tamilnadu

img

பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் நிறுவனங்களை மூட மத்திய அரசு திட்டம்?

பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகிய தொலைத் தொடர்பு நிறுவனங்களை மூட நிதி அமைச்சகம் பரிந்துரைத்துள்ளதாக ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:  ”அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்கள் நிதி நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை சரி செய்ய, தொலைத் தொடர்பு துறை ரூ.74,000 கோடி ஒதுக்க கோரி மத்திய நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளது. அதனை நிராகரித்த நிதி அமைச்சகம் இரு தொலைத் தொடர்பு நிறுவனங்களை மூடுவதற்கு பரிந்துரைத்து இருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும், இரு நிறுவனங்களையும் மூடுவதற்கான செலவு ரூ.95,000 கோடியாக இருக்காது, 1.65 லட்சம் பி.எஸ்.என்.எல் ஊழியர்களுக்கான வி.ஆர்.எஸ் வழங்கவும், நிறுவனங்களின் கடன்களை திருப்பிச் செலுத்தவும் தான், இந்த ரூ .95,000 கோடி செலவாகும். இந்த இரண்டு பொதுத்துறை பிரிவுகளிலும், நேரடியாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள், பிற பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது அரசு துறைகளிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட ஊழியர்கள் மற்றும் இந்திய தொலைத்தொடர்பு சேவையின் (ஐ.டி.எஸ்) அதிகாரிகள் ஆகிய  மூன்று வகை ஊழியர்கள் உள்ளனர். இதை கொண்டு வகைப்பாடு செய்யப்பட்டிருந்தால், மூடுவதற்கான செலவு ரூ.95,000 கோடிக்கும் குறைவாக இருக்கலாம்.

இந்திய தொலைத் தொடர்பு அதிகாரிகளை, மற்ற அரசு துறைகளுக்கு மீண்டும் பணியமர்த்த முடியும், இதனால் அவர்களுக்கு வி.ஆர்.எஸ் வழங்கப்பட வேண்டியதில்லை. மேலும், நேரடி ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர்கள், மிக குறைந்த வயதுடையவர்களாக இருப்பார்கள். அவர்களின் சம்பளமும் குறைவாகவே இருக்கும். இவர்கள் மொத்த பணியாளர்களில் 10 சதவிகிதம் மட்டுமே உள்ளனர்.

மேலும், இரு நிறுவனங்களையும் மூடுவதற்கான முழு செலவைக் கணக்கிட உதவும் வகையில் ஒவ்வொரு பிரிவின் கீழும் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை, பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்களிடம் கேட்டு அறிந்து வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.” இவ்வாறு ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

;