் மக்களின் தலைவராக நிறுவியது. மூன்றாவது மற்றும் முக்கியமானது, தற்போதுள்ள அரசு எந்திரத்தின் தீவிரமான நெருக்கடி முதிர்ச்சி யடையாதபோதும், பாட்டாளி வர்க்கத்தின் தலைமை யில் ஒரு மாற்று ஜனநாயக அமைப்பை உருவாக்கிய தாகும்.  

இந்திய சமூகத்தில் தற்போது உள்ள ஸ்தம்பித்த நிலையை அசைப்பதற்கு, ஒரு தெளிவான கண் ணோட்டத்துடன் தொழிலாளர் வர்க்கம் புரட்சிகரச் சிந்தனையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். எந்த வொரு புரட்சிகர மாற்றத்தின் புறநிலை சூழ்நிலையும், வர்க்கத்தின் அகநிலை தயாரிப்பைச் சார்ந்தே இருக்கி றது. 1916இல்கூட ரஷ்யா, 1917 புரட்சி குறித்து எந்தவொரு ஊகத்தையும் பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பி டத்தகுந்தது.

இத்தகைய வரலாற்றுப் படிப்பினைகளுடன் சிஐடியு-வின் 55ஆவது அமைப்பு தினத்தன்று, பாட்டாளி வர்க்கத்தின் தலைமையை முடக்க முயற்சிக்கும் அனைத்து பிற்போக்கு சித்தாந்தங்க ளுக்கும், நடைமுறைகளுக்கும் எதிராக, சித்தாந்த-அரசியல் போராட்டத்தைக் கட்டவிழ்த்துவிட உறுதி ஏற்போம். தொழிலாளர் வர்க்கம், சமூக மாற்றத்தி ற்கான சித்தாந்தத்தால் வழிநடத்தப்பட்டால், வெற்றி பெறுவது என்பது திண்ணம். வரும் நாட்களில் சிறந்த தொரு எதிர்காலத்தை நோக்கி உலகை முன்னெ டுத்துச் செல்லக்கூடிய வல்லமையும், பலமும் உள்ள தொழிலாளர் வர்க்க சித்தாந்தத்தின் வலுவான செல்வாக்கை மீட்பதே நம் பணியாகும்.

தமிழில் : ச.வீரமணி


 

;