ஆதிவாசிகள் மீதான ஒடுக்குமுறை

பெ.சண்முகம்
பெ.சண்முகம்

“தான் பரம தரித்திரன் என்ற மன நிலையில் வாழ்பவன் தன் மனித நிலையை அறியவோ, உணரவோ முடியாது. ஒருவன் பொருளாதார நலன்களைப் பெற்றாலன்றி அவனுடைய மனித உரிமைகளை மேற்கொண்டு வாழ இயலாது” – டாக்டர் அம்பேத்கர்.இந்திய நாடு முழுவதும் ஆதிவாசி மக்களின் எண்ணிக்கை 10,42,81,034 ஆகும். தமிழ்நாட்டில் இவர்களது எண்ணிக்கை 7,94,697 (2011) இவர்களில் பெரும் பகுதியானவர்கள் கிராமப்புற பகுதிகளிலும் குறிப்பாக மலைப்பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.

பத்து கோடிக்கு மேற்பட்ட இம்மக்கள் குறித்து அரசும், அதிகார வர்க்கமும் போதுமான அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. அதனால்தான் விடு தலை பெற்று 67 ஆண்டுகளுக்குப் பிறகும்கடுமையான சுரண்டலுக்கும், ஒடுக்கு முறைக்கும் இம்மக்கள் உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். எல்லாத் துறைகளிலும் இம்மக்கள் பின் தங்கியிருப்பதற்குக் காரணம் இதுகாறும் ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வந்த கொள்கைகளே!நிலப்பிரபுக்கள், மேல் சாதிஆதிக்க வெறியர்கள், காண்ட்ராக்டர்களால் இம்மக்கள் பல்வேறு ஒடுக்கு முறைகளுக்கு உள்ளானாலும், காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறை யினராலேயே மிக அதிகமான ஒடுக்கு முறைகளுக்கும், கொடுமைக்கும் உள்ளாக் கப்படுகின்றனர்.

உயிர் வாழும் உரிமை மனிதஉரிமைகளில் எல்லாம் முதன்மையான தும் மிகவும் புனிதமானதும் ஆகும். உயிர்வாழும் உரிமை என்பது ஏதோ மிருகம்போல் உயிருடன் இருப்பது என்றுமட்டுமல்லாமல் மனிதன் தன்மானத்து டன் உயிர் வாழ்வது என்றே பொருள்படும். தன்மானத்துடன் உயிர் வாழ்வதற்கு மிகவும் அத்தியாவசியமான இரண்டு அம்சங்கள் “சுதந்திரமும் வாழ்வதற்கான ஆதார வளங்களும்“ ஆகும். இதை இந்தியஅரசியலமைப்புச் சட்டமும் உறுதிசெய்கிறது. பழங்குடி மக்களின் பொருளாதாரம் காட்டை அடிப்படையாகக் கொண்டிருந்தது. உப்பையும் உடையையும் தவிர தங்களுக்குத் தேவையான அனைத்தையும் அவர்கள் காடுகளி லிருந்தே பெற்றனர்.

இது 16ம் நூற்றாண்டுக்கு முந்தைய நிலை.பின்னர் பிரிட்டிஷ் காலனி ஆட்சி துவங்கி 2005 வரை `மக்களிடமிருந்து காடுகளைப் பாதுகாக்க வேண்டுமென்ற கருத்துத் தளத்திலேயே அரசின் வனக்கொள்கைகளும் சட்டங்களும் இயற்றப்பட்டு வந்தன.’பழங்குடி மக்களின் பாரம்பரிய உரிமைகள் பறிக்கப்பட்டன.பழங்குடி மக்கள் காட்டை தங்கள் பிழைப்பிற்காக மட்டுமே பயன்படுத்தி வந்தனர். ஆனால், பிரிட்டிஷ் அரசு காட்டை வியாபார ரீதியாக பயன்படுத்த ஆரம்பித்தது. 1854ம் ஆண்டு வெளி யிடப்பட்ட வனக்கொள்கை இதை வெளிப்படுத்தியது. “இந்திய வனச்சட் டம் 1927” மூலம் ஆதிவாசிகள் காடுகளில் சுதந்திரமாக உலவத் தடை கொண்டுவரப்பட்டது.

இத்தடை பழங்குடி மக்களின் வாழ்வையும், பொருளாதாரத் தையும் சீர்குலைத்து சின்னாபின்ன மாக்கிவிட்டது.ஆதிவாசிகளின் நிலங்கள் பறிக்கப்பட்டது; காடுகளிலிருந்து அவர்கள் விரட் டப்பட்டனர். தாங்கள் தெய்வமாக வணங்கி பாதுகாத்த வனம் அழிக்கப்படுவது கண்டு கிளர்ந்தெழுந்த மக்களை ஒடுக்க 1871ல் குற்றப் பழங்குடியினர் சட்டம் பிரிட்டிஷ் அரசு நிறைவேற்றியது (Criminal Tribe Act) இச்சட்டத்தின் கீழ் 150 ஆதிவாசி குழுக்க ளைக் குற்றவாளிகளாக்கி பட்டியலிட்டது. சென்னை மாகாண குற்றப்பழங்குடிகள் சட்டம் 1911ம் ஆண்டு இயற்றப்பட்டது. 87 இனக் குழுக்களும் 3 கேங்குகளும் இதில் பட்டியலிடப்பட்டன. இனக்குழுக்களைக் குற்றவாளிகளாக்குவது பிரிட்டிஷ் ஆட்சி யில்தான் நடந்தேறியது. பரம்பரையையே குற்றவாளிகளாக்கும் இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென்று எண்ணிலடங்கா போராட்டங்கள் நடைபெற்றது.

குறிப்பாக முத்துராமலிங்க தேவர், பி.ராம மூர்த்தி, ப.ஜீவானந்தம் ஆகியோர் இப்போராட்டத்தை முன்னின்று நடத்தி னர். 1952ம் ஆண்டு சட்டம் ரத்து செய்யப் பட்டது. ஆனால், இதற்குப் பதிலாக “வழக்கமாக குற்றத்தை மீறுவோர் தடுப்புச் சட்டம் (Habitual Offenders Restriction Act) என்ற பெயரில் 1959ம் ஆண்டு ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்றி முன்னாள் குற்றம்பரம்பரையினரைப் பிடித்து தொடர்ந்து சித்ரவதை செய்து வருகின்றனர். குற்றப்பின்னணி உள்ளவர் கள் என்ற காரணத்தைக் கற்பித்து பொய்வழக்கு, ஜோடிக்கப்பட்ட வழக்கு, குற்றத்தை ஒப்புக் கொள்ள கட்டாயப் படுத்துவது, அடித்துத் துன்புறுத்துவது, குடும்பத்துப் பெண்கள் அதிகாரிகளுக்கு இரையாக்கப்படுவது. உயிர் பறி போகும் காவல்நிலைய மரணங்கள் போன்ற கொடூரமான நடவடிக்கையில் காவல்துறையினரும், வனத்துறை யினரும் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு முறை பிடிபட்டால் பிறகு வாழ்நாள் முழுவதும் காவல்துறையால் அவர் கைது செய்யப்படுவார். மீளவே முடியாது.

இவர்கள் குற்றச்செயலில் ஈடுபட்டார்களா இல் லையா என்பதைவிட இவர் இன்ன சாதியைச் சார்ந்தவர் என்பதே குற்றம் சுமத்த வும், கைது செய்யவும் போதுமானதாய் இருக்கிறது. குறிப்பாக குறவர், இருளர், கல் ஒட்டர் போன்ற சமூகத்தினர் இக்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வருகின் றனர். அதிகாரம் படைத்த சமூகத்தினர் யார் நினைத்தாலும் இவர்களை எளிதாக குற்றவாளிகள் என முத்திரை குத்தி கொல்லவும் முடியும். இம்மக்களின் வாழ்வாதாரத்திற்கு, பொருளாதார மேம்பாட் டுக்கு எதுவும் செய்யாதவர்கள், குற்றம்சுமத்த மட்டும் ஒன்று திரண்டு நிற்கிறார்கள். மற்றவர்களை குற்றவாளி என்று கூறுவதன் மூலம் தங்க ளைக் குற்றமற்றவர்களாகவும், நீதிமான் களாகவும் காட்டிக் கொள்கிறார்கள்.

இதுஒருபுறமிருக்க, ஆதிவாசி மக்கள் பெரும்பகுதியானவர்களின் வாழ்வாதாரம் நிலம் சார்ந்ததாகும். மத்திய – மாநில அரசுகள் நிறைவேற்றிய நிலச்சீர்திருத்தச் சட்டங்கள், இடதுசாரிகள் ஆண்ட மேற்குவங்கம், கேரளா, திரிபுரா தவிர வேறுமாநிலங்களில் குறிப்பிட்டுச் சொல்லும் படியாக ஆதிவாசிகளுக்கு நிலம் வழங்க வில்லை. மாறாக, நிலம் வெளியேற்றம்தான் நடைபெற்றுள்ளது. நிலவெளியேற்றத்தை மேலும் தீவிரமாகவும், சட்டப்பூர்வ மாகவும் செய்யும் வகையில் நிலம் கையகப்படுத்துதல் மறுவாழ்வு மற் றும் மறு குடியமர்த்தல் சட்டம் 2013 நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் நில உரிமையாளர்களுக்கு மேலும் பாது காப்பற்ற நிலையை ஏற்படுத்தும் வகையில் மத்திய பாஜக அரசு திருத்தங்களைக் கொண்டுவர முயற்சித்துக் கொண்டுள் ளது.

சிறப்பு பொருளாதார மண்டலம், கனிம வளங்களைக் கொள்ளையடித்தல், வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுதல், அந்நிய கம்பெனிகளுக்கு வழங்குதல் போன்ற காரணங்களுக்காக ஆதிவாசி மக்கள் தங்கள் நிலங்களிலிருந்தும், குடியிருப்புகளிலிருந்தும் வெளியேற்றப் படுகின்றனர்.

வன உரிமைச் சட்டம் 2006

“பழங்குடியினர் மற்றும் பாரம்பரியமாக வனத்தைச் சார்ந்து வாழும் மக்கள் (காடு களின் மீதான உரிமைகள் அங்கீகரிக்கும்) சட்டம் 2006 “ டிசம்பர் 13, 2006 அன்று நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறை வேற்றப்பட்டது. இதற்கான விதிகள் 2008 ஜனவரி 1 முதல் அரசிதழில் வெளி யிடப்பட்டு சட்டம் நடைமுறையில் உள்ளது. இச்சட்டத்தை முறையாக அமல் படுத்தினால் வனநிலங்களில் பயிர் செய்தும், குடியிருந்து வரும் மக்களுக்கு அந்நிலத்தின் மீது உரிமைகள் வழங்கப் படும். வனத்தில் விளையும் வன சிறு மகசூல் சேகரிப்பது, விற்பது மக்களின் உரிமையாகும்.

வேட்டையாடுவதைத் தவிர பாரம்பரிய உரிமைகள் அனைத்தும் மக்களுக்கு திரும்ப வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சட்டமே இயற்றப்பட்டாலும், அதைத் தருவதற்கு அதிகாரிகள் மறுக்கிறார்கள். கடந்த ஏழு ஆண்டு காலத்தில் சட்டம் எந்த லட்சணத்தில் அமல்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைக் கீழ்க்கண்ட விபரங்கள் அம்பலப்படுத்துகிறது.இச்சட்டப்படி 2014 ஏப்ரல் 30வரை உரிமை கோரி வரப் பெற்ற மனுக்கள் 37,61,250 இந்த மனுக்கள் பரிசீலிக்கப் பட்டு பட்டா மற்றும் உரிமைகள் வழங்கப்பட்டது 14, 35, 113 மட்டுமே. பெரும் பகுதியான மனுக்கள் தகுதியற்றது எனக்கூறி அதிகாரிகளால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இச்சட்டம் அமல்படுத்தப் படாத ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான்! ஆம்! சென்னை உயர்நீதி மன்றத் தில் நிலுவையிலுள்ள வழக்கை காரணம் காட்டி, சட்டம் அமல்படுததப்படாமலேயே உள்ளது.

வழக்கை விரைந்து முடிக்கவும் அரசு தரப்பில் எந்த முயற்சியும் இல்லை.ஆதிவாசி மக்கள் வன சிறு மகசூல் சேகரிப்பதையும், ஆடுகள் மேய்ப் பதையும், வனத்துறையினர் தடுத்து வருகின்றனர். ஒப்பந்தக்காரர்களிடம் பல ஆயிரக்கணக்கில் லஞ்சம் பெற்றுக் கொண்டு சட்டத்துக்கு விரோதமாக பழங் குடியினர் அல்லாதார் சேகரித்து விற்பனை செய்கின்றனர். போராட்டங்களின் மூலம் சில மலைகளில் ஆதிவாசி மக்கள்சேகரித்து விற்றாலும் அதற்கு கட்டுப்படி யான விலை கிடைப்பதில்லை. மாநில அரசுகள் வன சிறு மகசூல்களுக்கு குறைந்தபட்ச விலை தீர்மானிப்பதுடன், கொள் முதல் செய்வது, சந்தை உத்தரவாதம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பட்டியல்படுத்துதலும்- இனச் சான்றிதழ் பெறுவதில் உள்ள இடையூறுகளும் :

பழங்குடியினர் பட்டியல்படுத்தப்பட்ட காலத்திலிருந்து இந்தப் பிரச்சனைகள் நீடிக்கின்றன. ஒரு மாநிலத்தின் பழங்குடி பட்டியலில் இருப்பவர் வேறொரு மாநிலத்தில் வேறுபட்டியலில் வைக்கப்பட் டுள்ளார். ஒரு மாநிலத்திலேயே ஒரு மாவட்டத்தில் பழங்குடியாக இருப்பவர் வேறொரு மாவட்டத்திற்கு சென்றால் ஏற்க மறுக்கப்படுகிறது. தமிழ் நாட்டில் நரிக்குறவர், ஈரோடு மாவட்ட மலையாளி குறுமன்ஸ் இனத்தின் உட்பிரிவினர், குறவன் இனத்தின் உட்பிரி வினர், புலையன் ஆகிய இனத்தவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கை 1980 முதல் வற்புறுத்தப்பட்டு வருகிறது.

இந்திய பதிவாளர் துறையும், மத்திய அரசும் சிறுசிறு காரணங்களைக் காட்டி, திருப்பி அனுப்பிக் கொண்டே இருக்கிறது. இதனால், உண்மையில் பழங்குடியினராக இருந்தும் பழங்குடியினருக்குரிய உரிமை களையும் சலுகைகளையும் பெற முடியாதவர்களாக இருந்து வருகின்றனர். பல தலைமுறைகள் உயர்கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றை இழந்துள்ளனர். எனவே, மத்திய அரசு பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தல் குறித்த பிரச்சனை யைக் கவனிப்பதற்கென்று தேசிய அள வில் தனி ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும்.மற்றொன்று, ஏற்கனவே பட்டியலில் உள்ள பழங்குடியினர் சான்றிதழ் பெறுவது குதிரைக் கொம்பாக இருக்கிறது. சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால், வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் காலங் கடத்துவது, மனுக்களை திருப்பி அனுப்புவது, வருடக்கணக்கில் அலைய விடுவது போன்ற தந்திரங்களைக் கையாளுகின்றனர்.

பழங்குடி சான்றிதழ் கோருபவர்கள் அனைவருமே போலிகள்என்ற முறையில் இந்தப் பிரச்சனைஅணுகப்படுவதே அடிப்படைப்பிரச்சனை. இந்த சோதனைகளையெல் லாம் கடந்து சான்றிதழ் பெற்று அரசுப்பணியில் அமர்ந்துவிட்டால் மெய்த் தன்மைஅறிதல் என்ற பெயரில் வாழ்நாள் முழு வதும் விசாரணையை எதிர்கொள்வதுடன், அவமானத்துக்கும் உள்ளாக நேரிடுகிறது. ‘ஏன் பழங்குடி சமூகத்தில் பிறந்தோம்’என்றே நோகின்றனர்.

எனவே, சான்றிதழ் பெறும் வழி முறைகள் எளிமையாக்கப்பட வேண்டும். மானிடவியல் பயின்றவர்களை இந்தப் பணிக்கு பயன்படுத்துவது குறித்து அரசு யோசிக்க வேண்டும். 2014 மார்ச் மாதம் வரை சுமார் 2,00,000 சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் உள்ள அனைத்து பழங்குடியினருக்கும் குறிப் பிட்ட காலவரையறை தீர்மானித்து சான் றிதழ் வழங்க வேண்டும்.

அரசின் நிதி ஒதுக்கீடுகளும் – திட்டங்களும்

அரசியல் சாசனத்தில் குறிப்பிட் டுள்ளபடி “பழங்குடிகளின் நலுனுக் கென மத்திய அரசு தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்“ என்ற கடமை யை நிறைவேற்றும் வகையில் 1979ம் ஆண்டு சிறப்பு உட்கூறு திட்டம் கொண்டு வரப்பட்டது. பிறகு 2007ம் ஆண்டு “பழங்குடியினர் துணைத் திட்டம்” என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மக்கள் தொகை சதவீதத்திற்கேற்ப பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியது கட்டாயம். ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை. வலுவான போராட்டங்கள், தொடர் வற்புறுத்தல் களுக்குப் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் நிதி முழுமையாக செலவழிக்கப்படாமல் வேறு பணிகளுக்கு திருப்பி விடப்படுகிறது.

திட்டங்களும் அதிகாரிகளின் அக்கறை யின்மை, முறைகேடு, ஊழல் போன்ற காரணங்களால் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. பழங்குடியினர் துணைத்திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் கூடுதல் நிதி ஒதுக்குவதுடன் மக்களி டையே கலந்துரையாடுவதன் மூலம் அவர்களுக்குத் தேவையான திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.ஆதிவாசி மக்கள் இன குழுக்களின் எண்ணிக்கையை விட அவர்களுக்கான பிரச்சனைகள் அதிகம் என்பதை அனைவரும் அறிவர். ஒரு சில முக்கிய பிரச்சனைகள் மட்டுமே இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. வறுமை, பசி, நிலமின்மை, கல்வியின்மை, வேலையின்மை, உரிமை யற்றவர்கள் ஆகியவற்றின் மொத்த உருவமாகவும், இதில் முதலிடத்திலும் ஆதிவாசிகள் இருந்து வருகின்றனர். எனவே, ஆதிவாசி மக்களை விழிப்படையச் செய் வோம். அவர்களுக்கு `உணர்த்துவதே’ அடிப்படை பணி. அவர்களைக் காணும் போது முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்லாமல் நம்மால் ஆனதைச் செய்வோம்!

புரோ கபடி லீக்டைட்டன்ஸ் அணியை சிதைத்தது பேந்தர்ஸ்

 தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் பாடிவருபவரை பேந்தர்ஸ் அணியினர் மடக்கிப் பிடித்தனர்.
தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் பாடிவருபவரை பேந்தர்ஸ் அணியினர் மடக்கிப் பிடித்தனர்.

கொல்கத்தா, ஆக.1 -ஜெய்ப்பூரின் பிங்க் பேந்தர்ஸ் அணி கொல்கத்தாவில் நடந்து வரும் இரண்டாவது கட்ட புரோ கபடி லீக் போட்டிகளில் 46-32 என்ற புள்ளிகளில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியைத் தோற்கடித்தது. பெங்கால் வாரியர்ஸ் அணி 42-40 என்ற நெருக்கமான புள்ளிகளில் டாபாங்க் தில்லி அணியை வென்றது. இந்த வெற்றி பெங்கால் அணி மூன்று போட்டிகளில் வெல்லும் முதல் போட்டியாகும். அணியின் ஆட்டத்தைக் கண்டு மகிழவும், அணியை உற்சாகப்படுத்தவும் பிங்க் பேந்தர்ஸ் அணியின் நட்சத்திர உரிமையாளர் அபிஷேக் பச்சன் கொல்கத்தாவுக்கு வந்ததால் மகிழ்ச்சியடைந்த அணி வீரர்கள் சிறப்பாக ஆடி வெற்றியைப் பெற்றனர்.

முதல் போட்டியில் யு மும்பா அணியிடம் தோற்ற பேந்தர்ஸ் வெற்றிப்பாதைக்குத் திரும்ப விரும்பியது. துணிச்சல் நிறைந்த வீரர் ஜஸ்வீர் சிங் ஆடிய ஆவேசமான ஆட்டம் அணிக்கு பெரும் உந்துசக்தியாக இருந்தது. அவர்கள் தொடக்கம் முதல் இறுதி வரை தாக்குதல் ஆட்டம் நடத்தினார்கள். அவர்கள் தாக்குதலிலும், தடுப்பிலும் சிறந்துவிளங்கினார்கள். தடுப்பாளர்கள் நன்றாகப் பிடித்து ஆடினார்கள். முதல் பாதியிலேயே அவர்கள் எதிரணியை இரண்டுமுறை முழுமையாக வெளியேற்றி இரண்டு லொனாக்களை அடைந்தனர். முதல் பாதியில் பேந்தர்ஸ் அணி 17-16 என முன்னணியில் நின்றது.

டைட்டன்ஸ் சில தீவிரமான தாக்குதல்களை நடத்தி இடைவெளியைக் குறைத்தது.இரண்டாவது பாதியில் அவர்களை பேந்தர்ஸ் அணி ஆடவிடவில்லை. பேந்தர்ஸ் அணியின் பாடிவருவோர் புள்ளிகளை அள்ளி வந்தனர். இருப்பினும் டைட்டன்ஸ் அணியும் தீவிரமாக ஆடிய போதும், அது போதுமானதாகவில்லை. பேந்தர்ஸ் அணி இரண்டாவது பாதியிலும் இரண்டு லொனாக்களைப் பெற்றது.

இதன் பலனாக பேந்தர்ஸ் ஆறு புள்ளிகள் வேறுபாட்டில் வென்றது.இரண்டாவது போட்டியில் வாரியர்ஸ் அணி முதல் பாதிமுடிவில் 14 புள்ளிகள் முன்னிலையில் இருந்தது. ஆனால் இரண்டாவது பாதியில் முனைப்பைத் தளரவிட்ட வாரியர்ஸ் அணி டாபாங்க் அணியிடம் தடுமாறியது. ஆட்டத்தின் 37ம் நிமிடத்தில் டாபாங்க் அணி 38-38 என சமன் செய்தது. வாரியர்ஸ் தலைவர் நிலேஷ் ஷிண்டே சிறப்பாகத் தடுத்து ஆடியதால் நெருக்கமான புள்ளிகளில் (42-40) வாரியர்ஸ் அணி வென்றது.

காமன்வெல்த் போட்டிகள் 2014 எட்டாம் நாளில் இந்தியாவுக்கு 3 தங்கங்கள்

 சீருடற்பயிற்சி போட்டிகளில் முதல் மகளிர் பதக்கத்தை வென்ற தீபிகா கர்மார்க்கர்/ 56 ஆண்டுகளுக்குப் பின் தடகளத்தில் தங்கம் வென்று தந்த விகாஸ்கௌடா
சீருடற்பயிற்சி போட்டிகளில் முதல் மகளிர் பதக்கத்தை வென்ற தீபிகா கர்மார்க்கர்/ 56 ஆண்டுகளுக்குப் பின் தடகளத்தில் தங்கம் வென்று தந்த விகாஸ்கௌடா

கிளாஸ்கோ, ஆக.1 -ஒலிம்பிக் வெண்கலப் பதக்க வீரர் யோகேஷ்வர் தத், பபிதா குமாரி ஆகிய இரு மல்யுத்த வீரர்களும் தங்களுடைய எடைப்பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்றனர். தடகளத்தில் வட்டு எறிதல் போட்டியில் விகாஸ் கௌடா தங்கம் வென்றார். இந்தியாவின் மகளிர் சீருடற்பயிற்சி(ஜிம்னாஸ்டிக்) போட்டிகளில் முதல் பதக்கத்தை தீபா கர்மார்கர் வென்றார். இந்திய ஹாக்கி அணி அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளது. டேபிள் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் போட்டியின் அரைஇறுதிக்கு சரத் கமல் – அந்தோணி அமல்ராஜ் இணை முன்னேறியுள்ளது.

மகளிர் இரட்டையர் போட்டிகளின் கடைசி 16 சுற்றுக்கு ஷாமினி – மதுரிகா பட்கர், அங்கிடா தாஸ் – பௌலொமி கடக் ஆகிய இரண்டு இணைகளும் சென்றுள்ளன. லான் பௌல்ஸ் நால்வர் குழு போட்டியின் அரைஇறுதிக்கு இந்தியா தகுதிபெற்றுள்ளது. எட்டாம் நாளின் முடிவில்இந்தியா 13 தங்கங்களுடன் பதக்கப் பட்டி யலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. மல்யுத்தப் போட்டிகளின் கடைசி நாளில் இந்திய வீரர் யோகேஸ்வர் தத் 65 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார். அவர் இறுதிச்சுற்றில் கனடாவின் ஜெவோன் பால்போரை தோற்கடித்து தங்கத்தை வென்றார். அவர் முன்பு 60கி எடைப்பிரிவில் போட்டியிடுவார்.

தற்போது சர்வதேச அமைப்பு எடைப்பிரிவுகளை மாற்றி அமைத்துள்ளதால், அவர் 65 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்டார். முதல் நாள் நான்கு தங்கங்களை மல்யுத்த அணி இழந்து விட்டது, இன்றும் அது போல் நடந்து விடக்கூடாது என்று தான் முனைப்புடன் போட்டியிட்டதாக அவர் கூறினார். மகளிர் 55 கிலோ எடைப்பிரிவில் ஹரியானாவின் பபிதா குமாரி அருமையாக ஆடி தங்கம் வென்றார். அவர் கனடாவின் பிரிட்டானீ லாவர்டுரை ஆதிக்கமாக ஆடி வென்றார். முதல் சுற்றில் பபிதா குமாரி ஐந்து புள்ளிகளும், இரண்டாவது சுற்றில் நான்கு புள்ளிகளும் எடுத்து வெற்றி பெற்றார். மகளிர் 63கிலோ எடைப்பிரிவில் கீதிகா ஜாக்கர் வெள்ளி வென்றார்.

ஆடவர் 86 கிலோ எடைப்பிரிவில் பவன்குமார் வெண் கலப் வென்றார். தடகளத்தில் இந்திய ஆடவர் ஒருவர் 56 ஆண்டுகள் கழித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார். கர்நாடக வீரர் விகாஸ் கௌடா 63.64 மீ. தொலைவுக்கு வட்டை எறிந்துதங்கம் வென்றார். இதற்கு முன் கார்டிப் நகரில் 1958ம் ஆண்டில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் மில்கா சிங் 440 கஜம்ஓட்டத்தில் (இன்றைய 400மீ. ஓட்டம்) தங்கப்பதக்கம் வென்றார். விகாஸ் கௌடா 2010 போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார். சைப்ரஸின் அபோஸ்டோலொஸ் பரெல்லிஸ் ஒரு முறை முன்னணியில் இருந்தார்.

விகாஸ் தனது அடுத்த எறியில் இவரை முந்திச் சென்றார். ஊடகங்களால் தூக்கி வைத்துக் கொண்டாடப்படும் டிண்டு லூகா 800மீ. அரைஇறுதியில் தோற்று வெளியேறினார். இவர் தனது குழுவில் ஏழாவது இடத்தைப் பிடித்து வெளியேறினார். இவர் பி.டி.உஷாவின் சீடர் என்ற போதும் ஓடுகளத்தில் இவர் கடைப்பிடிக்கும் வியூகம் தவறானது. மகளிர் ஈட்டி எறிதலில் அன்னுராணி இந்திய முகாமை ஏமாற்றி விட்டார். அவர் போட்டியிட்டவர்களில் எட்டாவது இடத்தை எட்டினார். மகளிர் சீருடற்பயிற்சி போட்டிகளில்இந்தியாவின் முதல் தங்கப்பதக்கத்தை வென்று தீபா கர்மார்கர் சாதனைபுரிந்துள்ளார்.

இவர் மரக்குதிரையேற்றப் போட்டியில் வெண்கலப்பதக்கம் பெற்றார். கடினம் மற்றும் செயல்படுத்தல் ஆகிய இருவகைப் போட்டிகளில் இவ்ர் மொத்தமாக 14.366 புள்ளிகள் எடுத்தார். இங்கிலாந்தின் கிளாடியா பிராகபானே தங்கத்தையும், கனடாவின் எல்சபெத் பிளாக் வெள்ளியையும் அடைந்தனர். இவர் முதல் போட்டியில் 13.633 புள்ளி கள் எடுத்தார். போட்டியாளர்களில் இவர்கடைசி இடத்தில் இருந்தார். இரண்டாவது போட்டியில் இவர் 15.100 புள்ளிகள் எடுத்தார். சராசரியாக இவர் 14.366 புள்ளிகளுடன் வெண்கலத்தை அடைந்தார். 2010 காமன்வெல்த் வெள்ளிப்பதக்க வீரர் ஆஷிஷ் குமார் தளப்பயிற்சிகளில் எட்டாவது இடத்தை எட்டினார்.

ஹாக்கி போட்டிகளில் இந்திய ஆடவர் அணி அரைஇறுதிக்குள் நுழைந்துள்ளது. சமன் செய்தால் கூட அரைஇறுதி வாய்ப்பு இருந்த போதும், இந்திய அணி தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான கடைசி சுழல் ஆட்டத்தை பயிற்சிப்போட்டியாகக் கருதி விறுவிறுப்புடன் ஆடியது. ஆட்டத்தின் நான்காம், ஆறாம் நிமிடங்களில் கிடைத்த பெனால்டிகார்னர்களை வி.ஆர்.ரகுநாத்தும், ருபிந்தர் பால் சிங்கும் கோல்களாக மாற்றினர். அணியின் மூன்றாவது கோலை ரமந்தீப் சிங் அடித்தார். நான்காவது கோலைஎஸ்.வி.சுனிலும், ஐந்தாவது கோலை மன்பிரீத்சிங்கும் அடித்தனர். தென் ஆப்ரிக்காவின் டைன் பேட்டனும், ஆஸ்டின்ஸ்மித்தும் தலா ஒரு கோல் அடித்தனர். இந்தியா அரைஇறுதியில் நியூசிலாந்தையும், ஆஸ்திரேலியா இங்கிலாந்தை எதிர்த்தும் அரைஇறுதியில் ஆடுகின்றன.ஸ்குவாஷ் போட்டிகளில் தீபிகா பள்ளிக்கல் – ஜோஸ்னா சின்னப்பா ஆகியோர் அடங்கிய இந்திய அணி மகளிர் இரட்டையர் அரைஇறுதிக்குள் நுழைந்துள்ளது.

இவர்கள் நியூசிலாந்தின் ஜோயல் கிங் – அமந்தா லாண்டர்ஸ் மர்பி இணையை 11-9, 11-5 என்ற புள்ளிகளில் தோற்கடித்தனர். ஆடவர் அணி சௌரவ் கோஷல் – ஹரீந்தர் பால் சந்து இணை கடைசி 16 சுற்றில் தோல்விஅடைந்தது. கமல் குமார் சர்மா,சந்தன் குமார் சிங், சமித் மல்கோத்ரா, தினேஷ் குமார் ஆகியோர் அடங்கிய இந்திய நால்வர் அணி லான் பௌல்ஸ் போட்டியின் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இவர்கள் காலிறுதியில் நார்போக்ஸ் தீவுகள் அணியை 26-4 என்ற புள்ளிகளில் தோற்கடித்தனர். டேபிள் டென்னிஸ் போட்டிகளில் ஒற்றையர் ஆட்டங்களில் இந்திய மகளிர் தோற்று வெளியேறியது. இதில் கடைசியில் எஞ்சியிருந்த மாணிக்கா பட்ரா கால் இறுதியில் சிங்கப்பூரின் யி லின்னிடம் தோல்வி அடைந்தார்.

மகளிர் இரட்டையர் ஆட்டங்களில் ஷாமினி – மதுரிகா இணை, அங்கிடா தாஸ் – பௌலோமி கடக் இணை ஆகிய அணிகள் கடைசி 16 சுற்றுக்கு தகுதி பெற்றன. ஆடவர் இரட்டையரில் சரத் கமல் – அந்தோணி அமல்ராஜ் இணை இங்கிலாந்தின் சாம் வாக்கர் – டேனி ரீட் இணையை தோற்கடித்து அரைஇறுதிக்குள் சென்றுள்ளனர். இந்தியா 13 தங்கம், 20 வெள்ளி, 14 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 47பதக்கங்களைப் பெற்று பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலியா, கனடா, ஸ்காட்லாந்து ஆகியவை அதே வரிசைப்படி இங்கிலாந்துக்கு அடுத்து வருகின்றன.

அமெரிக்கா செல்லும் பழங்குடி பெண்கள்

தொகுப்பு : தாஸ்

வறுமையில் உழலும் ஜார்க்கண்ட் மாநிலம். அங்கு பெண்களுக்கு பாதுகாப்பும், நாளை உயிரோடு இருப்போம் என்ற உத்தரவாதமும் கிடையாது. பெண்கள் சிறுவயதிலேயே வீட்டு வேலைகளுக்காகவும் பாலியல் பயன்பாட்டுக்காகவும் கடத்தப்படுவது அதிகமாக நடந்து வரும் மாநிலம். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள் கொல்லப்படுவதும் உண்டு. அப்படிப்பட்ட ஒரு மாநிலத்தில் இருந்து பதினெட்டு பெண்கள் அமெரிக்காவுக்கு கால்பந்து விளையாடுவதற்காக செல்கிறார்கள் என்பது ஒரு வியப்பான தகவலாகும். அந்தப் பெண்கள் வாழும் பகுதியில் உள்ள இளம் பெண்களுக்கு கால்பந்து ஒரு சுதந்திரத்தையும், ஒரு பாதுகாப்பு வளையத்தையும் தருகிறது. கடந்த ஞாயிறு அன்று இந்த பதினெட்டு பெண்களும் அமெரிக்காவில் உள்ள மின்னசோட்டாவில் உள்ள பிளெயின் நகருக்கு பெருமை மிகு ஸ்க்வான்ஸ் யு.எஸ்.ஏ. கோப்பை போட்டிகளில் ஆடுவதற்காகச் சென்றுள்ளார்கள்.

இந்த போட்டியில் பங்கு பெறும் முதல் இந்திய அணி இவர்கள்தான் என்பது பெருமைக்குரியதாகும். பெண்கள் மாயமாக மறைவதில் இருந்து காக்கும் அமைப்பாகவும், பெண்களுக்கு அதிகாரமளிக்கும் அமைப்பாகவும் ‘யுவா’ மாறியுள்ளது. இந்த யுவா அமைப்பு 2009ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் அரசியல் பொருளாதாரத்தில் முதுநிலைப் பட்டம் பெற்ற அமெரிக்கர் பிரான்ஸ் கேஸ்லர் இதை நிறுவினார். இந்த அமைப்பு இப்போது நன்கு வளர்ந்து விட்டது. இந்த பெண்கள் பங்கேற்கும் போட்டி ஜூலை 11 முதல் 13 வரையிலும், ஜூலை 15 முதல் 19 வரையிலும் நடைபெறுகிறது. இந்த போட்டிகள் மூலம் இந்த பெண்கள் புகழ் பெற்ற அமெரிக்க பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி கற்கும் வாய்ப்புகள் உருவாகும் என்று கேஸ்லர் எதிர்பார்க்கிறார்.

பல சிரமங்களுக்கு இடையில்

ராஞ்சி மாவட்டத்தில் ஓர்மஞ்சி வட்டத்தில் உள்ள ஹட்டப், கர்மா, கோய்லாரி, ருக்கா ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இந்த பெண்கள். இவர்கள் விளையாடுவதற்கும் பயிற்சி பெறுவதற்கும் பலவசதிகள் கொண்ட அரங்கங்கள் இவர்களுக்கு கிடையாது. கால்பந்து மைதானம் என்று ஒன்று அப்பகுதியில் கிடையாது. அவர்கள் காட்டின் ஓரத்தில் உள்ள பகுதியை சுத்தப்படுத்தி மைதானமாக ஆக்கியுள்ளனர். அங்கு நடுவில் இருக்கும் வைக்கோல் போரை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு ஊர்ப்பிரமுகர் ஒருவர் மறுத்து வருகிறார். இவர்களுடைய பயிற்சி மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை நடக்கும். ஆனால் இவர்கள் காலையிலேயே யுவா மையத்துக்கு வந்து விட வேண்டும். காலை 5.30 மணி முதல் யுவா மையத்தில் நடக்கும் ஆங்கிலம், கணினி வகுப்புகளில் இவர்கள் கலந்து கொள்ள வேண்டும். அது முடிந்தவுடன் பள்ளிகளுக்கு செல்ல வேண்டும்.

கால்பந்து பயிற்சியும், தரமான கல்வியும் இவர்களுக்கு எளிதில் கிடைத்து விடவில்லை. வீட்டில் கூட்டுதல், சமைத்தல், துணி துவைத்தல் ஆகிய வீட்டு வேலைகளை முடித்து விட்டுத்தான் இவர்கள் படிக்கவும் விளையாடவும் வர வேண்டும். 14 வயதான சுனைனா குமார் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) யு.எஸ்.ஏ. கோப்பையில் ஆடுவது பற்றி உற்சாகமாக இருக்கிறார். கடந்த ஜூனில் ஸ்பெயினில் நடந்த போட்டியில் தங்களது அணி மூன்றாவதாக வந்தது பற்றி இவர் பெருமையுடன் நினைவு கூர்கிறார். யுவா திட்டத்தில் தற்போது சுமார் 150 சிறுமியர் உள்ளனர். தங்களுடைய கிராமத்தைச் சேர்ந்த பெண்களின் சுதந்திரம், அதிகாரம் பெறுதல் பற்றி அறிந்த பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த பெண்களும் யுவாவில் சேர்ந்து வருகிறார்கள். யுவா மகளிர் சமுதாயம் தேர்வுகளை நடத்துகிறது. ஒவ்வொரு சிறுமியும் மற்றவர்களை ஒழுக்கம், வருகை தவறாமை, செயல்பாடு, நேர்மை, சுயநலமின்மை, ஒற்றுமை, ஆக்கப்பூர்வம் உள்ளிட்ட தலைமைப் பண்புகள் போன்ற பல காரணிகளைக் கொண்டு மதிப்பிடுகிறார்கள் என்று ஒரு சிறுமி கூறுகிறார்.

ஒரே இலக்கு கொண்ட குழுவில் தாங்களும் ஒரு அங்கம் என்ற பாதுகாப்பை கால்பந்து அளிக்கிறது என்பதை அனைத்துப் பெண்களும் ஒப்புக்கொள்கிறார்கள்:” எங்களுடைய எண்ணங்களை நாங்கள் இங்கு பகிர்ந்து கொள்ளலாம். தேவை ஏற்படும் போது நாங்கள் ஒருவருக்கொருவார் ஆதரவாக இருக்க முடியும் என்று ஒரு பெண் கூற அனைவரும் அதை ஆமோதித்தனர்.சிறுமியரின் கனவை பெற்றோர்கள் அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் அவர்களின் வாழ்க்கை முறை மாறி வருவதை ஏற்றுக்கொள்வதில் கிராமத்தாரிடம் இன்னமும் தயக்கம் காணப்படுகிறது. யுவா மையம் அருகே இவர்கள் முதலில் ஆடிய இடமான ஆனால் இப்போது யாரும் பயன்படுத்தாத பச்சைப்புல்வெளியை பயன்படுத்த கிராமத்தார் இவர்களை அனுமதிக்கவில்லை.

இவர்கள் ஸ்பெயினில் அடைந்த வெற்றியைக் கண்ட பின், ஓர்மஞ்சியில் இவர்கள் ஆடிவந்த திடலை அதன் உரிமையாளர் உழுது விவசாயம் பண்ணத் தயாராகி விட்டார். இதன் மூலம் அவர் இவர்கள் விளையாடுவதைத் தடுத்து திருப்தி அடைந்துள்ளார். இப்போது இவர்களுக்கு விளையாட இடமில்லை.2009ம் ஆண்டில் ஒரு உள்ளூர் அரசு சாரா அமைப்புக்காக அவர் ஒரு தொண்டராக கல்வி அளித்துக் கொண்டிருந்த போது, ஒரு சிறுமி எழுந்து நின்று கேஸ்லரை நோக்கி தங்களுக்கு அவர் கால்பந்து கற்றுத்தர முடியுமா என்று கேட்டதை இன்றும் அவர் நினைவு கூர்கிறார். அதுதான் யுவா பிறப்புக்கு அடித்தளமிட்டது. யுவா திட்டத்தை வளர்த்தெடுக்க கேஸ்லரும், அவருடைய நண்பர்களும் நிதி திரட்ட ஆரம்பித்தனர். தங்களுக்காக தாங்களே எழுந்து நிற்கும் உரிமையை அவர்களுக்கு வழங்கும் அதிகாரமூட்டல் பற்றி கற்றுத்தருவதுதான் யுவாவின் இலக்கு.

இப்போது யுவா அமைப்பில் 150 பேருக்கு மேல் உள்ளனர். இவர்கள் கால்பந்து விளையாடுகின்றனர். கல்வி கற்கின்றனர், சிறப்பு பட்டறைகளில் வேலை செய்கின்றனர், கோடைக்கால வகுப்புகளில் படிக்கின்றனர். பயணம் செய்கின்றனர். இவர்களுடைய சமுதாயத்தைச் சேர்ந்த இளைய சமுதாயமே இவர்களுக்கு பயிற்சி அளிக்கிறது. இவர்களுக்கு தனுமோஜா கிராமத்தில் ஒரு கால்பந்து ஸ்டேடியம் கட்டித்தருவதாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உறுதி அளித்துள்ளார், தனுமோஜா இவர்களின் கிராமத்துக்கு அருகில் உள்ளது. ஆறு மாதங்களுக்குள் ஸ்டேடியம் கட்டி முடிக்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார். தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்ட் 29 அன்று சர்வதேச போட்டிகளில் பெருமை தேடித் தந்தவர்களுக்கு ரொக்க வெகுமதியாக ரூ.21 ஆயிரமும், விளையாட்டு சாதனங்களும் வழங்கப்படும் என்று சோரன் கூறினார்.

சிட்டி யூனியன் வங்கி அளிக்கும் புதிய வசதி வெளிநாட்டில் வசிப்பவர்கள் ஆன்லைனில் பணம் அனுப்பலாம்

மன்னார்குடி, ஜூலை 12 -சிட்டி யூனியன் வங்கி 109 ஆண்டுகளாக வங்கிச் சேவையில் ஈடுபட்டு வருகிறது. இந்த வங்கி தற்போது அமெரிக்காவை சேர்ந்த வங்கியுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்படி சிட்டி யூனியன் வங்கி மூலம் பிற வங்கி வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் ஆன்லைன் மூலம் பணம் அனுப்பலாம்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் – இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களும் தங்கள் உறவினர்களுக்கு பணம் அனுப்ப முடியும்.சிட்டி யூனியன் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் உடனடியாக பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இதர வங்கி வாடிக்கையாளர்கள் 2 வேலை நாட்களுக்குள் பணத்தைப் பெறலாம். பணி பரிமாற்றத்துக்கான கட்டணம் வெளிப்படை தன்மையுடனும், குறைவானதாகவும் இருக்கும்.

இந்த சேவை மூலம் வெளிநாட்டில் இருப்பவர்கள் இந்தியாவில் உள்ள குடும்பத்தினருக்கு ஒரு தடவை அதிகபட்சமாக 2500 அமெரிக்க டாலர்கள் வரை அனுப்பலாம். இந்த சேவையை பெற WWW.globalremit.com இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்கள் இணையத்தளத்தில் அளிக்கப்பட்டுள்ளன.

மணப்பாறை நகராட்சி குப்பைக் கிடங்கில் மீண்டும் தீ

மணப்பாறை, ஜூலை 12 -மணப்பாறையில் உள்ள நகராட்சிக் குப்பைக் கிடங்கு, மீண்டும் தீ பற்றி எரிந்தது. இதனால் வழக்கம்போல திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.மணப்பாறை நகர்ப் பகுதியிலிருந்து வெளியேற்றப்படும் குப்பைகள், திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், 5-வது வார்டுக்கு உட்பட்ட செவலூர் பிரிவு சாலை அருகில் கொட்டப்பட்டு வருகின்றன.இந்த குப்பைக் கிடங்கு அவ்வப்போது தீப்பற்றி எரிவது வழக்கம். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமையன்று இங்கு தீப்பற்றி, மளமளவென எரியத் தொடங்கியது. இதனால் அந்த இடமே புகை மண்டலமாக மாறியது. திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், எதிரே வரும் வாகனங்களை அடையாளம் காண முடியாமல் வாகன ஓட்டிகள் திணறினர்.

ஒரு கட்டத்தில், போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது.ஆவேசமடைந்த அப்பகுதியை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். நகராட்சி ஆணையர் (பொ) சிவக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி, மறியலை கைவிடுமாறு கேட்டுக் கொண்டார். குப்பைக் கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற உரிய ஏற்பாடு விரைவில்எடுக்கப்படும் என்றும், அதுவரை கிடங்கிற்கு காவலாளிகள் நியமிக்கப்படுவார்கள் எனவும் உறுதியளித்தார். அதன்படியே நகராட்சி நிர்வாகத்திலிருந்து குப்பைக்கிடங்குக்கு 2 காவலாளிகள் நியமிக் கப்பட்டனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை மறுபடியும் குப்பைக் கிடங்கில் தீ பற்றியது. இதனால் வழக்கம்போல திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சினர் அளித்த தகவலின் பேரில், நகராட்சி ஆணையர் சிவக்குமார், குப்பைக் கிடங்குக்கு விரைந்து வந்தார். அப்போது குப்பைக் கிடங்கு காவலாளி வெளியே சென்றிருந்தார்.

குடிநீர் விநியோகம் செய்யும் லாரியிலிருந்த தண்ணீரை எடுத்து, நகராட்சி ஊழியர்களைக் கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் நகராட்சி ஆணையர் ஈடுபட்டார். பின்னர் தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.காற்று பலமாக வீசுவதால், குப்பைக் கிடங்குகளில் ஏற்படும் மீத்தேன் வாயு மூலம் தீப்பற்றிக் கொள்வதாகவும், சம்பவம் நடைபெற்றபோது அங்கு இல்லாத காவலாளியை எச்சரிக்கை செய்துள்ளதாகவும் ஆணையர் சிவகுமார் கூறினார்

சிபிஎம் நாகை மாவட்டப் பேரவை

நாகப்பட்டினம், ஜூலை 12 -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டப் பேரவைக் கூட்டம், சனிக்கிழமை அன்று, நாகை புளுஸ்டார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.பேரவைக்கு மாவட்டச் செயலாளர் ஏ.வி.முருகையன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான வி.மாரிமுத்து அரசியல் விளக்கவுரையாற்றினார். கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ சிறப்புரை யாற்றினார்.மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள், வட்ட, ஒன்றிய, நகரக்குழு உறுப்பினர்கள், வர்க்க – வெகுஜன அரங்கத்தினர் கலந்து கொண்டனர்.

‘அன்னபூர்ணா’ உணவு வழங்கும் திட்டம் கோட்டை ரோட்டரி சங்கம் ஏற்பாடு

பேராவூரணி, ஜூலை 12 -சர்வதேச ரோட்டரி சங்க வழிகாட்டுதலின் பேரில், கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் பட்டுக்கோட்டையில் உள்ள சரோனின் அன்னை தெரசா ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள 47 குழந்தைகளுக்கு, ‘அன்னப்பூர்ணா’ திட்டத்தின் கீழ் காலை உணவு வழங்கப்பட்டது.அதேபோல பட்டுக்கோட்டை வள்ளலார் முதியோர் இல்லத்தில் உள்ள மூத்த குடிமக்கள் 27 பேருக்கு, வேட்டி, துண்டு, புடவை, ரவிக்கை மற்றும் சீலிங் ஃபேன் ஆகியவையும், 81 பேருக்கு காலை, மதியம், இரவும் உணவும் வழங்கப்பட்டது.

விழாவிற்கு கோட்டை ரோட்டரி சங்கத் தலைவர்பொறியாளர் ஏ.ராமலிங்கம் தலைமை வகித்தார். ஆதரவற்ற முதியோர் மற்றும் குழந்தைகள் இல்ல சேர்மன் எம்.திருநாவுக்கரசு வரவேற்றார். மேஜர் டோனர் டாக்டர் சி.வி.பத்மானந்தன் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.மாவட்டப் பொறுப்பாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ரோட்டரி சங்க செயலாளர் எம்.சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.

தஞ்சையில் அனுமதியின்றி வெட்டி எடுக்கப்படும் மண் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்; விவசாயிகள் அதிருப்தி

தஞ்சாவூர், ஜூலை 12 -எட்டாவது உலகத்தமிழ் மாநாடு, தஞ்சையில் 1995-ம்ஆண்டு முதல்வர் ஜெயலலி தாவால் நடத்தப்பட்டது. இதையொட்டி தஞ்சை நகரத்தில்ஏராளமான வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப் பட்டன.பல்வேறு பகுதிகளில் கழிப் பறை மற்றும் குளியலறை, தொம்பன்குடிசையில் தொல்காப்பியர் நினைவாக தொல்காப்பியர் சதுக்கம், ராமநாதன் மருத்துவமனை அருகில் ராஜராஜசோழன் நினைவாக மணிமண்டபம், நகரத்தின் வாகன நெரிசலை தவிர்ப்பதற்கு திருச்சி சாலையில் புதிய பேருந்து நிலையம், புறவழிச்சாலை ஆகியன அமைக்கப்பட் டன. நகரத்தின் அனைத்து நுழைவாயில்களிலும் தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் நினைவு வளைவுகளும் எழுப்பப்பட்டன.

முடிவடையாத புறவழிச்சாலை

உலகதமிழ் மாநாட்டின் போது போடப்பட்ட புறவழிச் சாலை கும்பகோணம் – திருவையாறு சாலையில் இருந்து தொடங்கி நாகை – பட்டுக்கோட்டை சாலை மார்க்கமாக நாஞ்சிக்கோட்டை, விளார், மாதாக்கோட்டை சாலை மார்க்கமாக புதுக்கோட்டை – திருச்சி மெயின் சாலையில் முடிவடைந்தது. அதனை பயன்படுத்தி புதிய பேருந்து நிலையம் செல்லலாம். மற்றொரு புறவழிச்சாலை யானது இதே கும்பகோணம் – திருவையாறு சாலையில் தொடங்கி வடகால், சீராளூர், சக்கரசாமந்தம், பிள்ளையார் பட்டி வழியாக புதுக்கோட்டை – திருச்சி மெயின் சாலையை சென்றடையும். ஆனால், இந்த புறவழிச்சாலை அமைக்கும்பணி முடிவடையாமலேயே இருந்து வந்தது.

நிதி ஓதுக்கீடு

இந்நிலையில் 2013 – 2014 ஆண்டு முடிவடையாத புறவழிச் சாலைப் பணிக்கு ரூ. 52 கோடி நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறையினரால் ஒப்பந்தம் விடப்பட்டு மூன்று ஒப்பந்தகாரர்களால் தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன.

அனுமதியின்றி வெட்டி எடுக்கப்படும் மண்

இந்த சாலைப்பணிக்காக, தஞ்சை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளையார்பட்டி ஊராட்சியில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள குளத்தில் சுமார் 10 அடி ஆழத்திற்கும், அருகில் உள்ள ஏரியில் சுமார் 5 அடி ஆழத்திற்கும் எந்தவித அனுமதியுமின்றி பொக்லைன் இயந்திரம் மூலம் மண், வெட்டி எடுக்கப்பட்டு பல டிப்பர்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

எதையும் அறியாத மாவட்ட நிர்வாகம்

இப்படி அனுமதியின்றி பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மண்வெட்டி எடுக்கப்படும் சம்பவம் பற்றி மாவட்ட நிர்வாகம் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் உள்ளது. மாறாக, மண் வெட்டி எடுக்கப்படுவது பற்றி தெரியாது எனவும், எங்கள் அலுவலகத்தில் எந்தவிதமான அனுமதியும் வாங்கவில்லை என்றும் சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை உதவி இயக்குநர் கூறுகிறார்.இதையே தஞ்சாவூர் வட்டார வளர்ச்சி அலுவலர், கோட்டாட்சியர் ஆகியோரும் தெரிவிக்கின்றனர்.

ஆளும் கட்சியின் அதிகார துஷ்பிரயோகம்

சாலைப்பணியை டெண்டர் எடுத்துள்ள நபர்கள், உள்ளூரைச் சேர்ந்த அமைச்சருக்கு நெருங்கியவர்கள் என்பதால், விதிமுறைகளை மீறி, அவர்கள் மண்ணைக் கொள்ளையடித்து வருவதாகவும், இதனாலேயே அதிகாரிகளும் பிரச்சனையை கண்டும் காணாதது போல இருப்பதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், இதேபோல பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மண் கொள்ளையடிக்கப்பட்டதை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.கிராமத்தில் சாதாரண ஏழை விவசாயி, தனது சொந்த நிலத்தில் இருந்து மண்ணை வெட்டி எடுத்து தனது வீட்டிற்கோ அல்லது மற்ற பயன்பாட்டிற்கோ பயன்படுத்துவற்குக் கூட உரிய அனுமதி வாங்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

அப்படி வாங்கவில்லைஎன்றால் வருவாய்த்துறையின ரால் வண்டி வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும்.ஆனால், பட்டப் பகலிலேயே அரசுக்குச் சொந்தமான மண்ணை வெட்டி கொள்ளையடிப்பதை அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? என்று இப்பகுதி இப்பகுதி விவசாயிகள் குமுறுகின்றனர். இனிமேலாவது மாவட்ட நிர்வாகமும், அதிகாரிகளும் விழித்துக் கொண்டு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக் கின்றனர்.

ஜெயங்கொண்டத்தில் சிபிஎம் அரசியல் பயிற்சி முகாம்

அரியலூர், ஜூலை 12 -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பயிற்சி முகாம், ஜெயங்கொண்டம் வாசவி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.கட்சியின் மாவட்டச் செயலாளர் இர.மணிவேல் முகாமிற்குத் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் ஆகியோர் அரசியல் பயிற்சி அளித்தனர். ஜெயங்கொண்டம் ஒன்றியச் செயலாளர் கே.மகாராசன், தா.பழுர் ஒன்றியச் செயலாளர் எம்.இளங்கோவன், ஆண்டிமடம் ஒன்றியச் செயலாளர் கே.நாகரத்தினம் உள்ளிட்டோர் முகாமில் கலந்து கொண்டனர்.