பேஸ்புக் உலா

img

ஏதுமற்றவர்களின் கண்ணீர் ஒருநாள் நெருப்பாகி அதிகாரத்தை அழிக்கும்

*****************மானசீகன்********************

இது வெறும் புகைப்படம் அல்ல; கண்ணீர்க் கவிதை.

வீட்டில் நாற்காலியில் அமர்ந்தபடி ஓய்வெடுக்க வேண்டிய இந்த முதியவரை கொளுத்தும் வெயிலில் ஒரு கையில் ஊன்றுகோலோடும், மறுகையில் தேசியக் கொடியோடும் வீதிக்கு வரவழைத்தது எது?

அவர் பிறந்த போது இந்த நாடு சுதந்திரம் அடைந்து சில ஆண்டுகளே ஆகியிருக்கும்.

பிரிவினைக் கலவரத்தின் நிழல் கூடப் படியாத இந்த அமைதிப் பூங்காவில் அரை டவுசரோடு அவர் தன் ஊரின் எல்லா வீதிகளிலும் சுற்றித் திரிந்திருப்பார். கோவில்களில் ஒளிந்து கள்ளன் போலிஸ் ஆடியிருப்பார். எத்தனையோ ஆகஸ்ட் 15 களை, ஜனவரி 26 களை கடந்து மிட்டாய்களைத் தின்று செரித்திருப்பார்.

மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்குப் பிறகு வாயைக்கட்டி வகுத்தைக் கட்டி பிள்ளைகளை வளர்த்து இப்போதுதான் கொஞ்சம் ஓய்ந்திருப்பார். வரப்போகிற சுதந்திர தினத்தில் மிட்டாய் கூடத் தின்ன முடியாத அளவுக்கு சுகர் ஏறியிருக்கலாம்.

எல்லாம் முடிந்து இனிமையாய் விடைபெற வேண்டிய வயதில் 'யோவ் பெருசு நீ இந்தியனா?' எனக்கேட்டால்...

அறுபது ஆண்டுகளுக்கு மேல் இந்த மண்ணுடன் தனக்கிருக்கிற உறவை தன் மொழியே புரியாத எவனோ ஒருவன் கேள்வி கேட்டதால் எழுந்த தார்மீக ஆவேசம் இது...

தினந்தோறும் காட்டிற்குப் போய் இலை தழைகளை மேய்ந்து ,துள்ளிக் குதித்து, ஓடி இறங்கி, ஏறி ,விளையாடி, யாரையோ போலியாக முட்டி, யாருக்கோ பயப்படுவது போல் ஒதுங்கி, வாய்க்காலில் இறங்கி தண்ணீரில் நனைந்து, தலையாட்டியபடியே வீடு வந்து சேரும் ஆடு ஏதோ ஓர் அதிகாலையில் தன் வழியில் குறுக்கிட்டு நிற்கும் மின்சாரவேலியைக் காணும் போது ஏற்படும் திகைப்பிற்கு நிகரானதே அந்த முதியவரின் நடை ...

ஏதுமற்றவர்களின் கண்ணீர் கன்னத்தில் வழிவதோடு முடிந்து விடுவதில்லை‌..அதுவே ஒருநாள் நெருப்பாகி அதிகாரத்தை அழிக்கும்.

நல்லா இருங்கடா!

-மானசீகன்

;