tamilnadu

img

ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிடுக - வைகோ

புதுதில்லி, ஜூலை 26-

ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிடவேண்டும் என்றும், வேதாந்தா, ஓஎன்ஜிசி நிறுவனங்கள் தங்கள் வேலைகளை நிறுத்திக்கொள்ள உத்தரவிடவேண்டும் என்றும் மதிமுக மாநிலங்களவை உறுப்பினர் வைகோ வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமையன்று காலை அவசரப்பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் பூஜ்யம் நேரத்தில் வைகோ பேசியதாவது:

23 ஆண்டுகளுக்குப்பின் என் கன்னிப்பேச்சில், மிகவும் ஆபத்தான மிகவும் நாசம் விளைவிக்கக்கூடிய ஹைட்ரோகார்பன் திட்டத்தின்மீது மத்திய அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்து என் பேச்சைத் துவங்குகிறேன். இத்திட்டமானது தமிழ்நாட்டில் காவிரி டெல்டாப் பகுதிகளில் உள்ள விவசாயிகளைக் கடுமையாகப் பாதித்திடும் ஒரு திட்டமாகும். அதாவது, காவிரி டெல்டா பகுதிகளில்ர உள்ள நிலத்திலிருந்து மெதேன் வாயு மற்றும் ஷேல் வாயு எடுப்பதற்கான பெரும் அழிவு உண்டாக்கக்கூடிய ஒரு திட்டமாகும். நரேந்திர மோடியின் தலைமையின்கீழ் உள்ள இந்த அரசாங்கம், காவேரி டெல்டாவில் மிகவும் நஞ்சைவளம் மிகுந்த நிலங்களில் 10 ஆயிரம் அடி ஆழத்திற்கு கிணறுகள் தோண்டி, தூத்துக்கடியில் உள்ள  ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரிஸ்-க்காக  ஹைட்ரோகார்பன் எடுப்பதில் மிகவும் துடீப்புடன் இருக்கிறது. இதற்காக வேதாந்தா குழுமம் 274 கிணறுகளையும், ஓஎன்ஜிசி நிறுவனம் 67 கிணறுகளையும் ஏற்படுத்தியுள்ளன. இப்போது இரண்டு கிணறுகளில் ஓஎன்ஜிசி நிறுவனம் வேலைகளைத் துவங்கியுள்ளது. ஜூலை 17ஆம் தேதியன்று,  அரசாங்கம் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு கிணறுக்கும், திருவாரூர் மாவட்டத்தில் ஒரு கிணறுக்கும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு கிணறுக்கும், அதனைத் தொர்ந்து கடலூர் மாவட்டத்திலும் உரிமம் அளித்திருக்கிறது. அவைகளில் நாளொன்றுக்கு 20 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கின்றனர். இத்துடன் 636 விதமான விஷம் தோய்ந்த வேதியல் (poisonous chemicals) பொருள்களையும் வெளிக்கொணர்கின்றனர். இவை அனைத்தும் ஒட்டுமொத்த நன்செய் பூமியையும் பாழாக்கிவிடும். பின்னர் அவை விவசாயம் செய்வதற்கே இலாயக்கற்றவைகளாக மாறிவிடும்.

எது வந்தாலும் சரி, இத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் ஜூலை 17 அன்று கூறியிருக்கிறார். இத்திட்டத்திற்கு எதிராகக் கடந்த மூன்றாண்டுகளாக பல லட்சக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், மாணவர்கள், சாதி, மத, அரசியல்கட்சிகளுக்குக்கு அப்பால் நின்று அமைதிவழியில் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

ஜூன் 23 அன்று விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணத்தில் நான் உட்பட பல லட்சக்கணக்கானோர் இணைந்து மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினோம்.  இந்த மனிதச் சுவர் போராட்டம் புதுச்சேரி மாநிலம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களினூடே ராமேஸ்வரம் வரை சுமார் 596 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது.

நேற்றையதினம் தமிழ்நாட்டிலிருந்தும் வட இந்திய மாநிலங்கள் பலவற்றிலிருந்தும் வந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தில்லி, நாடாளுமன்ற வீதியில், உண்ணாவிரதம் இருந்தார்கள்.

இத்திட்டத்தின் காரணமாக அரசாங்கத்திற்கு கோடானுகோடி ரூபாய் பணம் வரும். ஆனால் தமிழ்நாட்டு காவிரி டெல்டா பகுதியின் பெரும்பகுதி பாலைவனமாக மாறிவிடும். எதிர்கால சந்ததியினர் கையேந்தும் கைகளுடன் அகதிகளாக மாறிவிடுவார்கள். எனவே, இத்திட்டத்தை இந்த  அரசாங்கம் கைவிட வேண்டும் என்றும், வேதாந்தா மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனங்களின் நடவடிக்கைகளை நிறுத்த உத்தரவிடவேண்டும் என்றும் அழுத்தந்திருத்தமாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு வைகோ கூறினார்.

(ந.நி)

;