தமிழகம்

img

என்பிஆர் பணிகளை தொடங்க எதிர்ப்பு... திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு

சென்னை:
தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்தக்கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.சட்டப்பேரவையில் வியாழனன்று (பிப்.20) நேரமில்லா நேரத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “தமிழக அரசு (குடியுரிமை திருத்த சட்டத்தை (சிஏஏ) எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். என்பிஆர் பணிகளை நடத்தக் கூடாது என்றும் வலியுறுத்தி வருகிறேன். முதலமைச்சரும் பதிலளிக்காமல் உள்ளார். என்பிஆர்-க்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் சட்டமன்ற முற்றுகை பேரணி நடந்துள்ளது. எனவே, முதலமைச்சர் என்பிஆர் பணிகள் நடைபெறாது என்று அறிவிக்க வேண்டும்” என்றார்.

மத்திய அரசிடம் விளக்கம்....
இதற்கு பதிலளித்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “2010 ஆம் ஆண்டும் நடந்த தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பின் போது கேட்கப் பட்ட கேள்விகளில் இருந்து தற்போதைய கணக்கெடுப்பில் புதிதாக 4 கேள்விகளைதான் சேர்த்துள்ளனர். அதுப்பற்றிதான் தற்போது அச்சமடைந்துள்ளனர். அதனால் ஏற்படும் விளைவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து யூகமாக சொல்லப்படுகிற வகையில் உள்ளது. அந்த கேள்விகளுக்கும் ஆவணங்களை சமர்ப்பிக்கத் தேவையில்லை. மதம் பற்றிய விவரம் கேட்கப்படாது. புதிதாக இணைக்கப் பட்டுள்ள கேள்விகள் குறித்து மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளோம்.  இன்னமும் பதில் வரவில்லை. என்பிஆர் புதுப்பித்தலால் சிறுபான்மை மக்கள் அச்சப்படத் தேவையில்லை. அரசியலுக்காக எதிர்க்கட்சிகள் விஷமத்தனமான பிரச்சாரம் செய்கின்றன என்றார்.

இதனையடுத்து பேசிய மு.க.ஸ்டாலின், சிஏஏ அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்பதால் திரும்ப பெற வேண்டும். சிறுபான்மையினர் மட்டுமல்ல தமிழர்களும், இலங்கைத் தமிழர்களும் பாதிக்கப்படுவார்கள். என்பிஆர் கணக்கெடுப்பில் சான்றிதழ் இல்லாவிடில், எந்த பண்டிகை கொண்டாடுகிறீர்கள் என்று கேட்பார்கள். அதில் இஸ்லாமிய பண்டிகைகள் இல்லை. ஆக, சந்தேகத்திற்குரியவர் (டவுட்புல் என்பதற்காக ‘டி’) என குறிப்பார்கள்.  என்ஆர்சி தயாரிக்க என்பிஆர் கணக்கெடுப்பே போதுமானது. என்பிஆர், என்ஆர்சி வேறுவேறு அல்ல. இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமின்றி தமிழர்களுக்கும் அனைவருக்கும் எதிரானது என்றார்.எதிர்க் கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் குறுக்கிடுகையில், திமுக ஆட்சியில் 2010ல் என்பிஆர் கணக்கெடுப்பு நடந்தபோது தற்போது உள்ளதுபோல் கேள்விகள் இல்லை. என்ஆர்சி-யால் அசாமில் 19 லட்சம் பேர் தடுப்பு காவலுக்கு செல்கின்றனர். அதுபோன்று வந்தால் நாமெல்லாம் எங்கே இருப்போம்? படிவத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு விளக்கம் தரவில்லை என்றால் ‘டி’ என குறிப்பார்கள். முன்னாள் குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி குடும்பம், கார்கில் போரில் பிரிகேடியராக பணியாற்றிய முன்னாள் அதிகாரியின் குடும்பம் போன்றோரையே குடிமகன் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். உடல்பதறி குமுறலோடு போராடும் மக்களை அமைச்சர் கொச்சைபடுத்தக்கூடாது என்றார்.மீண்டும் விளக்கம் அளித்த அமைச்சர் உதயகுமார், பண்டிகைகள் குறித்து எந்த கேள்வியும் அதில் இல்லை. கேள்விகளுக்கான தகவல்களை, ஆவணங்களை விரும்பினால் கொடுக்கலாம் என்றுதான் கூறுகிறார்கள். இவ்வாறு விவாதம் நடந்தது.

;