பேஸ்புக் உலா

img

நம்  கால் பதிந்த இடமெல்லாம் நெருப்பும் வெறுப்பும்... -ஆர்.பாலகிருஷ்ணன்

அமேசான் காடுகளின்
அடிமடியில் தீ.
பற்றி எரிகிறது
உலகின் நுரையீரல்

உயிர்வளியின்
கருப்பை முழுவதும் 
கரும்புகை.

காடுகளின் 
சாம்பல் மேட்டில் 
உயிர்களின் சடலம்.

கொம்பில் தீ எரிய
கோரமாய் ஓடும்
கோட்டுமான்கள்.

ஓடாமல்
உட்கார்ந்த இடத்தில்
செத்துப்போன
முயலும் ஆமையும்...

யாரின் பூமி இது?

இதோ 
பத்திரம் பதியும்
அலுவலகத்தில்
'டோக்கன்' வரிசை..

"பதிந்து" கொண்டே
இருக்கிறார்கள்...
யாரேனும் எதையேனும்

நம் 
கால் பதிந்த இடமெல்லாம்
நெருப்பும் வெறுப்பும்...

இதோ 
துருவப் பனி கூட
கரைந்து உருகி...

இருப்பு எதுவென்று 
தெரியாமல் இயங்கும்
நம்
கால்களும் கைகளும்...

அமேசான் காடுகள்
பற்றி எரிகின்றன...
சினந்து சிவந்து...

தொலைக்காட்சி
ஊடக விவாத மேடைகளில்
யார் யாரோ...
எதைப்பற்றியோ...
எந்த நேரமும்..
ஓயாத கூச்சல்..

உறக்கமும் வரவில்லை.

ஆர்.பாலகிருஷ்ணன்

;