பெரணமல்லூரில் உலகப் புத்தக தினம் கொண்டாட்டம்
திருவண்ணாமலை, ஏப்.24- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பெரணமல்லூர் கிளை சார்பில் களம் 27 நிகழ்வு, பெரணமல்லூரில் உலகப் புத்தக தினமாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு துணைத் தலைவர் பொன்.விஜிய அசோகன் தலைமை தாங்கினார். செயலாளர் மா.கௌதம் முத்து வரவேற்றார். மாணவர்களின் ஆடல், பாடல், திருக்குறள் ஒப்புவித்தல் என தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தினர். அவர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ஜி.பாலமுருகன் பரிசளித்துப் பேசினார். எழுத்தாளர் பெரணமல்லூர் சேகரன் எழுதிய “நிறைகுடம்” நாவல் குறித்து கவிஞர் பூங்குயில் சிவக்குமார் விளக்கி பேசுகையில், இந்நாவல் கம்யூனிஸ்டுகள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைத் திரைப்படம் போல் காட்சிப்படுத்தியுள்ளது. இதனை அனைவரும் அவசியம் படிக்க வேண்டும்என்றார். நிறைவாக பெரணமல்லூர் சேகரன் ஏற்புரை வழங்கினார். இணைச் செயலாளர் பி. மாலவன் கவிதை வாசித்தார். நிகழ்ச்சியை மாவட்டத் தலைவர் கவிஞர் நா. முத்து வேலன் ஒருங்கிணைத்தார். பொருளாளர் ப.தேவதாஸ் நன்றி கூறினார்.
கடலூரில் ரூ.40 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்
கடலூர், ஏப்.24- தனியார் பேருந்தில் எடுத்துச் சென்ற ரூ.40 லட்சம் ஹவாலா பணத்தை கடலூரில் போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னையில் இருந்து மன்னார்குடி நோக்கி சென்ற தனியார் பேருந்தில் ரூ.40 லட்சம் ஹவாலா பணம் எடுத்து வந்த நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பண்ருட்டி மதுவிலக்கு பிரிவு மற்றும் கடலூர் ஆயுதப்படை காவலர்கள் கடலூர் ஆல் பேட்டை சோதனை சாவடியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து மன்னார்குடி நோக்கி சென்ற ஒரு தனியார் பேருந்தை நிறுத்தி அதில் இருந்த பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது அதில் வந்த ஒரு வாலிபர் வைத்திருந்த பையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. அப்போது போலீசார் அந்த வாலிபரிடம் பணத்துக்கு உரிய ஆவணங்களை கேட்டபோது அவரிடம் எந்தவிதமான ஆவணங்களும் இல்லை. இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் சென்னையை சேர்ந்த நவீத் அன்வர் (வயது 26) என்பது தெரியவந்தது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை போலீசார் வருமான வரி துறையிடம் ஒப்படைத்தனர்.
அக்னிகுண்ட புகையால் கலைந்த தேன்கூடு : பயந்து ஓடியவர் பலி
கிருஷ்ணகிரி, ஏப்.24- அஞ்செட்டி அருகே குன்றின் மீதுள்ள மாதேஸ்வரன் கோயில் திருவிழாவையொட்டி, புதனன்று 300 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டனர். அப்போது யாகத்துக்கு அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில் இருந்து கிளம்பிய புகையால் அங்குள்ள மரத்தில் உள்ள தேன் கூடு கலைந்தது. அப்போது தேனீக்கள் பறந்து வந்து கொட்டியதால் பக்தர்கள் அலறியடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் உரிகம் கிராமத்தை சேர்ந்த 55 வயது தொழிலாளி மாதேவன் தேனீக்கள் கொட்டியதால் ஓடிய போது தடுமாறி விழுந்ததில் பலத்த அடிபட்டு அங்கேயே உயிரிழந்தார். மேலும் 10 க்கும் மேற்பட்டோர், தேனீக்கள் கொட்டியதில் படுகாயமடைந்தனர். இதில் நந்தீஷ்(வயது32), பீரேஷ்(22) தீப்பு(20) உள்ளிட்டவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 800 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் கடலூர், ஏப்.24- கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த ரயில்வே காலனி பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து மொத்தமாக கடத்தி விற்பனை செய்து வருவதாக வந்த தகவலின் அடிப்படையில் திருவதிகை ரயில்வே காலனி பகுதியில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர் அப்பொழுது அதே பகுதி சேர்ந்த சுரேஷ் (வயது 54) என்பவர் வீட்டை சோதனை செய்த போது ரேஷன் அரிசி கடத்தி வந்து விற்பனைக்காக 800 கிலோ அரிசி பதுக்கி வைத்திருந்தது என தெரியவந்தது.