ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் சிறுமி பலி
ராணிப்பேட்டை, ஏப். 21- வாலாஜாபேட்டை அருகே திருமணத்திற்கு சென்று வீடுதிரும்பும் போது ஆட்டோமீது லாரி மோதிய விபத்தில் பெற்றோர்கள் கண்முன்னே 8 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டி ஆபிரகாம் நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (31) இவர் சென்னையில் சொந்தமாக ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி சுவேதா (24). இவர்களது மகள் நிஜிதா (8). இந்தநிலையில் வேலூரில் நடைபெற்ற உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர். பின்னர் மீண்டும் சென்னை நோக்கி தனது ஷேர் ஆட்டோவில் அவர்களுடைய உறவினர்கள் பிரசாந்த் (28) வெண்மதி (24) யோகேஸ்வரி என்ற கை குழந்தை ஆகிய 6 பேர் வந்து கொண்டிருந்தனர். வாலாஜா பேட்டை அடுத்த வாணிய சத்திரம் என்ற பகுதியில் வந்து கொண்டிருந்த போது, பின்னால் வந்த லாரி எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது மோதியது. இதில் நிஜிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காய மடைந்த மற்ற 5 பேரும் சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து காவேரிப்பாக்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குடிநீர்வாரிய அலுவலகத்தில் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
சென்னை, ஏப். 21- சென்னை ஓட்டேரியில் குடிநீர்வாரிய அலுவலகத்தில் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (24). இவர், ஓட்டேரியில் உள்ள சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார். இதற்காக அந்த பகுதியில் ரஞ்சித்குமார் தங்கியிருந்தார். இந்நிலையில் ரஞ்சித்குமார், சொந்த ஊருக்கு சென்றுவிட்டு சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை திரும்பி வந்தார். ஊரில் இருந்து திரும்பி வந்த ரஞ்சித்குமார், மன உளைச்சலில் இருந்தததாகக் கூறப்படுகிறது. அன்று இரவு பணியில் ரஞ்சித்குமார், அலுவலகத்திலேயே படுத்து தூங்கினார். இந்நிலையில் திங்கட்கிழமை காலை பிற ஊழியர்கள் பணிக்கு வந்தனர். அப்போது அங்கு ரஞ்சித்குமார், தூக்கிட்டு இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவர்கள் ஓட்டேரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ரஞ்சித்குமார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாநகர போக்குவரத்து ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு
சென்னை, ஏப்.21- சென்னை மாநகர போக்குவரத்து கழக ஊழியர்கள் திங்கள் முதல் கட்டாயமாக பயோமெட்ரிக் மூலம் வருகைப்பதிவு செய்ய வேண்டும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் தங்களின் வருகையை பயோமெட்ரிக் மூலம் தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என ஏற்கெனவே கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி தெரிவிக்கப்பட்டது. மாநகர போக்குவரத்துக் கழகத்தின் தலைமை அலுவலகம், அனைத்து பணிமனைகள், தொழிற்கூடங்கள் உள்ளிட்டவற்றில் பணிபுரியும் ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் பயோமெட்ரிக் மூலமாகவே வருகையை பதிவு செய்ய வேண்டும் என மீண்டும் அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி, திங்கள் முதல் பயோமெட்ரிக் மூலம் பதிவு செய்யும் ஊழியர்களின் வருகை மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தங்கம் விலை உயர்வு
சென்னை, ஏப். 21- சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.560 உயர்ந்து சவரன் ரூ.72,120க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.9,015க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.111-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,11,000-க்கு விற்பனையாகிறது.
தந்தையை கொன்றவனை 5 ஆண்டுக்கு பிறகு பழிதீர்த்த மகன்
சென்னை வியாசர்பாடி உதயசூரியன் நகர் 13ஆவது பிளாக்கை சேர்ந்தவர் ராஜ் (எ) தொண்டை ராஜ் (40). இவர் ஆட்டோ ஓட்டுநர். இவரின் மனைவி தீபா (38). இவர்களுக்கு கீர்த்திகா (10), தன்ஷிகா (3) என்ற 2 மகள்கள் உள்ளனர்.
வியாசர்பாடி பகுதியில் ரவி என்பவரை கொலை செய்த வழக்கு, ஆந்திர எல்லையில் பப்லு என்பவரை கொலை செய்தது மற்றும் வியாசர்பாடி பகுதியில் ராஜ் என்பவரை கொலை செய்தது உட்பட 3 கொலை வழக்குகள் உள்ளது. இதன்காரணமாக தொண்டைராஜிக்கு வியாசர்பாடியில் கடும் அச்சுறுத்தல் இருந்ததால் சில மாதங்களுக்கு முன் சின்னசேக்காடு பகுதியில் குடும்பத்துடன் குடியேறினார்.
ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு உறவினர்களை பார்க்கவும், வியாசர்பாடி பகுதியில் சீட்டு பணம் கட்டுவதற்காகவும் சுமார் 3 மணி அளவில், மனைவி, மகளுடன் ஆட்டோவில் வந்துள்ளார். உதயசூரியன் நகர் பகுதியில் ஆட்டோ வரும்போது 2 பைக்குகளில் வந்த 4 பேர், ஆட்டோவை மடக்கி தொண்டை ராஜை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். உயிருக்கு போராடிய அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதுகுறித்து வியாசர்பாடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், 2020ஆம் ஆண்டு அந்த பகுதியை சேர்ந்த ராஜ் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார். இதற்கு பழிவாங்க அவரது மகன் சூர்யா, நண்பர்களுடன் சேர்ந்து இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து சூர்யா, அவரது நண்பர்கள் ஜே.ஜே.ஆர் நகர் பகுதியை சேர்ந்த ஶ்ரீராம் (25), வியாசர்பாடி பகுதியை சேர்ந்த அஜித் (25), முருகன் (28) ஆகியோரை கைது செய்தனர். முன்னதாக இவர்கள் தப்பியோட முயன்றபோது கீழே விழுந்ததில் கை, கால்களில் முறிவு ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அவர்களுக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் கொலை தொடர்பாக வியாசர்பாடி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (26), அஜய்குமார் (26), அஜித் (22) ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.