tamilnadu

img

ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை அனுப்பாவிட்டால் பதிலடி கொடுக்கப்படும்... இந்தியாவிற்கு மிரட்டல் விடும் அமெரிக்கா 

வாஷிங்டன்
கொரோனா பாதித்தவர்களுக்கு இந்திய அரசு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தைப் பயன்படுத்தி வருகிறது. இந்த மருந்து கொரோனாவை ஓரளவு கட்டுப்பாட்டில் வைப்பதால் குறுகிய காலத்தில் பிரசித்திபெற்றுவிட்டது. 

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் ஜெட் வேகத்தில் பரவியதால் கடந்த மார்ச் 25 ஆம் தேதி ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் உட்பட 24 வகையான மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. தற்போது மனிதநேய அடிப்படையில் சில நாடுகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை இந்தியா வழங்கி வருகிறது. எங்களுக்கும் இந்த மாத்திரை அதிகளவில் வேண்டும் எனக் கடந்த ஒரு வாரக் காலமாக அமெரிக்க அரசு வற்புறுத்தி வருகிறது. இந்த வற்புறுத்தல் தற்போது மிரட்டலாக மாறியுள்ளது.  

நாங்கள் ஏற்கனவே ஆர்டர் செய்த அளவு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை அமெரிக்காவுக்கு அளிக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மோடியிடம் வலியுறுத்தியுள்ள நிலையில், திங்களன்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த டிரம்ப் இந்திய அரசுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,"பிரதமர் மோடியிடம் நேற்று பேசினேன். மிகவும் நல்ல உரையாடலாக இருந்தது. நாங்கள் ஆர்டர் செய்த மருந்துகளை வழங்கினால் நன்றாக இருக்கும் எனக் கூறினேன். ஒரு வேளை மோடி மருந்துகளை அமெரிக்காவுக்கு அனுப்ப அனுமதி அளிக்கவில்லை என்றால் தக்க பதிலடி கொடுக்கப்படலாம்” என மிரட்டல் விடும் நோக்கில் கூறியுள்ளார். 

இந்த மிரட்டல் காரணமாக ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் உட்பட 24 வகையான மருத்துவ பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி கட்டுப்பாடுகளை இந்தியா தளர்த்தியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. 
 

;