districts

சென்னை முக்கிய செய்திகள்

புழல் ஏரியில் நீர் இருப்பு  3 டிஎம்சியாக அதிகரிப்பு

சென்னை, மே 2- சென்னை மாநகர மக்களுக்கு நாள்தோறும் குடிநீர் வழங்குவதில் புழல் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் புழல் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. பின்னர் ஏரியிலிருந்து குடிநீருக்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்ததால், அதன் நீர்மட்டம் குறைந்தது. தற்போது சோழவரம், பூண்டி ஏரிகளில் இருந்து தண்ணீர் வரத்து அதிகரித்து  வருவதால், புழல் ஏரியில் தண்ணீர் இருப்பு கடந்த 4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் 3 டிஎம்சியாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில், தற்போது 3,002  மில்லியன் கனஅடியாக நீர் இருப்பு உள்ளது. மேலும் 21.2 அடி உயரமுள்ள  புழல் ஏரியில் தற்போது 19.95 அடி உயரத்துக்கு நீர் நிரம்பியுள்ளது. தற்போது புழல் ஏரிக்கு 415 கனஅடி நீர் வருகிறது. இங்கிருந்து சென்னை  குடிநீருக்கு வினாடிக்கு 186 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் புழல் ஏரி கடல் போல் காட்சியளிக்கிறது.

விடுமுறை நாளான மே தினத்தில்  சிறப்பு வகுப்பு நடத்த முயற்சி சிஐடியு தலையீட்டால் தடுத்து நிறுத்தம்

வேலூர். மே 01 - உழைக்கும் தொழிலாளர்களின் மே தினத்தன்று அவர்கள் உரிமையை போற்றும் வகையில் வேலூர் மாநகராட்சி சாய்நாதபுரம் ஆட்டோ கிளையில் சிஐடியு சங்க கொடியை ஏற்ற சென்ற போது அந்த கிளை தோழர்கள் நாங்கள் பள்ளி மாணவர்களை பள்ளிக்கு அழைத்து சென்று விட்டு வந்து பிறகு ஏற்றலாம் என்றனர். அதற்கு மாவட்ட நிர்வாகிகள் இன்று அரசு விடுமுறை தினம் எந்த பள்ளியும் இயங்காது என்று தெரிவித்தனர். பின் அவர்களிடம் எந்த பள்ளி என விசாரித்த போது வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட தொரப்பாடி எழில் நகர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 10 11 12  வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.  மாவட்டத் தலைவர் டி.முரளி, செயலாளர் எஸ்.பரசுராமன் மற்றும் எஸ்.செல்வி, ஜெய்கணேஷ், ஏ.கதிர்அகமது, சி.எஸ்.மகாலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் அங்கு சென்ற போது ஒருசில மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்திருந்தனர். பள்ளி நிர்வாக அறிவுறுத்தலின் பேரில் சிறப்பு வகுப்பு நடத்துவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அவரது நேர்முக உதவியாளரை தொடர்பு கொண்ட போது எவ்வித பதிலுமில்லை. இதற்கிடையில் தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினரிடம் அரசு விடுமுறை தினமான தொழிலாளர் தினத்தன்று பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடத்த உள்ளதாக சிஐடியு நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் பள்ளி நிர்வாகத்தோடு தொடர்பு கொண்டு பேசிய போது நாங்கள் வகுப்பு நடத்தாமல் மாணவர்களுக்கு விடுமுறை அளித்து தகவல் தெரிவித்து விட்டோம் என கூறிய தகவலை சிஐடியு நிர்வாகிகளிடம் தெரிவித்ததையடுத்து அங்கிருந்து அனைவரும் புறப்பட்டு சென்றனர். இது குறித்து சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன் கூறுகையில் கோடைகால விடுமுறையில் எந்த பள்ளியும் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என தமிழ்நாடு அரசு கடந்த சில நாட்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டது. அதையும் மீறி சிறப்பு வகுப்புகள் நடத்த முயலும் பள்ளிகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இது போன்று செயல்படும் பள்ளிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

 

;