tamilnadu

img

மேகமலை, வருசநாடு பகுதி 39 கிராமங்கள்....வனச் சரணாலயம் என்ற பெயரில் மக்களை வெளியேற்றும் உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தேனி:
மேகமலை, வருசநாடு உள்ளிட்ட பகுதி கிராமங்களில் வனச்சரணாலயம் என்ற  பெயரில் மக்களை வெளியேற்றும் உயர்நீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தேனி மாவட்டம் மேகமலை, வருசநாடு,தும்மக்குண்டு பகுதிக்குட்பட்ட 39 கிராமங்களில் எண்பது ஆண்டுகளுக்கு மேலாக பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தப் பகுதியை வனச் சரணாலயமாக அரசு அறிவித்து மக்களை வெளியேற்ற 2009 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. சட்டவிரோதமான இந்த உத்தரவை எதிர்த்து கடந்த 10 ஆண்டு காலமாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தொடர் போராட்டங்களை நடத்தி மக்களையும் விவசாயிகளையும் வெளியேற்றாமல் தடுத்து பாதுகாத்தது.

அரசு உத்தரவை எதிர்த்து சில விவசாயிகள் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை முறையாக நடத்தாததன் விளைவாக, அனைவரையும் வெளியேற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் முயற்சித்தது. இதை எதிர்த்தும் வனஉரிமைச்சட்டம் 2006ன்படி அங்கு வாழும் மக்களுக்கும்,  விவசாயிகளுக்கும் பட்டா வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வன உரிமைக் கமிட்டி அமைக்கப்பட்டு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்டச் செயலாளர் டி.கண்ணன் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு டிசம்பர் 7ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.உயர்நீதிமன்ற உத்தரவை மறு பரிசீலனை செய்ய உத்தரவிட்டு உச்சநீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

;