tamilnadu

தேசத்திற்கு முன்னோடி தமிழ்நாடு பேரவை: ஆளுநர்...

சென்னை:
தமிழ்நாடு சட்டப்பேரவை தேசத்திற்கு முன்னோடியானது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம் சூட்டினார்.சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவுக்கும் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் முழு உருவப் படத்திறப்பு விழாவுக்கு தலைமை வகித்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேசியது வருமாறு:-

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஒரு பெரிய வரலாறு உண்டு. நாட்டின் பழமையான மற்றும் தொடக்கத்தில் அமைந்த சட்ட மன்றங் களில் ஒன்றாக இருப்பதால், பல முக்கியச் சட்டங்கள் இங்கு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. அச்சட்டங்களில் சமூக நீதி, தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், கல்வி, வறுமைஒழிப்பு, மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்ட விளிம்புநிலையிலுள்ள மக்களின் நலன் போன்ற முன்னோடித் திட்டங்களும் இதில் அடங்கும். இவற்றில் பல திட்டங்கள் நம் 
நாட்டின் கொள்கைகள் மற்றும் திட்டப்பணிகளுக்கு அடித்தளமாக அமைந்துள்ளன.

கருணாநிதியின் பெருமையை நான் சுருக்கமாகக் கூற விரும்புகிறேன். ‘கலைஞர்’ என்றும் ‘முத்தமிழ் அறிஞர்’ என்றும் அழைக்கப்படும் அவர் தன்னுடைய பேச்சுத்திறமையால் மக்களை ஈர்த்தார். ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்ததும், தனது அரசியல் வாழ்க்கையில் போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றதும் உண்மையில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.கருணாநிதி தனது இளம் பருவமான 14 -வது வயதிலேயே அரசியலில் நுழைந்து, பதின்மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையில்அவர் போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் அவர் வெற்றிவாகை சூடினார். அவருடைய அரசியல் மதிநுட்பத்திற்காகவும், சீரிய சிந்தனைத் திறனுக்காகவும் இந்தியாவிலுள்ள அனைத்து அரசியல் தலைவர்களால் அவர் போற்றப்படுகிறார். அவர் இறக்கும் வரை இந்த சட்டப்பேரவையின் உறுப்பினராக இருந்தார்.

கருணாநிதியின் புகழுக்கு ஆதாரமாகவும் அவரது பெருமைக்கு காரணமாகவும் திகழ்ந்தது தமிழ் மொழியின் மீது அவருக்கு இருந்த அளப்பரிய திறமையேயாகும். இது அவரது அரசியல் எதிரிகளையும் கூட வசப்படுத்தியது.மேலும், திருவள்ளுவரின், “சொலல்வல்லன் சோர்வுஇலன் அஞ்சான் அவனைஇகல்வெல்லல் யார்க்கும் அரிது” என்னும் குறளை நினைவுகூர்கிறேன்.கருணாநிதி, தனது அரசியல் வாழ்வில், நம் நாட்டின் அனைத்து குடியரசுத் தலைவர்களுடனும், அனைத்து பிரதமர்களுடனும், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களுடனும், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனும் நெருக்கமாகப் பழகியுள்ளார். சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அவர் எப்பொழுதும் ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.

சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பது ஒரு காலத்தில் சிறப்புரிமையுடையதாகவும் மரியாதைக்குரியதாகவும் இருந்தது. இது சில உரிமைகளையும் பொறுப்புகளையும் வழங்குகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலமே மக்களின் இறையாண்மை நமது சட்டப்பேரவை அமைப்புகளில் வெளிப் படுகிறது. மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் பற்றுறுதியையும் நேர்மையுடனும் பொறுப்புடனும் நியாயப் படுத்தப்பட வேண்டும். மக்களின் பிரதிநிதிகளாக, மக்களாட்சியின் ஜோதியை பிரகாசமாக ஜொலிக்கவைக்கும் சவாலான பணி உங்கள் அனைவரிடமும் ஒப்படைக்கப் பட்டுள்ளது. இந்த அவையின் மாண்பினை வளப்படுத்த அயராது செயல்படுவீர்கள் என்பதில் நான் உறுதியாக நம்பிக்கை கொண்டுள் ளேன். இந்த சட்டப்பேரவை இனி வரும்காலத் திலும் நம் தேசத்திற்கு முன்னோடியாகத் திகழட்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

;