அறிவியல்

img

சந்திராயன்2:  தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது - இஸ்ரோ தலைவர் அதிகாரபூர்வ அறிவிப்பு 

சந்திராயன் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவை நெங்கிய நிலையில் அதன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்ற இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 
நிலவை ஆராய்வதற்காக இந்திய விண் வெளி ஆராய்ச்சி நிறுவனம்  ‘சந்திரயான்-2’ விண்கலத்தை ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 22-ம் தேதி விண்ணில் செலுத்தியது. சந்திரயான்-2 விண்கலம் மொத்தம் 3,850 கிலோ எடை கொண்டது. இதில், தொடர்ந்து நிலவை சுற்றிவரக்கூடிய ‘ஆர்பிட்டர்’, நிலவில் இறங்கி ஆய்வு செய்யும் ‘விக்ரம்’ என்ற லேண்டர் கலம், நிலவில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்யக்கூடிய ‘பிரக்யான்’ என்ற ரோவர் வாகனம் என 3 அதிநவீன சாதனங்கள் இணைக்கப்பட்டது.
சந்திரயான் விண்கலத்தின் ஆர்பிட்டர் பகுதியில் இருந்து விக்ரம் லேண்டர் பாகம் கடந்த 2-ம் தேதி வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. 48 நாட்கள் பயணத்துக்குப் பிறகு, சந்திரயானின் லேண்டர் பகுதி இன்று அதிகாலை தரையிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 
 வேகத்தை குறைத்து நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கச் செய்வது என்பது மிகவும் கடினமான பணியாக விஞ்ஞானிகள் கருதினர். லேண்டரின் வேகத்தை படிப்படியாக குறைத்து பூஜ்ய நிலைக்கு கொண்டு வருவதுதான் இத்திட்டத்தின் சவாலான பணியாகும். அதை வெற்றிகரமாக முடித்து விட்டால் விண்கலம் தரையிறங்குவது எளிதாகிவிடும்.நிலவுக்கு அருகே லேண்டர் வந்ததும் எதிர்விசை நடைமுறையை பயன்படுத்தி அதன் வேகம் குறைக்கப்படும்.

தரையில் இருந்து 10 மீட்டர் உயரத்திற்கு  லேண்டர் வந்ததும், அதன் வேகம் ஒரு நிமிடத்துக்கு 2 மீட்டர் என்ற அளவில் இருக்கும். இறுதியாக லேண்டரின் வேகம் பூஜ்ஜிய நிலையை எட்டியதும் நாளை அதிகாலை 1.40 மணிக்கு அதை நிலவில் தரையிறக்குவதற்கான பணிகள் தொடங்கும்.

முதலில் எங்கு தரையிறங்குவது என்பதை லேண்டரில் உள்ள சென் சார்கள் ஆராய்ந்து, சமதள பரப்பு உடைய இடத்தை தேர்வு செய்யும். பிறகு, அதி காலை 1.55 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் ‘மான்சினஸ்-சி’ - ‘சிம்பீலியஸ்-என்’ என்ற இரு பள்ளங்களுக்கு இடையே லேண்டர் மிக மெதுவாக தரையிறங்கும்.
இந்தநிலையில், 'சந்திரயான் - 2' விண்கலத்தின், 'லேண்டர்' சாதனம், நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அதிலிருந்து, சிக்னல் துண்டிக்கப்பட்டது. .

இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவிக்கையில், “லேண்டரில் இருந்து கட்டுபாட்டு அறைக்கு சிக்னல் எதுவும் வரவில்லை. இந்த தரவுகளை ஆராய்ந்து வருகிறோம். நிலவிற்கு 2.1 கிலோ மிட்டர் தொலைவில் இருந்தபோது விக்ரம் லேண்டரில் தகவல் துண்டிக்கப்பட்டது. தகவல் தொடர்பு துண்டிப்பு குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார். 

;